Thursday 25th of April 2024 09:47:26 PM GMT

LANGUAGE - TAMIL
‘வத்திக்குச்சி வனிதாவின் இன்னொரு அழகான பிம்பம்’  - சுரேஷ் கண்ணன்

‘வத்திக்குச்சி வனிதாவின் இன்னொரு அழகான பிம்பம்’ - சுரேஷ் கண்ணன்


ஒரு சந்தோஷமான முன்குறிப்பு: இது வனியக்காவின் ஆர்மிக்கானது. இன்றைய நாளில் அவரை விமர்சிப்பதற்கான எவ்வித சந்தர்ப்பத்தையும் அவர் உருவாக்கித் தரவில்லை. தாய்மை பெருகி வழியும் அவரின் இன்னொரு பக்கத்தைப் பார்க்க முடிந்ததில் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியும்.

இரண்டு விஷயங்களை பார்த்து விட்டு இன்றைய நாளின் நிகழ்வுகளுக்குள் செல்லலாம்.

வருகிற விருந்தினர்கள் அனைவரும் போட்டியாளர்களிடடம் தனிமையில் தவறாமல் சொல்லும் ஒரு விஷயத்தைக் கவனித்தீர்களா? ‘யாரையும் நம்பாதே’. வனிதாவின் குழந்தை கூட இதைத்தான் சொல்கிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி எதிர்மறைத் தன்மைகளை நமக்குள் படியவைப்பதற்கான உதாரணங்களில் இதுவும் ஒன்று.

சகிப்புத்தன்மையுடனும் நட்புடனும் ஒன்றாக கூடி வாழ்வதுதான் இந்த விளையாட்டின் அடிப்படையான சவால். நல்லியல்புகளுடன் இருப்பவரை மக்களுக்கு தன்னிச்சையாக பிடித்து விடும். உதாரணம், தர்ஷன்.

ஆனால் ‘யாரையும் நம்பாதே’ என்பதைத்தான் வருகிற உறவினர்கள் அனைவரும் சொல்கிறார்கள். அப்படிப்பட்ட எதிர்மறை உணர்வுகளைத்தான் இந்த நிகழ்ச்சி அதிகம் தூண்டுகிறது.

எல்லோரும் நல்லவரே என்று நம்புவது ஒருபக்கம் இளிச்சவாய்த்தனமாக இருந்தாலும் அதிலுள்ள நேர்மறைத்தனம் முக்கியமானது. அதை அனுபவிப்பது ஒரு மேன்மையான சுகம்.

இரண்டாவது, கமல் வீட்டின் போட்டியாளர்கள், வருகிற விருந்தினர்கள், பார்வையாளர்களில் பெரும் சதவீதம், அந்த வீட்டின் வாட்ச்மேன் என்று பலரும் சொல்வது ‘கேமை பார்த்து விளையாடுங்க’.

அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்தில் ஒரு காட்சி. உருவ ஒற்றுமை காரணமாக தவறு செய்யாத கமலை, இன்ஸ்பெக்டர் ஜனகராஜ் கைது செய்து அழைத்து வருவார். ‘சம்பவம் நடந்த அன்னிக்கு நீ எங்கே இருந்தே?” என்று ஆரம்பித்து பல கேள்விகளைக கேட்பார்.

அவற்றிற்கு எதிர்கேள்வியாக ஒன்றை கமல் அப்பாவித்தனமாக கேட்பார். ‘சார். இந்த சம்பவம்.. சம்பவம்-ன்றீங்களே.. அது இன்னாது?”

அதைப் போலவே ‘கேமை ஃபோகஸ் பண்ணி விளையாடுங்க” என்று ஆளாளுக்கு எழவு கொட்டுகிறார்களே.. அந்த ‘கேம்’ என்றால் என்ன? அதை எப்படித்தான் விளையாட வேண்டும்? ஏதாவது ரூல் புக் இருக்கிறதா?

** 80-ம் நாளின் நிகழ்வுகள் தொடர்கின்றன. லியாவின் குடும்பம் விடைபெறுவதற்கான தருணம் வந்தது. லியாவின் அப்பா ஆரம்பித்தில்தான் நம்பியார் மாதிரி தெரிந்தாரே தவிர, சிறிது நேரத்திலேயே எம்.ஜி.ஆர் ஆகி விட்டார். கவின் உட்பட அனைவரிடமும் உற்சாகமாக பேச ஆரம்பித்து விட்டார்.

கன்னத்தில் ஓங்கி அடித்து விடைபெறுவதுதான் அவர்களின் குடும்ப வழக்கம் போல. சாண்டியையும் கவினையும் அப்படி கன்னத்தில் ஒன்று போட்டு ‘சந்தோஷமா கேமை ஜெயிச்சுட்டு வாங்க” என்றார்.

ஆனால் லியாவை சும்மா சொல்லக்கூடாது. கோபமாக வந்த அப்பாவை கதறி அழுதே கூல் செய்து விட்டார். ‘நீ நீயா இரு” என்பதை ஆயிரத்து முந்நூறு இரண்டாவது தடவையாக லியாவின் அம்மா சொல்லிக் கொண்டிருந்தார். “அவங்க அவங்க கேமை அவங்க அவங்கதான் விளையாடறாங்க. நீதான் உன்னைப் பார்த்துக்கணும்”.

முத்தப்பரிமாற்றங்களுடன் மனதே இல்லாமல் தனது குடும்பத்தை விடையனுப்பி வைத்தார் லியா. சோகமான முகபாவத்துடன் கவின் கழிப்பறைக்குச் செல்ல, லியாவைச் சிரிக்க வைக்க முயன்றார் முகின்.

அதென்னமோ இன்று வனிதாவிடம் பாசிட்டிவிட்டி பெருகி வழிந்தது. பிறகு லியாவிற்கு சரியான ஆலோசனைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். “பேரண்ட்ஸ் சப்போர்ட் நமக்கு வேணும். தட்டிக் கேட்க குடும்பத்துல ஆள் இருக்கணும். அதுதான் நமக்குப் பாதுகாப்பு. இப்பத்திக்கு சில விஷயங்களை நீ தியாகம் செய்யணும். பின்னாடி பார்த்துக்கலாம். இப்ப உன் குடும்பம் வருங்காலம் பத்தி யோசி. அவனுக்கும் தைரியம் வேணும்” என்று சரியான திசையை நோக்கி லியாவை நகர்த்தினார் வனிதா.

(இந்த உபதேசத்திற்குப் பின்னால் வனிதாவிற்கு நிகழ்ந்த தனிப்பட்ட பிரச்சினைகளும் காரணமாக இருக்கலாம்)

‘கவினும் லியாவும் இனி எப்படி இருப்பாங்க’ என்று பார்வையாளர்களுக்கும் எழக்கூடிய கேள்வி சாண்டிக்கும் எழுந்தது. ‘அதை அவங்க முடிவெடுத்துக்கட்டும். நாம தலையிட வேண்டாம்’ என்றார் சேரன்.

பிறகு, லியாவிற்கும் கவினுக்கும் இடையில் நடந்த உரையாடல் காவியச் சோகத்துடன் இருந்தது. “உங்க அம்மா உன் பேச்சைக் கேட்பாங்கன்னு சொல்லுவ இல்லியா.. அதை வெச்சு நானா சில விஷயங்களை கற்பனை பண்ணிக்கிட்டேன்” என்றார் கவின் சினிமாத்தனமாக.

“அவங்க பாயிண்ட் ஆஃப்ல இருந்தும் பார்க்கணுமில்லையா? ரியாலிட்டி.. ரியாலிட்டி.. ன்னு சொல்றோமில்லையா.. இதுதான் ரியாலிட்டி” என்றார் லியா. அவர் உட்காந்திருந்த சோபா, போதி மரத்தினால் செய்யப்பட்டது போல. இப்போதுதான் இந்த ஞானோதயம் அவருக்கு வந்திருக்கிறது. இதை அவர் முன்பே யோசித்திருக்கலாம். ‘இட்ஸ் ஓவர்’ என்கிற விஷயத்தை கவினுக்கு வலிக்காமலும் அதே சமயத்தில் அழுத்தமாகவும் லியா சொன்னது சரியான விஷயம்.

ஆனால் இதை ஆமோதித்தாலும் கூடவே அழுகிற குழந்தை மாதிரி கவின் முகத்தை வைத்துக் கொண்டார். பெண்களைச் சாய்ப்பதற்கு இந்த முகபாவம் ஒரு வலிமையான ஆயுதம். பெண்களுக்குள் இருக்கும் தாய்மை இது போன்ற சமயங்களில் பீறிட்டுக் கொண்டு வரும். ஆண்களுக்கு சாதகமாக அமையும்.

ஆனால் ஒருபக்கம் கவினைப் பார்க்கவும் பாவமாக இருந்தது. அவருக்கும் இந்த நிலைமை புரிகிறது. தன் பிழைகளையும் ஒப்புக் கொள்கிறார். இந்த கேம் முடிந்து இந்த விஷயம் மங்கலகரமாக முடிந்தால் நன்றாகத்தான் இருக்கும்.

“இப்ப உனக்கு ஒரு பெரிய டென்சன் ரிலீவ் ஆகியிருக்கும். எனக்குத் தெரியும்” என்றார் சேரன், லியாவிடம். அது எதிர்மறையான ரிசல்ட் ஆக இருந்தால் கூட அதை அறியும் வரை உண்டாகும் தவிப்பு இருக்கிறதே, அதுதான் பெரிய மனஉளைச்சல். அதனோடு ஒப்பிடும் போது நெகட்டிவ் ரிசல்ட்டின் பாதிப்பு கூட குறைவுதான்.

“டேய் நாளைல இருந்து பழைய கவினைப் பார்க்கணும். நாம பாட்டுப்பாடி ஜாலியா இருக்கணும். புரியுதா?” என்று கவினிடம் சொல்லிக் கொண்டிருந்தார் சாண்டி. சமயங்களில் அதீதமான கிண்டல்கள் செய்தாலும் சாண்டி மாதிரியான ஒரு நண்பன் கிடைப்பது பெரிய அதிர்ஷ்டம். பலமும் கூட.

**

81-ம் நாள். ‘ஜித்து ஜில்லாடி’ பாட்டைப் போட்டார்கள். அடிக்க வரும் அடர்த்தியான வண்ணங்களில் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு வனிதாவின் மகள்கள் வரப்போவதற்கான முன்னோட்டப் பாடல் போல அது அமைந்தது. இதற்கு சாண்டி டீம் நடனம் ஆடியது.

இதர போட்டியாளர்களிடம் இயந்திரக் குரலில் பேசினாலும் சாண்டியிடம் பேசும் போது மட்டும் பிக்பாஸின் குரலில் குறும்பும் குழைவும் வந்து விடுகிறது. ‘மைக்கை மாட்டறது முக்கியமில்ல. எப்படி மாட்டியிருக்கோம்-ன்றது முக்கியம்” என்று பஞ்ச் டயலாக் மாதிரி சாண்டியை அவர் கலாய்த்ததும் வீடே துள்ளிக் குதித்து இந்தக் கிண்டலை அனுபவித்தது.

‘காலையில் தினமும் கண்விழித்தால் நான் கைதொழும் தேவதை அம்மா’ என்ற பாடல் ஒலித்த போதே தர்ஷனுக்குள் மணி அடித்தது. தன் அம்மா வந்திருக்கிறார் என்று தெரிந்தவுடன் அவிழ்த்து விடப்பட்ட கன்றுக்குட்டி போல துள்ளிக் குதித்து ஓடினார் தர்ஷன். தன் அம்மாவைக் கண்டதும் கட்டியணைத்து முத்த மழை பொழிந்தார்.

அது எத்தனை நெருக்கமான உறவாக இருந்தாலும் கட்டியணைத்து முத்தமிடுவது ஆசிய கலாசாரத்தில் பொதுவாக கிடையாது. அன்றாட தினங்களில் நாம் இப்படிச் செய்வதில்லை. உயர்வர்க்கப் பிரிவுகளில் ஒருவேளை இது சகஜமாக இருக்கலாம். இப்படி போட்டியாளர்கள் நடந்து கொள்வதை சிலர் ஆபாசமாக கொச்சைப்படுத்தியும் எழுதுகிறார்கள்.

ஆனால் நீண்ட நாட்கள் கழித்து தன் உறவுகளைப் பார்க்கும் போது எழும் உணர்ச்சி மிகுதியால் இவை நிகழக்கூடும் என்று நல்ல விதமாகவே பார்க்கலாம்.

தர்ஷனின் அம்மா மிக ஜோவியலான நபராக இருந்தார். அனைவரிடமும் தன் பாசத்தைப் பகிர்ந்தாலும் ‘மதர்.. மதர்’ என்று அழைத்து அட்வான்ஸ் பிறந்த நாள் வாழ்த்து சொன்ன சாண்டிக்கு எக்ஸ்ட்ரா பாசம் கிடைத்தது. ‘சாண்டி இல்லைன்னா சீஸன் 3 போரடிச்சிருக்கும்” என்றார் தர்ஷனின் தங்கை. (உண்மைதான்!)

IMAGE_ALT

பானிபூரி விற்கிறவர் மாதிரி நெற்றியில் சிவப்பு கோடு போட்டுக் கொண்டிருந்த கைவினைக்கலைஞரான முகின், தர்ஷனின் அம்மாவிற்காக தன் கலைச்சேவையைக் காட்டினார். சாண்டி வேண்டுகோள் விடுத்தபடி பிறந்த நாள் கேக் வந்தது.

தர்ஷனின் அம்மாவிற்கு ‘பிறந்தநாள் வாழ்த்து’ சொன்னார் பிக்பாஸ். சாண்டியின் பாணியில் ‘தாங்க்யூ குருநாதா’ என்று தர்ஷனின் அம்மா சொன்னது அல்ட்டிமேட் மோமெண்ட். ஜாலியான அம்மா. அவர்கள் விடைபெறும் சமயம் வந்தது.

தர்ஷனின் தங்கை அதிகம் பேசவில்லையே என்று பார்த்தால், தர்ஷனை தனியாக ஓரங்கட்டி கால் மணி நேரத்திற்கும் மேலாக உபதேச மழை பொழிந்து தள்ளி விட்டார். அதேதான். ‘யாரையும் நம்பாதே. கவனமா விளையாடு”.

**

‘அசிங்கப்பட்டான் ஆட்டோக்காரன்’ ரேஞ்சிற்கு ஒரு தரமான சம்பவம் நடந்தது. தர்ஷனின் குடும்பத்தினர் விடைபெற்றுச் சென்றதும் வனிதா, லியா, கவின் ஆகியோர் நன்கு உறங்கிக் கொண்டிருக்கும் காட்சி தெரிந்தது. லியாவை வாக்குமூல அறைக்கு அழைத்த பிக்பாஸ், என்னாதிது.. சின்னப்புள்ளத்தனமா இருக்கு. நீதானே.. லீடர். நீயே தூங்கினா என்ன அர்த்தம்?” என்று கழுவி ஊற்ற, அதற்கும் சிரித்துக் கொண்டே பதில் சொன்ன லியாவின் குணாதிசயம் சற்று எரிச்சலைத் தந்தது.

வெளியே வந்த லியா, ‘எல்லோரையும் அடி வெளுக்கப் போறேன். உள்ளே என்னை அசிங்க அசிங்கமா திட்டறாங்க” என்று சுயபகடியுடன் நடந்ததை விவரித்தது சுவாரசியம்.

‘வாயாடி பெத்த புள்ள’ என்ற பாடல் ஒலிக்கும் போதே வனிதாவிற்குப் புரிந்து விட்டது. தன் மகள்கள் வரப் போகிறார்கள் என்று. அவர் மற்றவர்கள் போல் நெகிழ்ந்தோ, கண்ணீர் விட்டோ ஓடவில்லை. தினமும் ஸ்கூலில் இருந்து வரும் மகள்களை இயல்பாக வரவேற்பது போல, ‘பேக்கை கழட்டி வை’ என்பது போல் மிக இயல்பாக அதை எதிர்கொண்டார். ஆனால் இன்னொரு பக்கம் உள்ளுக்குள் மறைந்திருந்த அவருடைய பாசத்தையும் உணர முடிந்தது..

IMAGE_ALT

இது வேறு மாதிரியான வனிதா. பார்க்க மிக அழகாக இருக்கிற வனிதா.

‘யேய்.. அரிசி மூட்டை’ என்று இளைய மகளை வனிதா ஜாலியாக கிண்டல் செய்து அழைத்தது சுவாரசியம். கல்வி தொடர்பான சாதனைகளை அம்மாவிடம் மகள்கள் விவரித்தது நெகிழ்வான காட்சி. “நீ எனக்காக சமைச்சு கொடு’ என்று இளைய மகள் கேட்டது நெகிழ்வை ஏற்படுத்தியது. இதற்கு சேரன் கண்கலங்கி விட்டார்.

சிறு பிள்ளைகளுக்கு விளையாட்டு காட்டுவதில் முகின் தேர்ந்தவராக இருக்கிறார். சிறிது நேரத்திலேயே சகஜமான சூழலை உருவாக்கி அவர்களை விளையாட வைத்தார். பொதுவாக எப்போதுமே மூத்த பெண் சாதுவாகவும் இளையது துறுதுறுப்பாகவும் இருப்பது வழக்கம். இது வனிதா மகள்களிடமும் தென்பட்டது. விளையாட்டின் இடையே தன் அக்காவை சைடு கேப்பில் கன்னத்தில் போட்டது ‘அரிசி மூட்டை’. ஏதாவது பழைய கணக்காக இருக்கும். இப்போது பழி தீர்த்துக் கொண்டது.

தன் அம்மாவை தனியாக அழைத்த மூத்தது, உபதேசங்களை வழங்க ஆரம்பித்தது. அதேதான். ‘யாரையும் நம்பாதே. ஃபோகஸ் பண்ணி விளையாடு” அடப்பாவிகளா! குழந்தைகளையாவது குழந்தைகளாக இருக்க விடுங்கப்பா.

வனிதாவின் குழந்தைகளை வழியனுப்பி வைப்பதற்காக ஸ்பெஷலாக ‘ரவுடி பேபி’ பாட்டைப் போட்டார் பிக்பாஸ். வனிதா உட்பட அனைவரும் நடனமாடி மகிழ்ந்தார்கள். சாண்டி சொல்லித்தந்த படி ஸ்டெப்களைப் போட முயன்றது ‘அரிசி மூட்டை’. (இதை நானும் பிரியமாகவும் செல்லமாகவும்தான் சொல்கிறேன். பின்னூட்டங்களில் வந்து பொங்காதீர்கள்!).

மகள்கள் வரும் போது இயல்பாக வரவேற்ற வனிதா, அவர்கள் செல்லும் போது வேறுவிதமாக கண்கலங்கி மாறினார். ஒரு தாயின் முகம் அது. இப்போதும் சேரன் கண்கலங்கினார். ‘அழகான குழந்தைகள்’ என்றார்கள் இதர போட்டியாளர்கள். உண்மைதான். க்யூட் பேபிஸ்.

**

சும்மாவே கண்கலங்கும் சேரனுக்கு சலங்கை கட்டி விடும் விதமாக ‘ஞாபகம் வருதே.. பாட்டைப் போட்டார்கள். கதறியழும் மோடிற்கு மாற தயாராக இருந்தார் சேரன். ஒரு பக்கம் கிண்டலடித்தாலும் சேரன் அடிப்படையில் நெகிழ்வான மனநிலையை உடையவர். அப்படியிருப்பதால்தான் ‘பாண்டவர் பூமி’ போன்ற படங்களை அவரால் இயக்க முடிந்தது.

சேரனின் அம்மா, தங்கை, இளைய மகள் தாமினி ஆகியோர் உள்ளே நுழைந்ததும் பாய்ந்தோடி சென்று அவர்களைக் கட்டியணைத்துக் கொண்டார் சேரன். அவர்களின் நெகிழ்ச்சியும் கண்ணீரும் நமக்குள்ளும் பாதிப்பை ஏற்படுத்தியது.

“எங்க அப்பாவை பார்த்துக்கிட்டதுக்கு ரொம்ப நன்றி” என்றார் தாமினி, ஷெரீனிடம். சேரனின் தங்கை பெயரும் வனிதாவாம். (இப்போதுதான் சேரனின் பாசம் புரிகிறது). அதென்னமோ தாய்மார்களின் ஆதரவு சாண்டிக்கு கிடைத்து விடுகிறது. சேரனின் அம்மா சாண்டியிடம் பாசமழை பொழிந்து கொண்டிருந்தார். சமர்த்துப் பிள்ளையான தர்ஷனுக்கும் அம்மாவின் பாசம் கிடைத்தது.

காதலில் மட்டுமல்ல அனைத்து உறவுகளிலும் பொஸஸிவ்னஸ் உள்ளது. அது தாமினியிடம் வெளிப்பட்டது. “தெரிஞ்சோ.. தெரியாமலோ.. எங்க அப்பாவை அப்பான்னு கூப்பிட்டிங்க. நீங்க சரியா இருந்தாலும் சரி, தவறாக இருந்தாலும் சரி, எங்க அப்பா உங்க கூட நிற்பார்” என்று தாமினி லியாவிடம் கூறினார். பொருள் பொதிந்த காட்சி.

“எனக்கு சில விஷயங்கள் நடந்த போது” என்று தாமினி ஆரம்பித்த போது ‘சரி..சரி..’ என்று மகளை அமைதிப்படுத்தினார் சேரன். (இந்த விவகாரம் சில வருடங்களுக்கு முன்பு ஊடகங்களில் பரபரப்பாக இருந்தது நினைவிருக்கலாம்). ‘

தந்தையை தனியாக அழைத்துச் சென்ற தாமினி, ‘லியா கிட்ட ரொம்ப பாசம் காட்டாதீங்க. கடுப்பாகுது. அவங்கங்க வேலையைத் தான் அவங்கங்க பார்க்கறாங்க. நானும் அக்காவும்தான் உங்க பிள்ளை. அவங்க கிட்ட பேசினா டென்ஷன் ஆயிடுவேன்’ என்றதில் செல்லக் கோபமும் பொஸஸிவ்னஸூம் தென்பட்டது.

IMAGE_ALT

‘காமிரா முன்னாடி நடிக்கறீங்களா?” என்பது போன்ற கேள்விகள் லியாவிடம் இருந்து எழாமல் இருந்திருந்தால் இப்படி ஆகியிருக்காதோ, என்னமோ. ஜாலியாக மகளைச் சமாதானப்படுத்தினார் சேரன்.

சேரனின் குடும்பத்தைக் கிளம்பச் சொல்லி பிக்பாஸ் அறிவிப்பு வந்தது. அதில் சேரனின் தங்கை வனிதாவின் பெயரும் இருந்ததால், ‘நான் போறேன். நீங்க இருங்க” என்று பிக்பாஸ் வனிதா காமெடி செய்யத் துவங்கினார். “பிக்பாஸ் நீங்க என் பேரைத்தான் சொன்னீங்க. நான்தான் போவேன்” என்று வெளி கேட் வரைக்கும் இந்த மொக்கை காமெடியை அவர் தொடர்ந்தது பார்க்க அபத்தமாக இருந்தது. பிக்பாஸ் அவரது வேண்டுகோளை நிறைவேற்றியிருக்கலாம்.

(சாரி.. வனியக்கா ஆர்மி.. வனிதாவை ஒரு வரியாவது கலாய்க்கலைன்னா. இந்தக் கட்டுரை முழுமையடையாது. அதனால்தான்).

அருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE