Thursday 25th of April 2024 12:17:41 AM GMT

LANGUAGE - TAMIL
நீதி வழங்கலுக்கான தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை

நீதி வழங்கலுக்கான தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கை


"பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மறுசீரமைப்பு ஆகியவற்றின் மட்டில் அரசின் வாக்குறுதிகள் நலிவடைந்துள்ள நிலையில் ஐக்கிய நாடுகள் சபை இலங்கை விடயத்தில் தலையிட்டு சர்வதேசப் பங்களிப்புடன் நீதி வழங்கலுக்கான தீர்ப்பாயத்தை அமைக்க வேண்டும்."

- இவ்வாறு வலியுறுத்தியுள்ளது சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம்.

சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டமையைக் கண்டித்து சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையிலேயே மேற்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

"போரின்போது அதிகளவிலான மனித உரிமை மீறல் குற்றங்களை இழைத்த படையணிக்குத் தலைமை தாங்கிய ஒருவரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவத் தளபதியாக நியமித்திருக்கிறார். இந்த நியமனமானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 2015ஆம் ஆண்டின் தீர்மானத்தில் குறிப்பிட்டுள்ள பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், மறுசீரமைப்பு ஆகியவற்றின் மட்டிலான அரசின் வாக்குறுதிகள் நலிவடைந்திருப்பதைச் சுட்டிக்காட்டுகின்றன.

கடந்த 2009ஆம் ஆண்டில் முடிவடைந்த 26 வருடகால உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தும் அந்தக் காலநீடிப்பை மைத்திரிபால சிறிசேன உட்பட உயர்மட்ட அதிகாரிகள் பலரும் பகிரங்கமாகவே எதிர்த்தனர்.

அதன்போது "கவலைக்குரிய உண்மை என்னவென்றால், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை அடைவதற்கான நடைமுறைகளை எதிர்ப்பவர்கள் நீதி கிடைக்கப்பெறுவதை விரும்பவில்லை" என்று அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டிருந்தார்.

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஐக்கிய நாடுகள் ஆணையாளர் அலுவலகம் சவேந்திர சில்வாவினால் வழிநடத்தப்பட்ட 58ஆவது படையணி இறுதிப் போரின்போது மேற்கொள்ள மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்தியிருக்கின்றது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தோற்கடிப்பதில் சவேந்திர சில்வாவின் பங்களிப்புக்காக அவரை 'வீரன்' என்று அவரது சொந்த இணையத்தளம் வர்ணிக்கின்றது. ஆனால், 2012ஆம் ஆண்டில் சவேந்திர சில்வா ஐக்கிய நாடுகள் சபைக்கான பிரதித் தூதுவராக இருந்தபோது அவர் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுக்களின் காரணமாக அமைதி காக்கும் படையணி தொடர்பான ஐ.நாவின் சிறப்பு ஆலோசனைக் குழுவிலிருந்து அவர் நீக்கப்பட்டார். அத்தோடு 1980களில் ஜனதா விமுக்தி பெரமுன என்ற ஆயுதக்குழுவுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பாதுகாப்புச் செயற்பாடுகளின்போதும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக சவேந்திர சில்வா குற்றஞ்சாட்டப்பட்டிருக்கின்றார்.

குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்களை இராணுவத்திலிருந்து விலக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான விசாரணைகள் இலங்கை அரசுக்குப் பரிந்துரை செய்கின்றது. ஆனால், அரசோ சவேந்திர சில்வாவை விசாரணைக்கு உட்படுத்துவதற்குப் பதிலாக அவருக்குப் பதவி உயர்வை வழங்கி மதிப்புறுத்துகின்றது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்லெட் சவேந்திர சில்வாவின் நியமனம் மிகுந்த கவலையளிப்பதாகக் கூறியிருக்கின்றார்.

சவேந்திர சில்வாவின் 58ஆவது படையணியால் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள் நீதி கோரி போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையில் இந்த நியமனம் பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்பு என்பன தொடர்பான அரசின் வாக்குறுதிகளை நலிவடையச் செய்துள்ளது.

இந்தநிலையில் உடனடியாக சர்வதேச சமூகத்தின் பங்களிப்புடன் நீதித் தீர்ப்பாயம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். அவ்வாறல்லாத பட்சத்தில் ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு அதனைச் செய்ய வேண்டும்" என்றுள்ளது.


Category: உலகம், பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE