Thursday 25th of April 2024 05:17:13 AM GMT

LANGUAGE - TAMIL
“பிக்பாஸூ. அம்பூட்டு நல்லவனாய்யா… நீயி?” - சுரேஷ் கண்ணன்

“பிக்பாஸூ. அம்பூட்டு நல்லவனாய்யா… நீயி?” - சுரேஷ் கண்ணன்


எந்நாளும் இல்லாத திருநாளாக சமீபத்தில் வெளிவந்த ‘கோமாளி’ திரைப்படத்தின் பாடலை காலையில் போட்டார்கள். நுட்பத்தில் தோய்த்து கதற கதற அடிக்கப்பட்டு ஜூஸ் எடுக்கப்பட்ட பாடல் என்பது கேட்ட மாத்திரத்திலேயே தெரிந்து விட்டது. எனில் சம்பந்தப்பட்ட திரைப்படத்தின் படக்குழுவினர் சிறப்பு விருந்தினர்களாக பிறகு வரக்கூடும். யானை வரும் முன்னே...

கஸ்தூரி வாக்கிங்கையும் நடனத்தையும் ஒன்றாக இணைத்து விநோதமாக எதையோ செய்து கொண்டிருந்தார்.

சிலர் ‘ஜோக்’ சொல்கிறேன் பேர்வழி என்று இருக்கிற இயல்பையும் குலைத்து விடுவார்கள். சட்டென்ற டைமிங்கில் சுருக்கமாகச் சொல்வதுதான் ஜோக். நீட்டி முழக்கினால் அதன் ஜீவன் செத்து விடும். கஸ்தூரி செய்தது அதைத்தான். முகினுக்குப் போட்டியாக அவரையும் விட சிறந்த ‘மொக்கை ஜோக்காளர்’ தான் என்கிற சுயதம்பட்டத்துடன் ஜோக் சொல்ல வந்த கஸ்தூரி, விளையாட்டுக்கு ஷெரீனின் நாயைச் சாகடித்து விட, விளையாட்டு வினையாகி விட்டது.

கஸ்தூரி சொல்ல வந்த ஜோக், அரதப்பழசு என்றாலும் ‘செத்துப் போன உடலை எடுத்து’ என்றெல்லாம் குரூரமாக ஆக்காமல், “ஒரு அண்டாக்குள்ள ஒரு நாய்க்குட்டியைப் போட்டேன். அரைமணி நேரம் கழிச்சுப் பார்த்தா அதுல நிறைய நாய்க்குட்டிங்க இருந்தது.. எப்படி?” என்று சாதாரணமாக கேட்டிருந்தால் கூட நன்றாக அமைந்திருக்கும். Sick joke என்பது வேறு வகை. அதில்தான் முகஞ்சுளிக்க வைக்கும் வதைகள் நடக்கும். பழகாதவர்களுக்கு அது பிடிக்காது.

மட்டுமல்ல, ஒருவரை நமக்குப் பிடிக்காமல் போய் விட்டால் அவர் செய்யும் பெரும்பாலானவை பிடிக்காமலேயே போய் விடும். கஸ்தூரிக்கு நிகழ்ந்து கொண்டிருப்பதுதான் அதுதான். கஸ்தூரி ஜோக் சொல்ல பீடிகைகளை ஆரம்பித்த போது வனிதாவின் முகம் டெரராக மாறியது. சாண்டி சாய்ந்து தூங்க ஆரம்பித்து விட்டார்.

நுண்ணுணர்வு பற்றி அறிந்திருக்கும் கஸ்தூரிக்கு தான் உபயோகிக்கும் வார்த்தைகள் குறித்தான கவனம் இருக்க வேண்டும். பெரும்பாலான சமயங்களில் மரணத்தைப் பற்றி பேசி போரடிக்கிறார். அபிராமிக்கு முன்னர் ஆறுதல் சொல்லும் போது கூட ‘உன் முன்னாடி யாராவது செத்துப் போய் பார்த்திருக்கியா?” என்று இவர் பேச்சில் ஒரே ஆஸ்பத்திரி வாடை.

கஸ்தூரியின் ஜோக்கைக் கேட்டு ஷெரீன் சிறிது மனம் புண்பட்டாலும் பிறகு தன்னைத் தேற்றிக் கொண்டு உள்ளே சென்று விட்டார். அவரைத் துரத்திச் சென்ற வனிதா, ‘உனக்கு கோபம் வரலையா.. உன் நாய்க்காக எனக்கே கோபம் வருதே. உனக்கு ஏன் வரலை. இப்ப உனக்கு கோபம் வந்தேயாகணும். நெனச்சுப் பாரு.. நாய் எத்தனை நன்றியுள்ள மிருகம்” என்று மிரட்டிக் கொண்டிருந்தார். ‘ஒரு கதைக்குப் போய் நான் ஃபீல் பண்ணது முட்டாள்தனம்’ என்று ஷெரீன் இயல்பாக சொன்னதை வனிதா ஏற்றுக் கொள்ளவில்லை. (வந்த சண்டையை யாராவது விடுவாங்களா?! லூஸா இருக்காளே?!

IMAGE_ALT

இன்னொருபக்கம் கஸ்தூரியின் அலப்பறை வேறு. ‘ஷெரீன் அழறாங்க போல. நான் போய் சமாதானப்படுத்தவா?”. என்று கேட்டதற்கு “நீ ஆணியே புடுங்க வேண்டாம்’ என்று மற்றவர்கள் சொல்லி அமர்த்திய விட்டார்கள். உண்மையிலேயே செத்த ஜோக் சொல்லிய பாவத்திற்கு ஆளாகி விட்டார் கஸ்தூரி.

***

அடுத்த பஞ்சாயத்தை விரைவில் ஆரம்பித்தார் வனிதா. கஸ்தூரி பூண்டு வெட்டிக் கொண்டிருந்த போது தும்மல் வரவே, வாஷ் பேஷின் அருகே சட்டென்று நகர்ந்து தோளின் மீது மூக்கைப் பொத்திக் கொண்டு ‘பாதுகாப்பான’ தும்மலைப் போட்டு விட்டு பூண்டைத் தொடர்ந்தார். இதை வெறுப்புடன் பார்த்துக் கொண்டிருந்த வனிதா, ‘தும்மினா.. உடனே கையைக் கழுவிட்டு தொடரணும். இது அடிப்படை. குழந்தைகளுக்கு கூட தெரியும்” என்று ஆட்சேபித்தார். (நக்கி நக்கி சுவை பார்த்து சமையல் செய்யும் வனிதா இதைச் சொல்வதுதான் பயங்கர காமெடி)

‘நான் தும்மியது உலக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட முறை’ என்று ஆங்கிலத்தில் கஸ்தூரி சொல்ல, வனிதாவிற்கு இன்னமும் காண்டு ஏறி “கேட்டியா.. கதைய.. இவ போடுவாளாம் தும்மலு.. அப்ப கழண்டு விழுந்துச்சாமாம்.. கம்மலு” என்று கிராமத்துக் கிழவி மாதிரி மற்றவர்களிடம் நீட்டி முழக்கி புகாராக சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது கதையை மாற்றி நேரடியாக தும்மியதாக மற்றவர்களுக்கு வெறுப்பு வருவது போல சொன்னார். என்றாலும் வனிதாவின் கதையை அப்படியே நம்பாமல் சமாளித்து திறமையாக பஞ்சாயத்து செய்த ஷெரீனுக்குப் பாராட்டு.

கவினுடன் பேச வேண்டும் என்று பல நாட்களாக திட்டமிட்டுக் கொண்டிருந்த சேரன், இந்த முகூர்த்த நாளில் அவரைக் கூப்பிட்டார். சேரன் பேசியது மிக முதிர்ச்சியாகவும் நிதர்சனமாகவும் நாகரிக எல்லைக்குள்ளும் இருந்தது. கவினுக்கும் அது புரிந்தது. “ஷோக்குள்ள நடக்கறது வேற. வெளியில் போனால்தான் நடைமுறைப் பிரச்சினைகள் தெரியும். இப்ப அவ என் கிட்ட இருந்து விலகிட்டா” என்றெல்லாம் சேரன் பேசினார். கவினும் அதைப் புரிந்து கொண்ட விதமாக பேசி “அவ குழந்தை மாதிரி. நான் பார்த்துக்கறேன்” என்று சேரனை ஒரே வார்த்தையில் ஆஃப் செய்தார்.

காதலின் துவக்க காலக்கட்டங்கள் தரும் போதையைப் பற்றியும் அது கரைந்த பிறகு உருவாகும் கசப்புகளையும் பற்றி கவினுக்குத் தெரிந்திருக்கிறது. எனினும் லியா தொடர்பாக அவருக்குள் உண்மையாகவே சில திட்டங்கள் இருக்கிறது போல. தன் சேட்டைகளை முற்றிலும் ஒழித்து லியாவிற்காக அவர் மாறினார் என்றால், உண்மையிலேயே நிஜ வாழ்க்கையில் அவர்கள் அருமையான ஜோடியாக மாறக்கூடிய சாத்தியங்கள் உண்டு. காலம் என்ன பதிலை வைத்திருக்கிறதோ, பார்ப்போம்.

IMAGE_ALT

பிறகு லியாவை அழைத்த சேரன் “எதனால என் கிட்ட இருந்து விலகியிருக்கே?” என்ற கேள்வியுடன் உரையாடலை ஆரம்பித்தார். ‘சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு’ என்கிற பாடல் பின்னணியில் ஒலிக்காத குறை. சேரனின் ஆதங்கத்தைப் புரிந்து கொள்ள முடிந்தது.

“நான் தவறு செய்தாலும் கூட கவின் என் பக்கம் எந்நேரமும் நின்னிருக்கான். ஆனால் நீங்க சமயங்கள்ல ‘நீதிடா. நியாயம்டா’ –ன்னு நாட்டாமை மாதிரி கிளம்பிடறீங்க. அது சரியானதுதான். மறுக்கலை. என் கூடவே இருக்கறதால கவினை இப்போ அதிகம் பிடிச்சிருக்கு” என்று நேர்மையாக பதில் சொன்னார் லியா.

“கவினுடன் இப்போதெல்லாம் அதிக நேரம் செலவழிக்கிறே” என்று சேரன் கூறியதற்கு “அவனை எனக்குப் பிடிக்கும். உலகத்தைப் பற்றி நான் கவலைப்படலே. என் குடும்பம் என்ன நினைக்கும்ன்றதைப் பத்திதான் கவலைப்படறேன்” என்றார். ஆக லியாவும் தன் தரப்பில் உறுதியாகவும் தெளிவாகவும் இருக்கிறார் போலிருக்கிறது. அதே காலம்தான் இதற்கும் பதில் சொல்ல வேண்டும்.

பின்னர் லியாவும் கவினும் சேரனிடம் தாங்கள் பேசிக் கொண்டவைகளைப் பற்றி பகிர்ந்து கொண்டார்கள். ‘அவ ஒரு குழந்தை மாதிரி. நான் பார்த்துப்பேன்’ன்னு சொன்னேன்” என்று கவின் சொன்னவுடன் ‘அப்படி சொன்னியா?” என்று வெட்கம்+மகிழ்ச்சி+புன்னகை போன்ற கலவைகளோடு லியா தலையை குனிந்து கொண்டது, கெளதம் வாசுதேவனின் திரைப்படத்தில் கூட வராத க்யூட்டான ரொமாண்ட்டிக் மோமெண்ட்.

தங்களின் வருங்காலத்திற்கான உத்தரவாதத்தைத் தருகிற ஆண்களைத்தான் பெண்கள் நம்புவார்கள் என்பது நெடுங்கால வரலாறு.

IMAGE_ALT

**

‘இந்த முறை எப்படியாவது காப்பாத்திடு’ என்று உலகத்திலுள்ள அனைத்து தெய்வங்களையும் சேரன் வேண்டிக் கொண்டிருந்த சமயம் வந்தது. இந்த வார டாஸ்க்கில் சிறப்பாக பங்கேற்றவர்களைத் தேர்ந்தெடுக்கும் தருணம்.

இதற்காக சேரன் பல லாபிகளை செய்து வைத்திருந்தார். ‘பாபநாசம்’ படத்தில் வருவது போல பலரிடமும் திரும்பத் திரும்ப பேசி ‘தான்தான் இந்த வாரத்தின் சிறந்த ஃபர்பார்மர்’ என்று அவர்களின் மனதில் பதிய வைத்திருந்தார்.

கஸ்தூரி மற்றும் வனிதாவை இம்முறை சிறைக்கு அனுப்பலாம் என்று சாண்டி குழு முன்னதாக இங்க்கி பிங்க்கி பாங்க்கி போட்டு தேர்ந்தெடுத்து வைத்திருந்தது.

சிறந்த பங்கேற்பாளர்களாக சேரன் மற்றும் சாண்டியின் பெயர் அடிபட்டது. பாசமலரான லியா, தர்ஷன் மற்றும் சாண்டியின் பெயரைச் சொன்னார். ஆனால் பதிலுக்கு லியாவை பழிவாங்காமல் ‘குழந்தையாக ஓவர்ஆக்ட் செய்யாமல் நடித்ததாக லியாவின் பெயரைச் சொன்னார் சேரன். (பெத்த மனம் பித்து!).

“ஆக்சுவலி.. இந்த டாஸ்க்கிற்காக நான் நிறைய யோசிச்சு ஸ்கிரிப்ட்லாம் எழுதினேன். இந்த பிக்பாஸ் பய இருக்கானே.. ஏதாவது பண்ணி இந்த ஷோவை ஒப்பேத்திக் கொடுங்க மேடம்’னு கேட்டுட்டே இருந்தான். களுத.. கெடக்கட்டும். ஒரு கையெழுத்துதானே.. போட்டு விட்டு போவோம்’னு வந்தேன்” என்ற வனிதா, சிறந்த பங்கேற்பாளர்களில் ஒருவராக தன் பெயரையே தானே முன்மொழிந்து கொண்டார்.

என்றாலும் சிறந்த பங்கேற்பாளர்களாக சாண்டி மற்றும் லியாவைத் தேர்ந்தெடுத்த கேப்டன் ஷெரீன், அடுத்தது அனைத்து விஷயங்களிலும் சிறப்பாக பங்கேற்றவராக சேரனின் பெயரைச் சொல்ல வந்த போது முட்டுக்கட்டையைப் பலமாகப் போட்டார் வனிதா.

“அட நீ வேற.. இரும்மா.. இதுக்காக நான் எவ்ள வேலை பார்த்திருப்பேன்னு எனக்குத்தான் தெரியும். கூடி வர்ற நேரத்துல கும்மியடிச்சிடாதே’ என்று மைண்ட் வாய்ஸில் சேரன் பலமாக அலறியிருக்க வேண்டும்.

இதிலும் சேரனின் பெயர் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டால் தான் சிறைக்குச் செல்ல நேரிடலாம் என்பதை வனிதா யூகித்திருக்கலாம். ‘யக்கோவ்.. யக்கோவ்-ன்னு கூப்பிட்டாலும் இந்தப் பசங்க இப்படித்தான் ஐடியா பண்ணி வெச்சிருப்பானுங்க’ன்னு அவர் எளிதாக யூகம் செய்திருக்கலாம். எனவே சேரனை பலியிட்டாவது தன்னை பாதுகாத்துக் கொள்ள முயன்றார்.

“உங்க எல்லோருக்கும் மூணு வேளையும் பொங்கிப் போட்டிருக்கேன். டாஸ்க்கும் பண்ணியிருக்கேன். நல்லா வைணமா தின்னுட்டு எனக்கு துரோகம் பண்ணா.. நாசமாப் போயிடுவீங்க” என்பது போல் எச்சரித்தார் வனிதா.

“நான் புகார் தந்த போது சேரன் அதை சரியாக கையாளவில்லை’ என்பது வனிதாவின் பலமான குற்றச்சாட்டு.

எந்த எல்கேஜி குழந்தையும் இப்படி புகார் செய்து கொண்டிருக்காது, மற்றும் டீச்சரை மன்னிப்பு கேட்கச் சொல்லாது என்னும் போதே வனிதாவின் தர்க்கம் கழன்று விழுந்து விட்டது. என்றாலும் விடாமல் வம்படியாக மல்லுக் கட்டிக் கொண்டிருந்தார். சேரனும் விட்டுத்தராமல் தன் தரப்பு வாதங்களை திறமையாக வைத்துக் கொண்டிருந்தார். (ஷெரீனு.. இந்த முறை மட்டும் என்னைக் காப்பாத்திடும்மா!)

ஆனால் ‘நட்பு வேறு.. போட்டி வேறு’ என்று முன்னர் அழுத்தமாகச் சொல்லியிருந்ததை தானே பின்பற்றும் உதாரணத்திற்காக வனிதாவைப் பாராட்டலாம். சேரனோடு கஸ்தூரியின் கையையும் பிடித்து இழுத்தார் வனிதா. ‘நான் உடனே மன்னிப்பு கேட்டுட்டேன்’ என்று முன்ஜாமீன் வாங்கினார் கஸ்தூரி.

வனிதா தன்னுடைய தோழியாக இருந்தாலும் இந்தச் சூழலை திறமையாக சமாளித்தார் ஷெரீன். ஆக… அனைத்து விஷயங்களிலும் சிறப்பாக பங்கேற்றவராக சேரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். (அப்பாடா!... இப்ப எவ்ள நிம்மதியா இருக்கு தெரியுமா?! பிளான் சக்ஸஸ்).

அடுத்ததாக இந்த டாஸ்க்கில் சொதப்பிய இருவரைத் தேர்ந்தெடுத்து சிறைக்கு அனுப்ப வேண்டிய தருணம். வனிதாவின் ஆவேசமான உரையாடல்களைக் கவனித்துக் கொண்டிருந்த பிக்பாஸூக்கு அல்லு கழன்றிருக்க வேண்டும். “இந்த வாரம் அதெல்லாம் தேவையில்லை” என்று பின்வாங்கி விட்டார். “ம்.. அந்தப் பயம் இருக்கணும்” என்பது வனிதாவின் மைண்ட் வாய்ஸாக இருந்திருக்க வேண்டும்.

IMAGE_ALT

“குருநாதா.. உன் ராஜதந்திரம் வேற லெவலு’’ என்று அப்போது விஷமமாக புன்னகைத்தார் சாண்டி. ‘அது பிக்பாஸோட ராஜதந்திரம் இல்லடே.. இந்தக் கேப்டனோடது” என்பது போல் சொல்லி அனைவரின் பாராட்டுக்களை வாங்கிக் கொண்டார் ஷெரீன்.

ஆக. வனிதா ஹேட்டர்ஸ்களுக்கு வெற்றிகரமான ஏமாற்றம். வனிதாவும் கஸ்தூரியும் சிறைக்கு அனுப்பப்பட்டிருந்தால் ரகளையான ஃபுட்டேஜ்கள் கிடைத்திருக்கும். பிக்பாஸிற்கு அத்தனை பயிற்சி போதவில்லையோ?!

‘பொழுது போகாத பொம்முக்கள்’ ஓட்டப்பந்தயம் மாதிரி எதையோ விளையாடி நேரத்தைக் கடத்தினார்கள். கண்ணாமூச்சி ஆடினார்கள். சந்து பொந்துகளில் ஒளிந்து கொண்டிருந்தவர்களை ‘அந்த சுடுதண்ணிய எடு’ என்று மிரட்டி வெளியே வரச் சொன்னார் தர்ஷன். முகினின் டீஷர்ட்டை மாற்றிப் போட்டு கவினை ஏமாற்றியது தர்ஷனின் நல்ல ஐடியா. அட்டகாசமான குறும்பும் கூட.

**

‘ரொம்ப போரடிச்சு.. கண்ணாமூச்சில்லாம் ஆட ஆரம்பிச்சாட்டுனுவளே. அடுத்தது. பாண்டி.. ஆடுபுலி ஆட்டம்-னு போயிடுவானுவளோ… சரி. இவங்களுக்கு ஏதாவது டாஸ்க் கொடுப்போம்’ என்று பிக்பாஸ் யோசித்தாரோ.. என்னமோ.. ஒருவரை நடுவில் அமர்த்தி வைத்து ‘அண்ணன்.. நல்லவர்.. வல்லவர்’ ..ன்னு அவரோட அருமை பெருமைகளையெல்லாம் பாசிட்டிவ்வாக சொல்லணுமாம். (இப்படி நடந்தா எப்படிய்யா சண்டை நடக்கும்? ஏன்யா.. பிக்பாஸூ அவ்ளோ நல்லவனா நீயி? நம்ப முடியலையே!)

‘கூடி நின்று கும்மியடிக்கும் டாஸ்க்’ என்று பெயரிட்டிருக்கலாம். நலுங்கு வைக்கப்போகும் பெண் மாதிரி முதலில் சேரனை அமர்த்தி வைத்திருந்தார்கள்.

‘டைரக்டர்-ன்ற பந்தா இல்லாம எல்லோருக்கும் அட்வைஸ் பண்ணுவார். நடுநிலையாக இருப்பார்’ என்று சான்றிதழ் தந்தார் தர்ஷன். “என்னை நல்லாப் புரிஞ்சுக்கிட்ட மனுஷர் நீங்கதான். உங்க கிட்ட பேசிட்டே இருக்கணும்னு தோணுது.. உங்களை எனக்கு பிடிக்கும்” என்று ‘ஐ லவ் யூ’ சொல்லாத குறையாக சேரனிடம் ஷெரீன் சொன்ன போது தர்ஷனுக்கு சற்று ஜெர்க் ஆகியிருக்கும்.

“எல்லாத்தையும் தாண்டி நீங்க ஒரு நல்ல தகப்பன்’ என்று லியா சொன்ன போது பெருமையால் கையெடுத்துக் கும்பிட்டார் சேரன். (இப்படிச் சொல்லிட்டு அப்புறம் அப்பா முதுகுல குத்தறதே உனக்கு பொழப்பா போச்சு!).

அடுத்து, ஷெரீனை அமர வைத்தார்கள். ‘அறிவும் அறிவும் கலந்த கலவை’ என்று தொலைக்காட்சியில் பேசுவதைப் போலவே பேசி உயிரை வாங்கினார் கஷ்தூரி. “ஏழு வாரமா நாமினேஷனுக்கு வராமயே ஒருத்தர் இது வரை டபாய்ஞ்சு இருக்காங்கன்னா அவங்க எவ்ள நல்லவங்களா இருக்கணும். என்னைல்லாம் வாரா வாரம் வெச்சு செய்யறாங்களே’ என்று பொறாமையுடன் ஷெரீன் புகழைப் பாடி முடித்தார் கவின்.

கவினின் அருமை பெருமைகளை சொல்லும் சமயம் வந்தது. ‘கவின்.. என்று ஆரம்பித்து சேரன் சிறிது கேப் விட ‘என்னதிது என் பெயரைச் சொல்லிட்டு தலை குனிஞ்சுக்கிட்டாரு’ என்று கவின் அடித்த கமெண்ட் நல்ல டைமிங்.

“அவன் கிட்ட இருக்கற ஹியூமர் சென்ஸ் பிடிக்கும். காதல் உட்பட எல்லாத்தையுமே ஈஸியா எடுத்துப்பான். நட்பிற்கு அவன் தர்ற முக்கியத்துவம் பிடிக்கும். சில தவறுகள் செஞ்சிருந்தாலும் நல்ல பையன்’ என்று சான்றிதழ் தந்தார் சேரன். (கவின் குறித்த எனது அபிப்ராயமும் ஏறத்தாழ இதுவேதான்!). நட்பிற்கு முக்கியத்துவம் தரும் விஷயத்தில் கவின் உண்மையாக இருப்பதை தர்ஷனும் வழிமொழிந்தார்.

‘மனிதருள் மாணிக்கம்.. எப்படி இருக்கீங்க.. பார்த்து ரொம்ப நாளாச்சு..” என்று கவினின் மீதான புகழுரைகளைக் கேட்டு கலாய்த்த சாண்டி, தங்களுக்கு இடையயான நட்பை சற்று விவரிக்க ‘இதையெல்லாம் இதுவரைக்கும் எங்கே வெச்சிருந்தே?” என்றார் கவின். “ஐ லவ் யூ” என்றார் சாண்டி.

“கவினை ஏற்கெனவே எனக்கு பிடிக்கும் இப்ப ரொம்பவும் பிடிக்கும். மத்தவங்களுக்காக எதையும் விட்டுக் கொடுப்பான்.” என்கிற பாட்டை மீண்டும் பாடினார் லியா.

“அவசியமான நேரத்துல வெளிப்படையா பேசிடற. எனக்குப் பிடிச்சிருக்கு” என்று வனிதாவிடமே சான்றிதழ் வாங்கினார் லியா. ‘ஒரு ஆள் கிட்ட இருக்கிற நேர்மறைகளை மட்டுமே பார்க்கிற பாசிட்டிவ்வான ஆள்” என்று லியாவைப் பாராட்டினார் முகின். (என் கிட்ட வர்றப்ப மட்டும் அதுக்கு மெட்ராஸ் ஐ வந்துடுதே?! – சேரனின் மைண்ட் வாய்ஸ்).

“யாரும் சோகமா இருந்தா அடிக்கடி விசாரிப்பான். தூசு பட்டு கண்கலங்கினா கூட இவன் அரை மணி நேரம் அழுவான்” என்று முகினை பாராட்டும் விதமாக கலாய்த்தார் கவின். “நீ எதையும் ஒளிக்கலை. வெளிப்படையா இருப்பது சிறப்பு” என்று முகினைப் பாராட்டினார் சேரன். ‘உடல் சரியில்லாத நிலையிலும் தன் குழந்தையின் பெயரை வடிவமைத்துக் கொடுத்த முகினைப் பாராட்டினார் சாண்டி.

“சாண்டி கலாய்க்கறது எனக்கு ரொம்ப பிடிக்கும். தூக்கம் வராம நைட்ல உக்காந்திட்டு இருந்தப்ப.. ‘தே.. போய் படு பே..’என்று உரிமையுடன் அதட்டினார்” என்று சாண்டியைப் பற்றி லியா சொன்ன விதம் சுவாரசியம். “நீ இல்லாமப் போயிட்டியன்னா.. இந்த வீட்ல சிரிப்பே இருக்காது” என்று சாண்டியைப் பாராட்டினார் ஷெரீன். இதை வில்லுப்பாட்டாகவே பாடி வெறுப்பேற்றினார் கஷ்தூரி.

“உடம்பு சரியில்லாத உங்க மகளுக்கு நீங்கதான் கிஃப்ட்’ என்று கஸ்தூரியைப் புகழந்தார் தர்ஷன். “டாஸ்க்ல இவன் கில்லி. இவனுக்கு முன்னால மத்தவங்கள்லாம் பல்லி” என்று தர்ஷனைப் பாராட்டினார் சாண்டி. தர்ஷனை ஷெரீன் பாராட்டும் சமயம் வந்த போது கூட்டமே சிரித்து கும்மியடித்தது.

“உங்க கிட்ட இருக்கற தாய்மை பிடிக்கும்” என்று வனிதாவைப் பாராட்டினார் கஸ்தூரி. வனிதாவின் மகள்களின் பெயர் முதற்கொண்டு அவர் சரியாகச் சொன்னது நிகழ்ச்சியை எத்தனை பார்த்து விட்டு வந்திருக்கிறார் என்பதைக் காட்டியது.

வனிதாவின் துணிச்சலையும் வெளிப்படைத்தன்மையையும் கவின் மற்றும் தர்ஷன் பாராட்டினார்கள். “எனக்குத் தெரியும். சிலர் என்னை இங்க மிஸ் பண்ணினாங்க’ என்று சுயபெருமிதம் பொங்க மகிழ்ச்சியடைந்தார் வனிதா. (எதுக்கு உங்களைத் தேடினாங்கன்னு நல்லா யோசிச்சுப் பாருங்க).

இந்த டாஸ்க் முடிந்த இரவு நேரம்.

சேரன் லியாவைப் பற்றி கவலைப்பட்டு காலையில் பேசிய அதே விஷயத்தை இப்போது தர்ஷனும் லியாவிடம் பேசிக் கொண்டிருந்தார்.

‘அவ எப்பவும் எனக்காக நிப்பான். எதுக்காகவும் நிப்பான்” என்று நிப்பான் பெயிண்ட் விளம்பரத்திற்காக பேசுவது போல் பழைய பாட்டைப் பாடிக் கொண்டிருந்தார் லியா.

கவின் எப்போதும் லியாவின் பக்கத்திலேயே நிற்பது ஊர் அறிந்த விஷயமாச்சே!


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE