Thursday 28th of March 2024 03:58:05 PM GMT

LANGUAGE - TAMIL
நிபந்தனையற்ற ஆதரவு - சாதித்தது என்ன? - பி.மாணிக்கவாசகம்

நிபந்தனையற்ற ஆதரவு - சாதித்தது என்ன? - பி.மாணிக்கவாசகம்


ஒருமித்த இலங்கை நாட்டில் தமிழ் மக்களின் இறையாண்மை, சுயநிர்ணய உரிமை, மனித உரிமை, வாழும் உரிமை, அடிப்படையில் சமஸ்டிக் கட்டமைப்பில் பிராந்தியங்களினதும் தேசிய இனங்களினதும் தன்னாட்சி உரித்தை உறுதிப்படுத்தும் வகையில் அரசியல் தீர்வு அமைய வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

அந்தக் கட்சியின் 16 ஆவது தேசிய மாநாடு யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது. நீண்ட நெடுங்காலமாக இழுத்தடிக்கப்பட்டு, புரையோடிப் போயுள்ள இனப் பிரச்சினைக்கு தாமதமின்றி தீர்வு காணப்பட வேண்டும் என்று இந்த மாநாடு வலியுறுத்தியுள்ளது.

அரசியல் தீர்வு மட்டுமல்லாமல் தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள பல்வேறு பிரச்சினைகளையும் உள்ளடக்கி, 27 அம்சங்களை இந்த மாநாட்டுத் தீர்மானம் வலியுறுத்தியிருக்கின்றது. போதைப் பொருள் ஒழிப்பிற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள தமிழரசுக் கட்சி, 19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நிலைப்பாட்டிற்கு, எதிரான நிலைப்பாட்டைப் பிரகடனப்படுத்தி உள்ளது.

அந்த திருத்தச் சட்டத்தை மேம்படுத்தி புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளையும் ஒன்று திரட்டிப் போராடுவதற்கு அனைவரும் முன்வர வேண்டும் என்றும் தமிழரசுக் கட்சி தனது மாநாட்டுத் தீர்மானத்தின் மூலம் அழைப்பு விடுத்துள்ளது.

மாநாட்டுத் தீர்மானங்களுக்கு உரமேற்றும் வகையில், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை நாடாளுமன்ற உறுப்பினருமாகிய இரா.சம்பந்தன் ஆற்றிய உரையில் வெளியிட்ட கருத்துக்கள் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கின்றன.

அதேபோன்று தமிழரசுக் கட்சியின் தலைவராக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் கருத்துக்களும் விமர்சனத்துக்கு ஆளாகி உள்ளன.

பகிரப்பட்ட இறையாண்மை, சுயநிர்;ணய உரிமை, சமஸ்டி முறையிலான தன்னாட்சியின் அடிப்படையிலான அரசியல் தீர்வு என்பதே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசை. இதனை நிறைவேற்றுவதற்காக மக்கள் தமிழரசுக் கட்சியின் தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பின்னால் அணி திரண்டிருந்தனர்.

ஆயினும் அவர்களுடைய அரசியல் அபிலாசையை நிறைவேற்றத்தக்க வகையில் அரசியல் காரியங்கள் அரசினாலும் முன்னெடுக்கப்படவில்லை. தமிழ்;த்தேசிய கூட்டமைப்பாகிய அவர்களுடைய அரசியல் தலைமையும் அதனை இராஜதந்திர வழிமுறைகளில் முன்னெடுக்கவில்லை.

அச்சுறுத்தல்களாலும் அசைக்க முடியவில்லை

யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த போதிலும் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் யுத்த காலத்தைப் போலவே தமிழ் மக்கள் மீதான இராணுவ அழுத்தங்களைத் தொடர்ந்து மேற்கொண்டிருந்தது.

யுத்தம் முடிந்த பின்னரும் மோதல்கள் இடம்பெற்ற வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் இருந்து அன்றைய அரசு இராணுவத்தை விலக்கிக் கொள்ளவில்லை. மாறாக அந்தப் பிரதேசங்களை முழுமையாக இராணுவ மயப்படுத்தி, போரினால் பாதிக்கப்பட்டிருந்த மக்களை உளவியல் ரீதியான அச்சுறுத்தலுக்கும், சமூக ரீதியிலான அச்சத்திற்கும் அரசு உள்ளாக்கியிருந்தது.

இதனால் யுத்தத்திற்குப் பின்னர் மோதல்கள் இடம் பெற்ற பிரதேசங்களில் உருவாகியிருக்க வேண்டிய நம்பிக்கைக்குரிய வாழ்வியல் சூழல், அரசியல் பொருளாதார சூழல் உருவாக்கப்பட்டிருக்கவில்லை.

எதிர்காலம் பற்றிய நம்பிக்கையற்றவர்களாகவும், அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காமலும், இராணுவ சூழலுக்குள் அச்சத்திற்கும் பீதிக்கும் உட்பட்டு, அன்னிய தேசம் ஒன்றில் வாழ்பவர்களைப் போன்ற மன நிலையிலேயே அவர்கள் வாழ நேர்ந்திருந்தது.

விடுதலைப்புலிகளையே முழுமையாக நம்பியிருந்த அந்த மக்களுக்கு, யுத்தத்தின் பின்னர் அத்தகைய நம்பிக்கைக்குரிய ஆளுமையுள்ள அரசியல் தலைமை கிடைக்கவில்லை.

விடுதலைப்புலிகளின் வழிநடத்தலில் அரசியலில் ஈடுபட்டிருந்த தமிழ்த்தேசிய கூட்டமைப்பையே விடுதலைப்புலிகளுக்குப் பின்னரான காலப்பகுதியில் தமது அரசியல் தலைமையாக ஏற்றுக்கொண்டனர். அந்தத் தலைமை தங்களை சரியான வழியில் கொண்டு நடத்திச் செல்லும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். மிகுந்த நம்பிக்கையையும் கொண்டிருந்தார்கள்.

இதனால், இராணுவ மயமான ஓர் அச்சுறுத்தல் மிக்க அரசியல் சூழலுக்குள் வாழ்ந்த போதிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கான தமது ஆதரவை தேர்தல்களிலும் மற்றும் வழிகளிலும் வெளிப்படுத்தி அதன் பின்னால் ஒன்று திரண்டிருந்தார்கள்.

ஆனால் அந்த அரசியல் தலைமை கடந்த பத்து வருடங்களாக பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதில் போதிய முன்னேற்றத்தைக் காட்டவில்லை. அதேபோன்று அரசியல் தீர்வு விடயத்திலும் முன்னோக்கிய நகர்வுகளை எட்டவில்லை.

யுத்தவெற்றியை பேரினவாத அரசியலுக்கான முதலீடாகக் கொண்டு, சர்வாதிகாரப் போக்கில் சென்ற மகிந்த ராஜபக்ச அரசாங்க காலத்தில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான சூழல் காணப்படவில்லை. ஆனால் 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆட்சி மாற்றத்திற்குப் பெரும் பங்களிப்பு நல்கி, புதிய அரசாங்கத்திற்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கிய போதிலும், தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குத் தலைமை தாங்கி வழிநடத்திய தமிழரசுக் கட்சி, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில் முன்னேற்றத்தை எட்டத் தவறிவிட்டது.

நிபந்தனையற்ற ஆதரவு என்ற அரசியல் தந்திரோபாயத்தை, தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுகின்ற வழிமுறையில் பயனுள்ளதாகப் பயன்படுத்துவதிலும் தவறிவிட்டது.

தோலிருக்க சுளை விழுங்கிய....

அன்றாடப் பிரச்சினைகள், எரியும் பிரச்சினைகள் என தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் படிப்படியாகக் கூடிச் செல்கின்றனவே தவிர, குறைந்தபாடாக இல்லை.

தமிழரசுக் கட்சியின் மாநாட்டுத் தீர்மானங்கள் மக்களின் பிரச்சினைகள் குறித்தே பேசுகின்றன. இந்தத் தீர்மானங்களின் எண்ணிக்கை மக்களின் பிரச்சினைகள் பல்கிப் பெருகிச் செல்வதைத் துலாம்பரமாக எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கின்றன.

அரசியல் தீர்வு சார்ந்த வடக்கு கிழக்கு இணைப்பு, தாயகக் கோட்பாடு, பகிரப்பட்ட இறையாண்மை, அடிப்படை வாழ்வுரிமை போன்ற விடயங்கள் போர்க்காலத்தில் இருந்ததிலும் பார்க்க காலத்துக்குக் காலம் மோசமடைந்திருப்பதையே காண முடிகின்றது.

யுத்தம் முடிவுக்கு வந்த 2009 ஆம் ஆண்டு இருந்த நிலைமைகள் ஆட்சி மாற்றம் நிகழ்ந்த 2015 ஆம் ஆண்டு மோசமடைந்திருந்தன. ஆட்சி மாற்றத்தின்போது அரியாசனம் ஏறிய நல்லாட்சியாளர்களின் நாலரை வருட காலத்தில் அந்த நிலைமைகள் மேலும் மோசமடைந்திருக்கின்றன.

நல்லாட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவின் மூலம் முண்டு கொடுத்த போதிலும் பிரச்சினைகளைக் குறைப்பதற்குத் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்குத் தலைமை ஏற்றுள்ள தமிழரசுக் கட்சியினால் முடியாமல் போயுள்ளது. பிரச்சினைகளைக் குறைக்காவிட்டாலும்கூட, அவைகள் பெருகிச் செல்லாமல் தடுத்து நிறுத்தவுமில்லை.

வெறுமனே தமிழ் மக்களின் இறையாண்மை, வரலாற்றுத் தாயகபூமி, சுயநிர்ணயம், சமஸ்டி, பிராந்திய சுயாட்சி என்று சொல்லலங்காரம் கொண்ட தீர்மானங்களையும், தேர்தல்கால வாக்குறுதிகளுக்கான ஆணைகளையும் வெளியிடுகின்ற வாய்வீச்சாக மாத்திரமே நிலைமைகள் இருக்கின்றன.

ஆனால் தோலிருக்க சுளை விழுங்கியதைப் போன்று வடக்கிலும் கிழக்கிலும் பிரதேசங்கள் நாளாந்தம் பறிபோகின்றன. வரலாற்று ரீதியாக தமிழ் மக்கள் வசித்த கிராமங்கள், வேளாண்மை செய்த விவசாய காணிகள், மீன்பிடி தொழில் செய்த கரையோரப் பகுதிகள் என்பவற்றில் சிங்களக் குடியேற்றங்கள், சிங்கள விவசாயிகளினதும், மீனவர்களினதும் தொழில் ரீதியான ஆக்கிரமிப்புக்கள் என்பன தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.

இடம்பெயர்ந்த மக்களின் கிராமங்களும், அவற்றில் உள்ள புராதன இந்து ஆலயங்கள், இந்து ஆலயச் சின்னங்கள் நிறைந்த இடங்களும் வன திணைக்களத்தினராலும், பௌத்த பிக்குகளினாலும், தொல் பொருள் திணைக்களத்தினராலும், வனஜீவராசிகள் திணைக்களத்தினராலும் ஆக்கிரமிக்கப்பட்டு சிங்கள பௌத்த மயமாக்கப்படுகின்ற அரச கைங்கரியங்களைக் முறைப்படி கேட்பாரும் இல்லை. உறுதியாகத் தடுப்பாரும் இல்லை.

இந்த நிலையில்தான் தமிழரசுக் கட்சியின் 16 ஆவது தேசிய மாநாடு நடைபெற்று கிட்டத்தட்ட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. அவற்றில் அரசியல் தீர்வுக்கான தீர்மானம் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது.

அதனடிப்படையில், அரசியல் தீர்வொன்றை மிக விரைவில் இந்த ஆண்டுக்குள் ஏற்படுத்த வேண்டும் என அரசையும் அரசியல் கட்சிகளையும் அனைத்து சமூகங்களிடமும், இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடமும் வேண்டுகோள் விடுப்பதாக, இந்த மாநாடு தெரிவித்துள்ளது.

அடுத்தது என்ன?

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக்கான போராட்டமானது பேச்சுவார்த்தைகளில் தொடங்கி, ஒப்பந்தங்களின் ஊடாக இணக்கப்பாட்டை எட்ட முயன்று பின்னர் சாத்வீகப் போராட்டமாக மாறி, ஒத்துழையாமை இயக்கமாக உருவெடுத்து, இறுதியில் ஆயுதப் போராட்டமாக மாற்றம் பெற்றது.

போராட்டத்தின் உச்சக்கட்டமாகிய ஆயுதப் போராட்டமும் அரசியல் தீர்வை வென்றெடுக்க முடியாமல் முடிவுக்கு வந்தது. இதனையடுத்து மீண்டும் சாத்வீக வழியிலான போராட்டம் பேச்சுவார்த்தை, நிபந்தனையற்ற ஆதவு என்ற தளங்களில் முன்னெடுக்கப்பட்ட போதிலும் அதுவும் முன்னேற்றத்தைக் காட்டவில்லை.

நிபந்தனையற்ற ஆதரவு நிலையைக் கடைப்பிடித்து, அரசாங்கத்தை வழிக்குக் கொண்டு வந்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முயன்ற போதிலும், ஆட்சியாளர்கள் பிடிகொடுக்காமல், பேரினவாத அடக்குமுறை அரசியலிலேயே ஆர்வம் காட்டிச் செயற்பட்டு வருகின்றார்கள்.

இந்த நிலையில் எதிர்ப்பரசியல் போக்கைக் கைவிட்டு, ஒத்துழைத்து காரியங்களைச் சாதிக்கின்ற ஒரு வகையிலான இணக்க அரசியல் போக்கில் தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதாகவே தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனும், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் இந்த மாநாட்டில்; உரையாற்றுகையில் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்திருக்கின்றார்கள்.

யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, ஆயுத பலமற்றிருக்கின்றார்கள் என்ற காரணத்திற்காக அரசியல் தீர்வு விடயத்தில் அரசு தமிழ் மக்களை ஏமாற்றுவதற்கு எண்ணக் கூடாது. இந்த வருடத்திற்குள் அரசியல் தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இத்தகைய போக்கு தொடருமானால் மாற்று வழி குறித்து சிந்திக்க வேண்டி ஏற்படலாம் என்ற தொனியில் அவர் இந்த மாநாட்டில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உரையாற்றுகையில் அரசாங்கம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாவிட்டால், போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை செய்துள்ளார்.

இந்தத் தலைவர்கள் இருவரது கருத்துக்களும் தமிழ் மக்களின் சாத்வீகப் போராட்டத்தை அரசு கவனத்தில் எடுத்து, ஒருமித்த நாட்டிற்குள் ஓர் அரசியல் தீர்வை விரைந்து காண வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கின்றார்கள். இல்லையேல் மாற்று வழியாக எத்தகைய போராட்டம் முன்னெடுக்கப்படும் என்றோ அல்லது மாற்று போராட்ட வழி என்ன என்பதையோ அவர்கள் விபரித்திருக்கவில்லை.

இருப்பினும் மீண்டும் ஒரு தடவை இளைஞர்களின் கைகளில் போராட்டத்தைத் திணிப்பதற்கான சிந்தனை வசப்பட்ட நிலையில் சம்பந்தன் தனது கருத்து;ககளை வெளியிட்டிருக்கின்றாரோ என்று பலரையும் எண்ணத் தூண்டியுள்ளது.

பழுத்த அரசியல் அனுபவம் கொண்டுள்ள தலைவர்கள் சாத்வீகப் போராட்டத்தையும் ஆயுதப் போராட்டத்தையும் சீர்தூக்கி இளம் சந்ததியிருக்கு விளக்கி உரைத்து, கொடாகண்டர்களாகச் செயற்படுகின்ற ஆட்சியாளர்களின் கபடத் தனமான அரசியலின் நுணுக்கங்களைத் தெளிவுபடுத்தி புதிய வழிமுறையில் போராட்ட நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு வழிசமைக்க வேண்டும்.

நடந்து வந்த பாதையிலேயே அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்பது காலத்திற்கும், மோசமாக மாற்றமடைந்துள்ள அரசியல் சூழலுக்கும் ஏற்புடையதாகாது.

அருவி இணையத்துக்காக பி.மாணிக்கவாசகம்


Category: கட்டுரைகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE