Tuesday 16th of April 2024 03:22:39 AM GMT

LANGUAGE - TAMIL
“சேரன் – லியா: ‘சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது”  - சுரேஷ் கண்ணன்

“சேரன் – லியா: ‘சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது” - சுரேஷ் கண்ணன்


“டேக் ஈஸி ஊர்வசி’ பாடலுடன் 57-ம் நாள் விடிந்தது. ஸ்லீவ்லெஸ் அணிந்த ஓர் உருவம் தனியாக அசைந்து கொண்டிருந்தது. ரேஷ்மாதான் திரும்ப வந்து விட்டாரோ என்று கலவரத்துடன் சரியாகப் பார்த்தால், அது கஸ்தூரி.

‘இருபது வயதில் ஆடாமல் அறுபதில் ஆடி என்ன பயன்?” என்கிற பாடல் வரிகளை சொல்வதின் மூலம் சாண்டி டீமிற்கு பிக்பாஸ் ஆதரவு தருகிறாரோ.. என்னமோ.. (சும்மா.. நாமா இதை கிளப்பி விடறதுதான்!).

கிச்சன் டீமில் இல்லையென்றாலும் வம்படியாக சென்று கவினுக்கு உதவியாக பாத்திரம் கழுவிக் கொண்டிருந்தார் லியா. “ஏன் மூஞ்சை தூக்கி வெச்சிட்டிருக்க?” என்று கவினை ஆயிரத்து ஓராவது முறையாக கேட்டுக் கொண்டிருந்தார். (அந்த மூஞ்சை இறக்கித்தான் வையுங்களேன்!) சேரன் – லியா, இணைப்பில் கவினுக்கு ஏதோ நெருடல் இருக்கிறது. இன்று இரவுதான் அதைப் பற்றி சொன்னார்.

பாவம், மகள் வருவாள் என்று காலையுணவை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்தார் சேரன். ‘சூடு ஆறிப் போயிடும்’ என்று மற்றவர்கள் சொன்னாலும் பரிதாபமாக காத்துக் கொண்டிருந்தார். கல்லுளி மங்கியான லியா வெளியே வம்படியாக அமர்ந்திருந்தார். லியாவின் நண்பர்கள் வற்புறுத்திய பின்பு உள்ளே சென்று ‘ஐய்யோ. எனக்காகவா காத்திருந்தீங்க?” என்பது போல் பாவனையில் சிரித்தார். (பெண்களின் இது போன்ற நடிப்பிற்கு உலகின் அனைத்து விருதுகளையும் தந்து விடலாம்).

நாமினேஷன் படலம் ஆரம்பித்தது. வனிதா விருந்தாளியா, மீண்டும் வந்த போட்டியாளரா என்பது அதிகாரபூர்வமாக தெரிய வரும் நேரம். ‘வைல்ட் கார்ட் எண்ட்ரி’ என்று பிக்பாஸ் அறிவித்தார். (அப்ப இனி ஏழரைதான்!). முதல் வாரம் என்பதால் வனிதாவை நாமினேட் செய்ய முடியாது. போலவே தலைவியான ஷெரீனையும்.

வனிதா தனது மீள்வருகையில் தர்ஷனை பிரதான டார்க்கெட்டாக வைத்திருக்கிறார் என்பது பலமுறை தெரிகிறது. அந்த வீட்டில் முதன் முதலில் தன்னை எதிர்த்து பலமாக சண்டையிட்டவர் தர்ஷன் என்பதால் அவரைத் தொடர்ந்து பழிவாங்குகிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. எனவே தர்ஷனையும் சாண்டியையும் நாமினேட் செய்தார் வனிதா.

‘ஆண்கள் பெண்களை அடிமைப்படுத்துகிறார்கள்’ என்று மதுமிதா சொன்ன போது சேரன் அதை ஆட்சேபிக்கவில்லை என்கிற காரணத்தைச் சொல்லி சாண்டி டீமில் பலர் சேரனை நாமினேட் செய்தார்கள். இது உண்மையல்ல. இவர்கள் வெளியே இருந்த போது ‘அவ்வாறு பேசியது தவறு மது’ என்று சேரன் ஆட்சேபித்தார். இதை சேரனிடமே இவர்கள் கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாம். ஆனால் சேரனின் மீது உள்ள காண்டால் ஏதோவொரு காரணத்தைக் கண்டுபிடிக்க நினைக்கிறார்கள் போல.

கஸ்தூரியை பெரும்பாலோனோர் நாமினேட் செய்வார்கள் என்பது எதிர்பார்த்ததே. கஸ்தூரியும் ஏறத்தாழ இன்னொரு வனிதாதான். அவர் சொல்லும் பாயிண்ட்டுகள் பெரும்பாலான சமயங்களில் சரியாக இருக்கிறது. ஆனால் அவர் சொல்லும் முறையும் சமயங்களும்தான் அசந்தர்ப்பமானதாக இருக்கின்றன.

சேரன், சாண்டியோடு இணைத்து தர்ஷனை நாமினேட் செய்தார். கவினை நாமினேட் செய்தால் லியாவிற்கு மறுபடி கோபம் வரும் என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

லியா செய்த நாமினேஷன்தான் இருப்பதிலேயே அதிக சர்ச்சையை ஏற்படுத்தக்கூடியது. முதல் நாமினேஷனாக அவர் கஸ்தூரியைச் செய்தது ஓகே. (வனிதாவை செய்ய முடியும் என்றால் பலரும் அவர் மீதுதான் ஓங்கி முத்திரை குத்தியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்).

அடுத்து லியா செய்த நாமினேஷன் சேரனின் மீது.

இந்த விவகாரத்தை சற்று சுருக்கமாக அலசி விடுவோம். பிக்பாஸ் வீடுகளில் உறவுகள் மலர்வது பெரும்பாலும் போலித்தனமாக இருக்கும் என்கிற விமர்சனம் ஏறத்தாழ உண்மைதான். ஆனால் சில உறவுகள் அப்படி உண்மையாகவே மலரக்கூடும். தற்காலிகமான நட்பிற்கு ‘ரயில் சிநேகத்தை’ குறியீடாகச் சொல்வார்கள். ஆனால் அப்படி மலர்ந்த சில நட்புகள் நெடுங்காலத்திற்கு நீடித்த உதாரணங்களும் உண்டு. எனவே இந்த உறவை நோண்டி, மலினப்படுத்தி, கொச்சைப்படுத்தாமல் சந்தேகத்தின் பலனை அவர்களுக்கு அளிப்பதே முறையானது.

சில தருணங்களை வைத்து அவதானிக்கும் போது அவர்களுக்கு இடையில் இருப்பது உண்மையான தந்தை -மகள் அன்புதான் என்பதை வலுவாக யூகிக்க முடிகிறது.

ஓர் அசலான தந்தைக்கும் மகளுக்கும் இடையில் நேர்வதைப் போலவே சேரனுக்கும் லியாவிற்கும் இடையில் சில மனக்கசப்புகளும் விலகல்களும் நேர்வது இயல்பே. அதை வைத்து அந்த உறவு போலித்தனமானது என்று உறுதியாக சொல்லி விட முடியாது.

IMAGE_ALT

சேரன் – கவின் ஆகிய இரண்டு உறவுகளுக்கிடையில் லியா தத்தளிக்கிறார் என்பது உறுதி. ஒரு சராசரியான பெண், தந்தை – காதலன் ஆகிய இரு பிம்பங்களுக்கு இடையில் தத்தளிப்பதைப் போல. இது போன்ற இளம் வயதுகளில் பெண்களின் பெரும்பாலான தேர்வு பெரும்பாலும் காதலனாகத்தான் இருக்கும்.

வாக்குமூல அறையில் கவின் சொன்ன காரணத்தை இதற்கு பொருத்திப் பார்க்கலாம்.

“நண்பர்கள் என்றால் பல்வேறு நடைமுறைக் காரணங்களால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் பிரிந்து போய் விடுவார்கள் என்கிற அச்சம் இருக்கும். எனவே பலவற்றை விட்டுக் கொடுத்து, பொறுமை காத்து அந்த உறவை தக்க வைத்துக் கொள்வார்கள். ஆனால் பெற்றோர் என்றால் அவர்கள் தன்னுடன் எப்போதும் இருக்கப் போகிறவர்கள்தானே என்கிற மனோபாவத்தில் taken for granted-ஆக எடுத்துக் கொள்வார்கள்”. அந்தக் குற்றவுணர்வில் தன்னுடைய பெற்றோர் குறித்து நினைத்து அழுதார் கவின்.

சேரனை விடவும் கவினின் திசையிலான ஈர்ப்பு லியாவிற்கு அதிகமாக இருப்பதற்கு காரணம் இதுவாக இருக்கலாம். லியாவின் சில எதிர்வினைகள், புறக்கணிப்புகள் காரணமாக சேரன் உண்மையிலேயே எரிச்சல் பட்டிருக்கிறார். ‘பசுத் தோல் போர்த்திய புலி’ என்பது போல் வனிதா எடுத்துக் கொடுத்த போது ஆமோதித்திருக்கிறார். தனக்கு எதிரான சாண்டி குழுவில் லியா ஐக்கியமாகி விட்டாளே என்பதும் அவரது எரிச்சலுக்கு காரணமாக இருந்திருக்கும்.

என்றாலும் கமல் சுட்டிக் காட்டிய பிறகு அந்தப் பனிச்சுவர் உடைந்தது. ஆனால் லியாவின் தரப்பில் இருந்து அந்தச் சுவர் இன்னமும் முழுவதுமாக உடைபடவில்லை. “எல்லாத்தையும் பேசிட்டியா?” என்று பிறகு விசாரித்தார் கவின். “இல்லை. இரண்டு விஷயங்களை மட்டும்தான் பேசினேன்” என்றார் லியா. எனில் சேரனுடன் அவர் தெளிவுப்படுத்திக் கொள்ள வேண்டிய விஷயங்கள் இன்னமும் பாக்கியிருக்கின்றன. அதை அப்போதே உடைத்துப் போடடிருக்கலாம். ஆனால் லியா போன்ற கல்லுளி மங்கிகள் எப்போது எந்த திசையில் நகர்வார்கள் என்பதை யூகிப்பது கடினம்.

சேரனை நாமினேட் செய்த குற்றவுணர்வில் அழுது கொண்டிருந்தார் லியா. “தனிப்பட்ட உறவு வேறு. விளையாட்டில் நேர்மையாக இருப்பது வேறு” என்று சேரன் கற்றுக் கொடுத்த பாடத்தை அவருக்கு எதிராகவே லியா வைத்திருப்பது ஒருவகையில் சரியே. இதை சேரனிடம் சொல்லி விட்டே செய்திருக்கலாம். ‘அவ என்னை ஒருபோதும் நாமினேட் செய்ய மாட்டா’ என்று உறுதியாக நம்பிக் கொண்டிருந்தவரின் முதுகில் குத்தியிருக்க வேண்டாம். போலவே சேரனும் இப்படி நம்புவது அவரின் நேர்மையான கொள்கைக்கு எதிரானது. இந்தச் சுதந்திரத்தையும் அவர் மகளுக்கு அளிக்க வேண்டும்.

IMAGE_ALT

“வேற யாரையும் நாமினேட் செய்ய காரணம் இல்லையே” என்று லியா சொல்வதும் சரியாக இருக்கிறது. ஷெரீனை நிச்சயம் நாமினேட் செய்ய மாட்டார். வனிதாவை செய்ய முடியாது. மீதமிருப்பவர்கள் சாண்டி டீம்தான். நண்பர்களையும் செய்ய முடியாது. தன்னிடமும் தனது நண்பர்களிடமும் விலகலாக இருந்த சேரனை அவர் நாமினேட் செய்தது முறையற்றது என்றாலும் அவர் சுட்டும் காரணத்திலும் தர்க்கம் இருக்கிறது. தான் உணர்வதை நேர்மையாக செயல்படுத்துவதுதான் சரி. ஆனால் தான் செய்தது சரியா தவறா என்கிற குழப்பமும் லியாவிடம் இருக்கிறது.

கவின் தரப்பு பிரச்சினைகள் முழுவதுமாக சேரனிடம் பேசி தீர்க்கப்படாமல் லியாவின் நெருடல்கள் தீராது. ஆனால் ஏற்கெனவே குறிப்பிட்டபடி, இப்படி அடிக்கடி அழுவதின் மூலம் அழுமூஞ்சி அபிராமியின் வெற்றிடத்தை லியா கைப்பற்றிக் கொள்வாரோ என்று கவலையாக இருக்கிறது.

**

ஒவ்வொரு போட்டியாளரையும் வாக்குமூல அறைக்கு அழைத்த பிக்பாஸ், ‘இங்க ஐம்பது நாள் இருந்திட்டீங்களே.. எப்படி உணர்றீ்ங்க?.. சொந்தக்காரங்க யாரையாவது பார்க்கணும் போல இருக்கா? பார்த்தா என்ன சொல்வீங்க?” என்றெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தார். ‘சும்மா இருப்பவர்களை சொறிந்து விடுவது’ என்பது இதுதான். அழுகாச்சி ஃபுட்டேஜ் கிடைக்க வேண்டும் என்பதற்காக போட்டியாளர்களின் உணர்வுகளுடன் விளையாடுவது பிக்பாஸ் ஸ்டைல்.

IMAGE_ALT

“வெளில ரொம்ப ஜாலியா இருந்தேன். குடும்பத்தைப் பத்தி கவலையே படமாட்டேன். டான்ஸ்ல மூழ்கியிருப்பேன். இங்க வந்த பிறகு என் குழந்தையை ரொம்ப மிஸ் பண்றேன். ‘நான்தான் அப்பா’ ன்னு இப்பதான் அவளுக்கு தெரிய ஆரம்பிச்சிருக்கு. ஆனா இந்தச் சமயத்துல கரெக்ட்டா பிரிஞ்சி வந்துட்டேன். ஆனா இப்ப அவளைப் பார்த்தா முகத்தை மறந்துடுவாளோன்னு பயமா இருக்கு” என்றெல்லாம் சாண்டி புலம்பியது, ஒரு தகப்பனின் உண்மையான உணர்வு.

“அம்மையப்பா.. உங்கள் அன்பை மறந்தேன்” என்கிற பாகவதர் பாட்டை பாடித் தீர்த்தார் கவின். “69 வயசுலயும் எங்க அப்பா இன்னமும் உழைச்சு எனக்கு பணம் அனுப்பிட்டு இருக்காரு. நான் பாட்டுக்கு சினிமா –ன்னு வந்துட்டேன்” என்று தர்ஷன் கலங்கியது நெகிழ்ச்சி. “பிக்பாஸ் உள்ளே வருவேன்.. தமிழக மக்களின் அன்பைப் பெறுவேன் –னு நான கனவு கூட கண்டதில்லை” என்றும் நெகிழ்ந்தார் தர்ஷன்.

பெற்றோரின் புகழ் பாடினாலும் காதலின் பதிலுக்காக நேர்மறையுடன் காத்திருப்பதாக சொன்னார் முகின்.

சேரன் சொன்ன பதில் மிக முதிர்ச்சியானது. இந்த நிகழ்ச்சியை எப்படி பார்க்க வேண்டும் என்று நான் எத்தனையோ முறை விரிவாக எழுதியிருக்கிறேன். கமலும் தன் முன்னுரைகளில் பலமுறை சொல்லியிருக்கிறார். ஏறத்தாழ அதையே சேரனும் பிரதிபலித்தார். “மக்கள்தான் என்னை உருவாக்கினாங்க.. இந்த நிகழ்ச்சியில் பல உறவுகளின் குணாதிசயம் வெளிப்படும். அவற்றை பார்வையாளர்கள் தங்களின் தனிப்பட்ட சுயபரிசீலனைகளுக்காக பயன்படுத்திக் கொள்வது முக்கியமானது”

(ஆனால் மக்கள் போட்டியாளர்களைப் பற்றிய வம்புகளைப் பேசுவதில்தான் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்.)

அடுத்து வந்தவர் ஷெரீன். ‘என் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பொதுவில் நான் அதிகம் சொன்னதில்லை. மனஅழுத்தமோ, பிரச்சினையோ இருந்தால் உங்களுக்கு நம்பகமான நண்பர்களிடம் அதைப் பற்றி பேசுங்கள். என் தனிப்பட்ட வாழ்க்கையில் நான் பெரிதாக அழுததில்லை. ஆனால் ஒரு வருஷத்திற்கு அழ வேண்டியதை பிக்பாஸ் வீட்டில் அழுது விட்டேன்” என்ற செய்தியைச் சொன்னார்.

“இது ஒரு கேம் ஷோ –ன்னு நெனச்சுதான் வந்தேன். வெளியில் இருந்து பார்க்கும் போது இதில் உண்மையான உறவுகள் ஏற்பட வாய்ப்பில்லை என்றுதான் நினைத்தேன். ஆனா அது சாத்தியப்பட்டிருக்கு. ஆனா சேரப்பாவை நான் நாமினேட் செஞ்சிட்டேன்” என்று கலங்கினார் லியா. (அதென்னமோ.. இப்போது பார்க்க ‘சானியா மிர்சா’ சாயலில் இருந்தார்).

“இந்த வீட்டை விட்டு இப்போது வெளியேறுவீர்கள், ஒருவரிடம் மட்டும் பேச முடியும் என்றால் யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்?” என்பது பிக்பாஸின் அடுத்த கேள்வி. (சூழ்நிலை பார்த்து கரெக்ட்டா அடிக்கறதுல.. பிக்பாஸ் டீம் எமகாதகர்கள்). லியா, கவினைத்தான் சொல்வார் என்பது எதிர்பார்த்ததே. “கவினைத்தான் சொல்வேன். அவன்தான் என் கிட்ட உண்மையான ஆதரவோடு பெரும்பாலும் நடந்திருக்கான். தன்னை விடவும் மத்தவங்க வின் பண்ணனும்னு உண்மையா நெனக்கறான். அந்த மனசு யாருக்கும் வராது. அவன்தான் ஃபைனல் வரைக்கும் போகணும் ” என்று நெகிழ்ந்தார்.

வனிதாவின் முறை வந்தது. ‘சுவற்றுக்கு காது இருக்குன்னு சொல்லுவாங்க. இந்த பிக்பாஸ் வீட்டிற்கு உயிர் இருக்கு. (அப்பப்ப்பபா!) இதை எங்க அம்மா வீடு மாதிரியே ஃபீல் பண்றேன் (ஐய்யய்யய்யா..) ஏதோவொரு விட்டகுறை, தொட்டகுறை இருக்கு. அதனால்தான் உடனே திரும்பி வந்தேன். நான் போனா உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன் பிக்பாஸ். (அப்ப கமலோட கதி?!) உங்கள் குரல் கடவுளோட குரல் மாதிரியே இருக்கு” என்றெல்லாம் பிக்பாஸிற்கு ஐஸ் பார்களாக வைத்தார் வனிதா. (பிக்பாஸூ.. பார்த்துய்யா.. வீட்டோட டாக்குமெண்ட்ல கையெழுத்து வாங்கிடப் போறாங்க).

**

பாத்திரம் விளக்கிக் கொண்டிருந்த கவினிடம் மறுபடியும் சென்று “ஏன் மூஞ்சை தூக்கி வெச்சிட்டிருக்க?” என்றார் லியா. தவறுதலாக காலையில் ஒளிபரப்பிய காட்சியையே மறுபடியும் போட்டு விட்டார்களோ என்று தோன்றி விட்டது. பயபுள்ள நாள்பூராவும் இந்தக் கேள்வியைத்தான் கேட்டுக் கொண்டிருக்கும் போல. கவின் சரியாக பதில் சொல்லாததால் கோபித்துக் கொண்ட விலகிச் சென்ற லியாவிடம் ‘போ.. நீ .. போ’ பாடலை ரீமிக்ஸ் செய்து பாடி ஜாலியாக வெறுப்பேற்றினார் சாண்டி.

தன்னுடைய ‘மூஞ்சு தூக்குதலுக்கான’ காரணத்தை இரவில் லியாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார் கவின். “நீயும் தர்ஷனும் சேரனிடம் திரும்பப் போய் பேசுவதில் எனக்கு பிரச்சினையில்லை. ஆனால் ‘பாட்டுப் பாடிய’ மேட்டரில் அவர் கமல் முன்பு மன்னிப்பு கேட்டார். ஆனால் எங்களிடம் அதைப் பற்றி எதுவுமே பேசவில்லை. எதுவுமே நடக்காத மாதிரியே இருக்காரு.. எங்க கிட்டயும் பேசியிருக்கணும். அவர் மட்டும் எல்லாத்துக்கும் விளக்கம் எதிர்பார்க்கறார்ல’ என்று புலம்பிக் கொண்டிருந்தார் கவின். இதுதான் அவரின் மனப்புழுக்கங்களில் ஒன்று என்று தெரிகிறது.

சேரனுடன் முழுமையாக இணைய முடியாமல் லியா தவிப்பதற்கும் இதுவேதான் காரணம் என்று தோன்றுகிறது. கவின் ஒருபக்கம் அதிருப்தியோடு இருக்கும் போது, இவரால் சேரனிடம் முழு அன்புடன் பழக முடியாது.

“இந்த சாண்டி டீமோட முதுகெலும்பை உடைக்கணும்” என்று சதி தீட்டிக் கொண்டிருந்தார் வனிதா. அதை ஆமோதித்துக் கொண்டிருந்தார் சேரன். “முதலில் முதுகெலும்பை உடைக்க முடியாது. வீக்கான பாகத்தைத்தான் முதலில் டார்க்கெட் பண்ணணும்” என்று ஃ.புரொபஷனல் கில்லர் மாதிரியே டெடராக ஐடியா தந்தார் கஸ்தூரி.

கவினும் லியாவும் தனிமையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்து பூங்கா வாட்ச்மேன் மாதிரி லியாவைத் துரத்தினார் சாண்டி. “ஏண்ணே.. நீயே இப்படி பண்றே” என்று அடிபட்ட குரலோடு கவின் கேட்டதற்கு.. “டேய் லூஸே.. நீங்க பேசறதுல எனக்கொன்னும் பிரச்சினையில்ல. ஆனா நீங்க நைட்ல உக்காந்து ரொம்ப நேரம் பேசறது பிரச்சினையாவுதில்ல. மத்தவங்களுக்கு ஏன் அந்த சான்ஸை தரணும். உன் நல்லதுக்குதான் சொல்றேன்” என்ற சாண்டியின் விளக்கத்தை லியா ஏற்றுக் கொண்டு நகர்ந்தார்.

ஓர் உண்மையான நண்பனின் கரிசனக் குரல் அது.

அருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE