Thursday 28th of March 2024 11:56:09 AM GMT

LANGUAGE - TAMIL
“இனவாத அரசியலும் - முஸ்லிம் அமைச்சர்களும்”

“இனவாத அரசியலும் - முஸ்லிம் அமைச்சர்களும்”


முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒன்றிணைந்து தமது அமைச்சு பதவிகளை இராஜிநாமா செய்துள்ளமை நாட்டு அரசியலில் பெரும் நெருக்கடியை உருவாக்கியிருக்கின்றது. குறிப்பாக நாட்டு அரசியலின் தலைவிதியைத் தீர்மானிக்கின்ற வல்லமை பொருந்திய பௌத்த பீடங்களையும் அது விட்டு வைக்கவில்லை. அந்த பௌத்த பீடங்களும் அதிர்ந்து போயுள்ளன.

அஸ்கிரிய, அமரபுர, மல்வத்து, மற்றும் ராமஞ்ஞ ஆகிய நான்கு பௌத்த பீடாதிபதிகளும் இணைந்து, பதவி துறந்த முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் தமது பதவிகளை மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என உருக்கமாக அழைப்பு விடுக்கும் அளவுக்கு அந்த பதவி துறப்பு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

பௌத்த மதத்தின் உயர் பீடங்கள் ஒன்றிணைந்து இவ்வாறு அழைப்பு விடுத்திருப்பது ஒரு விதத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. மறுபுறத்தில் நகைப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

ஏனெனில், ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று குண்டுத்தாக்குதல்கள் நடத்திய இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளுடன், ரிசாத் பதியுதீன் தொடர்புகளைக் கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்து, அவரைப் பதவி நீக்கம் செய்யுமாறு கோரி, அத்துரலிய ரத்தன தேரர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியிருந்தார்.

நவீன காலத்து துறவு நிலை

அத்துரலிய ரத்தன தேரர் முற்றும் துறந்தவராகக் கருதப்படுகின்ற ஒரு துறவி. அவர் ஒரு பௌத்த பிக்கு. அது மாத்திரமல்ல. அவர், மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். ஆசா பாசங்களையும், லௌகீகங்களையும், ஏனைய சாதாரண வாழ்க்கையின் சுகபோக அம்சங்களையும் துறந்த ஒருவரே துறவி என்று பொதுவாகக் கருதப்படுகின்றது. அதாவது முற்றும் துறந்தவரே துறவி.

ஆனால் இங்கு பௌத்த மதத்தைச் சார்ந்து பௌத்த துறவிக்குரிய மஞ்சலள் அங்கியை அணிந்த ஒருவர் தேர்தலில் பங்குபற்றி, மக்களால் தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினராகச் செயற்பட்டு வருகின்றார். பௌத்த துறவிகள் அமைச்சர்களுக்கும் மேலாக அரசர்களுக்கு ஆலோசனைகளையும் நல்வழிகளையும் போதனை செய்து நல்ல முறையில் அரசியல் நடைபெறுவதற்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார்கள் என்பதே பண்டைய வரலாறு.

ஆனால் நவீன காலத்து அரசியலில் பௌத்த துறவிகள் அரசியலில் பங்குபற்றி, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குரிய அனைத்து சுகபோக வசத்களையும், சலுகைகளையும் பெற்று பகட்டான வாகனங்களில் விசேட படையணியின் பாதுகாப்புடன் பவனி வருவதைக் காணக் கூடியதாக உள்ளது.

அமைச்சுப் பதவியைக் கொண்டிருந்த ரிசாத் பதியுதீனை மட்டுமல்ல. வேறு இரண்டு மாகாணங்களின் ஆளுனர்களையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் அத்துரலிய ரத்தன தேரர் தனது உண்ணாவிரதப் போராட்டத்தின்போது முன்வைத்திருந்தார்.

கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுனர் அஸாத் சாலி ஆகியோரும் ரிசாட் பதியுதீனைப் போல இஸ்லாமிய அடிப்படைவாத பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டிருந்தார்கள். இவர்கள் மூவரும் பயங்கரவாதத்திற்குத் துணைபோனவர்கள். இதனால் இவர்களைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்பது அவருடைய உண்ணாவிரதப் போராட்டத்தின் கோரிக்கையாகும்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்டி தலதா மாளிகைக்கு எதிரில் ஆரம்பிக்கப்பட்ட அந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கப் பிரதேச மக்கள் பெரிய அளவில் ஆதரவு வழங்கியிருந்தார்கள். இந்த உண்ணாவிரதப் போராட்டச் செயற்பாடு ஒரு புறம் நடைபெற்றது.

விடுதலைக்காகக் குரல் கொடுத்தவர்களையே பதவி நீக்கக் கோரிய வினோதம்

மறுபுறத்தில் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளராகிய ஞானசார தேரரும், அத்துரலிய ரத்தன தேரருடைய போராட்டத்திற்கு ஆதரவளித்திருந்தார். அந்த ஆதரவு சாதாரணமானதல்ல. ஊடகவியலாளர் எக்னெலிகொட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலான வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஹோமாகம நீதிமன்றத்தின் உள்ளே அத்துமீறிப் பிரவேசித்த ஞானசார தேரர் நீதிபதியையும், அரச தரப்பு சட்டத்தரணிகள், பொலிசார் உள்ளிட்ட பலதரப்பினரையும் இழிவுபடுத்தி ஏசி, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையுறு விளைவித்திருந்தார். அங்கு சாட்சியமளிப்பதற்காக வந்திருந்த எக்னெலிகொடவின் மனைவி சந்தியாவின் செவியில் அவரை நிந்தனை செய்திருந்தார்.

இந்த நீதிமன்ற குற்றச்சாட்டிற்காக மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் அவருக்குக் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. சிறைத் தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரரை வெசாக் பண்டிகையை முன்னிட்டு, கைதிகளுக்குப் பொதுமன்னிப்பளிக்கும் நடைமுறையின் கீழ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்திருந்தார். இந்த விடுதலை நீதிமன்ற நடைமுறை விதிகளுக்கும், அரசியலமைப்புக்கும் முரணானது.

இவ்வாறு சட்டவிரோதமான முறையில் விடுதலையாகியிருந்த ஞானசார தேரரே, முஸ்லிம் அரசியல் பிரமுகர்களான அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் ஆளுனர்களாகிய ஹிஸ்புல்லா மற்றும் அஸாத் சாலி ஆகிய மூவரையும் பதவி நீக்கக் கோரி அத்துரலிய ரத்தன தேரர் நடத்திய உண்ணாவிரதத்திற்கு ஆதரவளித்திருந்தார்.

நீதிமன்றத் தீர்ப்பின்படி 19 வருட கடுங்காவல் சிறைத் தண்டனையை 6 வருடங்கள் சிறைவாசத்தை அனுபவித்துக் கொண்டிருந்த ஞானசார தேரரை, ஹிஸ்புல்லா மற்றும் அஸாத் சாலி ஆகிய இருவரும் சிறைச்சாலைக்குச் சென்று பார்வையிட்டு அவருடன் கலந்துரையாடியிருந்தனர்.

அத்துடன், பௌத்த மத அமைப்புக்களும் பொது அமைப்புக்களும் ஞானசார தேரரை பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்ய வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்திருந்த தருணத்தில் கிழக்க மற்றும் மேல் மாகாணங்களின் ஆளுனர்களாகிய இந்த முஸ்லிம் அரசியல் பிரமுகர்களும்கூட, ஜனாதிபதியிடம் அந்த விடுதலைக்காகப் பரிந்துரைத்திருந்தனர்.

இவ்வாறு தனது விடுதலைக்காகச் செயற்பட்டிருந்தவர்களையே பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக ஞானசார தேரர் உரத்து குரல் எழுப்பியதுடன், அவர்கள் தமது பதவிகளைத் துறப்பதற்கான காலக்கெடு ஒன்றையும் குறித்திருந்தார்.

இந்த நடவடிக்கை அவருடைய குரூர இனவாத மதவாத போக்கிரிக் குணத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியிருந்தது என்றே கூற வேண்டும்.

முஸ்லிம்கள் மீதான பௌத்த தீவிரவாதத்தின் அச்சுறுத்தல்

அத்துரலிய ரத்தன தேரரின் உண்ணாவிரதப் பேராட்ட கோரிக்கைக்கு ஒருசில பௌத்த துறவிகளும் ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்கள். அத்துடன், பௌத்த மத பீடாதிபதிகளும் அத்துரலிய ரத்தன தேரரின் கோரிக்கைகளை முழுமையாக ஏற்று, அதற்கு ஆதரவளித்ததுடன், அவற்றை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.

ரிசாத் பதியுதீன், ஹிஸ்புல்லா, அஸாத் சாலி ஆகிய மூவரும் இஸ்லாமிய அடிப்படை வாதமாகிய வஹாபிஸத்திற்கு ஆதரவானவர்கள் என்றும் குண்டுத் தாக்குதல்களை நடத்திய பயங்கரவாதிகளுடன் தொடர்பு கொண்டிருந்தார்கள் என்றும் குற்றம் சுமத்தி அவர்களைப் பதவி நீக்கம் செய்து அவர்களுக்கு எதிராக விசாரணைகளை நடத்த வேண்டும் என்பதும் அத்துரலிய ரத்தன தேரரின் கோரிக்கைகளில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

அத்துரலிய ரத்தன தேரரின் உண்ணாவிரதப் போராட்டம் பௌத்த இனவாதிகளின் பேராதரவைப் பெற்று முஸ்லிம்களுக்கு எதிரான கடும் போக்கு நிலை ஒன்றை உருவாக்கியிருந்தது. அதேவேளை, குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அவர்கள் பதவி துறக்காவிட்டால், நிலைமைகள் மோசமடையும் என்ற தொனியில் தனக்கே உரிய இனவாதப் போக்கில் ஞானசார தேரர் எச்சரிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.

இதனால், முஸ்லிம் அரசியல் பிரமுகர்கள் மூவரினதும் பதவித் துறப்புக்கான கோரிக்கை மிக மோசமான இன வன்முறை உருவாகக் கூடிய நிலைமை ஒன்றை நோக்கி படிப்படியாக நகர்ந்து கொண்டிருந்த ஆபத்துக்கான சமிக்ஞையை வெளிக்காட்டியிருந்தது.

இத்தகைய ஒரு நெருக்கடியான நிலைமையிலேயே ஜனாதிபதி ஆளுனர்கள் இருவரையும் தமது பதவிகளை இராஜிநாமா செய்யுமாறு கேட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் தமது இராஜிநாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்தார்கள்.

சட்டம் செயற்படவில்லை

சிங்கள பௌத்த பேரினவாதிகளின் உணர்வுகளைத் தூண்டிவிட்டு, முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தலையெடுப்பதற்கான சூழ்நிலையை அத்துரலிய ரத்தன தேரரின் உண்ணாவிரதப் போராட்டம் உருவாக்கியிருந்த போதிலும், அந்த இனவாத அச்சுறுத்தலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் முனையவில்லை. குறிப்பாக அவசரகாலச் சட்டம் அமுலில் உள்ள ஒரு சூழலில் இனவாதத்தைத் தூண்டுவோருக்கு எதிராகவும் இனவாத, மதவாத வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக சட்டம் பாய்ந்திருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட மக்கள் இனத்தை அல்லது மதம் சார்ந்த இனக்குழுமத்திற்கு அச்சுறுத்தல் விடுத்தவர்களை அவசரகாலச் சட்டம் பொறுத்துக்கொள்ள மாட்டாது என்பதை நிலைநிறுத்தி இருக்க வேண்டும்.

இந்த இரண்டு விடயங்களும் அத்துரலிய ரத்தன தேரரின் உண்ணாவிரதப் போராட்டத்தின் விளைவாக அப்பட்டமாக வெளிப்பட்டிருந்தன. ஆனால் அவற்றுக்கு எதிராக சீறி எழுந்திருக்க வேண்டிய அவசரகாலச் சட்டம் மகுடிக்கு மயங்கிய பாம்பைப்போல மயங்கிக் கிடந்தது.

பொது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவதற்காக அவசர அவசரமாக மீண்டும் கொண்டுவரப்பட்ட அவசரகாலச் சட்டம் தனது கடமையைச் செய்யவில்லை. அது சிங்கள பௌத்த தேசியவாதிகளினதும், பௌத்த தீவிரவாதிகளினதும் இனவாத மதவாத வெறித்தனப் போக்கிற்கு அஞ்சி, அடங்கி ஒடுங்கிக் கிடந்தது. அடங்கி ஒடுங்கிக் கிடக்கின்றது.

வரலாற்றுப் பெருமையைத் தட்டிக்கொண்டார்கள்

ஓர் இனத்திற்கு எதிராக வன்முறைகளைத் தூண்டி விடுவது என்பது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கின்ற ஒரு செயலாகவும் கருதப்பட முடியும். அந்த வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதற்கு அவருக்கு இரண்டு அதிகார நிலைமைகளில் பொறுப்பு இருக்கின்றது. முதலாவது நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் என்ற பதவி வழியாக அவர் இனவாத மதவாத நடவடிக்கைகளுக்கு எதிராகச் செயற்பட்டிருக்க வேண்டும். அதற்கும் அப்பால் ஓர் இனக்குழுமத்திற்கு எதிரான வன்முறைகள் கட்டவிழக் கூடிய சூழலை நோக்கி நிலைமைகளை நகர்த்த முற்பட்டவர்களுக்கு எதிராக நாட்டின் தேசிய பாதுகாப்பு என்ற போர்வையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற ரீதியில் அவர் நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.

புpரதமர் என்ற ரீதியில் ரணில் விக்கிரமசிங்கவும் அதற்கான முயற்சிகள் எதனையும் எடுக்கவில்லை. பாதுகாப்பு அமைச்சுக்கு அப்பால் சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவிகூட இல்லாத நிலையாக இருந்த போதிலும், அதற்கான ஒரு முயற்சியையாவது அவர் எடுத்திருக்க வேண்டும். அதுவும் நடைபெறவில்லை. மொத்தத்தில் சட்ட அமுலாக்கல் என்ற விடயத்தில் எதுவுமே நடக்கவில்லை.

மாறாக, சிங்கள பௌத்த தீவிரவாதத்தின் மேலாண்மைப் போக்கிற்குத் தலை வணங்கி ஆளுனர்கள் இருவரையும் இராஜிநாமா செய்யுமாறு கேட்பதற்கே, அவரால் முடிந்திருக்கின்றது. ஆளுனர்கள் இருவரும் அவரது கோரிக்கையை ஏற்று பதவிகளைத் துறந்த போதிலும், அமைச்சர் ரிசாத் பதியுதீனின் பதவித் துறப்பு வித்தியாசமாக இடம்பெற்றது.

அரசாங்கத்தில் அங்கம் வகித்த அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் ஒன்றுகூடி, ரிசாத் பதியுதீனுடன் இணைந்து தமது பதவிகளை இராஜிநாமா செய்தனர். இதனை பௌத்த பீடாதிபதிகளோ அல்லது சிங்கள பௌத்த தீவிரவாதிகளோ எதிர்பார்த்திருக்க வில்லை. முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரினதும் பதவித் துறப்பானது, அவர்களுக்குப் பேரிடியாகவே வந்திரறங்கியது.

அரசாங்கத்தில் முஸ்லிம் அமைச்சர்களின் பயங்களிப்பு என்ற அம்சம் காலம் காலமாகத் தொடர்ந்து வந்துள்ளது, இந்த அரசாங்கத்தின் கீழ் அமைச்சுப் பொறுப்புக்களையும் பிரதி அமைச்சர்கள் அல்லது இராஜாங்க அமைச்சர்களின் பொறுப்புக்களையும் ஏற்றிருந்த முஸ்லிம் அரசியல் தலைவர்கள் கட்சி பேதங்களைக் கடந்து தமது பதவிகளைத் துறந்ததையடுத்து, முஸ்லிம்கள் இல்லாததோர் அமைச்சரவையை - தனியே சிங்களவர்களை மாத்திரமே கொண்ட அமைச்சரவையைக் கொண்டதாக இந்த அரசாங்கம் வரலாற்றில் இடம் பிடித்துக் கொண்டது. அதற்கான பெருமையை ஜனாதிபதியும் பிரதமரும் தட்டிக்கொண்டார்கள்.

பதவித் துறப்பு பாடம் படிப்பித்ததோ. . . . . . ?

இத்தகைய ஒரு பின்னணியில்தான் முஸ்லிம்கள் மூன்று பேரை பதவி துறக்க வேண்டும் அல்லது அவர்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடு;திருந்த பௌத்த மதத்தின் நான்கு பீடங்களும் பதவி துறந்த முஸ்லிம் அமைச்சர்கள் மீண்டும் தமது பதவிகளை பொறுப்பேற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றன. அந்தக் கோரிக்கையை முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நிராகரித்துள்ளார்கள். இந்த நிராகரிப்பும்கூட பௌத்த மத பீடங்களுக்கு ஓர் அதிர்ச்சி வைத்தியம் என்றே கூற வேண்டும்.

பதவி துறந்தவர்கள் தமது பதவிகளை மீண்டும் பொறுப்பேற்க வேண்டும் என்ற பௌத்த மத பீடாதிபதிகளின் தலைகீழான நகர்வானது, கடந்து போய்விட்ட பேருந்தை நிறுத்துவதற்குக் கைகாட்டியதை ஒத்ததாகவே உள்ளது. கருணை, காருண்யம் பிறர் மீது அன்பு செலுத்துகின்ற தன்மைகளைப் போதிக்கின்ற பௌத்தத்தின்படி எவரும் நடந்து கொள்ளவில்லை.

பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தார்கள் அல்லது அவர்களுக்கு ஒத்துழைத்தார்கள் என்றால் அதற்கான ஆதாரங்களுடன் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சட்ட ரீதியாக அணுகியிருக்க வேண்டும். மாநாக, இனவாத, மதவாதப் போக்கில், அரசியல் நகர்வு வழியில் வெறுமனே குற்றச்சாட்டுக்களை முன்வைத்து பொதுவெளியில் போராட்டமே முன்னெடுக்கப்பட்டிருந்தது. அந்தப் போராட்டத்திற்குக் கண்மூடித்தனமாக ஆதரவு தெரிவித்த போக்கே இடம்பெற்றிருந்தது.

போராட்டத்தில் குதித்து கோரிக்கைகளை முன்வைத்தவர்களினதும், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தவர்களினதும் நடவடிக்கைகளினால் எழக்கூடிய பின்விளைவுகளைச் சிந்தித்து தொலைநோக்குச் சிந்தனையுடன் செயற்பட்டிருக்க வேண்டியவர்கள் அத்தகைய மகத்தான பொறுப்பைக் கோட்டை விட்டிருந்தார்கள்.

தெளிவாகிய விடயங்கள்

எது எப்படியானாலும், இரண்டு விடயங்கள் தெளிவாகியிருக்கின்றன. நாட்டில் அமைதியையும் சமாதானத்தையும் ஏற்படுத்தி, நாட்டு மக்கள் இயல்பாக வாழ்வதற்குரிய சூழலை ஏற்படுத்துவதற்காக எவ்வாறான சட்டங்களை உருவாக்கினாலும்சரி, எத்தனை சட்டங்களை உருவாக்கினாலும்சரி, அந்த சட்டங்கள் சிங்கள பௌத்த தேசிய தீவிரவாதிகளின் நிழலைக்கூட தீண்ட முடியாது. அவர்களே சட்டம், ஒழுங்கு, நீதி மற்றும் ஆட்சி நிர்வாகம் என்பவற்றிற்கு மேலானவர்கள். அவர்களின் விருப்பு வெறுப்புக்கு ஏற்பவே அரசாங்கம் செயற்பட வேண்டும் - செயற்படும் என்பது முதலாவது விடயம்.

முஸ்லிம் அரசியல் தலைவர்களின் தந்திரோபாய அரசியல் நகர்வின் மூலம் சிங்கள பௌத்த தேசிய வாதம் முதற் தடவையாக ஒரு தடையைச் சந்தித்திருக்கின்றது. முதல் முறையாக தன்னிஸ்டப்படி நடக்க முடியாது என்ற யதார்த்தம் சிங்கள பௌத்த தேசியத்திற்கு உணர்த்தப்பட்டிருக்கின்றது என்பது இரண்டாவது விடயம்.

மூளைசாலிகள் அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் என்று கருதப்படுகின்ற தமிழ் அரசியல் தலைவர்கள் முஸ்லிம் அரசியல் தலைவர்களிடம் இருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற விடயத்தையும் முஸ்லிம் அமைச்சர்களின் பதவித்துறப்பு உணர்த்தியிருக்கின்றது என்பதையும் ஒரு முக்கிய விடயமாகக் கொள்ளத்தான் வேண்டும்.

அருவி இணையத்தளத்துக்காக பி.மாணிக்கவாசகம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE