Thursday 28th of March 2024 06:55:02 PM GMT

LANGUAGE - TAMIL
“காதல் என்பது ‘கவின்’தனமானது” - சுரேஷ் கண்ணன்

“காதல் என்பது ‘கவின்’தனமானது” - சுரேஷ் கண்ணன்


இன்றைய நாள் கவின் தொடர்பான Tragedy டிராமாவால் நிரம்பி வழிந்தது. இது போன்றதொரு முக்கோணக் காதல் கதை, இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில் சினிமாவாக வந்தாலாவது அது சுவாரசியமாக இருக்கும். ஆனால் இங்கு சம்பந்தப்பட்டவர்கள், ‘திரும்பத் திரும்ப பேசற நீ” மோடியிலேயே இருப்பதால் ஒரு பக்கம் பரிதாபமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் மகா எரிச்சல் வருகிறது.

இந்த வாரத்தின் பஞ்சாயத்து நாளில் கமல் நிறையக் கிண்டுவதற்கும் நக்கலடிப்பதற்குமான சரக்குகளை கவின் தந்து விட்டார். ‘ஆண்டவர்’ இது போல் எத்தனை ‘டிராக்குகளை’ கடந்து வந்திருப்பார்?! “டேய்.. கவினு.. நீ படிக்கற ஸ்கூல்ல.. நான் ஹெட்மாஸ்டர்டா” என்பது அவர் மைண்ட் வாய்ஸாக இருக்கக்கூடும்.

“நீதானே மீட்டிங் கூப்பிட்டே.. வீடியோ ஆதாரம் பார்த்தா தெரிஞ்சுடும்’ என்று இன்னொரு பக்கம் மீரா பாயைப் பிறாண்டிக் கொண்டே இருப்பதால் இந்த வாரம் நிச்சயம் குறும்படம் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இந்த விஷயத்தில் மட்டும் மீராவின் பக்கம் நியாயம் உண்டு என்பது நிரூபணமாகலாம். சாக்ஷிதான் மீட்டிங் போடலாம் என்று ஆரம்பித்தார். மற்றபடி இதர விஷயங்களில் மீரா இம்சை அரசியாகவே இருக்கிறார்.

இன்றைய ‘டிராஜிடி’ எபிஸோடில் அழுதவர்களின் பட்டியல்: சாக்ஷி, மீரா, கவின், ஷெரீன் மற்றும் நாம். (முடியலை.. படுத்தறாங்க..)

**

25-ம் நாளின் சம்பவங்கள் தொடர்கின்றன. “சொடக்குப் போட்டு கூப்பிட்டியனா நடக்கறதே வேற.. அது அவமரியாதை” என்று ஷெரீன் மிரட்டியதும் ‘அப்ப என்னை லூஸூன்னு கூப்பிட்டது மட்டும் மரியாதையா?” என்று லாஜிக்கலான கேள்வியை மீரா முன்வைத்தாலும் ஷெரீனின் டெரரான முகபாவத்தைப் பார்த்ததும் பின்வாங்கி.. “ஓகே… ஸாரி.. சாக்ஷி.. வா. நம்ம விஷயத்தை டிஸ்கஸ் பண்ணுவோம்.. இப்ப அதுதான் முக்கியம்” என்று தன் அலப்பறையை தொடர ஆரம்பித்தார்.

ஏற்கெனவே இருக்கிற இம்சைகள் போதாது என்று இவளும் சேர்ந்து கொண்டு இம்சிக்கிறாளே என்று நினைத்தாரோ.. என்னமோ.. சாக்ஷி சிரிக்க ஆரம்பித்து விட்டார். “நான் ரொம்ப ஸ்ட்ரெஸ்ஃபுல்லா ஃபீல் பண்ணா சிரிப்பு வந்துடும்” என்று விளக்கம் வேறு. (இந்த வியாதி எனக்கும் இருக்கு!) ஆனால் அடுத்த கணமே அழத் துவங்கி சிவாஜிக்கும் அந்நியன் விக்ரமிற்கும் கடுமையான போட்டியைத் தந்தார் சாக்ஷி.

IMAGE_ALT

சேரன் உள்ளிட்டவர்கள் சாக்ஷியை சமாதானம் செய்ய வந்தார்கள். தூரத்தில் இதைக் கவனித்த கவின், ‘நீயும் போயேன்” என்று சாண்டியிடம் சொல்ல.. ‘கம்பிக்குள்ள அத்தனை பேர் கையும் எப்படிப் போவும்?” என்று அந்தச் சமயத்திலும் பிராடிக்கல் காமெடி செய்தார் சாண்டி.

கடைசியில் சர்ச்சையின் நாயகிகளான லொஸ்லியாவும் சாக்ஷியும் சந்தித்துக் கொண்டார்கள். ‘எங்கிருந்தாலும் வாழ்க’ மோடிற்குள் இறங்கியிருக்கும் லொஸ்லியா.. “என் கண்ணையே உன் கிட்ட ஒப்படைக்கிறேன். அதுல இனிமே ஆனந்தக் கண்ணீரைத்தான் பார்க்கணும்” என்பது போல் சொல்லி கவினை சாக்ஷியிடம் ஒப்படைத்தார். “நான் இப்ப கிளியர் ஆயிட்டேன். நீயும் கவினும் பேசி சரியாகுங்க” என்பது லொஸ்லியாவின் கருத்து.

“எனக்கும் கவினைப் பிடிக்கும். ஆனா அவன் மேல லவ்வுல்லாம் இல்ல” என்றார் சாக்ஷி. (அப்ப என்னதாம்மா பிரச்சினை உனக்கு?! நீ வெச்சிருந்த பொம்மையை இன்னொரு பாப்பா பிடுங்கிடுவாளோன்னுதான்.. இவ்வளவு ஆர்ப்பாட்டமா?!).

இப்படியாக… ஜெயில் அறைக்குள் ஒரே அழுகாட்சி சீன்களாக தொடர்வதைச் சகித்துக் கொள்ள முடியாத மீரா, பாத்ரூமிற்குச் செல்வதும் திரும்பி வருவதுமாக பொழுதைக் கழித்தார். (வேற வழி..)

**

ஷெரீன் சுட்ட ‘காதல்’ சப்பாத்தி பிரச்சினை மறுபடியும் தீயத் துவங்கியது. “நான் விளையாட்டாத்தான் பண்ணேன்.. ஸாரி” என்று ஷெரீனிடம் பாவனையாக மன்னிப்புக் கேட்டார் லொஸ்லியா. ‘என் அனுபவத்திற்காகவாவது நீ மரியாதை கொடுக்கணும்” என்று சொன்னார் ஷெரீன். இருவரும் சம்பிரதாயமான அன்பைப் பரிமாறிக் கொண்டார்கள்.

ஆனால் ‘அனுபவம்’ என்கிற வார்த்தை லொஸ்லியாவின் மண்டையைப் பிறாண்டியது. அதைப் பற்றி தர்ஷனிடம் விசாரிக்க.. ‘அய்யோ.. இன்னொரு பஞ்சாயத்தா?” என்கிற மைண்ட் வாய்ஸூடன் எஸ்கேப் ஆனார் தர்ஷன். எனவே ஷெரீனிடம் நேரடியாக விசாரித்தார் லொஸ்லியா.

‘தான் சினிமாத்துறையில் அனுபவம் வாய்ந்த சீனியர்’ என்கிற பந்தாவோடு ஷெரீன் அந்த வார்த்தையைச் சொல்லியிருப்பாரோ என்று லொஸ்லியாவிற்குத் தோன்றியிருக்கலாம். அதுவே அவருக்கு நெருடலை உண்டு பண்ணியிருக்கலாம். ‘மரியாதைக்கும் அனுபவத்திற்கும் என்ன சம்பந்தம்?” என்று அவர் எரிச்சல் அடைந்தது இதனால்தான். ஆனால் “வாழ்க்கை.. சார்ந்த அனுபவத்தில் நான் சீனியர். அந்த பொருளில்தான் சொன்னேன்” என்பது போல் ஷெரீன் விளக்கம் தந்தவுடன் சமாதானம் ஆனார் லொஸ்லியா.

இப்போது உறுத்தலும் நெருடலும் அடைவது ஷெரீனின் டர்ன். லொஸ்லியா இப்படிக் கேட்டது அவரைப் புண்படுத்தி விட்டது போல. ஆனால் தாமதமாக எரியும் டியூப்லைட் போல மறுநாள் காலையில் இதற்காக அவர் அழுது தீர்த்ததுதான் காமெடி. “அவளை பூனைக்குட்டி –ன்னுல்லாம் எப்படிலாம் செல்லமா கூப்பிட்டேன். பூனைக்குட்டி இப்படி பிறாண்டி வெச்சிடுச்சே..” என்று ஒப்பாரி வைக்கத் துவங்கிய ஷெரீனை.. “என் செல்லக்குட்டி.. புஜ்ஜிமா… பட்டுக்குட்டிக்கு என்னாச்சு?” என்றெல்லாம் கரடிக்குட்டி சைஸில் இருந்த ஷெரீனை சமாதானப்படுத்தத் துவங்கினார் சாக்ஷி. (கடவுளே.. இன்னும் என்னென்ன கொடுமையை எல்லாம் பார்க்க வேண்டியிருக்குமோ?!).

மதுமிதாவிடமும் மீராவிடமும் ரவுடி ராக்கம்மா போல சண்டை போடும் ஷெரீன், லொஸ்லியாவிடம் இப்படி சரண்டர் ஆவது ஆச்சரியம். ஆர்மிக்காரர்களின் பவர் வீட்டின் உள்ளே வரை பரவி விட்டதோ என்னமோ.

“நதி வத்திப் போனா கடல் கிட்ட முறையிடலாம். அந்தக் கடலே வத்திப் போனா’ என்கிற பாணியில் “நீயா புள்ள அழுவற?!” என்று ஷெரீனிடம் வந்து கவின் விசாரிக்க.. ‘என்னதான் இருந்தாலும் எனக்கும் எமோஷன் இருக்காதா?” என்று மேலும் கண்கலங்கினார் ஷெரீன். அவர் அழுவது லொஸ்லியாவின் அவமரியாதை குறித்து மட்டுமில்லையாம்.. சாக்ஷிக்கு இப்படியெல்லாம் ஆகிறதே என்பதற்கும் சேர்த்துத்தானாம்.

சாவு வீட்டில் அழுபவர்கள் பெரும்பாலும் இறந்தவர்களுக்காக அழுவதில்லையாம். தங்களின் அத்தனை துயரங்களையும் அதில் இணைத்துக் கொண்டு அழுது தீர்க்க அந்தச் சந்தர்ப்பத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்வார்களாம். ஷெரீனின் அழுகாச்சி கதையும் இப்படித்தான் இருக்கிறது.

இதில் இன்னொரு காமெடி என்னவென்றால், லொஸ்லியா சப்பாத்தியைக் கத்தியால் குத்தியது தர்ஷன் மீதான அக்கறையினால் போல என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தால் அது அப்படியில்லையாம். ஷெரீன் இவருக்கு சப்பாத்தி தராமல் டபாய்த்துக் கொண்டேயிருந்தாராம். அதனால் வந்த கோபமாம்.

**

சரி. மறுபடியும் கொஞ்சம் ரிவர்ஸில் வருவோம். லொஸ்லியாவும் ஷெரீனும் அப்போதைக்கு சமாதானம் ஆகிச் சென்ற பிறகு பெரும்பாலோனோர் தூங்க ஆரம்பித்தார்கள். காதல் கதைக்கு சொந்தமானவர்களுக்கு மட்டும் தூக்கம் வரவில்லை. பூனை மாதிரி எழுந்து சென்ற கவின், சிறை அறைக்குச் சென்று சாக்ஷியிடம் அனத்த ஆரம்பித்தார்.

“நீ அழுதியா.. “ என்று கவின் ஆரம்பிக்க.. “ஆமாம்.. நான் ஹர்ட் ஆகிட்டேன்” என்று துவங்கி சாக்ஷி தன் தரப்பு புகார்களை அடுக்க ஆரம்பிக்க.. ‘வேணாம்.. வலிக்குது… புள்ள.. நானும் அழுதுடுவேன்” என்று கைப்புள்ளயாக கலங்கினார் கவின். “கடவுளே.. நைட்டு கூடவா.. உங்க இம்சை முடியல..…” என்று மைண்ட் வாய்ஸில் அலறிய மீரா, தன் நிலைமையை நினைத்து அவரும் கண்கலங்கத் துவங்கினார். (சபாஷ்.. சரியான போட்டி!)

IMAGE_ALT

‘தாரை தப்பட்டை’ இளையராஜா இசையுடன் மறுநாள் பொழுது விடிந்தது. எதுவுமே நடக்காதது போல் சிறைக்குள் மீராவும் சாக்ஷியும் நடனம் என்கிற பெயரில் சாமியாட ஆரம்பித்தார்கள். அவர்களின் தலைவிரி டான்ஸ்ஸைப் பார்க்க சட்டென்று ஏர்வாடிக்குள் இருப்பது போலவே ஒரு ஃபீலிங் வந்தது. காலை வணக்கம் சொன்ன மோகன் வைத்யா, சாக்ஷிக்கு முத்தம் தர முனைய.. “டேய் .. ஏற்கெனவே நான் ரொம்பவும் நொந்து போயிருக்கேன். மரியாதையா போயிடு’ என்கிற எபெக்டை தந்தார் சாக்ஷி.

**

கவினை அழைத்து வந்து பேசினார் சேரன். “நான் மொதல்ல சாக்ஷி கிட்டதான் பிரெண்டானேன். பொஸஸிவ் ஆனேன்.. நிறுத்திட்டேன்’ என்று தேய்ந்து போன ரிக்கார்டை கவின் மறுபடியும் ஒலிபரப்பத் துவங்க, “டேய்.. வேணாம்டா.. வலிக்குது.. அழுதுடுவோம்” என்று கலங்க வேண்டியது இப்போது நம் டர்ன் ஆகி விட்டது.

அப்போது சேரன் உருப்படியானதொரு யோசனையைத் தந்தார். “என்ன இருந்தாலும் நீ செஞ்சது மொள்ளமாரித்தனம். உன் பேர் இன்னமும் டேமேஜ் ஆகாம இருக்கணும்னா.. எல்லோரையும் கூப்பிட்டு சபையில.. இதைப் பத்தி பேசிடு. அப்பத்தான் உன் மேல ஒரு அனுதாபம் வரும். யாரும் உன்னைப் பத்தி விதம் விதமா புறம் பேச மாட்டாங்க. லொஸ்லியா ஆர்மி கோபத்துல இருந்தும் நீ தப்பிச்சுக்கலாம்”.

IMAGE_ALT

சேரன் தந்த யோசனை கவினுக்கும் சரியாகப் பட்டிருக்க வேண்டும். ஆனால் சாண்டிக்கு இது பிடிக்கவில்லை. “வீட்ல தப்பு பண்ணா.. அங்கதான் மன்னிப்பு கேட்கணும். தெரு முழுக்க போய் மன்னிப்பு கேட்பியா?” என்று மொண்ணையான ஒரு லாஜிக்கை முன்வைத்தார். சம்மந்தப்பட்டவர்களிடம் மட்டும் மன்னிப்பு கேட்டால் போதுமானது என்பது அவர் கருத்து. ஆனால் பிக்பாஸ் என்கிற விளையாட்டில் எல்லோரையும் அனுசரித்துப் போனால்தான் காலம் தள்ள முடியும். இந்த நோக்கில் சேரன் சொன்னது சரி.

மற்றவர்கள் பொங்கல் சாப்பிட்டுக் கொண்டிருக்க, அந்தப் போதையில் அவர்கள் இருக்கும் போதே தன் விஷயத்தை முடித்து விடலாம் என்று கவின் தன் மன்னிப்பைக் கோரத் துவங்கினார். ஏறத்தாழ அனைவரும் கவினின் உருக்கமான வாக்குமூலத்தைக் கேட்டு ‘சரி போய் தொலை’ என்று மன்னித்தார்கள். மோகன் மட்டும் ‘அந்த சாம்பார் பக்கெட்டை இந்தப் பக்கம் தள்ளு” என்று பொங்கலைப் போட்டு வெளுத்துக் கொண்டிருந்தார். (சோறு முக்கியமா… பஞ்சாயத்து முக்கியமா?.. சோறுதான் முக்கியம்).

IMAGE_ALT

இந்தக் காட்சி முடிந்ததும் திடீரென்று கழிப்பறையில் இருந்து பயங்கரமான ஒப்பாரி சத்தம் கேட்டது. யாரோ பெண் போட்டியாளர்தான் அழுகிறார் என்று பார்த்தால்.. அட நம்ம கவினு.. இங்க என்ன அழுகைப் போட்டியா நடத்துகிறார்கள்?!

இவர் சில நிமிடங்கள் அழுதும் வெளியே சத்தம் கேட்காததால் இன்னமும் சற்று டெஸிபளை உயர்த்தி அழுதார் கவின். சாண்டியும் ரேஷ்மாவும் பதறியடித்துக் கொண்டு உள்ளே பாய்ந்தார்கள். (பயபுள்ள இதுக்குத்தான் அத்தனை சத்தமா அழுதிருக்கு). உயிர்த் தோழனான சாண்டியை மட்டும் கக்கூஸிற்குள் அழைத்து ரகசியம் பேசினார் கவின்.

“இதெல்லாம் சேரன் செஞ்ச வேலை. சும்மா இருந்தவனை சொறிஞ்சு விட்டு எல்லோர்ட்டயும் மன்னிப்பு கேட்க வெச்சார்” என்று பிறகு சாண்டி சொல்லிக் கொண்டிருந்தார்.. “அவன் நல்லதுக்குத்தான் செஞ்சேன்… அவனைப் புண்படுத்தனும்னு எண்ணம் இல்லை’ என்று நியாயமான விளக்கம் தந்தார் சேரன். அழுது ஓய்ந்த கவினுக்கு சமாதான முத்தம் தந்தார் மோகன் வைத்யா.. (எப்பா .. சாமி… ஃபுல் டைமா இதே வேலையா.. இருந்தா எப்படி..?!).

**

இத்தனை பிரச்சினைகளைக் கடந்தும் மறுபடியும் லொஸ்லியாவிடம் பேச வந்தார் கவின். ‘இவனோட பெரிய அக்கப்பேரா இருக்கே’ என்று லொஸ்லியாவும் டென்ஷன் ஆகியிருக்க வேண்டும். இதுவரை சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தவர்.. இப்போது கவினை ‘லெஃப்ட் அண்ட் ரைட்’ வெளுத்து வாங்கத் துவங்கினார்.

“என் கிட்ட பேசினதால்தானே இத்தனை பிரச்சினையும். மற்றவர்களின் உணர்வுகளோடு விளையாடுவதெல்லாம் சரியா.. சாக்ஷியும் நீயும் இவ்ளோ க்ளோஸ்-ன்னு எனக்குத் தெரியாது. நீ பண்றதையெல்லாம் நாங்க ரசிப்போம்-னு நீயா நெனச்சுக்கிட்டா எப்படி? நீ இந்த கேமிற்காக நடிக்கறது மாதிரிதான் எனக்குத் தெரியுது. உன் மன்னிப்பை நான் ஏற்க மாட்டேன். நீ சாக்ஷியோட பழகறதோட நிறுத்தியிருந்தா இத்தனை பிரச்சினை இருந்திருக்காது” என்றெல்லாம் உண்மையைப் போட்டு உடைக்க ‘ஆமாம்.. நான் நடிச்சிட்டுதான் இருந்தேன். சரி நான் கிளம்பறேன்” என்று வருத்தத்துடன் கிளம்பினார் கவின்.

பக்கத்து வீட்டுப் பிள்ளையிடம் சண்டை போட்டு விட்டு குடுகுடுவென்று ஓடிவந்து அம்மாவின் முந்தானைக்குள் புகுந்து கொள்கிற குழந்தை போல எல்லாவற்றையும் கொட்டி விட்டு சேரனின் பக்கத்தில் சென்று சமர்த்துப் பிள்ளையாக அமர்ந்து கொண்டார் லொஸ்லியா. “இன்னமும் கூட வெளுத்து வாங்கியிருப்பேன். அவன் முகத்தைப் பார்க்க கொஞ்சம் பாவமா இருந்தது”.

IMAGE_ALT

நேராக காமிராவிடம் சென்ற கவின் “மச்சி.. பிக்பாஸூ.. மனசு ரொம்ப வலிக்குதுடா. நான் கெளம்பறேன்” என்று சீன் போடத் துவங்கினார். அதற்கான பலன் உடனடியாக கிடைத்தது. சாக்ஷி வந்து கவலையுடன் விசாரித்தார். (அய்யோ.. இந்தப் பெண்கள்!)

“இது எஸ்கேப்பிஸம். நீ பண்ண தப்பை நீதான் இங்க இருந்து சரி பண்ணணும்.. ஓடிப் போனா என்ன அர்த்தம்.. இங்க இருந்து அப்படில்லாம் ஓட முடியாது” என்றெல்லாம் சரியான சமயத்தில் சரியான உபதேசம் தந்தார் ஷெரீன். (‘ஒளியவும் முடியாது’ன்றதை சொல்ல விட்டிட்டிங்க மேடம்!).

அந்த ரணகளமான சூழலிலும் கவின் சொன்ன பஞ்ச்தான் சூப்பர்.. “எனக்குப் புடிச்ச ரெண்டு பேருக்கும் என்னைப் புடிக்காம போயிருச்சே”. கவின் சீரியலுக்கு வசனம் எழுதப் போகலாம்.

அடுத்த வாரமாவது இந்த டிராஜிடி டிராமா ஓய்ந்து வேறொரு சுவாரசிய டிராமா துவங்கினால் தேவலை. படுத்தறாய்ங்க.. யுவர் ஆனர்.. முடியல.

அருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE