Thursday 28th of March 2024 02:26:54 PM GMT

LANGUAGE - TAMIL
“ஜனாதிபதியும் அரசியலும்” - பி.மாணிக்கவாசகம்

“ஜனாதிபதியும் அரசியலும்” - பி.மாணிக்கவாசகம்


நல்லாட்சி நிலவுவதற்கும் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கும் ஜனநாயகத்தின் தூண்களாகக் கருதப்படுகின்ற நான்கு துறைகளும் தமக்குரிய வகையில் தனித்துவமாகவும் ஒன்றையொன்று தழுவியும் செயற்பட வேண்டியது அவசியம். ஆனால் இந்தத் தனித்துவம் அடிக்கடி மீறப்பட்டு அதிகார துறைகள் போட்டியில் ஈடுபடுகின்ற நிலைமையையே நாட்டில் காண முடிகின்றது. இதனால் ஆட்சி மீதும் நீதித்துறையின் மீதும் மக்கள் நம்பிக்கை இழக்க வேண்டிய சூழல் உருவாகி இருக்கின்றது.

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் இடையில் எழுந்துள்ள அதிகாரப் போட்டி நாடறிந்த இரகசியம். நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்டவர் ஜனாதிபதி. சட்டவாக்கத்துறையாகிய நாடாளுமன்ற அதிகாரத்தைக் கொண்டவர் பிரதமர். இருவருக்கும் இடையில் எழுந்துள்ள போட்டியில் நாட்டின் அதி உச்ச சட்டமாகிய அரசியலமைப்புச் சட்டத்தையே ஜனாதிபதி மீறிச் செயற்பட்டிருந்தார்.

இதனால் மோசமான அரசியல் நெருக்கடி ஒன்று 2018 செப்டம்பர் மாதம் உருவாகி இருந்தது. உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டையடுத்து, நிலைமை சுமுகமாகியது. ஆயினும் இரு தரப்புக்கும் இடையிலான அதிகாரப் போட்டி முடிவின்றி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. இதனை நாடே நான்கறியும்.

நிறைவேற்று அதிகாரத்தைக் கொண்ட ஜனாதிபதியே நாட்டின் அதி உச்ச அரசியல் தலைவர். நாட்டின் முதன்மை நிலை அந்தஸ்தைக் கொண்டிருப்பவரும் அவரே. அதிகார பலம் மிக்க அந்த அரசியல் நிலைப்பாட்டைப் பேணி பாதுகாத்துச் செயற்பட வேண்டியது அந்தப் பதவிக்குத் தெரிவு செய்பவருடைய தலையாய கடமையாகும்.

முதல் கோணல் என்றால் அது முற்றும் கோணலாகிவிடும். முதன்மை நிலையில் உள்ள அரச தலைவர் தமது நிலைப்பாட்டில் இருந்து தவறினால் நாடும் தவறான வழியிலேயே செல்ல நேரிடும். இது நாட்டில் இப்போது நிதர்சனமாகி உள்ளது.

பொல்லாத ஆட்சி......?

மக்களுடைய முன்னேற்றத்துக்காகவும், நாட்டின் நலன்களுக்காகவுமே நிறைவேற்று அதிகாரம் பயன்படுத்தப்பட வேண்டும். அதுவே அந்த அதிகாரத்தின் நோக்கம். ஆனால், அந்த அதிகாரத்தைக் கொண்டுள்ள ஜனாதிபதி தனது அரசியல் நலன்களுக்காக அதனைப் பயன்படுத்தினால் மோசமான விளைவுகளே ஏற்படும்.

இதற்கு 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆட்சி மாற்றத்தை நல்லதோர் அரசியல் உதாரணமாகக் கொள்ளலாம். யுத்த வெற்றியின் மமதையில் திளைத்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அரசியலமைப்பிலேயே மாற்றங்களைச் செய்து, தனது அதிகாரங்களைக் கூட்டிக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் எதேச்சதிகாரப் போக்கில் பயணம் செய்தார். ஆனால், மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதியாகப் பதவியைக் கைப்பற்றுவதற்காக அவர் நடத்திய ஜனாதிபதி தேர்தலில் மக்கள் அவரை மண் கவ்வச் செய்தார்கள். அதனையடுத்து நடைபெற்ற பொதுத் தேர்தலில் புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்காக மக்கள் துணிந்து வாக்களித்தார்கள்.

இத்தகைய பின்னணியில் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்ட மைத்திரிபால சிறிசேனாவும், பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ரணில் விக்கிரமசிங்கவும் நாட்டில் நல்லாட்சியைத் தொடங்கினார்கள். ஆனால் அவர்களுக்கிடையில் முளைத்த அதிகாரப் போட்டி நல்லாட்சி அரசாங்கத்தைப் பொல்லாத அரசாங்கமாக மாற்றி இருக்கின்றது.

நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி எதேச்சதிகாரப் போக்கில் காலடி எடுத்து வைத்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைப் போன்று, தொடர்ந்து வரப்போகின்ற ஜனாதிபதிகள் செயற்படக் கூடாது என்பதற்காகவே 19 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் கொண்டு வரப்பட்டது.

அந்தத் திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியின் அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்பட்டன. இரண்டு தடவைகளுக்கு மேல் ஒருவர் ஜனாதிபதியாகப் பதவி வகிக்க முடியாது என்ற வரையறை மிண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது. நிறைவேற்று அதிகாரத்தின் அளவற்ற செயல் வல்லமை கொண்டிருந்த ஜனாதிபதி பதவியின் அதிகார பலம் குறைக்கப்பட்டு, சட்டவாக்கத்துறையின் தலைவராகிய பிரதமருடைய அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டன.

தலைகீழ் மாற்றம்

இந்த அதிகார மைய மாற்றங்கள் 2015 ஆம் ஆண்டு தேர்தல்கால வாக்குறுதிகளுக்கு அமைவாகவே கொண்டு வரப்பட்டன. பொது வேட்பாளராகக் களமிறங்கிய மைத்திரிபால சிறிசேன, ஒரு தடவைக்கும் மேல் ஜனாதிபதியாக இருக்க மாட்டேன் என்று அடித்துக் கூறியிருந்தார். ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைத்து நாடாளுமன்றத்தின் அதிகாரங்களை அதிகரித்து, பிரதமருடைய அதிகார பலத்தை ஓங்கச் செய்ய வேண்டும் என்பதில் அவர் உறுதியாக இருந்தார்.

ஆனால் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு முனைந்து செயற்பட்டிருந்த அவரே, நாட்டின் உறுதியற்ற அரசியல் நிலைமைக்கும் அதுவே காரணம் என்றும் நாட்டை முன்னேற்றுவதற்கு அந்தச் சட்டத்தையே இல்லாதொழிக்க வேண்டும் என்று கூறும் அளவுக்கு அவர் மாறிப்போனார். ஜனாதிபதியாகிய தன்னைவிட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிகார பலமுள்ளவராக இருப்பதை அவர் விரும்பவில்லை. இதுவே அவருடைய தலைகீழ் மாற்றத்துக்கான காரணம்.

அத்தகைய அதிகார பலத்தின் ஊடாக அடுத்த முறை அவர் ஜனாதிபதியாகி விடுவார் என்றும், அதன் ஊடாக ஐக்கிய தேசிய கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுவிடும் என்பது அவருடைய கணிப்பு.

ஐக்கிய தேசிய கட்ச மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகிய இரண்டு பேரினவாத பெரும் கட்சிகளின் இணைவில் ஜனாதிபதியாகிய மைத்திரிபால சிறிசேன, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செல்வாக்கை மக்கள் மத்தியில் அதிகரித்து, தனிக்கட்சியாக அரசோச்ச வேண்டும் என்ற அரசியல் உள்நோக்கத்திற்கு ஆளாகிப் போனார்.

இரு கட்சி அரசாங்கம் என்ற நல்லாட்சி அரசாங்கத்தில், கட்சி பேதங்களுக்கு அப்பால், நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவானதோர் அரசியல் தலைவராகச் செயற்பட வேண்டிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அந்தப் பொறுப்பில் இருந்து வழி தவறிப் போனார்.

ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கி, நாடாளுமன்ற உறுப்பினராகிய மகிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக நியமித்து, அரசியல் புரட்சியை ஏற்படுத்தும் அளவுக்கு, கட்சி அரசியல் மோகம் அவரை ஆளாக்கி இருந்தது.

தூக்குத் தண்டனை நிறைவேற்ற உத்தரவும் நீதிமன்றத் தடையுத்தரவுக் கட்டளையும்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியே நாட்டின் பாதுகாப்பு அமைச்சுப் பொறுப்பையும் கொண்டிருக்கின்றார். அந்த வகையில் நாட்டின் தேசிய பாதுகாப்பு, பொதுமக்களின் பாதுகாப்பு என்பவற்றிற்கும் சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுகின்ற கடமைகளுக்கும் பாதுகாப்பு அமைச்சரே பொறுப்புடையவராகின்றார்.

நாட்டின் அதி உச்ச அரசியல் தலைவராகவும், நாட்டின் முதுகெலும்பாகிய பாதுகாப்பு அமைச்சராகவும் திகழும் ஜனாதிபதி தனது பொறுப்புக்களையும் கடமைகளையும் மிகவும் நிதானத்துடனும், பொறுப்புணர்ச்சியோடும் மேற்கொள்ள வேண்டியது அவசியம். ஆனால் இத்தகைய போக்கு கடைப்பிடிக்கப்படுவதாகத் தெரியவில்லை.

போதைப் பொருள் தொடர்பிலான குற்றச் செயல்களில் நீதிமன்றங்களினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளைத் தூக்கில் இட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதன் ஆரம்ப நடவடிக்கையாக நான்கு மரண தண்டனை கைதிகளுக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்ற உத்தரவில் கையெழுத்திட்டிருந்தார்.

ஆனால் 43 வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தூக்குத் தண்டனை முறைமை மீண்டும் செயற்படுத்தப்படுவதை மனித உரிமைகள் அமைப்புக்கள், ஜனநாயகச் செயற்பாட்டாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல்வாதிகள் என பல தரப்பட்டவர்களும் கடுமையாக எதிர்த்துக் குரல் கொடுத்துள்ளனர்.

ஆனாலும், தூக்குத் தண்டனையை நிறைவேற்றினால்தான் போதைப் பொருள் தொடர்பிலான குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த முடியும். போதைப் பொருள் பாவனையினால் பாதிக்கப்படுகின்ற இளம் சந்ததியினரையும், மாணவர்களையும் பாதுகாக்க முடியும். ஆகவே தூக்குத் தண்டனை முறைமையை நடைமுறைப்படுத்தியே ஆக வேண்டும் என்று ஜனாதிபதி தனது பிடிவாத நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.

தூக்குத் தண்டனைக்கு எதிரான பலர் அந்தத் தீர்மானத்தை எதிர்த்து நீதிமன்றத்தில் பத்துக்கும் மேற்பட்ட வழக்குகளைத் தாக்கல் செய்துள்ளனர். இவற்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்குகளும் அடக்கம். தூக்குத் தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற ஜனாதிபதியின் உத்தரவுக்கு அடிப்படை மனித உரிமை மீறல் வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தன்னை ஒரு வலிமையான அரசியல்வாதியாகக் காட்டி, அதன் மூலம் அரசியல் இலாபம் பெறுவதற்கு மேற்கொண்டிருந்த ஜனாதிபதியின் முயற்சி இதனால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த வருடக் கடைசியில் ஜனாதிபதி தேர்தலையும் தொடர்ந்து பொதுத் தேர்தல் மற்றும் மாகாணசபைகளுக்கான தேர்தல்கள் என்பவற்றை நாடு எதிர்கொண்டுள்ள நிலையில் ஜனாதிபதியின் தூக்குத் தண்டனை நிறைவேற்ற முயற்சிக்கு, 2019 ஒக்டோபர் 30 ஆம் திகதி வரையிலான தனது தடை உத்தரவின் மூலம் உச்ச நீதிமன்றம் தடையேற்படுத்தி உள்ளது.

கொலைக் குற்றச்சாட்டும் நீதவான் நீதிமன்ற உத்தரவும்

உச்ச நீதிமன்ற உத்தரவு ஒரு புறமிருக்க, கொழும்பு நீதவான் நீதிமன்றமும், ஜனாதிபதியின் மற்றுமொரு நடவடிக்கைக்கு முரணான நிலைப்பாட்டை வெளிப்படுத்தி உள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத்தாக்குதல்கள் பற்றிய முன்னெச்சரிக்கை கிடைத்திருந்த போதிலும், அதற்கேற்ற முற்பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கத் தவறியிருந்ததாகக் குற்றம் சுமத்தி முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகிய இருவரும் சட்டமா அதிபரின் உத்தரவுக்கு அமைய கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களுக்கு எதிராக கொலைக்குற்றம் மற்றும் கவனயீனம் காரணமாக மரணங்களை ஏற்படு;த்திய குற்றம் ஆகிய குற்றச்சாட்டுக்களும், மற்றவர்களுக்கு உயிராபத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்துவதற்குக் காரணமான நடவடிக்கை, மற்றவர்களுக்கு மிகமோசமான உயிராபத்தின் மூலம் பாதிப்பை ஏற்படுத்துவதற்குக் காரணமான நடவடிக்கை என்பவற்றுக்கான குற்றச்சாட்டுக்களும் இவர்கள் இருவர் மீதும் சுமத்தப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குற்றவியல் நடவடி கோவையின் 296, 298 மற்றும் 328, 329 ஆகிய பிரிவுகளின் கீழ் முறையே மரண தண்டனைக்கான இந்தக் குற்றச்சாட்டுக்களை சட்டமா அதிபரின் வழிநடத்தலில் பொலிசார் இந்த வழக்கில் இவர்கள் இருவர் மீதும் சுமத்தியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரணை செய்த கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன, இந்தக் குற்றச்சாட்டுக்கள் போதிய ஆதாரமற்றவை என்றும் அவர்கள் இருவரினதும் கைது நடவக்கைகளும் குற்றவியல் நடவடிக்கைக்கு அமைய இடம்பெறவில்லை என்பதையும் சுட்டிக்காட்டி, அவர்களைத் தொடர்ந்து தடுத்து வைத்திருக்க முடியாத என தெரிவித்து அந்த இருவரையும் பிணையில் செல்ல அனுமதித்திருந்தார்.

தேசிய பாதுகாப்பில் ஏற்பட்ட ஓட்டைகள் காரணமாகவே உயிர்த்த ஞாயிறு தின உயிரிழப்புக்கள் நேர்ந்திருந்தன என்ற குற்றச்சாட்டுக்கு பாதுகாப்பு அமைச்சரே முழு பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்ற வாதம் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஆகிய இருவர் மீது மட்டும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது என்ற அடிப்படையில் இந்த கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதியின் பிணை வழங்கிய நீதிமன்ற நடவடிக்கை நோக்கப்படுகின்றது.

முரண்பாடுகள்

தேசிய பாதுகாப்புக்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் ஆகிய இருவர் மட்டுமல்லாமல், பாதுகாப்பு அமைச்சின் பல்வேறு பிரிவுகளும், அவற்றின் அதிகாரிகளும், நாட்டின் பாதுகாப்புச் சபையும் பொறுப்பைக் கொண்டிருக்கின்றன என்பது நீதித்துறை சார்ந்தவர்களினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியின் நற்பெயருக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்ற நோக்கத்தில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக இந்த இருவரும் பலிக்கடாக்களாக ஆக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பது பாதுகாப்புத் துறைசார்ந்தவர்களின் கருத்து.

ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித ஜயசுந்தர ஆகிய இருவரும் ஜனாதிபதிக்கு முரணான போக்குடையவர்கள் அல்லது அவருக்கு விரோதமான செயற்பாடுகளை முன்னெடுப்பவர்கள் என்ற கருத்தும் நிலவுகின்றது. அதன் காரணமாகவே அவர்கள் இருவர் மீதும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களுக்கான பொறுப்புக்களைச் சுமத்தி அவர்களைத் தண்டிப்பதன் ஊடாக தேசிய பாதுகாப்பு நடவடிக்கைகளில் இடம்பெற்றிருந்த தவறுகளை மூடி மறைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன என்ற நிலைமையும் அரசியல் வட்டாரங்களில் காணப்படுகின்றது.

நீதிமன்ற நடவடிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்துடன் ஒத்திசைந்து செல்ல வேண்டும் என்பது நீதித்துறை வட்டாரங்களின் பொதுவான எதிர்பார்ப்பாகும். இரு தரப்புக்கும் இடையில் ஏற்படுகின்ற முரண்பாடுகள் அல்லது கருத்து வேறுபாடுகள் என்பது நியாயமான நீதியை நிலைநாட்டுவதாக அமையாது. அது பக்கசார்பான செயற்பாடாகவே இருக்கும் என்ற கருத்தும் நிலவுகின்றது.

கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித ஜயசுந்தர ஆகிய இருவரையும் பிணையில் செல்ல அனுமதித்த உத்தரவுக்கு எதிராக சட்டமா அதிபர் மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தத்தில் இந்த ஹேமசிறி பெர்னாண்டோ மற்றும் பூஜித ஜயசுந்தர விவகாரமானது, நிறைவேற்று அதிகாரத்துக்கும், நீதிமன்றத்திற்கும் இடையிலான முறுகல் நிலைமையையே வெளிப்படுத்தி இருக்கின்றது.

இந்த முறுகல் நிலையும் முரண்பாடான போக்கும் நாட்டின் சீரான ஆட்சிக்கு நல்லதல்ல.

அருவி இணையத்துக்காக பி.மாணிக்கவாசகம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE