Saturday 20th of April 2024 08:32:35 AM GMT

LANGUAGE - TAMIL
“வர வர… சாக்லேட்.. ஸாரி.. காதல் கசக்குதய்யா”  - சுரேஷ் கண்ணன்

“வர வர… சாக்லேட்.. ஸாரி.. காதல் கசக்குதய்யா” - சுரேஷ் கண்ணன்


நேற்றைய கட்டுரையில் யூகித்து எழுதப்பட்ட இரண்டு விஷயங்கள் இன்று உண்மையாக நடந்தன.

ஒன்று, ‘யாரு மீட்டிங் ஆரம்பிச்சது?’ விவகாரம். இது அற்பமான விஷயம்தான். இது தொடர்பாக மீரா அனத்திக் கொண்டேயிருக்கிறார். அவர் தரப்புதான் சரியென்பது நிரூபணமாகலாம்’ என்று எழுதப்பட்டிருந்தது. இரண்டு, இது தொடர்பாக குறும்படம் இன்று ஒளிபரப்பாகக்கூடும்” என்றும் எழுதியிருந்தேன். இரண்டும் நடந்தன.

இந்த விஷயத்தை ஜாடையாக ஆரம்பித்தார் கமல். மக்களின் வாயாலேயே குறும்படத்தை கேட்க வைக்க வேண்டும் என்கிற அவரது நோக்கம் வெளிப்படையாகத் தெரிந்தது. எனவே உரையாடலை அந்த திசையை நோக்கி நகர்த்திச் சென்றார். இந்த விசாரணயின் போது மீராவும் சாக்ஷியும் முன்னர் பாடிய அதே பாடலை ஸ்ருதி மாறாமல் இப்போதும் பாடினார்கள். “சரி குறும்படத்தைப் பாத்துடலாம்” என்று கமல் சொன்ன போது மீராவின் முகத்தில் சற்று கவவரம் தெரிந்தது.

“நீதான் மீட்டிங் போடலாம்’னு கூப்பிட்ட’ என்கிற உண்மையை அவர் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தாலும் சாக்ஷி குரூப் இணைந்து கொண்டு அவரைக் குழப்பியதால் தானும் குழம்பி விட்டார். எனவே அந்தக் குழப்பம் இங்கும் பிரதிபலித்தது. இதற்கு மாறாக சாக்ஷ சன்று தன்னம்பிக்கையுடன் இருந்தார். ஆனாலும் அவரது முகத்திலும் சற்று கலக்கம்.

உண்மை என்பது நம் தரப்பில் இருந்தால், எத்தனை பேர் இணைந்து குழப்பினாலும் எந்தச் சூழலிலும் நாம் தடுமாறத் தேவையில்லை என்பதே இதில் நாம் உணரக்கூடிய விஷயம்.

IMAGE_ALT

பிக்பாஸ் வீட்டில் இருந்த அனைவருமே சாக்ஷியின் பக்கம்தான் உண்மையிருக்கும் என்று தீவிரமாக நம்பினார்கள். ஏனெனில் மெஜாரிட்டியின் பக்கம் சாய்ந்து விடுவதுதான் பாதுகாப்பானது என்கிற பொதுப்புத்தி மனோபாவம்தான் இதற்கு காரணம். தனக்குப் பிடிக்காதவராக இருந்தாலும் உண்மை அவர் பக்கம் இருக்கிறது என்று நாம் நம்பினால் அவர் பக்கம்தான் நிற்க வேண்டும். அதுதான் அறம்.

ஆனால் குறும்படத்தின் மூலம் உண்மை வெளியான பின்னரும் கூட சேரன் போன்றவர்கள் சாக்ஷிக்கு சாதகமாக எதையோ சொல்லி மழுப்பினார்கள்.

“மொழிப் பிரச்சினை இருக்கலாம்” என்று முன்னர் மீரா குற்றச்சாட்டாக கூறிய விஷயத்தை, இப்போது சாக்ஷிக்கு சாதகமாக மாற்றப் பார்த்தார் சேரன். “மீட்டிங்’ என்பது ஆங்கில வார்த்தைததான். (‘சீராக’ என்பது போல் தூய தமிழ் வார்த்தை இல்லை).

மீரா சொன்னது உண்மை என்று குறும்படத்திற்கு முன்னர் பலர் நம்ப மறுத்ததற்கு ஒருவகையில் மீராவின் பிம்பமே காரணம். அற்பமான விஷயத்தைக் கூட பெரிய தலைப்பாக எடுத்துக் கொண்டு அவர் தீவிரமாக விவாதித்துக் கொண்டிருப்பதால் ‘காமெடி பீஸ்’ மாதிரி ஆகியிருக்கிறார்.

குறும்படத்தின் மூலம் உண்மை வெளியான பின்பு சாக்ஷி ஒன்று செய்திருக்கலாம். மீராவிடம் மனமார மன்னிப்பு கேட்டிருக்கலாம். இதனால் அவரது பிம்பம் உயர்ந்திருக்கும். ஏனெனில் “நீ லூஸா.. இல்ல லூஸூ மாதிரி நடிக்கறியா?” என்றெல்லாம் முன்னர் மீராவைத் திட்டியவர் சாக்ஷி. இதற்குத் தூபம் போட்டு விட்டவர்கள் ஷெரீன், ரேஷ்மா உள்ளிட்டவர்கள். ஆனால் எவருமே மீராவிடம் மன்னிப்பு கேட்டதாகத் தெரியவில்லை.

மாறாக சாக்ஷியையே அனைவரும் சமாதானப்படுத்திக் கொண்டிருந்தார்கள். மீராவை எவரும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. நீதி வெளிப்பட்டாலும் கூட, தவறு செய்த ஒரு பிரபலத்தை பொதுச்சமூகம் ஆதரிப்பது போன்ற விஷயம் இது.

**

வந்ததில் இருந்தே கவினை ஜாலியாகத் தொட்டு சீண்டிக் கொண்டேயிருந்தார் கமல். சாக்லெட்டை இதற்கு சிறந்த குறியீடாகப் பயன்படுத்தினார். ஆனால் கவின் புத்திசாலி. தன் விவகாரத்தை மழுப்பவோ, விவாதிக்கவோ செய்யாமல் “சார்.. நான் சின்னப்பையன். தெரியாம செஞ்சுட்டேன். விட்ருங்க சார்” என்று பரிபூர்ண சரணாகதி நிலையை அடைந்து விட்டார். எனவே கமல் அதிகம் நோண்டவில்லை. கவின் மறுத்திருந்தால் செமயாக மாட்டியிருப்பார்.

IMAGE_ALT

கமல் அடிப்படையில் நுண்ணுணர்வு உள்ளவர். இதை ரொம்பவும் நோண்டினால் கவினுக்கு மட்டுமல்லாமல் அந்தப் பெண்களுக்கும் சங்கடம் உருவாகும் என்பது தெரியும். எனவேதான் ‘இதில் நாம அதிகம் நுழைய முடியாது. ஓரளவிற்குத்தான் செல்ல முடியும். அப்புறம் அவங்க விருப்பம்’ என்று விலகி விட்டார்.

இதற்காக ‘intrusion of individual privacy’ என்றெல்லாம் ஆண்டவர் அடித்து விட்டது ஒரு வகையில் நகைமுரண். இந்த விளையாட்டின் அடிப்படையே ஒரு குழுவின் அந்தரங்கத்தை பொதுச்சமூகத்திற்கு தீனியாக்கும் வணிகம்தான். சரி.. கெட்டதிற்குள்ளேயும் ஒரு நல்லது என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

என்றாலும் கவினின் விவகாரத்தை விசாரிக்காமலும் விட்டுவிட முடியாது. மக்கள் நிச்சயம் இதை எதிர்பார்ப்பார்கள். நிகழ்ச்சியையும் இழுத்துச் செல்ல வேண்டும். எனவே ஒரு மாதிரியாக நக்கலடித்து விட்டு சீரியஸான உபதேசத்துடன் முடித்து விட்டார்.

இன்றைய எபிஸோட் மிக சுமார்தான் என்றாலும் கமலின் வார்த்தை விளையாட்டுக்களும் நக்கல்களும் நன்றாக இருந்தன. ‘வெந்த சப்பாத்தியில் வேலை பாய்ச்சியது’, ‘முக்கோணம், சதுரம்’, ‘இந்த வீட்ல இத்தனை பிளேட் தேவையில்லை போலயே’ ‘சாக்லேட் கண்ணை மறைக்குதே’ ‘சோழியா.. தோழியா’ போன்றவை.

“மற்றவர்களின் உணர்களோடு விளையாடாதீர்கள்” என்று அடிக்கோடிட்டு கவினுக்கு கமல் அளித்த உபதேசம் முக்கியமானது. கவினும் இதை உணர்ந்து விட்டது போல்தான் தெரிகிறது. ஆனால் ‘காமேஸ்வரன் பாத்திரத்தையெல்லாம் இழுத்து.. வழக்கம் போல் சுய புராணத்தையும் பாட ஆரம்பித்து விட்டார் கமல்.

“நாலு பேர் கிட்ட நீங்க பழகும் போது விளையாட்டா தெரிஞ்ச விஷயம், இரண்டு பேரா சுருங்கிய போது ஏன் சீரியஸ் ஆச்சு?” என்று கமல் கேட்ட கேள்வி மிக மிக முக்கியமானது. ஃபைனல் மேட்ச்சை ஏன் நாம் ஏன் அதிக பரபரப்பாக பார்க்கிறோம் என்பதற்கும் இந்தக் கேள்விக்கும் தொடர்புள்ளது.

ஒரு காதலனின் நோக்கில் பல அந்தரங்கமான விஷயங்களை சாக்ஷியிடம் பேசி விட்டு சட்டென்று ரிவர்ஸ் கியர் போட்டு ‘நான் பிரெண்டாத்தான் பழகறேன்…” என்று கவின் சொன்னதும்… பிறகு லொஸ்லியா பக்கம் சாய்ந்ததும் சாக்ஷியின் உணர்வுகளை உண்மையாகவே புண்படுத்தியிருப்பது சபையில் அவர் அளித்த கண்ணீர் வாக்குமூலத்தில் இருந்து தெரிந்தது. இந்த மன உளைச்சலால் தன் காதலைத் துறக்க முடிவு செய்திருக்கும் அவர் ‘இதிலிருந்து வெளியே வர டைம் வேணும்” என்று பின்குறிப்பாக சொல்லியிருப்பதில் கவினுக்கு நல்ல செய்தியும் கெட்ட செய்தியும் கலந்தே இருக்கிறது.

“இதே விஷயம் உங்களுக்கு வெளில நடந்திருந்தா கொஞ்சம் சுலபமாக வெளியே வந்திருப்பீங்க” என்று கமல் சாக்ஷியிடம் சுட்டிக் காட்டியதும் உண்மை. பல நபர்கள் பிரச்சினையின் மையத்தையே பிடிவாதமாக சுற்றிச் சுற்றி வந்து சிலந்திவலை பூச்சி மாதிரி அதிலேயே மாட்டிக் கொண்டிருப்பார்கள். மாறாக அங்கிருந்து விலகி வந்தாலே பிரச்சினைகளின் தீவிரம் மட்டுப்படும் என்பது எளிய உண்மை.

ஒரேயொரு சாக்லெட்டை எடுத்து வந்து கவினைச் சங்கடப்படுத்தாமல் இரண்டு சாக்லெட்டாக எடுத்து வந்து பிரச்சினையை இப்போதைக்கு சுமூகமாக முடிக்க வைத்தது சிறப்பு. கவின் இனிமேல் தனது வாழ்க்கையில் சாக்லேட் சாப்பிடுவதையே விட்டு விடுவார் என்று எதிர்பார்க்கலாம். அந்த அளவிற்கு சாக்லேட் அவருடைய வாழ்க்கையில் விளையாடி விட்டது.

IMAGE_ALT

**

வேறென்ன? வீட்டினுள் நிகழ்ந்த சம்பவங்கள். அடுத்த வார தலைவருக்கான போட்டி நடந்தது. சரவணனை எப்படியாவது தலைவராக்கி விட வேண்டும் என்பதற்காக சாண்டியும் கவினும் பாடுபட்டார்கள். ஆனால் இந்தச் சமயத்தில் எதிர்தரப்பில் இருந்த சேரன் உக்கிரமாக செயல்பட்டார். ஆனால் சரவணனால் ஜெயிக்க முடியவில்லை.

தர்ஷன் தலைவராக வேண்டும் என்று சேரன் அணி மிகவும் பாடுபட்டது. இந்தச் சமயத்தில் கவின் உக்கிரமாக இருந்தார். ஆனால் சைடு கேப்பில் ரேஷ்மா தலைவராகி விட்டார். இந்தச் சந்தர்ப்பத்திற்காகவே காத்துக் கொண்டிருந்த மோகன் வைத்யா, ரேஷ்மாவை விடாமல் கட்டியணைத்துக் கொண்டு வெற்றியைக் கொண்டாடினார். (மனுஷன் எந்த ஒரு சான்சையும் விட மாட்டேங்கறாரு?)

எண்பதுகளின் ஹீரோ பாணியில் உடையணிந்து தலையில் ரிப்பன் கட்டிக் கொண்டு மோகன் நடனமாடியது சிறப்பு. கமல் கேட்டுக் கொண்டதால் ஓபரா இசையை மறுபடியும் பாடித் தொலைத்தார். இவர் பாடியதை விடவும் இதற்காக சாண்டி கொடுத்த முகபாவங்கள்தான் சூப்பர்.

‘உண்மையா, புரளியா’ என்றொரு மொக்கையான டாஸ்க் நடந்தது. வீட்டின் உறுப்பினர் ஒருவரைப் பற்றி இன்னொருவர் இருவிதமான தகவல்களைச் சொல்வார்களாம். அதில் உண்மை எது, புரளி எது என்று கண்டுபிடிக்க வேண்டுமாம். இதில் ‘ரேஷ்மா எப்படி நடந்து வருவார்’ என்று சாண்டி செய்து காட்டியதுதான் நல்ல காமெடி. இதை தீவிரமாக மறுத்த ரேஷ்மா, சாண்டி நடந்ததை விடவும் கேவலமாக நடந்து சாண்டி சொன்னதை உண்மையாக்கினார்.

ஷெரீன் மீதுள்ள தர்ஷனின் மையல் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது போல. இது ஓட்டையில்லாத நல்ல சப்பாத்தியாக சென்று முடியுமா, கள்ளிச் சப்பாத்தியாக மாறி கசக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

“கழிப்பறையை சுத்தம் செய்வதை அருவருப்பாக நினைத்துதான் அந்தப் பணியை தவிர்த்தீர்களா?” என்று மோகனிடம் கேட்டார் கமல். அதை மறுத்தார் மோகன். “குப்பை பெருக்கிறவனாக இருந்தாலும் அதில் சிறந்தவன் என்று பெயர் வாங்க வேண்டும்’ என்று தன் தாயார் சொன்ன உபதேசத்தை கமல் சொல்வாரோ என்று பீதியடைந்தேன். ஏனெனில் இன்று அவர் அதைச் செய்திருந்தால் ஒருவேளை அது ஆயிரமாவது தடவையாக இருந்திருக்கும். நல்லவேளை, அதை கமல் செய்யவில்லை.

**

பிக்பாஸ் வீட்டிற்குத் தேவை ஒரு நல்ல ஒப்பனையாளரும், ஆடை ஆலோசகரும். ஒப்பனையின்றி வரும் ரேஷ்மாவைப் பார்க்க நேரும் போதெல்லாம் வீட்டில் உள்ள குழந்தைகள் பயத்தில் அலறுகின்றன. போலவே ‘இவர் ஸ்லீவ்லெஸ் அணியக்கூடாது என்று எவராவது பொதுநல வழக்கு போடலாம்’. மல்யுத்த வீரர் போலவே இவர் உலாவுவது பார்க்க கலவரத்தை உண்டு செய்கிறது.

குறிப்பாக ஒப்பனை விஷயத்தில் இன்று அபிராமியும் மீராவும் கொடுமையாக இருந்தார்கள். முகத்தில் மட்டும் அதிக ஒப்பனையை மீரா அணிந்து கொண்டிருந்தது கோராமையாக தெரிந்தது. இவர் எப்படி சூப்பர் மாடலாக இருக்கிறார் என்று ஆச்சரியமாக இருக்கிறது.

“யார் காப்பாற்றப்படவிருக்கிறார்கள்?’ என்கிற விளையாட்டையெல்லாம் கமல் இன்று ஆரம்பித்து வைத்திருந்தாலும் யார் வெளியேவிருக்கிறார் என்கிற ரகசியம் வழக்கம் போல் கசிந்து விட்டது. பெரும்பாலோனோருக்கு இது தெரியும் என்றாலும் அறியாதவர்களுக்காக ஒரு க்ளூ.

‘நைனா…. ஓ.. நைனா….”

அருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE