Thursday 28th of March 2024 03:57:04 AM GMT

LANGUAGE - TAMIL
“நினைவில் நிற்கும் குடியிருப்புக்கள்” - நா.யோகேந்திரநாதன்

“நினைவில் நிற்கும் குடியிருப்புக்கள்” - நா.யோகேந்திரநாதன்


அன்றைய நாட்களில் தமிழ் மக்களின் குடியிருப்புக்கள், அவற்றுடன் இசைந்த வாழ்வுமுறைகள் என்பன தற்சமயம் பெருமளவு கனவாகப் போய்விட்டாலும் கூட மிகச்சிறிய அளவில் வறிய மக்கள் மத்தியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக எஞ்சிக் கிடக்கின்றன. எனினும் அக்குடியிருப்புக்களைச் சுற்றியிருந்த ஒரு கூட்டுவாழ்வு முற்றாகவே காணாமல் போய்விட்டது. ஆனாலும் சில முதியவர்கள் அவற்றைப் பெருமையுடன் நினைவு கூருவதுண்டு.

அன்றும் கூடக் குடியிருப்புக்கள் கிராமிய சுயதேவைப் பூர்த்தி முறை என்ற பொதுவான அம்சத்தைக் கொண்டிருந்த போதிலும் நில மானியச் சமூகக் கட்டமைப்புக்குரிய வேறுபாடுகள் வசதி படைத்தவர்களும், சாதாரண மக்களுக்குமிடையே சிலதைத்தான் செய்தன.

குடியிருப்புக்காணிகள்

வடக்கில் பொதுவாகக் காணிகள் பரப்பு என்ற அளவீட்டு முறையாலேயே கணிக்கப்பட்டன. ஒரு வீடு பொதுவாகவே நான்கு, ஐந்து பரப்பு அளவில் (கிட்டத்தட்ட கால் ஏக்கர்) அதில் ஒரு குடும்பத்துக்குத் தேவையான பல பொருட்களையும், தேவைகளையும் பெற்றுக்கொள்ளக்கூடியதாயிருக்கும். ஒன்றிரண்டு மாமரங்கள், நான்கைந்து தென்னைகள் அதில் ஒன்றிரண்டு செவ்விளநீர் மரங்களாயிருக்கும்.

குடத்தடி வாழை உட்பட கிணற்றடியில் சில வாழைகள், முற்றத்தில் ஒரு வேப்பமரம் என்பன காணிகளை ஒரு சோலையாக வைத்திருக்கும் வகையில் அமைந்திருக்கும். கிணற்றடியைச் சுற்றி கிடுகுவேலி அமைந்திருக்கும். அதிக செவ்வரத்தை போன்ற பூ மரங்கள் இருக்கும். கிணற்றுக்கு அண்மையில் எலுமிச்சை, மாதுளை, வாழை என்பவற்றுக்கு நீர் பாய்ச்ச அவை செழித்து வளர்ந்து பலன்தரும். ஒன்றிரண்டு வசதி படைத்த வீடுகளை விட ஏனையவற்றில் மலசல கூடம் இருக்காது. அருகில் உள்ள பனங்காணிகளே சிறந்த வெளி மலசல கூடங்களாக அமைந்திருக்கும்.

வேலி

காணியில் நாற்புற எல்லைகளும் வேலி அமைக்கப்பட்டிருக்கும். முன்பக்க வேலி, பனை ஓலைகளால் மிக அழகான முறையில் அடைக்கப்பட்டிருக்கும். ஏனைய மூன்று வேலிகளும் “அலம்பல்” என்று சொல்லப்படும் கொம்புகுழைக் காட்டில் வளரும் ஒருவித மரங்களின் கிளைகளால் அடைக்கப்படும். அந்த வேலிகள் சீராக நிற்கும் வகையில் பனை ஓலைகளிலிருந்து வெட்டப்படும் மட்டைகளால் அல்லது பாவட்டை எனப்படுகின்ற வரிச்சுத் தடிகளால் கட்டப்படும்.

வேலிகளில் முள்முருக்கு, சீமைக்கிளுவை. பூவரசு என்பனவே வேலியில் ஓலைகளுக்குக்கும், அலம்பல்களுக்கும் ஆதாரமாக அமையும். ஆடுகளுக்கு அவற்றின் குழைகள் வெட்டப்பட்டு உணவாக வழங்கப்படும். மரணச் சடங்குகளின் போது பிரேதம் எரிப்பதற்கு வேலியில் நல்ல முற்றிய பூவரசுகளும், திருமணச் சடங்குகளின் போது கன்னிக்கால் நடுவதற்கு முள்முருக்கும் முக்கியமானவை.

நாற்சாரம் வீடுகள்

வீடுகளைப் பொறுத்தவரையில் இரண்டுவிதமானவை அமைந்திருக்கும். வசதி படைத்தவர்கள் நாற்சாரம் வீடு அமைத்திருப்பர். அது சுண்ணாம்பும் சற்கரையும் கொண்ட கலவையால், சுண்ணக்கற்களை வைத்துச் சுவர் கட்டி அமைக்கப்படும் வீடுகளாகும்.

வளை, கைமரம், சலாகை என்பன மனைமரத்திலானவையாகும். அப்போதெல்லாம் இப்போதுள்ளது போன்ற தட்டை ஓடுகள் கிடையாது. கூரைகள் பீலி ஓட்டினாலேயே வேயப்படும். நான்கு பக்கமும் அறைகள் அமைக்கப்பட்ட முற்றம் அவற்றின் நடுவிலேயே இருக்கும். முன் பக்கம் “போட்டிக்கோ” எனச் சொல்லப்படும் ஒரு திறந்த அமைப்பு முன்வாசல் பக்கம் அமைக்கப்பட்டிருக்கும். முன் வாசலில் இருபுறமும் இரு அறைகள் சாதாரண புழக்கத்துக்கு இருக்கும். உள் அறைகளில் ஒரு பக்கத்தில் சாமியறை, தாயறை என இரு அறைகள் இருக்கும். சாமியறையில் கடவுள்கள் படங்கள் வைக்கப்பட்டு வணங்கப்படும்.

தாயறையில் பணம், காணி உறுதி, நகைகள் என்பன பத்திரப்படுத்திவைக்கப்படும். அவற்றை வைப்பதற்குப் பெட்டகம் என அழைக்கப்படும் ஒரு பெரிய மரப்பெட்டி இருக்கும். கூறை, பட்டுவேட்டி போன்ற முக்கிய உடுப்புக்களை வைக்க அலுமாரியும் வைக்கப்பட்டிருக்கும்.

அடுத்த பக்கத்தில் உள்ள இரு அறைகளும் படுக்கை அறைகளாகப் பாவிக்கப்படும். பின் பக்கத்தில் உள்ள இரு அறைகளில் ஒன்று சமையலறையாகவும் மற்றையது தட்டுமுட்டுச் சாமான்கள் போட்டு வைக்கப்படும் அறையாகவும் பாவிக்கப்படும். நெல்லு போன்றவை சேமிக்கப்படுவதும் இந்த அறையிலேயே.

படலை

காணிக்குள் புகும் வெளிவாசலில் “சங்கடப் படலை” அமைக்கப்பட்டிருக்கும். அதற்குக் கூரை போட்டு வேயப்பட்டு வாசலின் இரு புறமும் திண்ணைகள் அமைக்கப்பட்டிருக்கும். மாலை நேரத்தில் முதியவர்கள் அதில் அமர்ந்தவாறே, “ஊர்ப்புதினம்” கதைப்பார்கள். அதில் ஒரு பக்கத்தில் மண்பானையில் தண்ணீரும், ஒரு தகர மூக்குப் பேணியும் வைக்கப்பட்டிருக்கும். வெயில் நேரங்களில் அவ்வழியே செல்பவர்கள் நீரை அருந்த முடியும். சங்கடப் படலையிலிருந்து போட்டிக்கோ வரையும் பூங்கன்றுகள் அழகாக நடப்பட்டிருக்கும். போட்டிக்கோவிலும் இரு பக்கங்களிலும் வாங்குகள் போடப்பட்டிருக்கும்.

சாதாரண வீடுகள்

கிராமங்களில் பெரும்பாலான மக்கள் மண் வீடுகளிலேயே வசிப்பர். இது “செம்பாட்டு மண்”, அல்லது “கழி மண்” என அழைக்கப்படும் மண் வகைகளில் எதாவது ஒரு மண் வகைகளினால் குழைத்து சுவரெழுப்பி அமைக்கப்படும் வீடுகளாகும்.

முதலில் ஆறுகப்புக்கள் நடப்படும். பெரும்பாலும் கப்புகள் வேப்பமரத்தாலானவையாகவே அமையும். போதியளவு வேம்பு கிடைக்காத போது முதிரை போன்ற காட்டுமரங்கள் பாவிக்கப்படும்.

அதன் மேல் நாலு பக்கமும் வளை வைக்கப்படும். வளை பனை மரத்தால் சீவி வடிவமைக்கப்பட்டிருக்கும். பிரதான கப்பு நடுவது, வளை வைப்பது என்பன ஐயரால் குறித்துக்கொடுக்கப்படும் பொருத்தமான நாளிலேயே மேற்கொள்ளப்படும். நாற்புறமும் வளைகளின் மேல் பனை மரத்தினால் உருவாக்கப்பட்ட கை மரங்கள் பொருத்தப்பட்டு உச்சியில் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்படும் அந்த நாட்களில் இரும்பு ஆணிகள் பாவிக்கப்படுவதில்லை. பனை மரத்தின் வைரமான பகுதிகளைப் பயன்படுத்தி மர ஆணிகள் உருவாக்கப்பட்டு, மரங்களில் துளைகள் இடப்பட்டு மரங்கள் பொருத்தப்படும். கை மரங்களின் மேல் பனை மரங்களால் செய்யப்பட்ட சிலாகைகள் எனப்படுகின்ற வரிச்சுக்கள் நாரினால் கட்டப்படும். நார் என்பது பச்சை பனை மட்டையின் உட்புறத்திலிருந்து உரித்தெடுக்கப்பட்டு, சீவிய பதமாக்கப்பட்டதாகும். பின்பு அது பனை ஓலைகளால் வேயப்படும். கட்டுவதற்கான தேவைகளுக்கு குருத்தோலைகளிலிருந்து பிரித்தெடுக்கப்படும். “ஈர்க்குகள்” பாவிக்கப்படும். கூரை வேய்வதில் முகடு கட்டுவது ஒரு தனித்துவமான தொழில்நுட்பமாகும். நான்கு பக்கங்களிலும் உள்ள சாய்வு பகுதிகள் சந்திக்கும் உச்சியே முகடு ஆகும். முகட்டில் ஓலைகள் அடுக்கப்பட்டு, பூவசரந் தடிகள் பொருத்தப்பட்டு. நாரினால் வரிந்து உறுதிப்படுத்தப்படும்.

அறைகள்

வீடு தாயறையாலும், நடை எனச் சொல்லப்படும் இன்னொரு பகுதியாலும் அமைக்கப்படும். தாயறையே முக்கிய பொருட்கள் வைக்கும் இடமாகவும் பிரதம தம்பதிகளின் படுக்கையறையாகவும் அமைந்திருக்கும். ஒரு யன்னலும், ஒரு கதவு நிலையும் அமைந்திருக்கும். தாயறையின் கதவு நிலைகள் வேப்பமரத்திலேயே அமைந்திருக்கும் அவற்றில் அழகான வேலைப்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். கூரையமைத்தல், கதவு, நிலை செய்தல் என்பன தச்சுத் தொழிலாளர்களாலேயே மேற்கொள்ளப்படும்.

நடைப்பகுதி மூன்று பக்கமும் சுவர்களால் அமைந்திருக்கும். அதில் ஒரு மூலையிலே சுவாமி படங்கள் வைக்கப்பட்டு விளக்கு வைக்கப்படும். இதுவே படுக்கையறையாகவும் பாவிக்கப்படும். இதன் முன் பக்கத்தில் சுவர் இருக்காது. தென்னோலையால் “பன்னாங்கு” கட்டித் தொங்கவிடப்பட்டிருக்கும். முன்பகுதிக் கூரை ஏனைய கூரைகளைவிட சற்று நீளமாக அமையும். இதில் நடையின் வாசலில் இரு புறமும் திண்ணைகள் அமைக்கப்பட்டிருக்கும்.

முன் வாசலில் ஒரு பக்கக் கூரையில் “திரு நீற்றுக்குடுவை“ தொங்கவிடப்பட்டிருக்கும். இதுவும் பனை ஓலையால் அமைக்கப்பட்டிருக்கும்.

மால்

வீட்டுக்கு எதிரில் முற்றத்துக்கு நான்கு புறமும் அரைச்சுவர் வைக்கப்பட்ட ஒரு கொட்டில் இருக்கும். அதை மால் என்று அழைப்பர். அங்கு நெல்லு சேமித்து வைக்கப்படும் “கொம்பறை” அமைக்கப்பட்டிருக்கும். கொம்பறை என்பது பனை ஓலையால் பின்னப்பட்ட வட்ட வடிவிலான ஒரு கூரை போன்ற அமைப்பாகும். மாலின் நாலு பக்கமும் திண்ணைகள் அமைக்கப்பட்டிருக்கும். விருந்தினர்கள், உறவினர்கள் வந்து அமர்வதும் இங்குதான்.

சமையலறை

வீட்டுக்கு முன்னால் அமைந்துள்ள முற்றத்தின் இடது பக்கமாகச் சமையலறை அமைந்திருக்கும். இதை “அடுக்களை” என்று அழைப்பார்கள். அடுக்களை வீடு போன்ற அமைப்பில் ஒன்றை அறையைக் கொண்டதாக அமைந்திருக்கும். அரைச்சுவர் அமைக்கப்பட்டு, மேல் பகுதி பனை மட்டை வரிச்சுகளால் அமைக்கப்பட்டிருக்கும். மூலையில் மண்ணால் “புகடு” (உயரமான இடம்) அமைக்கப்பட்டிருக்கும். அதில் சட்டி, பானை வைத்துச் சமைக்க வசதியாக அடுப்புகள் வெட்டி அமைக்கப்படும். சாப்பாட்ட அறையும் அதுதான்.

அனைவரும் நிலத்தில் அமர்ந்தே உண்ணுவர். விரதம் போன்ற விசேட நாட்களில் வாழையிலையிலும் ஏனைய நாட்களில் “வட்டில்“ என அழைக்கப்படும் வட்டத் தட்டுக்களிலும் சாப்பிடுவதுண்டு. நீர் அருந்த வெண்கலச் செம்பே பாவிக்கப்படும்.

குடத்தடி

சமையலறைக்கு அருகில் வெளிப்பக்கத்தில் ஒரு புறம் குடத்தடி அமைக்கப்பட்டிருக்கும். சட்டி, பானை கழுவுதல் அங்கு இடம்பெறும். அருகில் பனை மட்டைகள், பூவரசம் தடிகளால் உருவாக்கப்பட்ட “சிறாம்பி” அமைந்திருக்கும். சட்டி, பானை கழுவி அதிலேயே கவிழ்த்து வைப்பார்கள். சட்டி, பானை கழுவும் நீரில் செழித்து வளர ஒரு குடத்தடி வாழை நடப்பட்டிருக்கும்.

வீடு மேய்தல்

வீடு மேய்தல், வேலியடைத்தல் போன்ற செயற்பாடுகள் கூலி கொடுத்துச் செய்யப்படுவதில்லை. அயலில் உள்ளவர்கள் கூடியே செய்துமுடித்துவிடுவர். அன்றைய நாளில் காலை உணவு வீடுமேயப்படும் வீட்டிலேயே அனைவருக்கும் அமையும். காலை உணவுக்குச் சுடப்படும் தோசையின் வாசனை கூட நாலு வீட்டுக்கு மணக்கும். அநேகமாக ஒன்றுவிட்டு ஒரு வருடம் வீட்டு மேய்ச்சல் இடம்பெறும்.

வீடு மேயும் போதும் கழற்றப்படும் பனை ஓலைகள் கூட வீணாக்கப்படுவதில்லை. ஓலைப்பகுதி மட்டையிலிருந்து சிராய்க்கப்பட்டு மட்டைகள் வரிச்சுக்கட்டும் தேவைக்குப் பயன்படுத்தப்படும். ஓலைச் சிறகுகள் புகையிலைச் சிற்பங்கள் போன்று உருட்டிக் கட்டப்பட்டு தோட்டங்களுக்குக் கொண்டு போகப்பட்டு பசளையாகத் “தாய்க் கொத்தின்” போது காவிளாய், குழை வகைகளுடன் போட்டுக் கொத்தப்படும். பனையோலை பசளையாகப் பாவித்தால் பயிர்களுக்குக் குருமன் நோய் வராது எனச் சொல்வார்கள்.

வீடு, முற்றம் கூட்டும் போது சேரும் குப்பைகளும் ஓரிடத்தில் குவிக்கப்பட்டுத் தோட்டங்களுக்குக் கொண்டு செல்லப்படும். அக் குப்பை மேடுகளில் சாம்பல் பூசணி விதைகள் போடப்பட்டு பூசணிக்காய் ஆய்ந்து பயன் பெறுவதும் உண்டு.

விளக்குமாறு

வீடு முற்றம் பெருக்குவதற்கு, தென்னை ஈர்க்குகளால் செய்யப்பட்ட விளக்குமாறே பாவிக்கப்படும். அதனால் குனிந்து நின்றே முற்றம் பெருக்கவேண்டும். முற்றம் கூட்டி, நீர் தெளித்த பின்பு பார்த்தால் விளக்குமாற்றின் அடையாளங்கள் கோலம் போட்டது போன்று அழகாக இருக்கும்.

வீடுகளுக்கு அப்போதெல்லாம் சீமெந்துத் தரை கிடையாது. மண்தரை தான். ஆனால் சாணத்தால் அழகாக மெழுகப்பட்டிருக்கும். சாணத்துடன் முள்முருக்கு அல்லது பொன்னாவரசு இலைச்சாறு கலந்து மெழுகும் போது இன்னமும் அழகாக இருக்கும்.

இன்று எமது குடியிருப்புக்கள் மாடமாளிகைகளாகவும் கூட கோபுரங்களாகவும் மாறிவிட்டன. ஓலை வீடுகள் காணாமற் போய்விட்டன. ஆனால், அன்றைய குடியிருப்புக்களையும் சுற்றிய கிராமிய வாழ்வு, கூட்டுறவு வாழ்க்கை, கிராமிய சுயதேவைப் பூர்த்தி அமைப்பு, சுகாதாரமான தூய்மையான வாழ்வு, ஒருவர் நலனை மற்றவர் பேணும் அந்நியோன்யம் என்பவற்றில் இருந்த இனிமை எங்கோ தொலைந்துவிட்டது.

பன்னாடைகளும், கொக்காரைகளும், பனம் கருக்குகளும் காணிகளில் கிடந்து கறையான் பிடிக்க நாம் இறக்குமதி செய்யப்படும் எரிவாயுவில் சமைக்கிறோம். மண்சட்டியில் காய்ச்சிய மீன்குழம்பும், கத்தரிக்காய் பால் கறியும், முருங்கைக்காய் பிரட்டலும் இனிக் கிடைப்பதற்கான வாய்ப்புக்களே இல்லை.

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE