Wednesday 24th of April 2024 11:34:18 AM GMT

LANGUAGE - TAMIL
“முடிந்த பள்ளி விளையாட்டு ; தொடரும் காதல் விளையாட்டு” - சுரேஷ் கண்ணன்

“முடிந்த பள்ளி விளையாட்டு ; தொடரும் காதல் விளையாட்டு” - சுரேஷ் கண்ணன்


பள்ளிக்கூட நினைவுகளின் நாஸ்டால்ஜியாவில் ஆழ்ந்திருக்கிறது பிக்பாஸ் வீடு. இது 96 திரைப்படம் போல சுவாரசியமாக இல்லாமல் மோசமான எல்கேஜி டிராமா போல இருப்பதால் இன்றைய நாள் சலிப்பூட்டுவதாக அமைந்திருந்தது.

‘சத்தியமா நீ எனக்கு தேவையே இல்ல’ என்கிற பாடல் ஒலித்தது. கவின் – சாக்ஷி டிராமா நடந்து கொண்டிருந்த போது ஒலிபரப்பப் பட்டிருந்தாலாவது இந்தப் பாடல் பொருத்தமாக இந்திருக்கும். கஸ்தூரி உட்பட வீட்டின் போட்டியாளர்கள் ஆடித்தீர்த்தார்கள்.

மிருகங்களின் ஒலியை மிமிக்ரி செய்வது எப்படி என்று கற்றுத் தந்து கொண்டிருந்தார் தர்ஷன். (கஸ்தூரிக்கும் வனிதாவிற்கும் நிகழ்ந்து கொண்டிருந்த சிறு மோதலையும் இந்தச் சத்தங்களையும் இணைத்து பிரமோ செய்த விஜய் டிவியின் குறும்பு ஓவர் என்றாலும் ரசிக்கத்தக்கது). ‘வெற்றி நிச்சயம், அது வேத சத்தியம்’ என்கிற கொள்கை போல, இந்த வாரத்தின் சிறந்த பங்கேற்பாளராக வென்றே தீர்வது என்கிற மும்முரத்துடன் இருக்கும் சேரன், அடிபட்டு ஓடும் நாயைப் போன்று நீண்ட நேரத்திற்கு சத்தமிட்டு மற்றவர்களுக்கு பீதியை ஏற்படுத்தினார்.

“என்னடா.. தம்பி.. ஏதோ பேசணும்னியே.. அண்ணன் இப்ப ப்ரீயாதான் இருக்கேன் வா..’ என்கிற மாதிரி கஸ்தூரியை கூப்பிட்டார் வனிதா. “நைட்டு பூரா நான் யோசிச்சிட்டே இருந்தேன். நான் உங்களை ‘குண்டு’ –ன்னு சொல்லிட்டேன்னு நெனக்கறீங்களா.. அத நினைச்சு ஃபீல் பண்றீங்களா.. நீங்க குண்டா இருந்தாலும் அழகாத்தான் இருக்கீங்க. தடிமாடா இருக்கோமே-ன்னு கவலைப்படாதீங்க. மனது புண்படாதீங்க” என்றெல்லாம் கஸ்தூரி சீரியஸாக விளக்க,

IMAGE_ALT

“இவ ஒருத்தி.. என்னை உப்புமா கிளற விடாம, இந்த விஷயத்தை கிளறிக் கிளறியே .. என்னைக் காண்டாக்கிறாளே’ என்று மனதிற்குள் பொங்கின வனிதா.. “ஒண்ணு தல –ன்னு சொல்லு.. இல்ல தளபதி –ன்னு சொல்லு.. அது என்ன கமல் மாதிரி புரியாமயே பேசற. நீ சொன்னதுக்கெல்லாம் நான் ஃபீல் ஆவல. நீ அட்வைஸ் ஆணியே புடுங்க வேணாம். கெளம்பு காத்து வரட்டும்” என்று கடுப்பாக “என்னமோம்மா.. குண்டா இருக்கியே.. ஹெல்த் டிப்ஸ் கொடுக்கலாம்-னு நல்ல எண்ணத்துலதான் வந்தேன். உனக்கு பிரஷர். பி.பிலாம் இருக்கு போல. நான் கிளம்புறேன்’ என்று இடத்தை விட்டு அகன்றார் கஸ்தூரி. வனிதா வத்திக்குச்சி என்றால், கஸ்தூரி காஸ் லைட்டர். சத்தமே இல்லாமல் பற்ற வைத்து விடுகிறார்.

லக்ஸரி டாஸ்க்கான ‘அம்மா போயிட்டு வர்றேன்” (என்ன கருமம்டா இது?!) விளையாட்டின் இரண்டாம் பகுதி.

குழந்தைகள் வளர்ந்து எல்கேஜியில் இருந்து மூன்றாம் வகுப்பிற்கு போய் விட்டார்களாம். (என்ன எழவு லாஜிக்கோ?!) செய்யுள், நாநெகிழ் வாக்கியங்கள் (Tongue twisters) போன்றவற்றில் கற்றுத் தேற வேண்டுமாம்.

Best performer வாங்கியே தீருவேன் என்று சேரனுக்குப் போட்டியாக ஓவர் அலப்பறை செய்து கொண்டிருந்தார் சாண்டி. தலையை ‘பப்பரப்பே’ என்று விரித்துப் போட்டுக் கொண்டு ‘தெய்வதிருமகள்’ விக்ரம் மாதிரியே ‘நிலா.. நிலா..’ என்று ராவடி செய்து கொண்டிருந்தார். “எனக்கு கோவம் கோவமா வதுதுடா” என்று இவர் அனத்திக் கொண்டிருக்க, காலையில் நாய் மாதிரி கத்திப் பயிற்சி எடுத்த பழக்கத்தினாலோயோ என்னமோ, சாண்டியைக் கடிக்க வந்தார் ஷெரீன். ‘நானும் சும்மாதான் இருக்கேன். என்னையும் கடியேன்’ என்று ஆர்வமாக முன்வந்தார் கவின்.

இந்திரா காந்தி தோற்றத்தில் டீச்சருக்கான ஒப்பனைக்கு தயாராகிக் கொண்டிருந்தார் கஸ்தூரி.

வகுப்பு ஆரம்பித்தது. பழமைவாத பள்ளி போல. ஆண்களையும் பெண்களையும் தனித்தனியாக அமர வைத்திருந்தார்கள். என்றாலும் கவின், லியாவின் அருகில் பிறகு இடம்பிடிக்கத் தவறவில்லை. குறுந்தாடி வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த முகினை, மூன்றாம் வகுப்பு மாணவனாக கற்பனை செய்ய அசாதாரணமான தைரியம் வேண்டும்.

பிரின்ஸிபல் சேரன் வந்து ஆத்திச்சூடி சொல்லித் தந்தார். இதற்குப் பதில் ‘விஜய் ஆண்டனி’ யின் ‘ஆத்திச்சூடி..’ பாடலை ராப் வடிவில் சொல்லித் தந்திருந்தாலாவது பிள்ளைகள் உடனே பிடித்துக் கொண்டிருப்பார்கள்.

IMAGE_ALT

நாநெகிழ் வாக்கியங்களுக்கும் அவரவர்களுக்குத் தந்ததற்கும் நெருங்கிய தொடர்பு இருந்தது போல் இருந்தது. ‘ஒரு கிளி உருகுது.. உரிமையில் பழகுது.. ஓ.. மைனா.. மைனா..’ பாடலைப் போல எதையோ பாடிச் சென்றார் தர்ஷன். ‘முறுக்கு மைனர் சறுக்கி விழுந்து’ என்ற வாக்கியம் கவினுக்கு வந்தது மிகப் பொருத்தம். ‘டென்ஷன் ஆயிடுச்சு சார்’ என்ற வனிதா குழந்தை, பிறகு சரியாகச் சொன்னவுடன் ‘சமர்த்துக் குட்டி’ என்று பாராட்டினார் சேரன்.

ஷெரீன் சாதாரணமாகப் பேசினாலே எல்கேஜி மாதிரித்தான் இருக்கும். ‘பச்சை.. எச்சை..’ என்று டிஆரின் பாணியில் எச்சை துப்பி விட்டுச் சென்றார் சாண்டி. ‘குரங்குகள் கும்மாளமிட்டன’ என்ற வாக்கியத்தைச் சொல்லி விட்டு துள்ளிக் குதித்து மரமேறினார் லியா. ஆத்திச்சூடியை இசையாக கொடுத்து தமிழன்னையை மகிழ வைத்தார் முகின்.

‘முஸ்தபா.. முஸ்தபா’ பாடலின் மெட்டில் ‘பிக்பாஸ் ஸ்கூலைப்’ பற்றி பாடல் புனைந்து மாணவர்கள் பாடினார்கள். பாடலின் இடையில் கஸ்தூரி டீச்சரைக் கலாய்த்த போது அவர் தந்த எக்ஸ்பிரஷன் கவர்ந்தது. 7G ரெயின்போ காலனி திரைப்படத்தில் இளைஞர்கள் பாடுவதைப் போல ஒருவழியாக இதைப் பாடி முடித்தார்கள்.

இந்தப் பாட்டுக்கு எசப்பாட்டாக ‘கருத்தவன்லாம் கலீஜாம்’ பாடலை கொடுமையாக மாற்றிப் பாடினார் கஸ்தூரி. வகுப்பே மயான அமைதியாக இருந்தது.

‘இத்துடன் இந்த டாஸ்க் முடிந்தது’ என்ற அறிவிப்பு வந்ததும் அவர்களுக்கு எத்தனை விடுதலையாக இருந்ததோ தெரியவில்லை, பார்வையாளர்களுக்கு நிம்மதியாக இருந்திருக்கும்.

**

இத்தோடு பள்ளிக்கூடத்திற்கு தலைமுழுகுவார்கள் என்று பார்த்தால் அடுத்த பகுதியாக, போட்டியாளர்கள் தங்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களை நினைவுகூர வேண்டுமாம்.

தன்னை நடனத்தின் பால் தற்செயலாக திருப்பி, தான் நடன ஆசிரியராக மாறியதற்கு காரணமாக இருந்த பள்ளிக்கூட ஆசிரியரை நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார் சாண்டி. போலவே தன்னை உருவாக்கிய கலா மாஸ்டரையும்.

நோய்வாய்ப்பட்டிருந்த தன் மகள்தான் தனக்கு குரு என்று நெகிழ்ந்த கஸ்தூரியின் கதை கலங்க வைப்பதாக இருந்தது. ‘சப்ப மேட்டருக்கெல்லாம் இங்க நாம அடிச்சிட்டு இருக்கோம். ஆனால் உலகத்தில் இதை விட பயங்கரமான பிரச்சினைகள் இருக்கின்றன’ என்று அவர் கூறியது உண்மை.

பெற்றோரை விடவும் தனக்கு உறுதுணையாக இருந்த இயக்குநர் பி.வாசுவை நினைவு கூர்ந்தார் வனிதா. (அவர் நல்ல திரைப்படங்களை எடுத்திருந்தால் நாம் கூட நினைவுகூர்ந்திருக்கலாம்).

‘கடின உழைப்பிற்கு எப்போதும் தோல்வியில்லை’ என்கிற ஆதாரமான செய்தியை தனக்குள் விதைத்த ஆசிரியரை தர்ஷன் நினைவுகூர்ந்தது சிறப்பு. விளையாட்டுப் பயிற்சியை தவிர்க்க, பின்பக்கத்தில் ஆணி குத்தியதாக தர்ஷன் பொய் சொன்னார். ஏனெனில் அந்தப் பகுதியை காட்ட முடியாது என்பதற்காக. ‘அப்ப ஊசி போட்டிருப்பல்ல. அந்த அடையாளம் எங்க?” என்று ஆசிரியர் கேட்டார் என்ற போது ‘அதுவும் பின்பக்கம்தான் போட்டாங்க.. காட்ட முடியாது –ன்னு சொன்னியா?” என்று இடைமறித்த கவினின் குறும்பு ரசிக்கத்தக்கது.

சேரன் சொன்ன பாயிண்ட் மிக முக்கியமானது. இங்கு அப்படியான திசையை நோக்கி நாம் நகரவே ஆரம்பிக்கவில்லை. எது அதிக பொருளை ஈட்டித்தரும் என்கிற நோக்கிலேயே அனைத்து கல்வித்திட்டங்களும் இருக்கின்றன.

“ஒரு மாணவனுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது, எந்தத் திசையில் நகர்ந்தால் அவன் முழு விருப்பத்துடன் ஈடுபட முடியும்’ என்பதை இளம் வயதிலேயே அடையாளம் கண்டு அந்தத் துறையில் அவனை வளர்க்க வேண்டும்’ என்று சேரன் சொல்லியது சிறப்பு. இந்த வகையில் சினிமா மீது ஆர்வமூட்டிய ஆசிரியருக்கு நன்றி சொன்னார் சேரன். இவருடைய தாயும் ஓர் ஆசிரியைதானாம். (பாடலில் இடம் பெற்ற மல்லிகா டீச்சரையும் சேரன் மறக்கவில்லை.) போலவே திரைத்துறையில் தன்னை வளர்த்து ஆளாக்கிய கே.எஸ்.ரவிக்குமாரையும் மறக்காமல் நினைவுகூர்ந்தார்.

இவரைப் போலவே, அப்பாவி பெண்ணாக இருந்த தனக்கு பல விஷயங்களை கற்றுத்தந்த செல்வராகவனை நன்றியுடன் நினைவுகூர்ந்தார் ஷெரீன்.

**

“இந்தப் பொண்ணு அவன் கூட நைட்டெல்லாம் உக்காந்து பேசிட்டே இருக்கே.. சரியில்லையே” என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார் சேரன். “கூடவே இருக்கியே செவ்வாழ.. நீயாவது சொல்லக்கூடாதா?” என்று தர்ஷனையும் இழுத்துப் போட்டார். கவினிடம் இது குறித்து பேசவிருக்கிறாராம்.

IMAGE_ALT

“நீ ஏன் மூஞ்சை தூக்கி வெச்சிட்டிருக்கே?” லியா ஆயிரத்து ஓராவது முறையாக கவினிடம் கேட்பது இது. பிறகு இருவரும் பேசிக் கொண்ட உடல்மொழியானது அசலான காதலர்களைப் போலவே இருந்தது. ‘ஒரு இடத்துல ஒரு விஷயம் முட்டிக்கிட்டு இருக்கு. அது சரியாயிடுச்சின்னா எல்லாம் சரியாயிடும்’ என்று கவின் பூடகமாக சொன்னதற்கு மிகையாக வெட்கப்பட்டார் லியா. “நீ போய் படு.. நானும் போய் படுக்கறேன்” என்று சொன்னபடியே இருவரும் அப்படியே அமர்ந்திருந்தனர்.

இந்த வண்டி எங்கு போய் முட்டி நிற்கப் போகிறதோ?

அருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE