Saturday 20th of April 2024 07:08:16 AM GMT

LANGUAGE - TAMIL
‘லாலா பாடும் பாட்டு…’ - சுரேஷ் கண்ணன்

‘லாலா பாடும் பாட்டு…’ - சுரேஷ் கண்ணன்


‘ஆல்தோட்ட பூபதி’ பாடலுடன் 82-ம் நாள் விடிந்தது. தன் மகளையும் மனைவியையும் பார்க்க மிக ஆவலாக காத்துக் கொண்டிருந்தார் சாண்டி. ‘தூக்கமே வரலை. குழந்தையைப் பார்த்து 3 மாசம் ஆகப் போகுது.. வளர்ந்திருப்பாளோ?” என்றெல்லாம் அனத்திக் கொண்டிருந்தார்.

தன் சிஷ்யப்பிள்ளையிடம் அதிக நேரம் விளையாட வேண்டும் என்று பிக்பாஸ் நினைத்தாரோ என்னமோ, கடைசியில்தான் சாண்டியின் குடும்பத்தினர் வந்தனர்.

‘என் பிரெண்ட்டை போல யாரு மச்சான்..?” என்ற பாடல் ஒலித்தது. அப்போதே தெரிந்து விட்டது அது கவினுக்கான அழைப்பு என்று. ‘நட்புன்னா.. என்னன்னு தெரியுமா.. தேவா –ன்னா யாரு தெரியுமா?” என்று நட்பின் புகழை தொடர்ந்து பாடிக் கொண்டிருக்கும் கவினுக்கு அவருடைய நண்பன் வந்தது மிகப்பொருத்தம். ஆனால் வில்லங்கமான நண்பன். (கவினின் பெற்றோர் வர முடியாத சூழலைப் புரிந்து கொள்ள முடிகிறது).

“என்னடா.. என்னைப் பார்த்தவுடனே அழுதிட்டு ஓடி வந்து கட்டி பிடிப்பே.... உன் கண்ணீரால் என் பாதங்களை நனைப்பே’ன்னு பார்த்தா சாதாரணமா வர்றியே’ என்று நண்பர் ப்ரதீப்.. கலாய்க்க, ‘அந்த சீன்லாம் கிடையாது. உன் நேரம் முடிஞ்சுடுச்சு கிளம்பு” என்று பதிலுக்கு கலாய்த்தார் கவின்.

(எனக்கும் இப்படியொரு அனுபவம் உண்டு. இளம் வயதில் என் நண்பன் வீட்டுக்குச் செல்லும் போதெல்லாம், நான் உள்ளே கால் வைத்த அடுத்த நிமிடமே அவன் தன் அண்ணன் மகளிடம் “அங்கிள் கிளம்பறாரு.. டாட்டா சொல்லு’ என்பான்)

“இவனுக்கும் எனக்கும் ஏற்கெனவே ஏழாம் பொருத்தம். கடவுளே… இவனையா அனுப்பிச்சீங்க” என்று ஜாலியாக நொந்து கொண்டார் கவின். வந்த நண்பர் கிடைச்ச சான்ஸ் எதையும் மிஸ் பண்ண விரும்பாமல் ஷெரீன் உட்பட அனைவரையும் கட்டியணைத்துக் கொண்டார். வனிதாவையும் விட்டு வைக்கவில்லை.

“இவரு ரொம்ப பெரிய புத்திசாலியாம்.. அப்படி நெனச்சு ஆடிட்டு இருக்காரு” என்று நண்பர் கலாய்த்ததை இதர போட்டியாளர்கள் கைத்தட்டி மகிழ்ந்தார்கள். பின்னே.. எந்த விஷயமாக இருந்தாலும் அரைமணி நேரத்திற்கு கவின் லாஜிக் மழை பொழிந்தால்?..

“கக்கூஸ் பக்கம் போகலாம்.. வாடா. அதானே.. உன் ஃபேவரைட் ஏரியா?” என்று கவினை அந்தப் பக்கம் தள்ளிக் கொண்டு போனார் ப்ரதீப். அவர் எதையோ சொல்ல ஆரம்பிக்க, ‘அது ஒருவேளை தன் காதல் லீலைகள் பற்றியது’ என்று கவின் நினைத்துக் கொண்டாரோ என்னமோ, ஒரு மாதிரியாக தடுக்க முயல “டேய் என்னைப் பேச விடுடா.. நான் சொல்றது அதைப் பத்தியில்ல. நீ ஒரு கலைஞன்டா.. மகா கலைஞன். நீ தனி ஆளு இல்ல.. உன் பின்னால ஒரு கூட்டமே இருக்கு. நீ நெறய பேருக்கு இன்ஸ்பிரஷேனா இருக்கே..அவங்களையெல்லாம் ஏமாத்திட்டு சுயநலமா இருக்கே” என்பது போல் முதலில் பில்டப் தந்தாலும் பிறகு ப்ரதீப் சொன்ன உபதேசங்கள் அவசியமானது.

“நீ ஜெயிச்சுட்டு வருவேன்னு நம்பி உங்க பேரண்ட்ஸ் இருக்காங்க.. நண்பர்கள் இருக்கோம். உன்னை ஃபாலோ பண்றவங்க இருப்பாங்க.. அத்தனை பேர் கனவையும் உன் சுயநலத்தால நாசம் பண்ற. அவங்க அவங்க கேமை அவங்க அவங்க பார்த்துப்பாங்க.. யாரையும் ஹர்ட் பண்ணாம ஜெயிக்கவே முடியாது. நீ இங்கே எதுக்கு வந்தியோ.. அந்த வேலையைப் பாரு. நீ ஆடறது தப்பான கேம் மச்சான். விட்டுக் கொடுக்காதே” என்று உபதேச மழையாகப் பொழிந்தார் ப்ரதீப்.

ஆனால் கவினின் மனதில் மிக ஆழமானதொரு எண்ணம் தோன்றியுள்ளது. பிக்பாஸில் கிடைக்கும் வெற்றியை விடவும் நட்புகளைச் சம்பாதித்திருப்பதுதான் முக்கியம் என நினைக்கிறார். இது ஒருவகையில் நல்ல எண்ணம் என்றாலும் அடிப்படையில் முட்டாள்தனமானது. நட்பையும் இழக்காமல் வெற்றியையும் அடைய முடியும். நல்ல நண்பனாக இருந்தால் உன் வெற்றியோடு அவனும் இணைந்து கொண்டாடுவான். பகைமை பாராட்ட மாட்டான்.

‘உன்னை நம்பியிருக்கறவங்க எதிர்பார்ப்பையெல்லாம் உடைச்சுட்டு சுயநலமா சில விஷயங்கள் இங்க செஞ்சிட்டு இருக்கே. இங்க இருக்கறவங்க மாதிரி வெளியே இருக்கறவங்க எதிர்பார்ப்பும் ஆசையும் முக்கியமில்லையா?” என்று ப்ரதீப் கேட்ட கேள்விகள் கவினை அசைத்துப் பார்த்தது.

“இவனுக்கு ரொம்ப அனுதாபம்-லாம் காட்டாதீங்க.. சண்டை போடுங்க.. அப்பதான் ஒழுங்கா கேம் ஆடுவான்” என்று நண்பன் சொன்னது முக்கியமானது.

ஆனால், பிறகு பொதுச்சபையில் ப்ரதீப் செய்த காரியம் அபத்தமானது. நாடகத்தனமானதும் கூட. “உங்களை நம்பினவங்களை ஏமாத்தினது உட்பட பல விஷயங்களுக்காக உன்னை ஒண்ணு செய்யப் போறேன்” என்று தயாரானவர் கவினை பளீர் என்று அறைந்தார். (தமிழ் கலாசாரம் காரணமாக அந்தக் காட்சி எடிட்டிங் டீமால் சாமர்த்தியமாக மறைக்கப்பட்டது). இன்னொரு கன்னத்தைக் காட்டும் ஆன்மீகவாதி மாதிரி அந்த அறையை புன்னகையுடன் ஏற்றுக் கொண்டார் கவின். (‘பீஸூ பீஸா கிழிக்கும் போதும் யேசு போல முகத்தைப் பாரு’)

IMAGE_ALT

கவினுக்கான ப்ரதீப்பின் அறிவுரைளைக் கேட்ட இதர போட்டியாளர்கள ‘நல்லா வேணும் இவனுக்கு’ என்கிற முகபாவத்தைத் தந்து கொண்டிருந்தாலும் கன்னத்தில் விழுந்த அறை காரணமாக சற்று அதிர்ச்சி அடைந்தனர். குறிப்பாக லியாவின் முகத்தில் அதிர்ச்சி அப்பட்டமாகத் தோன்றியது. சாண்டிக்கும் கூட ப்ரதீப் செய்த ஆட்சேபகரமானதாகத் தோன்றியது போல. அவர்களை ஒரு மாதிரியாக சமாதானப்படுத்தினார் ப்ரதீப். (இதன் மூலம் கவினுக்கு அனுதாபம் கிடைக்கும் என்கிற கணக்கு கூட ஒரு காரணமாக இருக்கலாம்).

“நீங்க அவனுக்கு நல்ல தோழியா இருந்திருக்கீங்க.. ஆனா உங்க பேரண்ட்ஸ்தான் முக்கியம். பார்த்து விளையாடுங்க” என்று ஒரு வார்த்தை லியாவிடம் பேசி விட்டு கிளம்பிய ப்ரதீப் ‘ஜெயிக்கறவங்க.. எனக்கு ஒரு நல்ல போன் வாங்கிக் கொடுங்க” என்று சைடு கேப்பில் ஒரு பிட்டையும் போட்டு விட்டுச் சென்றார்.

‘கவினுக்கு விழுந்த அறை எனக்கு விழுந்த மாதிரி இருந்தது.. ப்பா..” என்று தன் கன்னத்தை தடவி நெகிழ்ந்து போனார் சேரன். (இப்பவே மாமனார் பாசம் வந்துடுச்சா.. என்ன?!”). “கவினுக்கு இந்த அறை தேவைதான். ஆனா அவன் நெஜம்மாவே அறைவான்னு நான் எதிர்பார்க்கலை” என்றார் ஷெரீன்.

“நான் அவனை கழுவி கழுவி ஊத்துவேன்.. அவன் என்னை பச்சை பச்சையா திட்டுவான்.. இதெல்லாம் எங்களுக்குள்ள பழக்கம்தான்” என்கிற மோடில் இருந்த கவின் “அவன் அறைந்த காரணம் எனக்குப் புரியது. ப்ரீயா விடுங்க” என்றார்.

பிறகு மெளனமாக அமர்ந்திருந்த கவினை நோக்கி, ஒரு யக்ஷி போல தலைமுடியை விரித்துப் போட்டுக் கொண்டு நடந்த லியா.. “அவன் சொன்னதெல்லாம் கரெக்ட். உன் கேமை நீ விளையாடு. அதுதான் சரி.. இப்ப ஓகேவா?” என்று கேட்க “இப்பத்தான் நான் ஓக்கேவா இருக்கேன்.. என்னா அடி?” என்றார் கவின். (இப்படி அறைஞ்சாதான் கவின் மாறுவார்-ன்னா முதல் வாரமே யாராவது அறைஞ்சிருக்கலாம்).

“உன் சகோதரிகள்தான் உனக்கு முக்கியம். அவங்களை விட்டுடாத.. என் சகோதரிகளை நான் அப்படித்தான் பார்த்துக்கிட்டேன். ஆனா அவங்க என்னை டீல்ல விட்டுட்டாங்க” என்று உபதேசம் என்கிற பெயரில் தன் சோகக்கதையையும் இணைத்து லியாவிடம் ஷெனாய் வாசித்தார் வனிதா.

“நான் அப்படித்தான் இருந்திருக்கேன். அம்மாவை விட என் பேச்சைத்தான் அவங்க கேட்பாங்க.. இப்ப என்னடான்னா அதுங்களே வந்து எனக்கு உபதேசம் பண்ணுதுங்க.. இங்க வந்து சில ஃபீலிங்க்ஸ்ல இது கேம்-ன்றதையே மறந்துட்டேன். எப்பவாவதுதான் ஞாபகத்திற்கு வருது” என்று பதிலுக்கு உருகினார் லியா. (இவங்களுக்கும் யாராவது ஒரு அறையைப் போடுங்கப்பா!).

**

சிறிது நேரத்தில் ஷெரீனின் அம்மாவும் தோழியும் வந்தார்கள். ஷெரீனின் அம்மா மிக ஜாலியான கேரக்ட்டராக இருந்தார். எல்லோரையும் கலாய்த்துக் கொண்டிருந்தார். தன் மகள் தர்ஷனுடன் நட்பிற்கும் மேலாகப் பழகுவது பற்றி அவருக்கு எந்தவொரு ஆட்சேபமும் இல்லை. (இதை வனிதா கொச்சைப்படுத்திப் பேசும் போதுதான் அவருக்கு ஆட்சேபம் வருவதை கமல் வந்த எபிஸோடின் போது காண முடிந்தது).

ஒரு சமூகத்தின் பின்னணி, கலாசாரப் பின்புலம் போன்றவற்றினால் பல கோணங்கள், அணுகுமுறைகள் மாறுகின்றன. லியாவின் பெற்றோர்களால் இப்படி எளிதாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. ஒரு சமூகத்தில் மரபு மீறலாக கருதப்படுவது இன்னொரு சமூகத்தில் அடிப்படை மரபாக, இயல்பாக இருக்கிறது.

IMAGE_ALT

“நீங்கதான் என் பொண்ணைப் பார்த்துக்கட்டீங்க” என்று சேரனுக்கு நன்றி சொன்ன ஷெரீன் அம்மா, ‘தூண்டுதலாக இருந்ததாக” வனிதாவிற்கும் நன்றி சொன்னார். (அப்படியா?). பிறகு, “நீ என் பொண்ணை ரொம்ப கலாட்டா பண்றே” என்று சாண்டியை ஜாலியாக கண்டித்தவர், அவருடன் வந்த ஸ்ரீஜாவை முகின் தள்ளிக் கொண்டு போக “டேய் முகினு. அபிராமி கோச்சுக்கப் போறாடா” என்று கலாய்த்தது அல்ட்டிமேட் மோமெண்ட்.
IMAGE_ALT

ஷெரீனின் அம்மா பெருந்தன்மையாக இருந்தாலும் கூட வந்த தோழி அப்படியிருக்கவில்லை. ‘வனிதாவை நம்பாதே. அவ உன் தோழி இல்லை. உன்னைப் பற்றி நெறைய புறம் பேசுகிறார்” என்று பிறகு ஷெரீனிடம் தனிமையில் போட்டுக் கொடுத்தார்.

“டேய் கவின்.. ஸ்ரீஜா கிட்ட பேசுடா” என்று ஷெரீனின் அம்மா ஒரண்டையை இழுக்க ‘தெய்வமே’ என்று கையெடுத்து கும்பிட்ட கவின் “எதுவா இருந்தாலும் வெளில போய் பேசிக்கலாம்” என்று பிக்பாஸின் பிரபலமான டயலாக்கை சொல்ல சபையே வெடித்து சிரித்தது. “இல்ல. இப்ப நான் மனசு மாறிட்டேன். முகின்தான் என் ஃபேவரைட்” என்று ஜாலியாக கண்ணடித்தார் ஸ்ரீஜா.

சாண்டி பேசிய ஆங்கிலத்தைப் பார்த்து கலவரமாகி பீதியடைந்த ஷெரீனின் அம்மா, பிறகு சாண்டியுடன் ஒரு அற்புதமான நடனத்தை ஆடினார்.

IMAGE_ALT

பிறகு ஷெரீன் தனிமையில் தன் தாயுடன் பேசியது முக்கியமான காட்சி. ‘சேரன் மிகவும் கரிசனத்துடன் தன்னைப் பார்த்துக் கொள்வதால் தந்தையின் நினைவுகள் வருவதாக ஷெரீன் தெரிவித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. “சொல்லியிருந்தா கூப்பிட்டு வந்திருப்பேனே.. நீதானே பார்க்க விரும்பலைன்னு சொல்லிட்டு இருப்பே” என்றார் யசோதா.

“பாப்பா பாடும் பாட்டு” என்று பாடிய கொடுமையோடு அவர்கள் விடைபெற்றுக் கொண்டார்கள்.

**

தன் குடும்பம் வருவதற்காக மிக ஆவலுடன் காத்திருந்தார் சாண்டி. “என் பொண்டாட்டி வர்றா” என்று அவர் மேக்கப் எல்லாம் போட குறுகுறுவென்று பார்த்தார் லியா. ‘வெட்கமா வருது’ அப்படி போ’ என்றார் சாண்டி. பிறகு ‘பாய்ஸ் டீம்’ பல பாட்டுக்களைப் பாடி சாண்டியை கலாய்த்துக் கொண்டிருந்தது. ‘அழகு குட்டி செல்லம்’ பாடலை முகின் பாடியது நல்ல டைமிங்.

சாண்டியை நன்றாக வெறுப்பேற்றி கண்கலங்க வைத்தார் பிக்பாஸ். இன்னும் சில நேரம் கடந்த பிறகு பாடல் ஒலித்தது. ‘லாலா.. லாலா..’ என்று மெளனராகம் படத்தின் பாடலை குழந்தையின் பெயருடன் மேட்ச் செய்தார் பிக்பாஸ்.

IMAGE_ALT

சாண்டியின் குழந்தை மெல்ல நடந்து வந்தது. தெய்வதிருமகள் விக்ரம் மாதிரி மண்டியிட்டுக் கொண்டு கண்களில் நீர் வழிய ‘லாலா’ என்று அழைத்தார் சாண்டி. அது அருகில் வந்ததும் பாய்ந்து முத்தமழை பொழிந்தார்.

குழந்தை தன்னை அடையாளம் காணவில்லையே என்று சாண்டிக்கு வருத்தமாக இருந்தது. இதற்காக அழுது கொண்டேயிருந்தார். இது ஏறத்தாழ குடும்பத்தைப் பிரிந்திருக்கும் அனைத்து தந்தைகளும் அடையும் துயரம்தான். குடும்பத்திற்கு பொருளீட்டுவதற்காக பல வருடங்கள் வெளிநாட்டில் பணிபுரிந்தவர்கள் ஆவலுடன் வீட்டுக்குத் திரும்பும் போது தன் சொந்தக் குழந்தையே தன்னை பூச்சாண்டியைப் பார்ப்பது போல் பார்த்தால் மனம் உடைந்து போவார்கள்.

ஆனால் அது சிறிது நேரம்தான். அல்லது சில நாட்கள்தான். ‘இவர்தான் தன் தந்தை’ என்பது கற்றுத்தரப்பட்டவுடன் குழந்தை நெருக்கமாகி விடும். இந்த இயல்பான விஷயத்தைக் கூட சாண்டியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்பது ஆச்சரியம்.

வீட்டிற்குள் நுழைந்த குழந்தை புதிய மனிதர்களைக் கண்டு எவ்வித அச்சமும் பதட்டமும் அழுகையும் இல்லாமல் இயல்பாக நடமாடியது. இதுவே பெரிய விஷயம். தினம் தினம் தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சியைப் பார்த்திருப்பதால் அதற்குப் பழகி விட்டிருக்கும். “இப்ப என்ன ப்ரீஸ் டாஸ்க்தானே.. நேத்து தர்ஷன் அம்மா வந்தாங்கள்ல” என்று அது கேட்டிருந்தாலும் கூட நான் ஆச்சரியப்பட்டிருக்க மாட்டேன்.

IMAGE_ALT

“எப்பவுமே நான் கூப்பிட்டா வந்துருவா.. இப்ப வர மாட்டேன்றா.’ என்று சாண்டி கண்கலங்க.. “யோவ் வென்று.. நீ கேமை ஜெயிச்சுட்டு வெளிய வா. ரொம்ப சீன் போடாத’ என்கிற மாதிரி ஆலோசனை சொன்னார் சாண்டியின் மனைவி.
IMAGE_ALT

லாலாவிடம் ஒரு தாழ்மையான வேண்டுகோள். ‘நீ கிளம்புறதுக்குள்ள.. அப்பா கூப்பிட்டா உடனே அவரைத் தேடி ஓடிப் போய் ஒரு முத்தா கொடுத்து தொலைச்சுடும்மா.. இல்லைன்னா.. உங்க அப்பன் ரெண்டு நாள் அழற காட்சியையெல்லாம் பார்க்க எங்களால முடியாது’.

**

ஒரு கற்பனைக் காட்சி:

பிக்பாஸ் முடிந்து சாண்டி வீட்டுக்குத் திரும்பி சில நாட்கள் கழிந்திருக்கின்றன.

சாண்டியின் மனைவி: “ஏங்க.. குழந்தை அழுதுக்கிட்டே இருக்கே.. கொஞ்சம் என்னன்னு பாருங்களேன். நான் கிச்சன்ல வேலையா இருக்கேன்”

சாண்டி: “எப்பப் பாரு. ஙொய்.. ஙொய்..ன்னு அழறதே இதுக்கு வேலையைப் போச்சு.. கொஞ்ச நேரமாவது சும்மா இருக்கா.. எனக்கு சூட்டிங் டைமாச்சு.. நீ பாரு.. நான் கிளம்பறேன்”

.இதுவும் ஒருவகை ரியாலிட்டிதான்.

அருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE