Thursday 18th of April 2024 12:58:47 AM GMT

LANGUAGE - TAMIL
அன்றைய திருவிழாக்கள்

அன்றைய திருவிழாக்கள்


ஊர்கூடித்தேரிழுக்கும் கோவில் திருவிழாக்கள் கோவில் இல்லாத ஊரில் குடியிருக்கக் கூடாது எனத் தமிழில் ஒரு பழமொழி உண்டு. இன்று அப்பழமொழிக்கான தேவையே இல்லாமல் போய்விட்டது. இப்போதெல்லாம் திரும்புமிடமெல்லாம் கோவில்கள் காணப்படுமளவிற்கு கிராமங்களும், நகரங்களும் கோவில்களால் நிறைந்துவிட்டன.

சமூகத்துக்கொரு தெய்வம் என்ற நிலமானியக் கட்டமைப்பு தகர்ந்து சமூகத்துக்கொரு கோவில், குறிச்சிக்கொரு கோவில் என்ற வடிவங்கள் மாற்றம்பெற்றுவிட்டன. கொட்டில் கோவில்கள் கூடக் கோபுரக் கோவில்களாகி முதலாளித்துவ சமூக மாற்றத்துடன் இசைந்து கோவில்களும் வளர்ச்சியடைந்தாலும் பாரம்பரிய வழிமுறைகள் கைவிடப்படாமல் எமது தனித்துவங்கள் பேணப்பட்டு வருவது முக்கிய அம்சமாகும்.

இன்று பெரும்பாலான கோவில்கள் அறங்காவலர் சபைக்குக் கீழ் கொண்டுவரப்பட்டு அவை ஊர் மக்களின் பொதுச் சொத்துக்களாகிவிட்டன.

ஆனால் அன்றைய நாட்களில் கோவில் தனி ஒருவரினதோ அல்லது ஒரு குடும்பக் குழுவினதோ சொத்தாக இருந்த போதிலும் கோவில் சம்பந்தப்பட்ட விடயங்களில் அனைவரின் பங்களிப்பும் இருந்துவந்தன. அதில் ஆலய வருடாந்த உற்சவங்கள் முக்கியமானவை.

அநேகமான கோவில்கள் 10 நாட்களும் இன்னும் சில 15 நாட்களும், ஒரு சில 25 நாட்களும் திருவிழாக்கள் இடம்பெறுவதுண்டு. திருவிழா ஆரம்பமாகி நிறைவுபெறும் நாள் வரை அதாவது கொடியேற்றத்திலிருந்து தீர்த்தோற்சவம் வரை உள்ள நாட்களில் அநேகமானோர் விரதம் பிடிப்பர்.

திருவிழா நாட்களில் தென்னிலங்கையில் அரச உத்தியோகம் பார்ப்பவர்கள், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் எனப் பலரும் லீவு போட்டுவிட்டுச் சொந்த ஊருக்கு வந்துவிடுவர். விரதம் என்றால் காலையில் எழுந்து நீராடிவிட்டு, அனுட்டானம் பார்ப்பார்கள். தீட்சை பெற்றவர்கள் காலையில், நீராடிய பின்னர் கிழக்குப் பார்த்து அனுட்டானம் மேற்கொள்வர்.

அனுட்டானம் என்றால் திருநீற்றை நீரில் கரைத்து நெற்றி, நெஞ்சு, கையில், தோள்மூட்டு, புயம், மணிக்கட்டு ஆகியவற்றில் மூலமந்திரம் ஓதி மூன்றுவிரல்களால் குறியிடுதலாகும். பின்பு கோவில் சென்று பூசை பார்த்தோ, அல்லது வீட்டிலோ இறைவழிபாடு செய்துவிட்டு தேநீர் போன்ற நீராகாரங்களை அருந்துவார்கள். மதியம் சோறு உண்பார்கள். இரவில் பிட்டு, இடியப்பம் போன்ற உணவை உண்பர்.

அதேவேளை இன்னொரு புறம் திருவிழா தொடங்கிவிட்டால் அது ஊருக்கே ஒரு களியாட்ட விழாதான்.

ஒவ்வொரு திருவிழா ஒவ்வொரு சமூகத்தினருக்கெனவோ அல்லது ஒவ்வொரு குறிச்சியினருக்கெனவோ ஒதுக்கப்பட்டிருக்கும். திருவிழாத் தொடங்கிய நாளிலிருந்து நாட்கள் செல்லச் செல்ல திருவிழாக்களில் போட்டி தொடங்கிவிடும். ஒரு திருவிழா உபயகாரர்களை விட மற்றைய உபயகாரர்கள் ஏதோ ஒரு விதத்தில் சிறப்பாக மேற்கொள்வதில் அதீத அக்கறை காட்டுவார்கள்.

கூட்டு மேளம்

ஒரு கூட்டு மேளத்துடன் ஒரு திருவிழா இடம்பெறுமானால், அடுத்தடுத்த திருவிழாக்கள் இரண்டு கூட்டு, மூன்று கூட்டு, நான்கு கூட்டு என அதிகரிக்கும். சின்னமேளச் செற்றும் அப்படியே. சிகரங்களும் ஒன்று இரண்டு எனக் கோவில் முன்பக்கத்தில் ஆரம்பித்து அதிகரித்து சில சமயம் வீதிகளிலும் சிகரங்கள் அமைக்கப்படும். வாணவேடிக்கைகளையும் ஒருவருடன் ஒருவர் போட்டியிட்டு நடத்துவர். சின்னமேளம் முடிய ஆரம்பமாகும் வாணவேடிக்கைகள் விடியும்வரை வானத்தை நிறைத்தவண்ணம் இருக்கும்.

ஒரு கூட்டு மேல் மேளம் என்றால் இரு நாதஸ்வரங்கள், இரு தவில்கள், ஒரு ஊமைக்குழல், ஒரு தாளம் என்பன அடங்கியதாகும். ஊமைக்குழலே சுருதியை சேர்த்துக்கொடுப்பதும், தாளத்தை தாளத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதாகும். மேளக்கச்சேரியை அப்போதைய முதியவர்கள் தங்கள் தொடைகளில் தாளம் போட்டு இரசிப்பார்கள். இத்தனைக்கும் அவர்கள் சங்கீதம் கற்றவர்கள் அல்லர்.

ஆனால் தவில் போய்க்கொண்டிருக்கும் போது ஒரு பெரியவர் “தாளம் பிசகுதடா” என்று தனக்குள் புறுபுறுத்தால் உண்மையில் தாளம் தப்பியிருக்கும்.

தவில் வித்துவான் தாளம் போடுபவருக்கு மேளத்தடியால் உச்சியில் ஒன்று போடுவதிலிருந்து பெரியவரின் கணிப்பு சரியெனப் புரிந்துகொள்ள முடியும். இதேபோல் ஊமைக்குழல் வாசிப்பவர் நித்திரைதூங்கினால் நாதஸ்வரம் சுருதி பிசகிவிடுவதைப் பெரியவர்கள் கண்டுபிடிப்பார்கள்.

அந்நாட்களில் அளவெட்டி தட்சணாமூர்த்தி, கைதடி பழனி, சண்முகசுந்தரம், இணுவில் பொன்னுச்சாமி எனப் பிரபலமான மேளக்குழுவினர் இருந்தனர். இவர்களில் தட்சணாமூர்த்தியின் தவிலுக்கு பெரும் கிராக்கியிருந்தது. இந்தியாவுக்குச் சென்றே அங்கு பல பிரபல வித்துவான்களுடன் தவில் வாசித்துப் பட்டங்களையும் பாராட்டுக்களையும் பெற்றவர். பிரபல இசை விமர்சகரான சுப்புடு, “நாதஸ்வரத் துணை வாத்தியமாக இருந்த தவிலை முதல் நிலைக்கு உயர்த்தி நாதஸ்வரத்தை துணைவாத்தியமாக்கி விட்டவர் தட்சிணாமூர்த்தி” என அவரைப் புகழ்ந்திருந்தார்.

சில திருவிழாக்காரர் இந்தியாவிலிருந்து மேளக்குழுக்களை அழைத்துவந்து கச்சேரிகளை நடத்துவதுண்டு. அவர்களில் திருவாடுதுறை இராசரத்தினம் பிள்ளை, காரைக்குறிச்சி அருணாசலம், சின்ன மௌலானா சகோரர்கள் ஆகியோர் முக்கியமானவர்கள். வடமராட்சி வல்லிபுர ஆழவார் கோவிலில் திருவாடுதுறை இராசரத்தினம்பிள்ளை ஒருமுறை நாதஸ்வரத்தில் புன்னவராளி ராகத்தை வாசிக்கும்போது ஒரு நாகபாம்புவந்து படமெடுத்து ஆடியதாகவும் பின்பு கோவிலுக்குள் சென்று மறைந்துவிட்டதாகவும் கூறுவதுண்டு.

சின்னமேளம்

சின்னமேளம் என்றால் நடனக்கச்சேரி செய்பவர்களையே குறிக்கும். ஒரு சின்னமேள செற் என்றால் நடனமாடும் பெண்கள் இருவர், பாட்டுக்காரர் ஒருவர், ஆர்மோனியக்காரர் ஒருவர், மிருதங்கக் கலைஞர் ஒருவர், தாளம் போடுபவர் ஒருவர் ஆகியோரைக் கொண்ட குழுவாகும். முதலில் பாட்டுக்காரர் ஒன்றிரண்டு பக்திப்பாடல்களைப் பாடுவார். பின்பு அரங்கில் பிரவேசிக்கும் நடனமணிகளும் இரண்டு அல்லது மூன்று பக்திப்பாடல்களைப் பாடுவார்கள்.

அதன் பின்பு சினிமாப்பாடல்களுக்கு நடனமாடுவார்கள். பாட்டுக்காரர் பிற்பாட்டுப் பாட நடன மங்கயைர் பாடி ஆடுவார்கள். ஒவ்வொரு பாடல் முடிவிலும் வட்டமடித்து நடனமாடி ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்கள். சில சிறப்பு நடனங்களும் உண்டு. வெண்கலத் தட்டங்களை உள்ளங்கையில் வைத்து கீழே விழுந்து விடாமல் கைகளையும் சுழற்றி ஆடுவது, உரல் மேல் ஏறிநின்று அதை உருட்டியவாறு நடனமாடுவது என சில ஆச்சரியமூட்டும் நடனங்களையும் ஆடுவதுண்டு.

அப்போது புத்தூர் மார்க்கண்டு செற்று, ஆவரங்கால் சின்னத்துரை செற் உட்பட அளவெட்டி, இணுவில் போன்ற இடங்களிலும் திருவிழாக்காலங்களில் இந்தியாவிலிருந்து நடனமங்கையரைக் கொண்டுவந்து சின்னமேள செற் நடத்துவதுண்டு. பாட்டுக்காரர், பக்கவாத்தியக்காரர் இங்குள்ளவர்களாகவே இருப்பர்.

இசைக்கோஷ்டி

1960ஆம் ஆண்டு நெருங்கிய பின்பு திருவிழாக்களில் ஒரு புதிய கலையும் இணைந்து கொண்டது. அது தான் இசை நிகழ்ச்சி. சின்னமேள நிகழ்ச்சி முடிந்த பின்பு கோவில் முன்றலில் மேடையமைத்து இசைக்கச்சேரி நடக்கும். அக்காலப் பகுதியில் கண்ணன் கோஷ்டி, ரங்கன் கோஷ்டி, ரமணன் கோஷ்டி எனப் பல கோஷ்டிகள் புகழ்பெற்றிருந்ததுடன் பல பாடகர்களும் நாட்டுக்கு அறிமுகமானார்கள்.

சிகரங்கள்

சிகரங்கள் எனப்படுவது பெரும் இரண்டடுக்கு மூன்றடுக்கு மாளிகைகளின் முகப்புப் பக்கம் போன்று மரத்தால் அமைக்கப்படுபவையாகும். அவை துண்டாக செய்யப்பட்டு பெரும் கப்புகள் நடப்பட்டு பொருத்தப்பட்டு பார்வைக்கு உண்மையான மாளிகைகள் போன்றே தோற்றமளிக்கும். இந்தச் சிகர அலங்காரங்களுக்குள்ளும் போட்டி எழுந்துவிட்டால் கோவில் முன்புறம் மட்டுமல்லாது வீதிகளை நிரப்புமளவுக்கு அதிகரித்துவிடும்.

வாணவேடிக்கை

சின்னமேளம், இசை நிகழ்ச்சி என்பன முடிவடையும் போதே வாணவேடிக்கை ஆரம்பமாகிவிடும். கொட்டுவாணம், குருவி வாணம், வெள்ளி வீறிஸ், கர்ப்பம் கலக்கி எனப் பல வித வாணங்கள் விடப்படும்.

கொட்டுவாணத்தை ஓரளவுக்கு தற்கோதைய எறிகணையுடன் ஒப்பிடலாம். கிட்டத்தட்ட ஒரு முழு நீளக்குழாயில் வெடிமருந்தை அடைத்து திரிவைத்து தீ மூட்டுவாரகள். அது “பொப்” என்ற ஒலியுடன் வெளியேறி வானத்தில் போய் பெரும் சத்தத்துடன் வெடிக்கும். வானில் வெடிக்கும் போது கிளிகள் பறப்பது போலவும், நட்டத்திரங்களாகச் சிதறுவது போன்றும் வாண விற்பன்னர்கள் தங்கள் திறமைகளைக் காட்டுவதுண்டு. குருவி வாணம் என்பது அதற்கு தடியால் வால்போன்று அமைத்துக் கொழுத்திவிடுவார்கள்.

அது சீறிக்கொண்டு வானில் தீயால் கோடிட்டவாறு மேலெழும்பும். பல குருவி வாணங்களை பந்தல் போன்று சதுர வடிவில் கட்டி வானில் செலுத்துவதைப் பதந்தல் வாணம் என்பார்கள். வெள்ளி விறீஸ் என்பது கையில் வைத்துக் கொழுத்துவது.

அது நட்சத்திரங்கள் புறப்பட்டுப் பரவுபது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். அடுத்துக் கர்ப்பங்கலக்கி என்பது கர்ப்பவதிகள் அருகில் நின்றால் அதன் சத்தத்தால் கர்ப்பம் சிதைந்துவிடும் என்று கூறப்படுவதால் அதனை அவ்வாறு அழைப்பார்கள்.

அதன் கொட்டு ஒரு உரல் அளவில் இருக்கும். அதன் வாலும் ஏறக்குறைய இருபது அடி நீளம் இருக்கும். இதைக் கிணற்றுத் துலாவின் ஆடுகால் மரத்தில் நிறுத்திக்கட்டிவிட்டே கொழுத்துவார்கள். அது பெரும் ஓசையுடன் நெருப்பைக் கக்கியவாறு மேலெழும்பும். அதைப் பார்க்கும் போது “ரொக்கற்“ புறப்படுவது போல் தோன்றும். அது வானில் மேலெழுந்து பின்பு எரிந்து முடிந்தபின் அதன் கொட்டு மூன்று, நான்கு கிலோமீற்றருக்கு அப்பால் போய்விழும். இப்படியாக வாணவேடிக்கையும் மக்களைக் கவரும் ஒரு நிகழ்வாக அமையும்.

வீதி அலங்காரம்

இறுதி நிகழ்ச்சியே வீதிவலம் வருதல். விக்கிரகத்தை உள்வீதி சுற்றும்போது பக்தர்கள் தோள்களில் சுமப்பர். திருவிழாவில் வீதி சுற்றுவது எழுந்தருளி எனப்படும் விக்கிரகமேயாகும். அது அலங்கரிக்கப்பட்டே வீதிவலம் வரும். அந்த அலங்காரத்தைச் சாத்துப்படி என்பார்கள். வெளிவீதி சப்பறத்தில் இடம்பெறும். சப்பறம் மணிகள், குஞ்சங்கள் போன்றவற்றால் அமைக்கப்பட்ட மணவறை போன்ற அமைப்பில் காணப்படும். ஆனால் மேல்ப் பக்கம் கோபுரம் போல் அமைந்திருக்கும். சப்பறத்தை ஏற்றிவைத்து தள்ளம் வாகனத்தை சகடை என்பார்கள்.

அலங்காரத் திருவிழாக்களை அடுத்துத் தேர்த்திருவிழா இடம்பெறும். சில கோவில்களில் ஒவ்வொரு தெய்வத்துக்குமென இரண்டு, மூன்று தேர்களும் உண்டு. தேரின் பீடத்தின் வெளிப்பக்கமாக புராண, இதிகாச சம்பவங்கள் செதுக்கப்பட்டிருக்கும். தேர்வீதி வலம்வந்ததும் சுவாமி தேரிலிருந்து முன் அபிஷேகங்கள் இடம்பெறும். விரதம் பிடிப்பவர்கள் தவறாமல் அங்கு அபிஷேகம் மேற்கொள்வார்கள். கடைசிநாள் தீர்த்தோற்சவம் இடம்பெறும். சுவாமி வீதிவலம் வந்து கோவில் கேணியில் தீர்த்தமாடும் உற்சவம் இடம்பெறும். அத்துடன் பக்தர்களும் தீர்த்தமாடித் தங்கள் விரதங்களை முடித்துக்கொள்வார்கள்.

அன்றைய சமூகக்கட்டமைப்பு வெவ்வேறானதாகக் காணப்பட்டாலும் கூட ஆலய உற்சவங்கள் ஒற்றுமையின் வெளிப்பாடாக அனைவரின் பங்களிப்புடனும் இடம்பெற்றன. இன்னொருபுறம் அவை பக்தியின் வெளிப்பாடாகவும், கலைத்துறை சார்ந்த நிகழ்வுகளை மக்களுக்கு வழங்குபனவாகவும் விளங்கிவந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE