Thursday 25th of April 2024 10:00:00 PM GMT

LANGUAGE - TAMIL
“குண்டர் கார்டனில் ஜூராசிக் பேபிகளின் அட்ராசிட்டிகள்” - சுரேஷ் கண்ணன்

“குண்டர் கார்டனில் ஜூராசிக் பேபிகளின் அட்ராசிட்டிகள்” - சுரேஷ் கண்ணன்


பிக்பாஸ் வீட்டில் நடந்த அல்லது நடக்கவிருக்கிற சம்பவங்களுக்கும், காலையில் ஒலிக்கும் பாடல்களுக்கும் நேரடியான அல்லது மறைமுகமான தொடர்பு இருப்பதைக் கவனிக்கலாம். ‘அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் ஆயிரம் மாற்றங்கள்’ என்கிற பாடல் இன்று ஒலித்தது. ‘நாஸ்டால்ஜியா’ பாணியில் இன்று போட்டியாளர்கள் எல்கேஜி பிள்ளைகளாக மாறப் போவதற்கான முன்னோட்டமாகவும் அதைக் கருதலாம்.

அந்தப் பாடல் சேரன் இயக்கிய திரைப்படம் என்பதால் மனிதர் மிகவும் நெகிழ்ந்து மகிழ்ந்திருப்பார். பாடலைப் பாடிக் கொண்டே மெலிதாக நடனமும் ஆடினார். சேரன் என்பது போட்டியாளர் என்பது சிறிது நேரம் மறந்து ‘பாண்டவர் பூமி’ என்கிற அற்புதமான திரைப்படத்தின் இயக்குநர் ஆயிற்றே என்கிற பிரமிப்பை சிறிது நேரம் அடைய முடிந்தது.

லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் ஆரம்பித்தது. ‘அம்மா நான் போயிட்டு வர்றேன்’ என்பது அதன் தலைப்பாம். தங்களின் நடுத்தர வயதில் இந்த வசனத்தைப் பேசி தமிழ் நடிகைகள் அட்ராசிட்டி செய்து கொண்டிருந்த அறுபதுகளின் திரைப்படங்கள் நினைவிற்கு வந்துத் தொலைத்தன. குறிப்பாக சரோஜாதேவி.

போட்டியாளர்கள் இதற்காக தயாராகிக் கொண்டிருந்தார்கள். வனிதாவை ஸ்கூல் யூனிபார்மில் பார்த்த போதே கண்ணைக் கட்டிக் கொண்டு வந்தது. ‘இன்னமும் எத்தனை கொடுமையையெல்லாம் பார்க்க வேண்டியிருக்குமோ’ என்று கலவரமாக இருந்தது. போலவே ஷெரீனும். இவர்களுக்கு ஆடைகளை தைத்த டெய்லருக்கு கோவிலே கட்டலாம்.

‘கிண்டர் கார்டன்’ என்பதை விடவும் ‘குண்டர் கார்டன்’ என்றே பெயர் வைக்கலாம். அந்த அளவிற்கு விதம் விதமான சைஸ்களில் ‘குழந்தைகள்’ உருண்டு சென்றார்கள். இம்முறை ‘சூப்பர் பர்ஃபாமர்’ தேர்வை அடைந்தே விட வேண்டுமென்று முடிவு செய்து விட்டாரோ என்னமோ, சாண்டி தன் தோற்றத்தை பெரும்பாலும் மாற்றிக் கொண்டிருந்தார். மீசையை எடுத்து, தலையை படிய வாரி ‘பேரழகன்’ சூர்யா போல் தோளைக் குறுக்கி, ‘குட்டீஸ் சுட்டீஸ்’ ஸ்டைலில் ஒரு மாதிரியாக வந்து சேர்ந்தார். என்றாலும் அந்த அர்ப்பணிப்பை பாராட்ட வேண்டும்.

IMAGE_ALT

கஸ்தூரியும் சேரனும் முறையே ஆசிரியர், தலைமை ஆசிரியர் தோற்றத்திற்கு பொருத்தமாக அமைந்திருந்தார்கள். வனிதாவிற்கு சத்துணவு ஆயா பணியைத் தந்திருக்கலாம். லியா – ஷெரீன் – வனிதா குழு கூடி ‘ரிங்கா ரிங்கா ரோசஸ்’ ஆடி கலவரத்தை இன்னமும் அதிகப்படுத்தினார்கள்.

“டீச்சர். எனக்கு அந்தப் பையனைப் பிடிக்கும்” என்று தர்ஷனை சுட்டிக் காட்டி அட்ராசிட்டி செய்தார் ஷெரீன். நிலா நிலா ஓடி வா பாடலுக்குப் பதிலாக ‘நிலா காயுது.. நிலா அது வானத்து மேலே’ என்று வில்லங்கமான பாடல்களாகப் பாடி ஏழரையைக் கூட்டினார் சாண்டி.

‘ஹோட்டல் மேனஜராக வாழ்ந்தீர்கள்’ என்ற சான்றிதழைப் பெற்று விட்டதால், இந்த முறை ‘நல்லாசிரியர்’ விருது பெற்று விடும் ஆவேசத்தோடு சீரியஸாக இருந்தார் சேரன். அவர் சீரியஸாக பார்த்துக் கொண்டிருந்தாலும் கஸ்தூரியை தீவிரமாக சைட் அடித்துக் கொண்டிருந்ததைப் போலவே பட்டது.

ஒன்று என்கிற எண்ணிக்கையை அழகாக மரமாக ஆக்கிக் காட்டினார் கஸ்தூரி டீச்சர். இரண்டு என்கிற எண்ணிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி வாத்து ஆக்கினார். அதை முட்டையாக மாற்றி ஆம்லேட் வரைக்கும் போகவில்லை.

குழந்தைகள் ரயில் விளையாட்டு விளையாடினர். இத்தனை விசித்திரமான என்ஜினை பார்த்ததேயில்லை. முன்னணியில் வனிதா இருந்தார். சிறிது நேரத்தில் என்ஜின் மட்டும் தனியாக ஓடியது. ‘சிக்கு புக்கு ரயிலே.. இவ ஓக்கேன்னா அடி தூளே’ என்பதெல்லாம் டீச்சர் பாட வேண்டிய பாடலா?! இதற்கு சாண்டியே பரவாயில்லை.

‘டிவிங்கிள் டிவிங்கிள் லிட்டில் ஸ்டார்’ பாடலை தமிழில் பாடி அசத்தினார் லியா. உண்மையாவே நன்றாக இருந்தது. இறக்குமதியான பாடல்களைக் கட்டிக் கொண்டு அழுவதை விடவும் தமிழ்ச் சூழலுக்கு ஏற்ற பாடல்களை உருவாக்கலாம்.

IMAGE_ALT

மூச்சுப் பயிற்சி சொல்லித் தருகிறேன் என்கிற பேரில் கலவரமான முகத்தைக் காட்டினார் சேரன். “நீங்க தொப்பையை இழுக்கறீங்க” என்று சந்தடி சாக்கில் சேரனைக் கலாய்த்தார் கவின். குளிர்பானம் தந்ததற்கு தான் நன்றி சொன்னதை கண்டு கொள்ளாமல் போன கஸ்தூரியை ‘சத்துணவு ஆயா மூஞ்சி’ என்று கலாய்த்தார் சாண்டி.

கஸ்தூரி டீச்சர் அசதியில் தூங்கி விட துப்பாக்கிச் சத்தம் கேட்டது. சேரன் கண்டுபிடித்து விசாரிக்கும் போது பின்பெஞ்சு மாணவன் மாதிரியே அநாவசியமாக பம்மி உளறிக் கொட்டினார் கஸ்தூரி. “ஆமாம்.. சார்.. தூங்கிட்டேன்’ என்று ஒப்புக் கொண்டிருக்கலாம்.

மறுபடியும் வகுப்பறை ஆரம்பித்ததும் ‘உங்களை யாரும் சொல்லலை. இப்போது ‘வாத்து’ பற்றிய பாடலைப் பார்க்கப் போகிறோம்’ என்று ‘பொடி’ வைத்து ஆரம்பித்தார் கஸ்தூரி. அப்போதே தெரிந்து விட்டது, ஏதோ வில்லங்கம் நிகழப் போகிறது என்று. ‘தண்ணீரில் வாழும் பறவை’ என்கிற க்ளூவிற்கு ‘அன்னப்பறவை’ என்று பதிலளித்தது புத்திசாலிக்குழந்தை லியா. (வீட்ல சுத்திப் போடச் சொல்லுங்க!)

‘வாத்து பாடலை’ சிறப்பாக பாடின சாண்டிக்கு சிறப்பு விருதை தந்தார் கஸ்தூரி. என்னவென்றால் சேரன் பக்கத்தில் போய் நிற்கணுமாம். (இதுவா பரிசு! மூஞ்சைப் பாரு. ஆயா மூஞ்சி! என்பது சாண்டியின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்க வேண்டும்).

அடுத்ததாக வாத்து பாடலைப் பாட ஒரு வாத்தையே அழைக்கிறேன் என்று சொல்லாத குறையாக ‘வாத்து… வாத்துப் பாடலைப் பாட.. வனிதாவை அழைக்கிறேன” என்று சூசகமாக நக்கலடித்தார் கஸ்தூரி. வனிதா இந்தக் கிணடலை விழுங்கிக் கொண்டு கண்டும் காணாமல் நகர முன்வந்தாலும் பக்கத்தில் இருந்த முகின் பயல் ‘டீச்சர் உன்னை வாத்துன்னு சொல்லிட்டாங்க’ என்று போட்டுக் கொடுத்து விட்டான். இதை மற்றவர்களும் ஆமோதிக்க காண்டு ஏறிய வனிதா குழந்தை “டீச்சர்.. இதற்கு மன்னிப்பு கேட்கணும்” என்று அடம்பிடித்தது. (எந்த எல்கேஜி குழந்தை டீச்சரை மன்னிப்பு கேட்கச் சொல்லும்..?! லாஜிக் தாறுமாறா மிஸ் ஆகுதே?!). வாத்து பாடலையும் பாட மறுத்து விட்டார் வனிதா.

சேரனும் வகுப்பை நிறுத்தி விட்டு வனிதாவை சமாதானப்படுத்தினார். அப்போதைக்கு சற்று அடங்கினாலும் இந்த விஷயம் வனிதாவின் மண்டைக்குள் பிறாண்டிக் கொண்டே இருந்தது போல. தலைமை ஆசிரியரிடம் சென்று ‘டீச்சர் மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். அது நடக்காத சூழலில் ‘ஸ்ட்ரைக்’ என்று கையை உயர்த்திக் கொண்டு வெளிநடப்பு செய்ய முயன்றார். (இது ஜூராசிக் பேபி போல!).

அது முறையற்றது என்றாலும், சில குழந்தைகளை செல்லமாகவோ அல்லது எரிச்சலாகவோ ஆசிரியர்கள் கிண்டல் செய்வது வகுப்புகளில் நடப்பதுதான். ஆனால் வளர்ந்த குழந்தையான வனிதாவால் தன் மீதான கிண்டலை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. மேலும் டாஸ்க் என்கிற போர்வையில் கஸ்தூரி சாமர்த்தியமாக செய்ததையும் ஜீரணிக்க முடியவில்லை. மன்னிப்பு கேட்கப்பட்டேயாக வேண்டும் என்று அடம்பிடிக்க வேறு வழியில்லாமல் மன்னிப்பு கேட்டார் கஸ்தூரி. ‘சரி போய் வேலையைப் பாரு’ என்று டீச்சரை மன்னித்து அருளியது குழந்தை.

“இன்னாடா .. அவார்டா கொடுக்கறாங்க?” ரேஞ்சுக்கு தோசைப் பாடலை குழறி குழறிப் பாடினார் சாண்டி. அடுத்ததாக வனிதாவும் ஆடிக் கொண்டே தோசைப் பாடலைப் பாடினார். ஒரு கிரைண்டர் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு தோசையைப் பற்றி பாடிய மோமெண்ட் அது.

வகுப்பறை முடிந்து வெளியே வந்ததும் கஸ்தூரிக்கும் வனிதாவிற்கும் இடையில் வாக்குவாதம் நடந்தது. “நான் உங்களை உருவக் கேலி பண்றதா நினைச்சுட்டீங்களா.. மனசு புண்பட்டீங்களா?” என்று கேட்டார் கஸ்தூரி. “நீ டாஸ்க்ல இருந்ததால தப்பிச்சே.. வெளியே கேட்டிருந்தே நானும் சரியா பதிலுக்கு கேட்டிருப்பேன்” என்று சொர்ணாக்கா மோடிற்கு போன வனிதா ‘டாஸ்க்கிற்குள் செய்வது தவறான உதாரணம். நான் மனசுல்லாம் புண்படலை” என்று ‘எனக்கு அடிபடலையே’ என்பது மாதிரி பாவ்லா காட்டினார்.

IMAGE_ALT

எல்கேஜி குழந்தை ஸ்ட்ரைக் என்று லாஜிக் இல்லாமல் கூவுது கூடத்தான் தவறான முன்னுதாரணம். “நான் உங்களை வாத்து மடச்சி’ன்னு சொன்னதா நினைச்சுக்கிட்டீங்களா?” என்று சாமர்த்தியமாக அடுத்த குண்டூசியை செருகினார் கஸ்தூரி. ஏற்கெனவே ‘பஜாரி’ என்கிற வார்த்தையை இவர் இப்படி செருகியதும் நினைவில் இருக்கலாம்.

இதைச் சாதாரணமாக விட்டிருந்தாலே அப்படியே போயிருக்கும். வனிதா ஆட்சேபிக்கப் போய்.. வாத்து.. வாத்து.. என்கிற பெயர் திரும்பத் திரும்ப அடிபட்டதால் ‘வாத்து வனிதா’ என்பதே அவரின் பட்டப் பெயர்களில் ஒன்றாக மாறி விடலாம். வருகைப் பதிவேட்டில் கூட அப்படி மாறி விடக்கூடும். இப்படியாக சொந்தச் செலவில் சூன்யம் வைத்துக் கொண்டார் வனிதா. சேரனும் வனிதாவிற்கு ஆதரவாக ஒத்து ஊதினார்.

இந்த விஷயத்தை இப்படியே விட்டிருக்கலாம். ஆனால் கஸ்தூரிக்குள் இருந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் உக்கிரமாக விழித்துக் கொண்டதால் ‘மைக்கை அவர் கிட்ட கொடுங்க.. நான் சொன்னது உங்களுக்கு எப்படித் தோணுச்சு.. உருவக்கேலி மாதிரி தெரிஞ்சுதா.. முட்டாள் –ன்ற மாதிரி தோணுச்சா?. ரெண்டுல ஒண்ணு தொடுங்க” என்று இதர போட்டியாளர்களிடம் பிற்பாடு விசாரித்துக் கொண்டிருந்தார். “நீங்க கேலி பண்ண மாதிரிதான் தெரிஞ்சது” என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இதைக் கண்டு காண்டான வனிதா ஆவேசமாக வந்தார். ‘திரும்பத் திரும்ப பேசி அசிங்கப்படுத்தறாளே’ என்று அவர் நினைத்திருக்கக்கூடும். அது சரியே. முடிந்து போன விஷயத்திற்கு மீண்டும் பஞ்சாயத்து வைப்பது அநாவசியமானது. ஆனால் இதன் மூலம் மீண்டும் சில முறை வாத்து என்று சொல்லி வனிதாவை டென்ஷன் ஆக்க முடியும் என்று கஸ்தூரி நினைத்தாரோ.. என்னமோ.

‘இல்லைங்க. இனிமே நான் எப்படி நடந்துக்கிணும்னு புரிஞ்சுக்க டிரை பண்றேன்” என்று பாவனையாக கஸ்தூரி சொன்ன போது “டேய்.. இது நீ எது எதுக்கு, எப்படி எப்படியெல்லாம் மாறுவே.. டைப் டைப்பா முழிப்பே-ன்னு எனக்கு தெரியும்டா’ என்று கவுண்டமணி, செந்திலைப் பார்த்து சொல்வது போல் பேசிய வனிதா ‘இது கூட புரியாத அளவிற்கு நான் வாத்து கிடையாது’ என்று சொன்னதுதான் ஹைலைட். (இன்றைய எபிஸோடில் ‘வாத்து’ என்கிற வார்த்தை எத்தனை முறை ஒலித்தது என்று போட்டியே நடத்தி விடலாம்). “சரி. விட்டுருங்க. போதும். போரடிக்குது’ என்றார்கள் இதர போட்டியாளர்கள்.

“நோட் திஸ் பாயிண்ட் யுவர் ஆனர். வனிதாவும் கஸ்தூரியும் டாஸ்க்ல இருந்து வெளியே போயிட்டாங்க..” என்று “கேப்டன்’ ஷெரீனிடம் மனு அளித்துக் கொண்டிருந்தார் சேரன். இந்த முறையாவது சிறந்த பங்கேற்பாளர் தகுதியைப் பெற்று விட முடியுமா என்கிற நோக்கம் சேரனுக்கு. பாவம், இவர் கவலை இவருக்கு.

**

தங்களின் பள்ளிக்கூட நினைவுகளை போட்டியாளர்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பது அடுத்த டாஸ்க். வீட்டின் உணவுப் பொருட்களைக் கூட செரலாக், கிரைப் வாட்டர் என்று குழந்தைகள் உணவாக மாற்றி வைத்தார்களா என்று தெரியவில்லை.

Bro என்பதை pro என்பதாக புரிந்து கொண்டு உளறியதை நினைவுகூர்ந்தார் முகின். எண்ணைய்சட்டி தலையுடன் பள்ளிக்குச் சென்றதை சொன்ன தர்ஷன், ‘அவதானிப்பு கலை’ தொடர்பாக சொன்ன ஜோக் மிகப் பிரசித்தமானது. அதை தங்களின் பள்ளியில் நிகழ்ந்ததாக மாற்றி விட்டார் போல.

ஐந்தாம் வகுப்பிலேயே ‘ஐ லவ் யூ’ சொன்ன ஆள் நான் என்று தன் அருமை பெருமைகளை விவரித்துக் கொண்டிருந்தார் கவின். (கண்டிக்க ஆள் இல்லாமத்தான் இப்படி நீ வளர்ந்திருக்கே!). ரிப்போர்ட் கார்டில் தன் அம்மாவின் பெயரை ‘திலகாவாதி’ என்று மாற்றி எழுதி மாட்டிக் கொண்ட கதையை சிரிக்கச் சிரிக்க சொன்னார் சாண்டி. (நல்லவேளை ‘தீவிரவாதி’ என்று எழுதித் தொலைக்கவில்லை). அக்கவுண்ட்ஸ்ஸிற்கும் இஸ்டரிக்கும் வேறுபாடு தெரியாமல் காப்பிடியத்ததாக இவர் சொன்ன கதையில் லாஜிக் மிஸ்ஸிங்.

9ம் வகுப்பில் நடந்த ‘காதல் கோட்டை’ கதையை இழுத்துச் சொன்னார் ஷெரீன். ‘லியாவும் ஷெரீனும் தங்களின் கேரக்ட்டர்களை சிறப்பாக செய்தார்கள்’ என்று நள்ளிரவில் சான்றிதழ் வழங்கிக் கொண்டிருந்தார் சேரன். ‘சாண்டி நன்றாகச் செய்தாரே’ என்று தர்ஷன் சொன்ன போது ‘ஓவர் ஆக்ட்’ என்று நிராகரித்தார்.

இந்த ஜூராசிக் பேபிகள் நாளை என்னவெல்லாம் அட்டகாசம் செய்யப் போகிறார்களோ?!

அருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE