Tuesday 16th of April 2024 07:52:43 AM GMT

LANGUAGE - TAMIL
மன்னார், செம்மலை வழக்குகளில் தமிழர் தரப்பு தவறிழைக்கிறதா? - ஆரூரன்!

மன்னார், செம்மலை வழக்குகளில் தமிழர் தரப்பு தவறிழைக்கிறதா? - ஆரூரன்!


திருக்கேதீஸ்வரம் ஆலய வளைவு கத்தோலிக்கர்களினால் உடைக்கப்பட்ட சம்பவம் இந்துக்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையில் மனக்கசப்பை ஏற்படுத்தி உள்ளது.

கும்பலாகச் சென்ற கத்தோலிக்கர்கள், ஆத்திரம் மேலிட அந்த வளைவை உடைத்து அடியோடு பிரட்டி வீழ்த்தினார்கள். அதேவேளை, அந்த வளைவில் இருந்த இந்து மத அடையாளச் சின்னமாகிய நந்திக்கொடியை அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் காலில் மிதித்து உழக்கியுள்ளார்.

இதன்போது கத்தோலிக்க அருட் தந்தை ஒருவரும் சம்பவ இடத்தில் பிரசன்னமாக இருந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து, உடனடியாகவே சமூக வலைத்தலங்களிலும், ஊடகங்களிலும் வெளியாகியிருந்த காணொளியில் இந்த விடயங்களும் ஏனைய விடயங்களும் தெளிவாகப் பதிவாகி இருந்ததைப் பலரும் கண்டுள்ளார்கள்.

புனித சின்னமாகக் கருதப்படுகின்ற நந்திக்கொடியை ஒருவர் ஆத்திரம் மேலிட உழக்கி அவமதித்தமை இந்துக்களின் மனங்களைப் பெரிதும் புண்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக பொலிசார் தாக்கல் செய்துள்ள வழக்கு மன்னார் மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது.

இந்தச் சம்பவத்தினால் மன்னார் மாவட்டத்தில் பொது அமைதிக்குப் பங்கம் ஏற்பட்டிருந்தது. பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கத் தக்க வகையில் கும்பல் ஒன்று மதம் ஒன்றின் சின்னத்தை அடித்து நொறுக்கிய வன்முறையை பொலிசார் சாதாரண குற்றவியல் வழக்காகப் பதிவு செய்திருந்தனர்.

உண்மையில் சிவில் மற்றும் அரசியல் உரிமைக்கான சட்டத்தின் கீழ் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. சாதாரண குற்றவியல் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இந்த வழக்கு முறையான குற்றச்சாட்டின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட தரப்பு சட்டத்தரணிகளினால் சுட்டிக்காட்டி கோரிக்கை விடப்பட்டிருந்தது.

நீதிமன்றத்தில் கத்தோலிக்க சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து எதிர்தரப்பினருக்காக முன்னிலையாகியிருந்தனர். திருக்கேதீஸ்வர ஆலயத் தரப்பில் இந்துக்களான சட்டத்தரணிகள் தோற்றியிருந்தனர்.

நீதிமன்றத்தில் நீதிக்காக வாதாடுகின்ற சட்டத்தரணிகளையே மத ரீதியாகப் பிரிந்து நிற்கும் அளவுக்கு திருக்கேதீஸ்வர வளைவு உடைக்கப்பட்ட சம்பவம் ஆழமான மத ரீதியான பிளவை ஏற்படுத்தி உள்ளது.

அதேவேளை கத்தோலிக்கத் தரப்பினை நியாயப்படுத்தியும், திருக்கேதீஸ்வரத் தரப்பாகிய இந்துக்களின் தரப்பை நியாயப்படுத்தியும் சமூக வலைத்தலங்களில் காரசாரமான சொற்பிரயோகங்களுடனான கருத்துப் பதிவுகள் வெளியிடப்பட்டிருந்தன.

இந்தக் கருத்துப் பதிவுகள், இரு சமயங்களையும் சேர்ந்தவர்களை நிதானமாகச் சிந்தித்து, பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான நிலைமையை மோசமடையச் செய்திருந்தது.

பிரச்சினைக்கு அமைதிவழியில் தீர்வு காண்பதற்கான முயற்சிகளை மேற்கொண்ட போதிலும், இரு தரப்பு மதத்தலைவர்களும் முக்கியஸ்தர்களும் ஒரு மேசையில் ஒன்று கூடி மனந்திறந்து பேச்சுக்களை நடத்துவதற்கான சந்தர்ப்பம் இன்னுமே கனியவில்லை.

இப்படியான ஒரு சூழலில்தான் முல்லைத்தீவு நீராவிடியடிப் பிள்ளையார ஆலய காணியில் பௌத்த பிக்கு ஒருவர் அத்துமீறி பிரவேசித்து அங்கு புத்தர் சிலையொன்றை அமைத்துள்ளதுடன் பௌத்த விகாரையொன்றை நிர்மாணிப்பதற்கான நடவடிக்கைகளைளும் மேற்கொண்டுள்ளார். அவருடைய இந்த பௌத்த மதத் திணிப்புச் செயற்பாட்டிற்கு இந்தப் பகுதியில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரும் பொலிசாரும் உறுதுணையாகச் செயற்பட்டு வருகின்றார்கள்.

அதேவேளை நீராவியடிப் பிள்ளையார் ஆலயப் பகுதியில் தொல்லியல் சார்ந்த அடையாளங்கள் எதுவும் இல்லாத போதிலும் தொல்லியல் சான்றுகள் இருப்பதாகக் கூறி தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளும் அங்கு அத்துமீறிப் பிரவேசித்து பௌத்த சின்னங்களைப் புதிதாக நிர்மாணிப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றனர்.

இதனால் அந்த பிள்ளையார் ஆலயத்தில் வழமைபோல வழிபடச் சென்ற அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்துக்களை ஆலயத்தின் உள்ளே பிரவேசிக்க முடியாதவாறு தடைகளை ஏற்படுத்திய அங்குள்ள பௌத்த பிக்கு அவர்களை அச்சுறுத்த pஉள்ளார்.

இந்த விடயம் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதையடுத்து, புதிய கட்டிட நிர்மாணப் பணிகள் எதனையும் மேற்கொள்ளக் கூடாது என தடை விதித்துள்ள நீதிமன்றம் இரு தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.

ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவை உதாசீனம் செய்துள்ள பௌத்த பிக்கு தொடர்ந்து அந்தப் பிள்ளையார் கோவிலில் வழிபடச் செல்லும் மக்களை அச்சுறுத்தி அவர்களுடைய மத வழிபாட்டுச் சுதந்திரத்துக்கு இடையூறு விளைவித்து வருகின்றார்.

அத்துடன், நீராவியடிப் பிள்ளையார் ஆலயம் தொல்லியல் சார்ந்த பௌத்த மதம் சார்ந்த இடம் என்றும், எனவே, இந்த ஆலய விவகாரத்தில் முல்லைத்தீவு நீதிமன்றம் எடுத்துள்ள நிலைப்பாட்டை எதிர்த்து, அதற்குத் தடையேற்படுத்த வேண்டும் எனக் கோரி, வவுனியா மேல் நீதிமன்றத்தில் அந்த பௌத்த பிக்குவின் சார்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வளைவு விடயம் மற்றும் முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் இரண்டு விடயங்களும் நீதிமன்ற நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இதில் திருக்கேதீஸ்வர ஆலய வளைவு விடயத்தில் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு எதிர்த்தரப்பினராகிய கத்தோலிக்கர்கள் சார்பில் கத்தோலிக்க சட்டத்தரணிகளின் உதவியுடன் நிதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ள ஒரு சட்டத்தரணியே நீராவியடி பிள்ளையார் ஆலய விவகாரம் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் இந்துக்களுக்காக முன்னிலையாகியுள்ளார்.

மன்னார் நீதிமன்றத்தில் இந்துக்களுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டுள்ள தரப்புக்காக முன்னிலையாகியுள்ள ஒருவர் வவுனியா மேல் நீதிமன்றத்தில் எவ்வாறு இந்துக்களுக்காக வாதாடி நீதியை நிலைநாட்டப் போகின்றார், நியாயத்தைப் பெற்றுக் கொடுக்கப் பொகின்றார் என்ற கேள்வி எழுகின்றது.

நீராவிடியப் பிள்ளையார் ஆலய விடயம் தொடர்பில் வவுனியா மேல் நீதிமன்றத்தில் முன்னிலையாவதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவரையோ அல்லது நியாயத்தை நிலைநாட்ட வல்லவர் என்று நம்பிக்கையூட்டத் தக்க ஒரு சிரேஸ்ட சட்டத்தரணியையோ ஒழுங்கு செய்ய முடியாமல் போய்விட்டதோ என்ற அங்கலாய்ப்பவர்களும் உள்ளனர்.

இவ்வாறு அங்கலாய்க்கும் நிலையிலேயே நீராவியடிப் பிள்ளையார் ஆலயப் பகுதியில் அடாவடியாக அத்துமீறி நடத்தப்படுகின்ற பௌத்த மதத் திணிப்புக்கு எதிராக நியாயம் கோருகின்ற போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றது.


Category: கட்டுரைகள், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE