Thursday 28th of March 2024 11:58:28 PM GMT

LANGUAGE - TAMIL
“வனிதா: ‘அய்யோ. ஒலக நடிப்புடா.. சாமி”  - சுரேஷ் கண்ணன்

“வனிதா: ‘அய்யோ. ஒலக நடிப்புடா.. சாமி” - சுரேஷ் கண்ணன்


மீசை எடுத்தவுடன் கமலின் இளமை பெருகிக் கொண்டே போகிறது. இன்று கறுப்பு –வெள்ளை உடையில் அட்டகாசமாக வந்தார். ‘உணர்ச்சிகளை நாம்தான் கட்டுப்படுத்த வேண்டும்; உணர்ச்சிகள் நம்மைக் கட்டுப்படுத்தக்கூடாது’ என்கிற சினிமா வசனத்திற்குப் பிறகு அகம் டிவிக்குள் நுழைந்தார்.

லியாவிற்கு ஒரு காலர்: “எப்போதும் ஆடிக்கிட்டே இருக்கீங்க. நீங்க.. செய்தி வாசிக்கும் போது மட்டும் எப்படி அமைதியா இருக்கீங்க.. அப்ப முடியுதுன்னா.. இப்ப ஏன் முடியல?” – இப்படியொரு மொக்கையான கேள்வி. இது போன்று வில்லங்கமற்ற கேள்விகளுக்குத்தான் வாய்ப்பு தருவார்கள் போல. பணியிடங்களில் நம்முடைய இயல்புகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயமும் அவசியமும் இருக்கிறது. இதர நேரங்களில் அப்படியில்லையே?!

இதற்கு ‘ஆடித்தள்ளுபடி’யெல்லாம் என்றெல்லாம் மொக்கையாக கமெண்ட் அடித்தார் கமல். (ஆண்டவரே..உங்க ரேஞ்சுக்கு இதெல்லாம் தேவையா?!)

கழிவறை அருகில் ஆண்கள் டீம் அமர்ந்து கொண்டு மொக்கை போடுவதால் பெண் போட்டியாளர்களுக்கு அசெளகரியம் ஏற்படலாம் என்கிற விஷயத்தை நாசூக்காக எடுத்துரைத்தார் கமல். மதுமிதா இது குறித்து ஏற்கெனவே தெரிவித்திருந்தார். ஏற்றுக் கொள்ளக்கூடிய ஆட்சேபம் அது. “இல்லையென்றால் உங்கள் குழுவின் பெயர் மாறி விடக்கூடிய ஆபத்து இருக்கிறது” என்கிற மெல்லிய நக்கலை சாண்டி ஏற்றுக் கொண்டார்.

‘தங்க மீன்கள்” ரேஞ்சிற்கு இணைந்திருந்த சேரனும் லியாவும் இப்போது தனித்தனி நீச்சல் குளங்களில் நீந்துவதை விசாரித்தார் கமல். “சேரப்பா.. இப்ப வேறப்பா’ ஆகிட்டிங்களா?” என்று.

இதற்கு சேரன் அளித்த பதில் முதிர்ச்சியானது. “அன்பிற்கு சில நிபந்தனைகளும் உண்டு. எல்லா சமயத்திலும் அளித்துக் கொண்டிருக்க முடியாது என்னதான் தகப்பன் –மகள் உறவு இருந்தாலும் அவர்களுக்கான சுதந்திரம் அளிக்கப்பட்டாக வேண்டும் என்பதை மதிக்கிறேன். அதனால் அவர் விலகியிருந்தாலும் காத்திருக்கிறேன்” என்பது மாதிரி பதில் அளித்தார்.

நிராகரிகப்படுகிற அன்பை விடவும் மோசமான தண்டனை வேறு ஏதுமில்லை.

இதற்கு லியா பதிலளிக்கும் போது ‘ஜெயில்ல குடுக்கற கஞ்சி இருக்கே.. அதை மாதிரி மோசமான விஷயம் வேறு எதுவுமில்லை சார். நான் கூட முதல்ல குதிச்சிக்கிட்டு ஜாலியா ஓடினேன். உள்ளே போய்ப் பார்த்தால்தான் தெரியுது. எவ்ள கஷ்டம்னு. ஆனா இந்த சேரப்பா ‘பொண்ணு ஜெயிலுக்குப் போவாளே’ன்னு துளி கூட கவலை இல்லாம என்னைப் போட்டுக் கொடுத்தாரு. அதுதான் கஷ்டமா இருந்தது. சில உறவுகளிடம் நான் நிறைய எதிர்பார்க்கிறேன். அதைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது” என்றார். (“டேய்.. தகப்பா.. நீ பண்றது அடுக்குமாடா?!” என்கிற கவுண்டமணியின் நாகரிக வர்ஷன் இது).

“நேர்மைதான் ஒரு தகப்பனின் அடையாளம். அதை நான் கத்துக்குடுக்க நினைச்சேன். மகள் –ன்ற சலுகையைக் காட்டுகிறார் –ன்னு யாரும் நெனச்சிடக்கூடாதூன்னு தோணுச்சு. அதனால்தான் நேர்மையா அவங்க பேரைச் சொன்னேன்” என்று சேரன் சொன்னது சரியான பதில்.

ஆனால் அவர் இப்படி சென்ட்டிமென்ட்டாக சொல்லி விட்டாலும், லியாவின் சில எதிர்வினைகள், கள்ள மெளனங்கள் அவரை எரிச்சலூட்டியிருக்கலாம். அதனால் கூட டாஸ்க்கைச் சரியாக செய்யாத தேர்வுகளில் லியாவின் பெயரைச் சொல்லியிருக்கலாம். உண்மையான தகப்பன் – மகள் உறவுகளில் கூட இம்மாதிரியான தற்காலிக கோபங்கள், மனக்கசப்புகள் வந்து விலகுவது இயல்பான விஷயம்.

“இப்படிச் செஞ்சதாலதான் லியா கிட்ட இப்பல்லாம் மாற்றம் வந்திருக்கு. சேரன் போட்டு வெச்ச திட்டம் ஓகே கண்மணி” என்று கிண்டலடித்தார் கமல். ஆம். உண்மைதான். “இந்த சப்ஜெக்ட் கிட்ட ஏதோ அசைவு தெரியுது பாரேன்” என்கிற வசூல்ராஜா எம்பிபிஎஸ் காட்சி மாதிரி, லியாவின் உரத்த குரலையும் கோபத்தையும் இப்போதுதான் பார்க்கத் துவங்குகிறோம். (அது பார்க்க வேடிக்கையாக இருந்தாலும் கூட). **

“வாங்க கற்பூரங்களா… பத்த வெச்ச உடனே பத்திக்கறீங்களாமே, என்னா மேட்டர்?” என்று ஆண்கள் டீமை அடுத்து வம்பிழுக்கத் துவங்கினார் கமல். “வத்திக்குச்சி உள்ளே வந்துடுச்சில்ல.. அப்புறம் பத்திக்காம எப்படி?” என்று அவசரக்குடுக்கை போல கஸ்தூரி ஜாலியாக ஒரு கமெண்ட் அடிக்க.. பார்வையாளர்களும் உற்சாகமாக கைத்தட்ட

IMAGE_ALT

உக்கிரமாக நிமிர்ந்து பார்த்த வனிதாவிற்கு ஒரு க்ளோசப் காட்சி போட்டார்கள் பாருங்கள். ‘அம்மன் திரைப்படங்களின் போஸ்டர் வரிசைகள் அனைத்தையும் ஒரே உருவில் பார்த்தது போல் கலவரமாக இருந்தது. ‘கஸ்தூரிக்கு சர்க்கரை தூக்கலா ஒரு பாயாசத்தை போட்டுற வேண்டியதுதான்’ என்பது வனிதாவின் ரணகளமான மைண்ட் வாய்ஸாக இருக்க வேண்டும்.

“வத்திக்குச்சியை வந்து பத்த வெப்போம்” என்று ஓர் இடைவெளி விட்டுச் சென்றார் கமல்.

“யாரு இந்தப் பெயரை வெச்சது?” என்று கமல் விசாரிக்க, ‘சண்டையா.. நான் பார்க்கலையே” என்பது மாதிரி ஆண்கள் அனைவரும் கூட்டுக் களவாணித்தனத்துடன் கையைத் தூக்கினார்கள். ‘கஸ்தூரி.. நீங்க சொல்லுங்களேன்” என்று கமல் வம்பிழுக்க ‘மார்க்கபந்து.. மொதோ.. சந்து’ என்று கவிதை மாதிரி வனிதாவின் பெயரை கஸ்தூரி சொன்னார்.

பிறகு ‘நான் சோறுதான் வெச்சேன். பேரு வெக்கலை” என்று கஸ்தூரி அலற, “கிட்ட வாயேன்.. அக்கா அடிக்கல்லாம் மாட்டேன். பிராமிஸ்.. பக்கத்துல வாயேன்” என்றார் வனிதா. ‘வத்திக்குச்சி பத்தவும் வைக்கும். வெளிச்சத்தையும் கொடுக்கும். அடுப்பு பத்த வெச்சா பூவாவும் கிடைக்கும்’ என்று சென்டிமென்ட்டாக வனிதா சொல்ல.. ‘நெஞ்சை தொட்டுட்டீங்க’ என்று பாவனையாக நெகிழ்ந்தார் கமல்.

“ஏன் வந்தே –ன்னு எல்லோரையும் விசாரிக்கிறியே.. வத்திக்குச்சி.. நீ ஏன் வந்தே?” என்பது போல் வனிதாவிடம் கமல் கேட்க, “மக்கள் என்னை மிஸ் பண்றாங்கன்னு தெரியவந்தது..” என்று வனிதா சொன்னவுடன் என் இதயம் ஒரு கணம் நின்று துடித்தது. நான் கூட ஒரு கட்டுரைக்கு ‘வி மிஸ் யூ சொர்ணாக்கா’ என்று வேறு ஜாலியாக ஒரு தலைப்பு வைத்து விட்டேன். அதை வனிதாக்கா சீரியஸாக எடுத்துக் கொள்வார் என்று நினைத்திருந்தால், நிச்சயம் வைத்திருக்க மாட்டேன்.

“ஆனா நான் உங்களை மிஸ் பண்ணேன் சார்” என்று கமலைப் பார்த்து வனிதா கூற, இம்முறை கமலின் இதயம் நின்று துடித்திருக்கலாம். ‘ப்பா.. உலக நடிப்புடா.. சாமி” என்ற மாதிரி தர்ஷனின் மடியில் சாய்ந்தே விட்டார் சாண்டி. ‘என்னா.. சாண்டி.. கேர்ராயிடுச்சா..,?” என்று ஜாலியாக விசாரித்தார் கமல்.

“கஸ்துரிக்கும் வனிதாவிற்கும் ஏதாவது முன்கதை இருக்கிறதா?” என்று கொக்கி போட்டார் கமல். (இதே போல் சரவணணையும் சேரனையும் இணைத்து முன்பு விசாரித்தது நினைவில் இருக்கலாம்). வனிதா இதற்கு மொக்கையாக பதிலளிக்க, கஸ்தூரி சொன்ன பதில் முதிர்ச்சியாக இருந்தது. “சப்ப மேட்டரையெல்லாம் நாள் பூரா பஞ்சாயத்து பேசறாங்க. முக்கியமான விஷயங்களைப் பற்றி பேசலாம். நான் கேட்டா.. “நீ புதுசா வந்தே?”ன்னு கேக்கறாங்க” என்றார். (ஆனால் இத்துப் போன கவின் மேட்டரை இவரும்தான் இழுத்தார்).

தனக்குப் பிடித்த போட்டியாளர் என்றால் கமலிடம் சற்று மனச்சாய்வு இருக்கும். “என்னா தர்ஷன் அப்படிச் சொல்லியிருக்க மாட்டீங்கள்லே…?” என்று தர்ஷனுக்கு எடுத்துக் கொடுத்தார் கமல்.

IMAGE_ALT

“இங்க இருக்கறவங்களோட பலத்தை எடுத்துச் சொல்லணும்னு நெனச்சேன். உதாரணமா அபிராமியைப் பாருங்களேன்.. எத்தனை அழகாக இருக்காங்க.. கஸ்தூரி கிட்ட என்ன பிரச்சினைன்னா.. ஷோ ஹோஸ்ட் மாதிரி பிஹேவ் பண்றாங்க” என்றார் வனிதா.

ஆம். கஸ்தூரியிடம் இப்படியொரு தோரணை இருப்பது உண்மைதான் என்றாலும் சந்தைக்கடை மாதிரியான விவாதத்தை யாராவது ஒருங்கிணைப்பது முக்கியம். அனைவரும் மதிக்கத்தக்கவராக அவர் இருக்க வேண்டும்.

“சரி.. வேற எதுவும் பஞ்சாயத்து இல்லையே.. வீட்டோட தலைவரை தேர்ந்தெடுத்திடலாம்” என்று அடுத்த விஷயத்திற்கு வந்த கமல், அனைவராலும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஷெரீனிற்கு வாழ்த்து சொன்னார். உலக அழகிப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் சொல்லும் சம்பிரதாய வார்த்தைகளைச் சொன்னார் ஷெரீன். (உலக அமைதிக்காக பாடுபடுவேன்)

அடுத்ததாக, ‘யார் காப்பாற்றப்படவிருப்பவர்கள்?’ என்கிற பகுதிக்கு வந்த கமல், தன் வழக்கமான நாடக பாணியில் சற்று இழுத்து விட்டு கவினும் லியாவும் காப்பாற்றப்பட்டதாக தெரிவித்தார். (ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்து முடியற வரைக்கும் வெளியே அனுப்ப மாட்டாங்க போல. அதுதான் விஜய் டிவி பாலிஸி. இருந்தாலும் கவின் –லியா ஒரு நல்ல ஜோடியா அமையக்கூடிய மாதிரிதான் தெரியறாங்க. கேம் ஷோவை வெச்சு இது முடிவு பண்ற விஷயம் இல்லைன்னாலும்).

பிறகு முகினும் காப்பாற்றப்பட்டதை தெரிவித்தார். பிறகென்ன.. மிச்சமிருப்பது ‘அபிராமி’.

IMAGE_ALT

ஷெரீன் அழுவார் என்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் ‘சிட்டி’ லியாவும் தேம்பித் தேம்பி அழுததுதான் ஆச்சரியம். பொதுவாக எந்தவொரு போட்டியாளரின் வெளியேற்றத்தின் போதும் உணர்ச்சியற்ற முகத்துடன் இருப்பார் லியா. இம்முறை அதில் நிறைய மாற்றம். சமீப காலங்களில் அபிராமியும் லியாவும் நெருக்கமான நண்பர்களாக ஆகிப் போனார்கள். அழுகைக் காலக்கட்டங்களில் பரஸ்பரம் உறுதுணையாக இருந்தார்கள். எனவே இத்தனை வார அழுகையையும் சேர்த்து வைத்து லியா அழுதது போல் இருந்தது அந்தக் காட்சி.

அபிராமியின் வெற்றிடத்தை நிரப்புவாரோ என்று கூட ஒருபக்கம் பயமாக இருக்கிறது.

இதுவரை ‘அழுமூஞ்சி’யாக இருந்த அபிராமி, குழந்தை போல் அழுத லியாவைத் தேற்றியது, ஒரு தாயாக மாறிய தருணம் எனலாம். (இரண்டாம் சீஸனில் யாஷிகா வெளியேறிய போது ஐஸ்வர்யா அழுத காட்சி நினைவிற்கு வந்தது).

அப்போது கஸ்தூரி ஏதோ கமெண்ட் அடிக்க “என்னைப் போய் வத்திக்குச்சி –ன்னு சொன்னாங்க.. உன்னைத்தான் சொல்லியிருக்கணும்” என்பது போன்றதொரு எக்ஸ்பிரஷன் தந்தார்.

‘வெளியே போய் மேடைல இப்படியெல்லாம் பேசு” என்று அபிராமிக்கு டிப்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தார் வனிதா. அநாவசியம். மனதில் உண்மையாக தோன்றுவதை பேச வேண்டிய நேரம் அது. சம்பிரதாய வார்த்தைகள் தேவையில்லை.

வீட்டிற்குள் இருந்த பெரும்பாலான நேரங்களில் அழுது கொண்டிருந்த அபிராமி, ‘அழுதியின்னா கொன்னுடுவேன்” என்று லியாவை ஜாலியாக மிரட்டியது முரண்நகை.

அபிராமி உடைத்து விட்டுப் போன மெடலை ஒட்ட வைக்க முயன்று கொண்டிருந்தார் கைவினைக் கலைஞர் முகின். ‘சட்ட கிழிஞ்சிருந்தா தச்சு முடிச்சிடலாம். நெஞ்சு கிழிஞ்சிருச்சே.. எங்க முறையிடலாம்” மோமெண்ட் அது. அன்பு மட்டும் அநாதையாக நிற்கும் தருணமும் கூட.

“இது போன்ற பிரிவுகள் என்னை இவ்வளவு பாதிக்கும் –னு தெரியாது. தெரிஞ்சிருந்தா இதுக்குள்ள வந்திருக்க மாட்டேன்’ என்பது போல் கலங்கினார் ஷெரீன். பிக்பாஸ் போட்டியாளர்கள் சமயங்களில் ஓவர் ஆக்ட் செய்கிறார்களோ என்று பார்வையாளர்களுக்கு எழக்கூடிய சந்தேகங்களுக்கான பதில் ஷெரீனின் இந்த ஸ்டேட்மெண்ட்டில் இருக்கிறது.

அபிராமிக்காக திரையிடப்பட்ட குறும்படம் நன்கு எடிட் செய்யப்பட்டிருந்தது. அதற்கு வெவ்வேறு முகபாவங்களைக் காட்டினார் அபிராமி. ‘அழக்கூடாது’ என்று முடிவு செய்திருந்தாலும் இதைப் பார்த்து கண்கலங்கினார்.

அகம் டிவி வழியாக போட்டியாளர்களைச் சந்தித்து விடைபெற்றார் அபிராமி. “பாத்தீங்களா.. எப்படி அழாம சந்தோஷமா இருக்கறதுன்னு இவங்களைப் பார்த்து கத்துக்கங்க’ என்று சர்காஸ்டிக்காக கமெண்ட் அடித்த கமல், “அழுகையைத் தாண்டி உங்களுக்கு இருக்கும் வேறு திறமைகளை இங்கு காட்டியிருக்கலாம். பரவாயில்லை. வெளியில் அதை முயற்சியுங்கள்.” என்று சொல்லி கர்நாடக ஸ்வரத்தை பாட வைத்தார்.

உள்ளே ஒரு மாதிரியும் வெளியே இன்னொரு மாதிரியும் இருந்த அபிராமியைப் பற்றி சொல்லும் போது ‘அபிராமி.. அபிராமி’ என்று குணா மாடுலேஷனில் வெவ்வேறு விதமாக கமல் சொன்ன அந்தத் தருணம் அபாரம். இது போன்ற டைமிங்குகளில் அதிகமாக கவர்கிறார் கமல்.

**

கமல் விடைபெற்ற பிறகு ஒரு மகத்தான சென்ட்டிமென்ட் காட்சியைப் பார்க்க முடிந்தது. ஆம். சற்று விலகியிருந்த தங்கமீன்கள் மீண்டும் இணைந்து கொண்டன. அதில் பொய்யிருப்பதாகத் தெரியவில்லை. “இந்த கேம் ஷோ நம் உறவுக்குள் வரக்கூடாது. நாம எப்பவும் அப்பா – மகளா இருக்கணும். உனக்காக சாக்லேட்லாம் எடுத்து வெச்சு காத்திருந்தேன்” என்று உடைந்த குரலில் சேரன் சொன்ன போது வெடித்து அழுதார் லியா. நமக்குமே சற்று கண்கலங்கியது. (ஒருவேளை பயபுள்ள சாக்லேட் கிடைக்கப் போகுது –ன்ற சந்தோஷத்துல கண்கலங்கியிருக்குமோ?!)

டாஸ்க்கில் தன் பெயரைச் சொன்ன விஷயத்தைப் பற்றி உரிமையுடன் சேரனிடம் சண்டை போட்டிருக்கலாம் லியா. இந்த விஷயத்தை மனதிற்குள் பூட்டிக் கொண்டு புழுங்கி விலகியிருந்தது சரியல்ல.

அவர்கள் அந்தரங்கமாக பேசிக் கொள்ளட்டுமே என்றில்லாமல் பக்கத்தில் வந்து அமர்ந்தார் கஸ்தூரி.

“எல்லாத்தையும் பேசிட்டியா” என்று பிறகு விசாரித்தார் கவின். “இல்ல.. கமல் சார் முன்னாடி பேசின அந்த ரெண்டு விஷயத்தைப் பத்திதான் பேசினேன்’ என்றார் லியா. (அந்தத் தருணத்தில் அனைத்தையும் பேசியிருக்கலாம். கல்லுளி மங்கிகளை கையாள்வது மிகக்கடினம்).

“வனிதாக்கா.. பேசும் போதெல்லாம் மக்கள் கைத்தட்டினது செம ஜாலியான மேட்டர்ல’ என்பது மாதிரி விசாரித்துக் கொண்டிருந்தார் தர்ஷன். (ஆமாம்.. சந்தேகமேயில்லாம!)

தந்தையாக உருகுவது சேரனின் டிராமா என்று கவின் நினைக்கிறார் போல. எனவே லியா மீண்டும் அங்கு இணைந்தது அவருக்குப் பிடிக்கவில்லை. ஏதோ மாமனார்- மருமகன் உறவு போல அது போய்க் கொண்டிருக்கிறது. பார்ப்போம்.

அருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE