Thursday 25th of April 2024 11:38:39 AM GMT

LANGUAGE - TAMIL
“முத்த நாயகனும் உலக நாயகனும்” - சுரேஷ் கண்ணன்

“முத்த நாயகனும் உலக நாயகனும்” - சுரேஷ் கண்ணன்


மோகன் வைத்யா இன்று வெளியேறியதில் பிக்பாஸ் போட்டியாளர்களைத் தவிர பெரும்பான்மையான பார்வையாளர்களும் உண்மையில் மகிழ்ச்சியடைந்திருப்பார்கள் என்று தோன்றுகிறது. அந்த அளவிற்கான வெறுப்பையும் கிண்டலையும் சம்பாதித்துக் கொண்டவர்களில் மோகனும் ஒருவர். இவர் அடிப்படையில் அத்தனை கெட்டவர் இல்லை. ஆனால் தந்திரமானவரோ என்று எண்ணுவதைத் தவிர்க்க முடியவில்லை.

“நான் என்ன தப்பு செஞ்சேன்.. ஏன் என்னை மக்களுக்குப் பிடிக்காமப் போச்சு?” என்று மற்றவர்களைக் கேட்பதை விடவும் தன்னையே கேட்டுக் கொண்டால் அதற்கான விடைகளை இவர் கண்டுபிடிக்கலாம். “ஒருவேளை நான் அழுதது பிடிக்கலையோ?” என்று அவற்றில் ஒன்றை கண்டுபிடித்து விட்டார்.

‘ஆணாகப்பட்டவன் அழக்கூடாது, கம்பீரமாக நிற்க வேண்டியவன்’ என்பதெல்லாம் கற்பிதம். அது எந்த பாலினத்தவராக இருந்தாலும் அவசியமான நேரங்களில் உருவாகும் அசலான உணர்ச்சிகளை அப்படியே வெளிப்படுத்துவதில் தவறில்லைதான். ஆனால் - எல்லாவற்றிற்கும் ‘பொசுக்’ என்று அழ ஆரம்பிப்பதும்.. அந்த ‘அழுகாச்சி’ நாடகத்தின் கிளைமாக்ஸை பெண்களைக் கட்டிப்பிடிப்பதில், முத்தம் தருவதில் சென்று முடிப்பதும் என இவர் தொடர்ந்து கொண்டேயிருக்கும் போது எரிச்சல் வருவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஒரு பெண்ணின் முதுகுப்புற ஆடையின் ஹூக்கைப் போடுவதை கலாசார நோக்கில் இழிவாகவும் அவமானமாகவும் முன்பு கருதியவர் மோகன் வைத்யா. ஆம்..அது இயல்புதான். வளர்ந்த மகளின் ஆடையை தகப்பன் சரிசெய்து விடுவது இங்குள்ள கலாச்சாரத்தில் இல்லை. தாய் கண்காணிக்கிற, சொல்லித்தருகிற வேலையாக அது இருக்கிறது.

IMAGE_ALT

எனில், பெண்களைக் கட்டிப்பிடிப்பதும்.. கண்டதெற்கெல்லாம் ‘மொச்சாக்.. மொச்சாக்..’ என்று முத்தமிடுவதும் கூட நம் கலாசாரமில்லைதான். ஆனால் அதை மட்டும் மோகன் மிக சகஜமாக செய்கிறார். நிற்க.. இதைக் கொச்சைப்படுத்தி பார்க்கத் தேவையில்லை. ரேஷ்மாவைத் தவிர அங்கிருக்கும் பெண்கள் அனைவரையும் தன்னுடைய மகள்களாகவே பாவிப்பதாக மோகன் கூறுகிறார். ஆனால் அந்தப் பாவனையில் ‘கட்டிப்பிடி வைத்தியத்தை’ அவர் ஓவராக செய்யும் போதுதான் அது காண்பதற்கு நெருடலாகி விடுகிறது. அது மேற்கத்திய கலாசாரமாகவே இருந்தாலும் கூட ஒவ்வொரு உறவு முறைக்கும் முத்தமிடுவதற்கு என்று சில பாணிகள் உள்ளன. மகள் போன்றவர்களை உச்சந்தலையில் முத்தமிட்டு அன்பைப் வெளிப்படுத்துவது அதில் ஒரு வகை.

**

உணர்ச்சி நிலைகளில் ஊசலாடிக் கொண்டேயிருக்கும் மனிதராக மோகன் வைத்யா இருக்கிறார். கோபப்பட்ட அடுத்த கணமே சிரிக்கும் சூழலுக்கும் அவரால் நகர முடிகிறது. இளம் தலைமுறையினரிடம் ஜாலியாக இறங்கிப் பழகும் விருப்பமும் அவருக்கு இருக்கிறது. அதே சமயத்தில் தன்னை மரியாதைக் குறைவாக நடத்துகிறார்களே என்கிற மனப்புழுக்கமும் இருக்கிறது. இதை பல சமயங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். இந்த எல்லையை அமைத்துக் கொள்வது நம் கையில்தான் இருக்கிறது.

“விளையாடறதுக்கு மட்டும் நைனா… நைனா.. ‘ன்னு கூப்பிட்டுட்டு “யார் காப்பாற்றப்பட்டா நல்லாயிருக்கும் –ன்றதுக்கு மட்டும் ‘சித்தப்பூ’ தேவைப்படறாரு. என் பேரை நீங்க சொல்லவேயில்லை. என்னை காமெடி பீஸா மட்டும்தான் பார்த்தீங்க.. இல்லையா?” என்று அவர் வருத்தப்படுவதில் நியாயமுண்டு. ‘ஜெயிலுக்கு அனுப்பும் போது யாராவது எனக்காக ஒரு வார்த்தை பேசினீங்களாடா?” என்று இதே போல் முன்பு சரவணனும் கோபித்துக் கொண்டதை நினைவு கூரலாம்.

இந்தச் சமயத்தில் சேரன் தந்த ஆலோசனை மிகச் சரியானது. “நீங்கதான் போகப் போறீங்கன்னு இன்னமும் முடிவாகலை. அதுக்குள்ள ஏன் இத்தனை கோபம். நீங்க வீட்ல இருந்தா அவங்களை ஃபேஸ் பண்ணியாகணும்.. பார்த்துக்கங்க” என்று சேரன் சொன்னது ஒருவகையில் சரி. ஆனால் சாண்டியும் கவினும் இவரை பொருட்டாக மதிக்கவில்லை என்கிற மோகனின் வருத்தம் இன்னொரு பக்கம் உண்மைதானே? மோகன் வெளியே சென்றாலும் அல்லது செல்லாவிட்டாலும் அந்த உண்மை மாறப் போவதில்லை.

மோகனின் வெளியேற்றப்பாடலை சாண்டி குழு முன்பே தயாரித்து வைத்ததில் இருந்து அவர் வெளியேறினாலும் அவர்களுக்கு அத்தனை வருத்தமில்லை என்பது உண்மையாகிறது.

IMAGE_ALT

மற்றவர்களுக்கு கிடைக்கும் பாராட்டுக்களின் மீது பொறாமை உருவாவதை மறைத்துக் கொள்ளும் சாமர்த்தியம் கூட இல்லாத வெள்ளந்தியாக மோகன் இருக்கிறார். ‘கமல்.. உன் பெயரைத்தானே அடிக்கடி சொல்றாரு” என்றும் “பாருங்க.. சாண்டிக்குத்தான் கைத்தட்டறாங்க” என்றும் சொல்வதில் இருந்து பாராட்டிற்காக ஏங்கும் மோகனின் ஏக்கம் வெளிப்படுகிறது.

தன்னுடைய வெளியேற்றத்திற்காக வீட்டின் உறுப்பினர்களை நோக்கி ‘நான் என்ன தப்பு செஞ்சேன்.. ஏன் என் மேல பழி போட்டீங்க?’ என்றெல்லாம் அவர் புலம்பிய போது அவரை சரியான திசையை நோக்கி நகர்த்தினார் கமல். ‘இது மக்கள் அளித்த தீர்ப்பு. இங்கிருந்து அன்பை மட்டும் எடுத்துக்கிட்டு போறது புத்திசாலித்தனம்”. என்றாலும் வீட்டில் உள்ள இருவர் நாமினேட் செய்தனால்தானே..இந்தப் பட்டியலுக்குள் மோகன் வந்தார்?. இந்த நோக்கில் அவர் கேட்பது சரியே.

சாண்டி மற்றும் கவின் மீது கோபமோ அல்லது வருத்தமோ இருந்தாலும் விடைபெறும் சமயத்தில் அந்த வயதுக்குரிய பெருந்தன்மையுடன் மோகன் நடந்திருக்கலாம். அவர்களிடம் முறையாக விடைபெறாதது சிறுபிள்ளைத்தனமாக இருந்தது. “பெண்கள் உள்ளிட்டு இந்த வீட்ல இருக்கறவங்க.. எல்லோரும்தான் அவரைக் கிண்டலடிச்சாங்க.. எங்க கிட்ட மட்டும் கோச்சுக்கிட்டாரே’ என்று சாண்டியும் கவினும் வருத்தப்படுவதில் நியாயமுண்டு. ஒருவேளை இவர்களிடமிருந்துதான் அதிக ஆதரவை அவர் எதிர்பார்த்தாரோ.. என்னமோ..

மோகனின் வெளியேற்றம் தொடர்பாக தன்னுடைய நிலைப்பாட்டை கறாராக தெரிவித்த, அதற்கான உடல்மொழியை வெளிப்படுத்தின லொஸ்லியாவின் நேர்மை பாராட்டத்தக்கது. ‘அவர் மிகைப்படுத்துகிறார். நடிக்கிறார். வெளியே போனதும் சிரிப்பாரு.. பாரு’ என்று சரவணன் கூறியதும் பட்டவர்த்தன உண்மையாக இருக்கலாம். இப்படி சட்டென்று சில விஷயங்களை உடைத்து விடுவதை சரவணன் மிக இயல்பாகச் செய்கிறார்.

ஆனால் – எந்தவொரு மனிதனைப் பற்றியும் இன்னொரு மனிதர் சரியாக கணிக்கவும் கறாராக தீர்ப்பு கூறி விடவும் முடியாது. நம்மைப் பற்றி நமக்கே சரியாத போது இன்னொரு மனிதரை எப்படி துல்லியமாக கணித்து விட முடியும்? பல வருடங்கள் பழகிய கணவன்-மனைவி உறவே புரிந்து கொள்ளப்படாமல் தத்தளிக்கும் போது, சில மணி நேரங்களில் கவனித்த ஒருவரைப் பற்றி உறுதியாக எதையும் சொல்லி விட முடியாது என்பதே உண்மை.

“இங்க 15 புத்தகங்கள் இருக்கு. படிச்சு முடிக்கவே முடியல’ என்ற மோகனை “நீங்க எழுதின புத்தகமும் இருக்கு. வெளியே போய் படிச்சுப் பாருங்க” என்று ஜாடையாக கிண்டலடித்து வழியனுப்பி வைத்தார் கமல்.

**

“கமல் ஒரு அறிவுஜீவி. பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்து தன்னை தரம் தாழ்த்திக் கொள்கிறாரே?” என்று என்னைப் பற்றி கடும் விமர்சனங்கள் வருகின்றன” என்கிற தன்னிலை விளக்கத்துடன் வந்தார் கமல். “நான் நிதம் கற்றுக் கொள்கிறவன்.. அறிவுப்பசியில் அன்றாடங்காய்ச்சி. நான் இன்டலெக்சுவலா.. இல்லையா..என்றதெல்லாம் எனக்குத் தெரியாது. மக்களோடு இருப்பதற்கும் பழகுவதற்கும் கிடைத்த ஒரு அரிய வாய்ப்பாகத்தான் நான் இதைக் கருதுகிறேன். அறிவுஜீவி என்கிற சிறிய வார்த்தைக்குள் என்னை அடைத்துக் கொள்ள விரும்பவில்லை. நீங்க அங்கயே இருங்க.. நான் இங்க இருக்கேன்” என்று தன் மீதான விமர்சனங்களுக்கு “எம்.ஜி,ஆர்’ பாணியில் பதிலடி தந்தார் கமல்.

IMAGE_ALT

“caller of the week’-ல் இரண்டு பேர் வந்தார்கள். முதல் கேள்வி மீராவிடம் கேட்கப்பட்டது. “நீங்க சரியா வேலை செய்யாம டபாய்க்கறீங்களா?” என்று. “ஒரு டீம்ல எனக்குக் கொடுத்த வேலையை நான் சரியா செஞ்சுடுவேன். எக்ஸ்ட்ராவா தலைல கட்டினாத்தான் பிரச்சினை. அதையும் செய்ய தயாராக இருக்கேன். ஆனால் அதற்கான அங்கீகாரம் இங்க கிடைக்கலை” என்று ‘உட்டாலக்கடியாக’ மீரா பதில் அளித்தாலும் அவருடைய ஆதங்கம் அந்தப் பதிலுக்குள் உறைந்திருந்தது.

அடுத்த கேள்வி ரேஷ்மாவிற்கு. “நீங்க எப்பவும் செந்தில் மாதிரி சைடு ஆக்டராவே இருக்கீங்களே.. எப்ப வடிவேலு மாதிரி மெயினா மாறப் போறீங்க?” இந்தக் கேள்வியில் இருந்த உண்மை இறுதி வரையிலும் ரேஷ்மாவிற்கு புரியவேயில்லை என்பது தெரிந்தது. ‘போன் பண்ணவன் நம்பரைக் கொடுங்க. நெறைய பேச வேண்டியிருக்கு” என்று பினாத்திக் கொண்டிருந்தார். எந்தவொரு குழுவில் இருந்தாலும் தனித்தன்மையோடு இருப்பது முக்கியம். வெறும் வம்பு பேசிக் கொண்டு குழு மனப்பான்மையுடன் எப்போதும் மெஜாரிட்டியின் பக்கம் பாதுகாப்பாக சாய்ந்து கொண்டிருப்பது போலித்தனமானது. இதைத்தான் ரேஷ்மா செய்து கொண்டிருக்கிறார். சாக்ஷி குழுவில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டிருப்பதால்தான் அவரால் அங்கு தாக்குப் பிடிக்க முடிகிறது. இவரோடு ஒப்பிடும் போது மீராவே தேவலை.

**

புறம் பேசப்பட்ட கமெண்ட்டுகளை வைத்து அது யாரால் பேசப்பட்டது என்பதை யூகிக்க வேண்டும். இப்படியொரு விளையாட்டு. இந்தத் தொடரில் முன்பே சொல்லியிருக்கிறேன். பிக்பாஸில் வடிவமைக்கப்படும் விளையாட்டுக்கள் நுட்பமானவை. மேற்பூச்சிற்கு விளையாட்டாகத் தெரிந்தாலும் ஒருவரையொருவர் கோர்த்து விடும் தன்மையுடையவை. ஒருவர் மற்றவரைப் பற்றி உண்மையாக என்ன நினைக்கிறார் என்பதைக் கசிய வைத்து விடும் தன்மையைக் கொண்டவை.

இதில், சாண்டியும் மீராவும் சொன்ன கமெண்ட்டுக்களை சரியாக யூகித்து விட்ட சேரன், சரவணன் தொடர்பானதற்கு மட்டும் மெளனம் சாதித்து விட்டார். என்றாலும் சாண்டியின் கமெண்ட் அவர் மனதை நெருடிக் கொண்டிருப்பதை பின்னர் அறிந்து கொள்ள முடிந்தது. ‘நான் பொதுவா எதிலயும் தலையிட மாட்டேன். தேவைப்பட்டா போய் உபதேசம் சொல்வேன்… அதாவது .. சாத்தானா இருந்து வேதம் ஓதுவேன்’ என்று சொன்னார்.

பிக்பாஸ் விளையாட்டின் அடிப்படை, அதிலுள்ள கோர்த்து விடும் தன்மை போன்றவற்றை அறிந்தவர்கள் இது போன்ற சூழ்ச்சிகளுக்கு எளிதில் மாட்டிக் கொள்ள மாட்டார்கள்.

ரேஷ்மாவைப் பற்றி புறம் பேசிய சாக்ஷி, அது வெளிப்பட்ட போது அமைதியாக இருந்து தப்பித்துக் கொண்டார். ஆனால் ‘ஓட்டை வாய்’ மதுமிதா.. ‘நானா.. சார்.. நானா.. சார்’ என்று தானே முன்வந்து தலையைக் கொடுத்தார். ‘இந்த மாதிரி லூஸா இருந்தா என்ன பண்றது?” என்கிற மாதிரி கமல் கொடுத்த எக்ஸ்பிரஷன் அற்புதம்.

**

“மீராவை ஏன் பெரும்பான்மையோர் விலக்கி வைக்கிறீர்கள்?” என்கிற கேள்விக்கு பலரும் மழுப்பலாக பதில் அளித்த போது மீரா அளித்த தன்னிலை விளக்கம் உண்மையிலேயே அபாரமானது. “நான் இங்கு போலியான உறவுகளைக் கொண்டாட மாட்டேன். குழு மனப்பான்மையில் இயங்க மாட்டேன். ஒருவரை அவரது தனித்தன்மைகளோடு அப்படியே ஏற்றுக் கொள்வேன். ஆனால் என்னை இப்படி எவரும் ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை” ஆனால் பதிலில் தெரிந்த இத்தகைய முதிர்ச்சி மீராவின் செய்கைகளிலும் இருந்தால் நல்லது. அவர் மற்றவர்களால் தனிமைப்படுத்தப்படுவதைப் பார்க்க பாவமாகத்தான் இருக்கிறது.

மீராவின் அபத்தங்கள் வெளிப்படையாகத் தெரிகின்றன. மற்றவர்கள் இதே அபத்தங்களை சற்று அடக்கி வாசிக்கிறார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.

“என்னை அனுப்பிடுச்சுங்க.. நான் போறேன்” என்று முன்னர் கதறிய அபிராமி, இப்போது போய் விடுவேனோ என்கிற கலக்கத்தில் அழுது கொண்டிருந்தார். அவ்வாறு இல்லை என்று கமல் வெளிப்படுத்தியவுடன் அவரின் இளிப்பு ரொம்பவும் கோராமையாக இருந்தது. ‘ஹலோ… பிரபா ஒயின்ஸாப் ஓர்னரா.. எப்ப சார் கடையைத் திறப்பீங்க?” என்கிற காமெடியில் ‘அழப்படாது.. சிரி .. பார்க்கலாம்” என்று வடிவேலு மிரட்டியவுடன் ஒயின் ஷாப் ஓனர் வலுக்கட்டாயமாக சிரிக்கும் காட்சிதான் நினைவிற்கு வந்தது.

IMAGE_ALT

“எனக்கு ஏதாவது பாட்டு ரெடி வச்சிருக்கீங்களாப்பா?” என்று சேரன் வம்படியாக கேட்டு விட்டதால் அவருக்கான பிரிவுப்பாடலை சாண்டி குழு தயாரித்துக் கொண்டிருந்ததோடு இந்த வாரம் முடிந்தது.

அடுத்த புதிய வாரத்தில் வேறு சுவாரசியமான கலாட்டாக்கள் இருக்கலாம்.

அருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE