Thursday 28th of March 2024 07:42:00 PM GMT

LANGUAGE - TAMIL
கடந்து போன நாட்களில் மலர்ந்திருந்த வாழ்வு!

கடந்து போன நாட்களில் மலர்ந்திருந்த வாழ்வு!


மாமரக்கொப்பில் அமர்ந்தவாறே இரவு தூங்கிய வெள்ளடியன் சேவல் தான் விழித்துவிட்டதன் அறிகுறியாகச் சிறகுகளை அடித்துவிடடுக் கூவியது. அந்த விடிகாலைக் கூவல் செல்லையரையும்,சின்னம்மாவையும் தூக்கத்தைக் கலைத்து எழுப்பிவிட்டது.

செல்லையர் எழுந்து முதுகுக்கு விரிந்திருந்த பழைய சேலையையும் தலையணையையும் அட்டாளையில் ஒரு புறம் வைத்துவிட்டுத் தான் படுத்திருந்த பனை ஓலைப் பாயை சுருட்டி மூலையில் வைத்தார். பின்பு தாழ்வாரத்தில் தலையடிபட்டுவிடாமல் குனிந்து வெளியே வந்த அவர் நிமிர்ந்து வானத்தைப் பார்த்தார். விடிவெள்ளி பனைகளுக்கு மேல் வந்துவிட்டிருந்தது. தன் வீட்டிலிருந்து மூன்றாவதாக அமைந்திருந்த பனம் வடலிக் காணிக்குள் சென்று காலைக்கடனை முடித்துவிட்டு வரும்போதே அங்கு நின்ற வேம்பம் கன்றின் கொப்பை எட்டிப்பிடித்து வளைத்து ஒரு தடியை முறித்து பற்களைத் தீட்டியவாறு வீடு நோக்கி நடந்தார்.

அப்போதெல்லாம் ஒரு சில வசதிபடைத்தவர்களின் வீடுகள் தவிர ஏனையவர்கள் வீடுகளில் கழிப்பறைகள் இருப்பதில்லை. பின்கோடியின் முகப்புப் பக்கத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு பழைய பாத்திரத்தை எடுத்துவந்து வெளிக்குடத்தில் நிரப்பப்பட்டிருந்த நீரை அதற்குள் ஊற்றினார்.

பின்பு பின் கோடிக்குள் சென்று அடிக்கழுவி விட்டு அவர் நேரே கிணற்றடிக்குப் போனார். வாயை நன்றாக கொப்பளித்து, முகம், கை, கால்களைக் கழுவி தாழ்வாரத்தில் தொங்கவைக்கப்பட்டிருந்த திருநீற்றுக் குடுவையில் இருந்த திருநீற்றை மூன்று விரல்களால் எடுத்து “சிவ, சிவா” என்றபடியே நெற்றியில் பூசிக்கொண்டார். அவருடன் தூக்கத்தைவிட்டு எழுந்த சின்னம்மாவும், தொழுவத்துக்குச் சென்று பசுமாட்டில் பாலைக்கறந்து கொண்டு வந்து காய்ச்சி பித்தளை மூக்குப் பேணியில் விட்டு அவரிடம் நீட்டினாள்.

அவர் அண்ணாந்து பாலைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குடித்துக்கொண்டிருக்கும் போது, சற்றுத்தூரத்தில் “கூ...” என்ற ஒலி கேட்டது. அதை அடுத்து மேலும் நான்கைந்து “கூக்கள்” வெவ்வேறு திக்குகளிலிருந்து கேட்டன. செல்லையர், “எல்லாரும் வெளிக்கிட்டிட்டாங்கள்”, எனக் கூறியவாறு தானும் ஒரு “கூ“வை ஒலித்தார். இப்படிக் குரல் வைப்பது ஒருவரை ஒருவர் அழைக்கும் வழிமுறையாகும்.

செல்லையர் மூக்குப் பேணியைச் சின்னம்மாவின் கையில் கொடுத்துவிட்டு, சால்வையை எடுத்து தோளில் போட்டுக்கொண்டு மறு தோளில் மண்வெட்டியை தூக்கிவைத்துக்கொண்டு, “நான் வாறன்”, என்றுவிட்டுப் புறப்பட்டார்.

செல்லையர் அங்கு போய்ச்சேர்ந்த போது மற்ற எல்லோரும் வந்துசேர்ந்துவிட்டனர். கந்தவனம் பட்டைக்கல்லைச் சொருகிய கட்டை பட்டை வாயில் இருபக்கமும் நன்றாக கட்டிவிட்டு, பட்டையைத் துலாக்கொடியின் முனையில் கட்டிவிட்டிருந்தார். அன்று அவர் பட்டை பிடிக்கும் நாள்.

அந்தக் கிணற்றுத் தோட்டப்பரப்பில் ஆறுபேர் பயிர் செய்தனர். அவர் தோட்டங்கள் தனித்தனியே செய்தாலும் கொத்துதல், பாத்திகட்டுதல். நடுகை, நீரிறைப்பு, அறுவடை என்பவற்றைக் கூட்டாகவே செய்வதுண்டு.

நான்குபேர் துலா மிதிக்க, ஒருவர் பட்டை பிடிக்க, மற்ற ஒருவர் தண்ணி கட்டுவார். இவற்றை எல்லோரும் மாறி மாறிச் செய்வதுண்டு. ஆனால் தனக்கு துலாமிதிக்கும் நாள் வரும்போது செல்லையர் அடித்துலாவிலேயே நிற்பார். அவர் அடித்துலாவில் நின்றால் துலா இறங்குவதும் ஏறுவதும் தெரியாமல் மிதமாய்ப் போய்வரும் என்றே மற்றவர்களும் கூறுவதுண்டு.

இறைப்புத் தொடங்கும் போது ஒருவர் அச்சுலைக்கைக்கு அருகிலும் இன்னொருவர் அடித்துலாவிலும் நின்றுகொள்வார்கள். இடையில் மற்ற இருவரும் நிற்பார்கள். முன்னால் நிற்பவர்கள், ஆடு காலில் கட்டப்பட்ட பிடிக்கயிற்றைப் பிடித்தவாறே நுனித்துலாவை நோக்கி நெம்புகளில் கால்வைத்து நடப்பார்கள். மற்றவர்களும் பிடிகயிற்றைப் பிடித்தவாறு நெருப்பில் கால் வைத்துப் பின் தொடர்வார்கள். அப்போ துலாக் கொடியில் கட்டப்பட்ட பட்டை கிணற்றுக்குள் இறங்கும்.

பட்டையில் நீர் கோலியதும் பட்டை பிடிப்பவர் “ஹோ” என ஒலி எழுப்புவார். துலாவில் நிற்பவர்கள் திருப்பி அடித்துலா நோக்கி நடப்பார்கள். அப்படி நடக்கும் போது எவரும் நெம்புகளில் கால் வைப்பதில்லை. துலாவின் ஏரிப்பகுதியிலேயே நடப்பார்கள். இப் பொறிமுறை மீண்டும் மீண்டும் நடத்தப்பட்டு இறைப்பு நடக்கும். அதேவேளையில் ஒருவர் கூத்துப்பாட்டைப் பாட மற்றவர்கள் பிற்பாட்டுப் பாடியபடியே துலா மிதிப்பு நடக்கும்.

துலாமிதித்தல், பட்டைபிடித்தல் தண்ணி மாறுதல் எல்லாமே ஒரு ஒழுங்கில் நடைபெறும். பட்டையில் நீர் போதியளவு கோலாமல் துலா மேலே வருமானால் துலா தூக்கியடித்து துலாவில் நிற்பவர்களுக்கு பேராபத்து ஏற்பட்டுவிடும். தண்ணி கட்டுபவர் சற்று அலட்சியமாய் இருந்துவிட்டால் வாய்க்கால் உடைத்து ஏராளமான நீர் வீணாவதுடன் ஒன்றிலிருந்து ஒன்று எனப் பல பாத்திகளும் சிதைந்துவிடும்.

ஆனால் இப்படியான ஆபத்துக்கள் எப்போதுமே ஏற்பட்டுவிடுவதில்லை. ஏனெனில் அங்குகடும் உழைப்பிலும், களைப்பிலும் கூட ஒரு நிதானம் இருக்கும். எட்டு, எட்டரை மணியளவில் சின்னம்மாவும் ஏனைய விவசாயிகளின் மனைவியரும், காலை உணவுடன் வந்து விடுவார்கள் காலை உணவு என்பது அநேகமாக பழந்தண்ணி என்று சொல்லப்படும் பழைய சோற்றை வெங்காயம், பிஞ்சுமிளகாய் போட்டுக் கரைத்த கரையல் தான். சில சமயங்களில் முதல்நாள் மீன்குழம்புடன் பழைய சோற்றைக் குழைத்துத் திரணையாக்கிக் கொண்டு வருவதுமுண்டு.

காலை உணவை முடித்ததும் மீண்டும் துலாவில் ஏறிவிடுவார்கள். முற்பகல் பதினொரு மணியுடன் அவர்களில் வேலைமுடிந்துவிடும்.

வேலை முடிந்ததும் மேல், கால் கழுவிவிட்டு நேராகவே கள்ளு விற்கும் வீட்டுக்கே போவார்கள். அவர்கள் எப்போது போனாலும் அவர்களின் வாடிக்கையாளர்கள் கள்ளு அவர்களுக்காகக் காத்திருக்கும்.

அதை ஒரு பத்திரிகை உலகம் என்று கூறலாம். ஊர்ப்புதினங்களில் இருந்து, பெண்கடத்தல் வழக்கில் அப்புக்காத்துமார் சாட்சிகளைத் திணறடித்த திறமை வரை எல்லாம் அங்கு செய்திகளாக வந்து சேரும். ஒரு மணியளவில் போனால் வீட்டில் மதிய உணவு தயாராகியிருக்கும்.

சின்னம்மா மீன்கறி வைக்கும்போது தேங்காய்ப்பால் பாவிப்பதில்லை. தேங்காயை ஒரு திரணையாகவும், சரக்குச் சாமான்களை இன்னொரு திரணையாகவும், செத்தல் மிளகாயைத் தனி ஒரு திரணையாகவும் அரைத்தே கறி வைத்திருந்தாள்.

அந்தக் கறியுடன், கத்தரிக்காய் அல்லது வாழைக்காயில் ஒரு பாற்கறியும், சூடையில் மீன்பொரியலுமாக செல்லையர் ஒரு பிடி பிடித்துவிட்டு வெளித் திண்ணையில் போய்ப் படுத்துவிட்டார். முற்றத்து வேம்பின் காற்று இதமாகத் தாலாட்டத் தூங்கிவிட்டார். பிறகு 3 மணிபோல் எழுந்து முகம் கழுவிவிட்டு மீண்டும் தோட்டத்துக்கு புறப்பட்டுவிட்டார். பின்னேரக்கையிலேயே புல்களைக் களையெடுத்தல், பாத்திகளைச் சீர்படுத்தல், புகையிலையென்றால் கெட்டெடுத்தல் போன்ற சிறு சிறு வேலைகளைச் செய்வதுண்டு.

மாலையாகியதும் கோவில் குளத்தில் போய்க் குளித்துவிட்டு பிள்ளையாரையும் கும்பிட்டுவிட்டு செல்லையர் வீடு வந்து சேர்ந்தார். இனியென்ன கந்தப்பன் கொண்டுவந்து வைத்த கள்ளைக்குடித்துவிட்டு சிறிது நேரத்தில் இரவு உணவை உட்கொண்டுவிட்டுத் தூங்கவேண்டியது தான்.

குறிப்புக்கள்

1. வெள்ளடியன் - கோழிகளில் ஒரு இனம் 2. அட்டாளை - சிறிய கப்புகள் நடப்பட்டு அதன் மேல் சிறு வளைகள் வைக்கப்பட்டு பொருட்கள் வைக்க அமைக்கப்படுவது. 3. தாழ்வாரம் - வீட்டுக்கூரை முன்பக்கத்தில் சிறிது நீட்டப்படுவது. அதன் திண்ணை (குந்து) அமைக்கப்பட்டிருக்கும். 4. வடலி - ஓலைகள் விட்ட சிறு பனைகள் 5. பின்கோடி - வீட்டின் பின்புறம் அடைக்கப்பட்ட ஒரு இடம். 6. திருநீற்றுக் குடுவை - தேங்காய் சிரட்டையைச் செதுக்கி எடுத்து திருநீறு வைக்கப்பயன்படுத்துவது. 7. பித்தளை மூக்குப்பேணி - ஒரு பக்கம் மூக்குப் போன்ற அமைப்புள்ள பித்தளையால் செய்யப்பட்ட ஒரு பாத்திரம். இதில் வாய் வைத்து குடிப்பதில்லை. மூக்குப் பகுதியால் வாயில் முட்டாமல் ஊற்றியே பருகுவது. 8. குரல் வைத்தல் - தூரக் கேட்கும் படி “கூ” ஒலி எழுப்பல். 9. போறன் என்று சொன்னால் அபசகுனம் என்பதால் போகும்போது வாறன் என்றே சொல்வதுண்டு. 10. பட்டை - வாளிக்குப் பதிலாக பாவிப்பது. ஐந்து முனை கொண்டது. பனை ஓலையால் பின்னப்பட்டு பனை நாரினால் மேலும் பொத்தப்படுவது. 11. பட்டைக் கல்லு - வட்டமாக பொழியப்பட்டு, ஒரு தடியின் நடுவில் கொழுவப்பட்டு பட்டையின் வாயில் பகுதியில் கட்டப்படும். இது நீரில் பட்டை பட்டதும் தானாக கவிழ்ந்து நீர் கோல வைக்கும். 12. துலா - ஒரு வைரமான பனையைத் தறித்து, மேல் சிராம்புகளைச் சீவி எடுத்துவிட்டு, பனையை இரண்டாகப் பிளந்து உள் சோத்திகளை அகற்றிவிட்டு மீண்டும் நெம்பு நிறுத்தி ஒன்றாகப் பொருத்துவது. துலா மிதிக்கும் போது கால் மிதித்து ஏறவும் நெம்புவே பயன்படும். 13. ஆடுகால் - துலாவைத் தாங்கும் நாலு பூவரச மரங்கள். 14. பக்கக்கட்டை - இதன் மேலேயே துலாவில் அச்சுலக்கை ஓடும். 15. அச்சுலக்கை - துலாவில் நடுப்பகுதியில் பொருத்தப்படும். இதுவே எல்லாவற்றுக்கும் மையமான அச்சாகும்.

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE