Thursday 28th of March 2024 03:13:25 PM GMT

LANGUAGE - TAMIL
”ஜனாதிபதித் தேர்தலும்  வாக்குறுதிகளும்”  - பி.மாணிக்கவாசகம்

”ஜனாதிபதித் தேர்தலும் வாக்குறுதிகளும்” - பி.மாணிக்கவாசகம்


அரசியல்வாதிகள் பத்தும் பேசுவார்கள் பலதையும் செய்வார்கள். அரசியலில் பத்தும் நடக்கும் பலதும் நிகழும். இது அரசியலில் சகஜம். இயல்பாகவே இடம் பெறுவன.

ஆனால் நேர்மையான அரசியல்வாதிகளின் பேச்சுக்களிலும் செயற்பாடுகளிளும் நிதானம் இருக்கும். நீண்டகால நோக்கம் இருக்கும். இது, மக்களை உளமாற நேசிக்க வேண்டும். அவர்களுக்கு சேவையாற்ற வேண்டும் என்ற உள்ளார்ந்த நோக்கத்தையும் இலக்கையும் கொண்ட அரசியல்வாதிகளின் இலட்சணமாகும். இத்தகைய அரசியல்வாதிகளின் வழிகாட்டலில் மக்கள் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். இதனால், ஜனநாயகம் தழைத்தோங்கும். நாடு முன்னேற்றப் பாதையில் பயணிப்பதற்கான உந்து சக்தியதாக இருக்கும்.

ஆனால் ஜனாதிபதி தேர்தலையொட்டி முக்கிய அரசியல்வாதிகளினாலும், ஜனாதிபதி வேட்பாளர்களாக அரசியல் கட்சிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளவர்களினாலும் - வேட்பாளராகக் கூறப்படுபவரினாலும் வெளியிடப்படுகின்ற கருத்துக்கள் காட்டு வெள்ளம்போல பெருகிப் பாய்ந்த வண்ணம் உள்ளன.

அரசியல் கட்சிகளினதும், அவற்றைச் சார்ந்த அரசியல்வாதிகளினதும்; நோக்கங்கள், எதிர்கால வேலைத் திட்டங்கள் பற்றிய பல விடயங்களும் கடந்த காலங்களில் தாங்களும் தத்தமது அரசியல் கட்சிகளும் மக்களுக்கு ஆற்றிய சேவைகள், பெருமைக்குரிய சாதனைகளாகத் தாங்கள் நிகழ்த்திய விடயங்கள் பற்றிய விபரங்களுமே இந்த கருத்து வெள்ளத்தின் உள்ளடக்கமாகக் காணப்படுகின்றன.

ஊடகங்கள் இவற்றுக்கு முக்கியத்துவம் அளித்து, மக்களைக் கவர்ந்த அசத்தும் வகையில் தலைப்புச் செய்திகளாகவும், பெட்டிச் செய்திகளாகவும் வெளியிட்டுகின்றன. ஊடகங்களின் ஆசிரிய தலையங்கங்களிலும் இவைகள் கருத்து பிரதிபலிப்பாக இடம்பிடிக்கத் தவறவில்லை.

ஜனாதிபதி தேர்தலுக்கான காலம் நெருங்க நெருங்க அரசியலில் ஏற்பட்டுள்ள பரபரப்பும், அந்த பரபரப்பின் ஊடாக அரசியல்வாதிகள் வெளிப்படுத்துகின்ற தீவிரமான கருத்துக்களும் சாமான்யர்களின் மனங்களில் எத்தகைய அரசியல் மனப்பதிவை, உளவியல் ரீதியான உருவகத்தை ஏற்படுத்துகின்றன என்பது குறித்து சிந்திப்பதைத் தவிர்க்க முடியாதுள்ளது.

திசைமாறிய நிலைமை

முப்பது வருடங்களாகத் தொடர்ந்த யுத்தத்தின் பின்னர் கடந்த ஒரு தசாப்த காலமாக நாடு கடந்து வந்துள்ள நிலைமைகளில் பல பிரச்சினைகள் குவிந்து கிடக்கின்றன. அவற்றில் பல எரியும் பிரச்சினைகளாக அரசியல் பரப்பில் தீர்வுக்காக அணிவகுத்து நிற்கின்றன.

இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களினதும், சாதாரண பொதுமக்களினதும் எதிர்பார்ப்பாகும். அவர்களின் அரசியல் வேணவாவாகவும் உள்ளன.

பேச்சுக்களிலும் பார்;க்க உடனடியான, உருப்படியான செயல் வடிவ தீர்வு காணப்படமாட்டாதா என்ற ஏக்கம் அவர்களை ஆக்கிரமித்திருக்கின்றன.

ஆனால் அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளினது நோக்கங்களும், நாட்டு மக்களினது எதிர்பார்ப்பும் சங்கமிக்கின்ற ஒரு களமாக தேர்தல் களம் பரிணமிக்கவில்லை. அரசியல் கள நிலைமையும் மக்களின் நிலைமையும் முரண்பட்டிருப்பதையே காண முடிகின்றது.

நம்பிக்கை ஊட்டத்தக்க வேட்பாளர்கள் களத்தில் இறங்க மாட்டார்களா என்ற எதிர்பார்ப்பும், ஏக்கமும் பரபரப்படைந்துள்ள தேர்தல் களத்தில் இன்னும் இறக்கப்படவில்லை என்றே கூற வேண்டும். தேர்தலுக்கான அறிவித்தல் அதிகாரபூர்வமாக வெளியிடப்படுவதற்கு முன்பே வேட்பாளர்களைத் தெரிவு செய்வதிலும், அவர்களைக் களத்தில் இறக்குவதிலும் அரசியல் கட்சிகள் மிகத் தீவிரமாகச் செயற்படத் தொடங்கிவிட்டன.

ஒப்பீட்டளவில் இது கடந்த கால நிலைமைகளிலும் பார்க்க இது வித்தியாசமானது. ஏன் இந்தத் தீவிரம், ஜனாதிபதியில் ஏன் இத்தகைய அரசியல் மோகம் என்று அதிசயித்து வினவத்தக்க வகையிலேயே அரசியல் கட்சிகளினதும், அரசியல்வாதிகளினதும் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.

சிறுபான்மை தேசிய இன மக்களின் அரசியல் எதிர்பார்ப்புக்களும், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நிலைப்பாடும் அரசியல் பிரசாரங்களில் முக்கியத்துவம் பெற்றிருக்கின்றன. இந்த முக்கியத்துவம் அந்த மக்களின் வாக்குகளை வென்றெடுக்கும் நோக்கத்தைக் கொண்ட வெறும் கவர்ச்சியான அரசியல் விளம்பரமாகவே காணப்படுகின்றது.

உளப்பூர்வமாக மக்களைக் கவர்ந்து அவர்களின் நம்பிக்கையை வென்றெடுக்கின்ற வழிமுறைகளிலான பிரசாரங்களாக இவற்றைக் காண முடியவில்லை. இதனால் அரசியல்வாதிகளின் போக்கு ஒரு புறமாகவும், மக்களின் குறிப்பாக சிறுபான்மை தேசிய இன மக்களின் எதிர்பார்ப்பு நிறைந்த நிலைப்பாடு மறுபுறமாகவும் திசைமாறிய நிலையிலேயே காணப்படுகின்றன.

தேர்தலின் பின்புலம்

முப்பது வருடங்களாகத் தொடர்ந்த யுத்தத்தில் போர்க்குற்றங்கள் புரிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்கள் அரசியலிலும், நாட்டின் அதியுயர் பாதுகாப்புத்துறையிலும் முக்கியத்துவம் பெற்றுள்ள ஒரு பின்புலத்தில் 2019 ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் களம் கருக்கொண்டிருக்கின்றது.

போர்க் குற்றச்சாட்டுக்கள் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் வெறுமனே அரசியல் பிரசாரம் சார்ந்த ஒரு விடயமாக முன்வைக்கப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களின் நேரடி அனுபவமாகவும், சர்வதேச அளவில் ஐநா மன்றத்தின் விசாரணை ஆய்வுகளில் கண்டறியப்பட்டு சர்வதேச வெளியில் பகிரங்கமாக ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி முன்வைக்கப்பட்டிருக்கின்றன.

அவற்றுக்கு பொறுப்பு கூறுவதாக மக்களின் பேராதரவுடன் 2015 ஆம் ஆண்டு ஆட்சி பீடமேறிய நல்லாட்சி அரசாங்கம் மனமுவந்து இணை அனுசரணை வழங்கி சர்வதேச அரங்கில் ஒப்புதல் அளித்து ஏற்றுக்கொண்ட முக்கிய பின்னணியும் இந்தத் தேர்தல் களத்திற்கு உண்டு.

இத்தகைய ஒரு நிலையில்தான் போர்க்குற்றச் செயல்களுக்கு விரல் நீட்டி சுட்டிக்காட்டப்பட்டுள்ள பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ச யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட காலத்தின் தமது நிலைப்பாடு குறித்து வெளியிட்டுள்ள கருத்துக்கள் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றன.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில், பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக இருந்த கோத்தாபாய ராஜபக்சவின் போர்க்கால தந்திரோபாய வழிகாட்டலில் 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அதனையடுத்து 6 வருடங்கள் தொடர்ந்த ஆட்சிக்காலம் ஏதேச்சதிகாரப் போக்கைக் கொண்டதாக இராணுவமயமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலைமையை மாற்றி ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காகவே 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் கொண்டு வரப்பட்டது. இதனால் ஐக்கிய தேசிய கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்த இந்த ஆட்சி நல்லாட்சி என்று குறிப்பிடப்பட்டது. ஆனால் அது பொல்லாத ஆட்சி என்ற அனுபவத்தையே அதன் நான்கு வருட ஆட்சிக் காலத்தில் நாட்டு மக்களுக்கு அளித்துள்ளது.

இந்த பொல்லாத ஆட்சியில் இருந்து விடுபட வேண்டும். நல்லதோர் ஆட்சி மலர வேண்டும். பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்க வேண்டும். அதன் மூலம் நாட்டில் உண்மையான ஐக்கியமும் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கமும், நல்ல உறவும் ஏற்பட வேண்டும் என்ற ஆவல் மக்கள் மனங்களில் மேலோங்கி இருக்கின்றன.

கோத்தாவின் கூற்று

இந்த நிலையில் போர்க்குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளவரும், இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அதஉச்ச இராணுவ பலத்தைப் பயன்படுத்தி விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாக மௌனிக்கச் செய்வதில் யுத்தகளத்தில் பெரும் பங்காற்றிய சவேந்திர சில்வாவை மனித உரிமை அமைப்புக்களின் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இராணுவத் தளபதியாக நியமித்துள்ளார்.

அதிகாரங்களை 19 ஆவது திருத்தச் சட்டம் குறைத்திருக்கின்ற போதிலும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவிக்கு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் எதேச்சதிகார ஆட்சியின் முக்கிய தூணாக விளங்கிய அன்றைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாய ராஜபக்ச வேட்பாளராக பொதுஜன பெரமுன கட்சியினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்டிருப்பதுவும், கோத்தாபாய ராஜபக்ச பலருடைய முகச்சுழிப்புக்கு மத்தியில் ஜனாதிபதி வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டிருப்பதும், அடுத்த கட்டமாக நாட்டை கொடுங்கோல் முறைமையிலான ஆட்சிக்கு இட்டுச் செல்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னோடி நடவடிக்கையாகவே கருதப்படுகின்றது.

இந்தக் கருதுகோளுக்கு வலு சேர்க்கும் வகையிலேயே பொதுஜன பெரமுன சட்டத்தரணிகள் சங்கத்தின் மாநாட்டில் அவர் ஆற்றிய உரை அமைந்துள்ளது. மனித உரிமைகளில் அக்கறை கொண்டிருந்தமையினாலேயே மெது மெதுவாக யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததாக அவர் அந்த உரையில் கூறியுள்ளார். கனரக பீரங்கிகள் உள்ளிட்ட பெரும் ஆயுதங்களை யுத்ததில் பயன்படுத்தியிருந்தால் விரைவாக யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்திருக்க முடிந்திருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்தை மதிக்கின்ற, அதனை நிலைநிறுத்துகின்ற, பொது மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கின்ற எதிர்கால அரசாங்கம் ஒன்றை உருவாக்குவோம் என்று சூளுரைத்துள்ள கோத்தாபாய ராஜபக்ச, இறுதிக்கட்ட யுத்ததில் மனித உரிமைகள் மீறல்கள் இடம்பெற்றதாக எழும் குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை என மறுத்துரைத்துள்ளார.

மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான தங்களின் வலுவான அர்ப்பணிப்பையும், யுத்த முடிவு தாமதப்பட்டதற்கான காரணங்களை அறியாமல் இந்தப் பொய்யான கதைகள் கூறப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கனரக பீரங்கிகளைப் பயன்படுத்தி விரைவாக யுத்தத்தை முடிப்பதற்கான சாத்தியம் தங்களுக்கு இருந்த போதிலும், அவ்வாறு செய்யவில்லை. மாறாக சிறிய ரக ஆயுதங்களைப் பயன்படுத்தி யுத்த வெற்றியை மெதுவாகப் பெறுவதற்கு முடிவு செய்து செயற்பட்டதனால், ஆயிரக் கணக்கான போர் வீரர்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தார்கள் என்று அவர் அங்கு விளக்கமளித்துள்ளார்.

பசுத்தோல் தந்திரோபாயமும் ஜேவிபியின் நேரடி பேச்சுவார்த்தை உத்தியும்

வெள்ளைவான் கடத்தல்களுடன் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபாயாவை இணைத்து போர்க்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருடைய இந்தக் கூற்று முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கின்ற கைங்கரியமாகவும், அவர் கூறுபவற்றை அனைவரும் அப்படியே நம்பி ஏற்றுக் கொள்வார்கள் என்ற அவருடைய நம்பிக்கையை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது. இதுபோன்ற பல விடயங்களை ஜனாதிபதி தேர்தலுக்கான பரப்புரை நடவடிக்கையாக பல இடங்களிலும் அவர் கூறி வருவதைக் காண முடிகின்றது.

அதேபோன்று அரசியலமைப்பில் 18 ஆவது திருத்தச் சட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி ஜனாதிபதி பதவியை தனக்கான நிரந்தர பதவியாகவும், தனது குடும்ப உறுப்பினர்கள் பலரையும் அரசியல் செல்வாக்கு மிகுந்தவர்களாக நிலைநிறுத்திக் கொள்வதற்காகவும் செயற்பட்டு நாட்டை சர்வாதிகாரப் போக்கிற்கு இட்டுச் சென்றிருந்த மகிந்த ராஜபக்சவும் தாங்கள் மக்கள் நலன்களுக்கு குறிப்பாக சிறுபான்மை தேசிய இன மக்களின் நலன்களுக்கு அதிக முன்னுரிமை கொடுத்துச் செயற்பட்டதாகவும் பல விடயங்களைக் கூறி வருகின்றார்.

இது புலி தன்னை உரு மறைப்புச் செய்வதற்காக பசுத்தோலைப் போர்த்தி நல்லதொரு தோற்றத்தை வெளிப்படுத்துவதற்காகக் கையாள்கின்ற வேடிக்கையான தந்திரோபாய கைங்கரியமேயன்றி வேறொன்றுமில்லை.

மற்றுமொரு வேட்பாளராகிய அனுரகுமார திசாநாயக்கவின் கட்சியாகிய N;ஜவிபியின் கருத்து மற்றுமொரு வகையில் வேடிக்கையாக வெளிப்பட்டிருக்கின்றது. அந்தக் கட்சியின் பொதுச் செயலாளராகிய ரில்வின் சில்வா தமிழ்க்கட்சிகளுடன் பேசுவதில் பயனில்லை என்றும் அவர்களைப் புறந்தள்ளி தமிழ் மக்களுடன் நேரடியாகப் பேசி அவர்களுடைய பிரச்சினைகள் கேட்;டறிந்து அவற்றுக்குத் தீர்வு காண்பதே தமது கட்சியின் நிலைப்பாடு என்று கூறியுள்ளார்.

ஜேவிபி இடதுசாரி கொள்கைகளைக் கொண்டு அரசுக்கு எதிராக ஆயுதமேந்தி இரண்டு தடவைகள் போரிட்ட ஒரு போராட்ட அமைப்பாக வெளிப்பட்டிருந்த போதிலும், ஜனநாயக வழிக்குத் திரும்பிய பின்னர் மறுக்கப்பட்ட அரசியல் உரிமைகளுக்கான தமிழ் மக்களுடைய போராட்டத்தின் உண்மையான நிலைமையைப் புரிந்து கொள்ளவோ அதன் நியாயத்தன்மையை ஏற்றுக்கொள்ளவோ முன்வரவில்லை.

மாறாக அந்தப் போராட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டையும், அதனை முறியடிப்பதற்கான மறைமுக, நேரடி நடவடிக்கைகளிலேயே அதிக ஈடுபாடு காட்டிச் செயற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மாகாண மட்டத்திலான அதிகாரப் பகிர்வுக்கு வித்திட்டிருந்த இலங்கை இந்திய ஒப்பந்தத்தை எதிர்த்து நின்றதுடன், அந்த ஒப்பந்தத்தின் மூலம் உருவாகியிருந்த வடக்கையும் கிழக்கையும் பிரித்து இருவேறு மாகாணங்களாக்கிய பெருமையையும் அந்தக் கட்சியே பெற்றுக் கொண்டது.

ஓடியாடி அளிக்கப்படும் உத்தரவாதம்

விடுதலைப்புலிகளின் தலைமையிலான ஆயுதப் போராட்டத்திற்கு எதிராக மகிந்த ராஜபக்ச அரசுக்கு முண்டு கொடுத்திருந்த ஜேவிபி, யுத்தம் முடிவடைந்ததன் பின்னர்கூட இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நியாயமான எதிர்பார்ப்பைக்கூட கொண்டிருக்கவில்லை. மாறாக நாளொரு பேச்சும் பொழுதொரு கொள்கையையும் வெளிப்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் தனது அரசியல் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்வதற்கான நடவடிக்கைகளிலேயே அது ஈடுபட்டு வந்துள்ளது. ஆயினும் அந்த முயற்சி இதுவரையில் வெற்றிபெற வில்லை.

இந்த நிலையில்தான் தமிழ்க்கட்சிகளுடன் பேரம் பேசி பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது என்ற தனது நம்பிக்கையான நிலைப்பாட்டை அது வெளிப்படுத்தி இருக்கின்றது. தமிழ் மக்களின் பிரதிநிதிகளாகிய தமிழ்க்கட்சிகளுடன் பேச்சுக்களை நடத்தாமல், தமிழ் மக்களுடன் நேரடியாகப் பேச்சுக்களை நடத்தி பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை தாங்கள் முன்னெடுப்போம் என்று சுற்றி வளைத்து மூக்கைத் தொடுகின்ற முயற்சியில் ஜேவிபி ஈடுபட்டிருப்பதாக ரில்வின் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் குழப்பகரமான நிலைமைகளில் இருந்து அந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வெளிப்படுவதற்காக ஓடியாடித் திரிகின்ற சஜித் பிரேமதாசா இனப்பிரச்சினையின் தாற்பரியத்தைப் புரியாதவராக மேலோட்டமான முறையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். தீர்வு காண்பேன் என்ற உத்தவாதத்தை முன்வைத்து தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார்.

அவருடைய தந்தையார் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாசா இந்திய அமைதிப்படைகளை இலங்கையில் இருந்து வெளியேற்றுவதற்காகத் தந்திரோபாய அரசியல் நகர்வாக விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை ,ஏற்படுத்திச் செயற்பட்டு, இறுதியில் ஒரு மேதினத்தன்று தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் சிக்கி, ஐக்கிய தேசிய கட்சியின் மேதின ஊர்வலத்தைச் செந்நிறமாக்கி உயிரிழந்து போனார்.

சமயோசிதம், உறுதிப்பாடு, தீர்க்கதரிசனம் அவசியம்

ஆனாலும் அவர் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண முற்படாத போதிலும், தமிழ் மக்களுடனும் தமிழ்க்கட்சிகளுடனும் நெருங்கிய தொடர்புகளைக் கொண்டு அவர்களுடைய பிரச்சினைகளை அறிந்த ஒருவராகத் திகழ்ந்தார். ஆனால் அவருடை வழித்தோன்றலாக வெளிப்பட்டுள்ள சஜித் பிரரேமதாசா தேசிய பிரச்சினைகளில் நேரடியான தொடர்புகளைக் கொண்டவராகவோ அல்லது அவற்றில் ஈடுபாடு கொண்டவராகவே தன்னை இதுவரையில் மக்கள் மத்தியில் உருவகப்படுத்திக் கொள்ளவில்லை.

இந்த வகையில் ஆளுமை மிக்கதோர் அரசியல்வாதியாக அவர் தன்னை இனம்காட்டாத நிலையில் தமிழ் மக்களின் ஆதரவைப் பெற முடியும் என்பது சந்தேகத்திற்கு உரியது. ஆனாலும் மேலோட்ட பிரசாரங்களில் தமிழ் மக்களின் பிரச்சினைகளை நன்கறிந்தவர் என்ற வகையிலான ஒரு தோற்றப்பாட்டை வெளிப்படுத்த முற்பட்டு வருகின்றார்.

ஆனால் அவர் தன்னைத்தானே சுயவிருப்பில் வேட்பாளராக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றாரே தவிர, அவர்தான் ஐக்கிய தேசிய கட்சியின் தீர்மானமான வேட்பாளர் என்ற அதிகார அந்தஸ்து கிட்டுமா என்பதும் நிச்சயமில்லாமல் உள்ளது. இத்தகைய நிலையில் அவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்போவதாகக் கூறுவதும் உறுதிமொழிகள் அளிப்பதும் வேடிக்கையான அரசியல் செயற்பாடாகவே காணப்படுகின்றது.

எனவே, ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர்களும் அவர்களது அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் வாக்குவேட்டையில் தீவிரமாக இறங்கி பத்தையும் பேசுகின்றார்கள். பலதையும் செய்யப்போவதாக உறுதியளிக்கின்றார்கள். ஆகவே, அரசியலில் பத்தும் நடக்கும் பலதும் நிகழும். இந்த அரசியல் சூழலுக்கு ஏற்ற வகையில் சமயோசிதமாகவும், உறுதிப்பாட்டுடன் கூடிய தீர்க்கதரிசனத்துடனும் சிறுபான்மை தேசிய இன மக்கள் தங்களுடைய வாக்குப் பலத்தை சரியான முறையில் காய் நகர்;த்துவதற்குத் தயாராக வேண்டியது அவசியம்.

இந்த வகையில் அவர்களை உரிய முறையில் ஐக்கியப்பட்டு வழி நடத்த வேண்டியது தமிழ் மற்றும் முஸ்லிம் அரசியல் கட்சிகளினதும், அரசியல் தலைவர்கள் அனைவரினதும் தலையாய கடமையும் பொறுப்புமாகும்.

அருவி இணையத்துக்காக பி.மாணிக்காவசகம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE