Wednesday 24th of April 2024 01:51:48 PM GMT

LANGUAGE - TAMIL
தீர்வு கிடைக்கும்வரை  அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கோம்; முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்கோம்; முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்


"கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் உட்படப் பல விடயங்களில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது. எனவே, முஸ்லிம்களின் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்கும்வரை அமைச்சுக்களை மீளப் பொறுப்பேற்கமாட்டோம்."

- இவ்வாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இன்று நேரில் தெரிவித்தனர் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

முஸ்லிம் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசிடம் முன்வைத்துள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சுப் பதவிகளை மீளப் பொறுப்பேற்பதில்லை என்று நேற்று ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீடக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

இது தொடர்பில் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திப்பதற்கும் இதன்போது இணக்கம் காணப்பட்டது.

இதன்பிரகாரம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் ஆகியோர் தலைமையிலான முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு இன்று பிற்பகல் 2 மணியளவில் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பெளசியின் வீட்டில் ஒன்றுகூடினார்கள். பிரதமரிடம் பேச வேண்டிய விடயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டன.

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம், முஸ்லிம்களின் பாதுகாப்பு விடயங்கள், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலையடுத்துக் கைதுசெய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களில் மீதமுள்ளவர்களை விடுதலை செய்தல், வாழைச்சேனை பிரதேச சபை எல்லை விவகாரம், தோப்பூர் உப பிரதேச செயலகத்தைத் தரமுயர்த்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன.

குறிப்பாகக் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.

இதன்பின்னர் பிற்பகல் 3.30 மணியளவில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.

ஏற்கனவே கலந்துரையாடப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் இதன்போது பிரதமரிடம் எடுத்துக் கூறப்பட்டது. கல்முனை வடக்கு பிரதேச செயலகம் விவகாரம் உட்படப் பல விடயங்களில் முஸ்லிம்களுக்கு அநீதி இழைக்கப்படுகின்றது. எனவே, கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினை உட்பட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று ரவூப் ஹக்கீம் இதன்போது வலியுறுத்திக் கூறினார்.

முன்னாள் முஸ்லிம் அமைச்சர்கள் நாளை செவ்வாய்க்கிழமை அமைச்சுப் பதவிகளை மீளப் பொறுப்பேற்குமாறும், முன்வைக்கப்பட்டுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் இன்னும் ஒரு வாரத்துக்குள் தீர்வு வழங்குவதாகவும் பிரதமர் இதன்போது கூறினார்.

ஆனால், வாயால் கூறப்படுவதுபோல பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை என்றும், இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்க்கமான - உறுதியான முடிவுகளை எட்டும்வரை அமைச்சுகளை மீளப் பொறுப்பேற்பதில்லை எனவும் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது நிலைப்பாட்டைப் பிரதமரிடம் தெரிவித்தனர்.

பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்வதில் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் காட்டிய தீவிரத்தன்மையைப் புரிந்துகொண்ட பிரதமர், இன்றிரவே முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்து தீர்க்கமானதொரு முடிவை எடுக்குமாறு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் வஜிர அபயவர்தனவுக்கு பணிப்புரை விடுத்தார். இன்றிரவு அலரி மாளிகையில் இந்தச் சந்திப்பு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE