Wednesday 24th of April 2024 08:20:52 PM GMT

LANGUAGE - TAMIL
‘அன்னை தெரசாவாக மாறிய நீலாம்பரி' - சுரேஷ் கண்ணன்

‘அன்னை தெரசாவாக மாறிய நீலாம்பரி' - சுரேஷ் கண்ணன்


பிக்பாஸ் பற்றி சொல்லப்படும் சில பொதுவான புகார்களை, குற்றச்சாட்டுக்களைப் பற்றி பார்த்து விட்டு இன்றைய நாளின் நிகழ்வுகளுக்குள் செல்லலாம். இந்த நிகழ்ச்சியின் எதிர்மறைத்தன்மைகளை நான் எந்த விதத்திலும் நியாயப்படுத்த முயலவில்லை. அவற்றின் மீது எனக்கும் விமர்சனங்கள் உண்டு.

ஆனால் இந்த நிகழ்ச்சி பலரால் பார்க்கப்படும் நிலையில் இதை எவ்வாறு அணுகுவது என்பதை நெறிமுறைப்படுத்தலாம் என்று தோன்றுகிறது. அதுவே என் கட்டுரைகளின் அடிநாதம்.

சீஸனுக்கு சீஸன் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் பெருகிக் கொண்டிருக்க இதன் மீது கடுமையான விமர்சனங்களும் இன்னொரு புறம் வந்து கொண்டே இருக்கின்றன. அந்த விமர்சனங்களில் பெரும்பாலும் உண்மையிருக்கின்றன. மறுப்பில்லை. ஆனால் வெகுசன கேளிக்கைகளில் இருக்கும் அதேவிதமான ஆபத்துக்கள் பிக்பாஸிலிலும் இருக்கும் போது இது மட்டும் ஏன் குறிவைக்கப்பட்டு தாக்கப்படுகிறது என்கிற முரண் எனக்குப் புரியவில்லை.

சராசரியான நபர்கள் இதை ‘நாய் கொண்டு வந்து போட்ட வஸ்து போல’ பாவனையுடன் புறக்கணிப்பதைக் கூட புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் வெகுசன மனதை பெரும்பான்மையாக கவரும் எந்தவொரு கேளிக்கை வடிவமும் ஆய்வுக்குரியது என்பதை அறிவுஜீவிகள் கூட உணராமல் கண்மூடித்தனமாக நிராகரிப்பது நகைச்சுவையாக இருக்கிறது.

பாம்பின் விஷத்திலிருந்து மருந்து கிடைப்பது போல இந்த நிகழ்ச்சியில் இருந்து நாம் சில படிப்பினைகளைக் கற்க முடியும். சில உதாரணங்கள் சொல்கிறேன்.

ஒரு குழந்தை பிறந்து வளர்ந்து வீடு என்னும் செளகரியமான இடத்திலிருந்து பள்ளி என்னும் ஒரு புதிய சூழலுக்கு செல்ல நேர்கிறது. ஆசிரியர், சக மாணவர்கள் உள்ளிட்டு பல புதிய நபர்களை அந்தக் குழந்தை எதிர்கொள்ள வேண்டும்.

புகுந்து வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கும் மருமகள், புதிய சூழலையும் தன்னை மெல்லிய விரோதத்துடன் பார்க்கும் நபர்களையும் சிக்கல்களையும் எதிர்கொள்ள வேண்டும்.

ஒரு புதிய அலுவலகத்திற்குள் செல்லும் இளைஞன் சக பணியாளர்களின் அலுவலக அரசியலையும் வம்புகளையும் தாண்டி வர வேண்டும்.

அன்றாட வாழ்க்கையில் இப்படியான பல புதிய சூழல்களை, நபர்களை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கான சில படிப்பினைத் துளிகளை பிக்பாஸ் நிகழ்ச்சியில் கற்க முடியும்.

என் மகள் கலங்கிய முகத்துடன் அமர்ந்திருப்பதை ஒரு நாள் கண்டேன். மெல்ல விசாரித்தேன். ‘அவளுடைய க்ளோஸ் பிரெண்ட் ஒருத்தி இவளைப் பற்றி எங்கோ புறம் பேசி விட்டாளாம்’. “என்னால இதை நம்ப முடியலை. ஏத்துக்கவே முடியலைப்பா. அவ்ளோ கோபம் வருது. இன்னியோட அவ சகவாசம் ஒவர். பிரெண்ட்ஷிப் கட். இனி என் வாழ்க்கையிலேயே அவளைப் பார்க்கக்கூடாது’ன்னு நெனக்கறேன்” என்று மிகையாக துயர் அடைந்து கொண்டிருந்தாள்.

IMAGE_ALT

நான் அவளுக்கு விளக்கினேன். “நீ ஒரு புத்திசாலியாக இருந்தால் இது போன்ற விஷயங்களை எதிர்பார்த்திருக்க வேண்டும். இந்த உலகம் அப்படிப்பட்டது. மனிதர்கள் அப்படிப்பட்டவர்கள். இது இயற்கையானது. நல்ல குணாதிசயங்களும் தீய குணாதிசயங்களும் கலந்தவர்களே மனிதர்கள். சதவீதம்தான் மாறும். ஒருவரை நீ நட்பாக ஏற்றுக் கொண்டால் அவர்களின் நிறை, குறையோடுதான் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.

நட்பு கருதி உன்னிடம் சொல்ல முடியாத ஏதோ ஒரு விஷயத்தை அவள் வேறு எங்கோ சொல்லியிருக்கலாம். அதற்கான நியாயமான காரணங்கள் இருந்திருக்கலாம். அந்தச் சமயத்தில் உன் தோழி உன் மீது தற்காலிக வருத்தத்தில் இருந்திருக்கலாம். இப்படி பல காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, இதைப் பற்றி அவளிடமே பேசி சரி செய்யலாம். அல்லது முதிர்ச்சியுடன் இதைக் கடந்து விடலாம். இதனால் அவளை நீ வெறுப்பதோ, அல்லது நட்பை துண்டிப்பதோ முறையானதல்ல. ‘குற்றம் பார்க்கின் சுற்றமில்லை’ என்கிற ஒரு வரி இதை மிக அழகாக விளக்கி விடுகிறது’ என்றெல்லாம் சொன்ன பிறகு சற்று சமாதானம் ஆனாள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில், ‘கேம்’ என்று சொல்லப்படுவதை ‘வாழ்க்கை’ என்று replace செய்து விடலாம். இந்த அனுபவங்கள் வெளியில் உதவும். அப்படியான ‘பயிற்சிப்பட்டறை’ என்று பிக்பாஸை சொல்லலாம்’ என்றார் கமல். உண்மை.

**

மேடையில் அல்லாமல் பார்வையாளர்கள் மத்தியில் அமர்ந்திருந்தார் கமல். (அவருக்குப் பின்னால் ஒளிவட்டம்).

“போட்டியாளர்கள் பற்றிய விமர்சனங்களை அவர்களின் குடும்பத்தார் உடனுக்குடன் அறிந்திருப்பார்கள். தங்களின் உறவுகளை சந்தித்த மகிழ்ச்சியுடன் அவர்கள் இங்கு அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் ஒரு குடும்பம் இப்போது மகிழ்ச்சியாக இருக்க வாய்ப்பில்லை’ என்பது போல் கூறி தமிழகத்தில் பெருகி வரும் கட்அவுட், பேனர் கலாசாரத்திற்கு சமீபத்தில் பலியான சுபஸ்ரீயின் மரணத்திற்கு அனுதாபமும் அரசாங்கத்திற்கு கண்டனமும் தெரிவித்தார். இந்த ஆபாச கலாசாரம் பெருகுவதற்கு காரணமாக இருக்கும் மக்களையும் அவர் குறிப்பிட்டது நன்று.

இது தொடர்பாக தனது ரசிகர் மன்றச் செயல்பாடுகளை பல வருடங்களுக்கு முன்பே ஒழுங்குப்படுத்தி ஒரு முன்னுதாரணமாக இருந்த கமலின் சாதனை குறிப்பிடத்தகுந்ததுதான்.

இதன் பிறகு வெள்ளிக்கிழமை நிகழ்வுகள் காட்டப்பட்டன. தன் குழந்தையுடன் மழையில் ஜாலியாக நடமாடிக் கொண்டிருந்தார் சாண்டி. அவர்களின் குடும்பத்தாரின் வெளியேற்றம் பற்றிய அறிவிப்பு வந்ததும் தன்னிச்சையாக கண் கலங்கத் துவங்கினார் சாண்டி. ‘லாலாவை நாங்க வெச்சுக்கறோம். சாண்டியை கூட்டிட்டு போங்க’ என்று ஒரு புதிய டீலிங்கை ஜாலியாக வைத்தார் ஷெரீன்.

“இன்னமும் கொஞ்ச நாள்தான். வெளியே வந்துடலாம். அழாம இருங்க” என்று தன் கணவருக்கு ஆறுதல் சொன்ன சாண்டியின் மனைவி, பிரிவுபசார முத்தமும் அளித்தார்.

83-ம் நாள். ‘இது எங்க கோட்டை. கிளம்பு கிளம்பு.’ என்று போட்டியாளர்களை வெளியேற்றுவதற்கான பாடலை ஒலிபரப்பினார் பிக்பாஸ்.

மாம்பழம் என்னும் இயற்கையான வடிவத்தை மறக்கடிக்கச் செய்து அதை செயற்கையான முறையில் ருசியாக்கப்பட்ட பாட்டில் வடிவ திரவமாக நம் ஆழ்மனதிற்குள் படியச் செய்யும் உத்தியை வணிகர்கள் முயன்று கொண்டிருக்கிறார்கள். இதற்கு நாம் பலியாகக்கூடாது. இந்தப் பாட்டில்களை தினம் தினம் காண்கிற நமக்கே ஒவ்வாமை வந்து விடுகிற போது, போட்டியாளர்களுக்கு அது கசந்தே விடும் என்று தோன்றுகிறது. அந்தளவிற்கு தினம் தினம் காட்டி ரவா உப்புமா போல கடுப்படிக்கிறார்கள். போட்டியாளர்களும் வேறு வழியின்றி குடிக்கிறார்கள் போல.

இந்த குளிர்பானத்தின் புதிய வடிவத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பான போட்டி ஒன்று நடந்தது. பொறுமையாக நின்று விளையாடிய சாண்டியின் அணி வெற்றி பெற்றது. இதற்கு பரிசாக வந்த பிட்ஸாவை ஆளாளுக்கு மொக்கினார்கள்.

அடுத்தது சமையல் டாஸ்க். இதுவரை கேள்வியே படாத ஒரு உணவு வகையின் பெயரை தயார் செய்ய வேண்டும் என்று குறிப்பு வந்த போது ‘யாரு.. நானு..?’ என்று சுயபகடி செய்து கொண்டார் சேரன். (இது நாலாவது ஜோக்!). இந்தப் போட்டிக்கு வழிநடத்தவும் தீர்ப்பு சொல்லவும் செஃப் தாமு வந்தார். (இப்படி போட்டிகளில் உணவு வகைகளை ருசி பார்த்தே ஆள் இப்படியாகி விட்டார் போல).

ஷெரீன் தயாரித்துக் கொண்டிருந்த சிக்கன் வகையை ‘உதவி செய்கிறேன் பேர்வழி’ என்று அப்போதே சுடச்சுட லபக்கிக் கொண்டிருந்தார் கவின். “போட்டிக்கு சாம்பிள் பார்க்கக்கூட மிச்சம் வைக்க மாட்டே போலிருக்கே?” என்று கிண்டலடித்த தாமு, முகர்ந்து பார்த்தே உணவு வகைகளின் நிறை, குறைகளை ஆராய்ந்தார். (மிகச் சிறந்த சமையல் கலைஞர்கள், திருமணங்களுக்கு தயாராகும் உணவு வகைகளின் நிறை, குறைகளை அவை வேகும் போதே தொலைவில் இருந்து முகர்ந்து கண்டுபிடித்து விடுவார்களாம்).

இதில் ஆச்சரியகரமாக ஷெரீன் முதற்பரிசு வாங்கினார். அதை விட ஆச்சரியம் சேரனுக்கு கிடைத்த இரண்டாம் பரிசு. ‘காதலிக்கும் பெண்ணின் கைகள் தொட்டு நீட்டினால்’ பாடலுக்கு எஸ்.பி.பிக்கு போட்டியாக ஆடினார் தாமு.

**

அகம் டிவி வழியே வந்தார் கமல். “சேரனுக்கு கிடைத்தது ரகசிய அறை, கவினுக்கு கிடைத்தது பப்ளிக் அறை” என்று டைமிங்கிலும் ரைமிங்கிலும் பின்னி எடுத்தார். (இந்தக் கமெண்ட்டை எவ்வித வெட்கமும் இல்லாமல் சந்தோஷமாக ஏற்றுக் கொண்டார் கவின்).

சேரனின் சீக்ரெட் ரூம் அனுபவத்தைப் பற்றி கேட்டார் கமல். “லாஸ்லியாவோட ஏக்கம் பிடிச்சது. வனிதாவோட இன்னொரு பக்க முகம் தெரிஞ்சது” என்று சேரன் சொன்ன போது இடைமறித்த கமல் அதை ஆமோதித்து வனிதாவின் தாய்மை என்கிற அழகான பக்கம் அவர் மீதான பட்டப்பெயர்களை முழுவதுமாக மாற்றியமைத்து விட்டது என்றார். அதுவரை நீலாம்பரி போல் முகத்தை வைத்துக் கொண்டிருந்த வனிதாவின் முகம் இதன் பிறகுதான் இளகி புன்னகை வெளிப்பட்டது. (இப்படி சிரிச்சா மாதிரியே எப்பவும் மூஞ்சை வைத்திருக்கலாம்!).

“கவின் நல்ல பையன்” என்று சான்றிதழ் தந்த சேரன், சில கோளாறான விஷயங்கள் இருக்கு. சொன்னா புரிஞ்சுப்பாரு. சொல்லியிருக்கேன்” என்றார்.

“என்ன கவின், புரிஞ்சுதா?” என்று கமல் கேட்டதற்கு, தன் கன்னத்தை தடவியவாறே, ‘நல்லா புரிஞ்சது சார்..” என்றார் கவின். (இந்த சென்ஸ் ஆஃப் ஹியூமர் கவினின் பலங்களுள் ஒன்று).

அடுத்தபடியாக சேரனின் மீள்வருகை பற்றி இதர போட்டியாளர்களை விசாரித்தார் கமல். (நேரத்தை எப்படியாவது இழுக்க வேண்டும் என்பதற்காக செய்யப்பட்டது போலவே சலிப்பை ஏற்படுத்தியது இது போன்ற பகுதிகள். சேரன் திரும்பி வந்ததில் வருத்தம் என்றா சொல்லப் போகிறார்கள்? எனவே ஆளாளுக்கு மகிழ்ச்சியும் நெகிழச்சியுமாக எதையோ சொன்னார்கள்).

சேரனின் கேள்விகள் வந்த போதே ஆள் இந்த ஏரியாவில்தான் இருக்கிறார் என்பதை போட்டியாளர்கள் உணர்ந்து விட்டார்கள். பிக்பாஸில் டைமிங்கில் செய்த தவறு இது.

“கேமை எப்படி விளையாடறதுன்னு தெரியலைன்னு பேசிக்கிட்டே நல்லா கேம் விளையாட ஆரம்பிச்சுட்டீங்க.. வந்த உறவினர்கள் கூட அதை சொல்ல ஆரம்பிச்சுட்டாங்க. ‘யாரையும் நம்பாதே’ ன்றது பொதுவிதி மாதிரி ஆகிப் போச்சு. ஆனா மனிதர்களை நம்பித்தானே ஆகணும்” என்று கமல் சொன்னது அருமை. (நேற்றைய கட்டுரையிலும் இந்த விஷயம் சொல்லப்பட்டிருந்தது. இந்தத் தொடரை பிக்பாஸ் டீமும் கமலும் வாசிப்பதாக சில நண்பர்கள் யூகித்து சொல்கிறார்கள். ஒருவேளை அப்படியிருந்தால் மகிழ்ச்சிதான்).

“ஆனா சேரனை நீங்க ரெண்டு பேரும்தானே நாமினேட் பண்ணீங்க. இப்ப நெஞ்சை நக்கறீங்க?” என்பது போல் கவினையும் முகினையும் விசாரித்தார் கமல். “அது பண்ணித்தானே ஆகணும்” என்று ஆரம்பித்து கவின் எதையோ மழுப்ப ‘தர்ஷன் பார்த்தீங்களா.. கேம் இப்பவாவது புரிஞ்சுதா?” என்று கிண்டலடித்தார் கமல்.

நாமினேஷன் என்பது பிக்பாஸ் விளையாட்டின் முக்கியமான பகுதி. இதைத் தாண்டுவதில்தான் போட்டியாளரின் மிகப்பெரிய பங்கு இருக்கிறது. வளைவு, சுளிவுகளுடன் வண்டி ஓட்டினால்தான் இந்தத் தடையில் மாட்டிக் கொள்ளாமல் தப்ப முடியும்.

**

வந்திருந்த விருந்தினர்களுக்கு ‘இன்ஸ்டன்ட்’ கைவினைப் பொருட்களை செய்து தந்த கலைஞரான முகினைப் பாராட்டினார் கமல். அடுத்ததாக சேரனுக்கும் லியாவின் குடும்பத்திற்கும் உருவாகியிருக்கும் நட்பைப் பற்றி சிலாகித்து சில வார்த்தைகள் சொன்னார்.

தன்னுடைய குடும்பத்தினா வரமாட்டார்கள் என்று நினைத்திருந்தாக சொன்ன லியா “எதுவா இருந்தாலும் அம்மாவை நான்தான் வெளியே கூட்டிட்டு போகணும். எனவே அவங்க வர மாட்டாங்கன்னு நெனச்சேன். அதிலும் அப்பா.. வரவே மாட்டார்’ன்னு நெனச்சேன். அவங்க வந்த அந்த மோமெண்ட் என்னால மறக்கவே முடியாது” என்று நெகிழ்ந்தார்.

“பக்கத்து வீட்டுக்காரன் என்ன சொல்லிடுவானோனோன்னு கவலைப்பட்டே வாழறது நடுத்தரவர்க்க குணாதிசயம். எனவே உங்க அப்பாவின் பதட்டத்தை நீங்க புரிஞ்சுக்கணும்” என்று கமல் உணர்ச்சிகரமாக சொன்னதை லியாவும் ஆமோதித்தார். பெருகி வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டார் லியாவின் அம்மா. (கமல் சொல்வதின் பொருள் அனைத்து நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கும் நன்கு புரியும்).

IMAGE_ALT

அடுத்ததாக கவின் பக்கம் வந்த கமல், ‘லியாவின் அப்பா உங்க கிட்ட ஜென்டில்மேனாக நடந்து கொண்டார்’ என்றது சரியான விஷயம். ஆனால் ‘என்னை விடவும் அவர் சிறப்பாக நடந்து கொண்டார்’ என்பது மட்டும் நெருடல். பொதுவில் லியாவிடம் கடுமையாக நடந்து கொண்டதைப் போல் கமல் நிச்சயம் செய்திருக்க மாட்டார். என்றாலும் சபை நாகரிகம் கருதியும், லியா குடும்பத்தினரின் பதட்டத்தைத் தணிக்கும் வகையிலும் பெருந்தன்மையாக கமல் இப்படி கூறியது அருமை.
IMAGE_ALT

கூடவே சாண்டி என்கிற அருமையான நண்பனின் சகிப்புத்தன்மையைப் பற்றி நெகிழ்ச்சியுடன் கமல் சொன்னது சிறப்பு. ஆனால் இதற்கு பெரிய ரியாக்ஷன் எதையும் தராமல் கவின் மெளன சாமியாராக அமர்ந்திருந்தது சற்று நெருடலாக இருந்தது. ‘இனிமே கேமை மட்டும்தான் பார்க்கப் போகிறேன்’ என்று லியா அழுத்தம் திருத்தமாக சொன்னது கவினுக்குப் புரிந்திருந்தாலும் அதற்காக வருத்தப்படுகிறாரா என்று தெரியவில்லை. அல்லது லியாவின் பெற்றோர் முன்னால் இப்படி ‘சீன் போட்டால்’ ஏதாவது வொர்க்அவுட் ஆகலாம் என்று நினைக்கிறாரோ என்னமோ. எதுவாக இருந்தாலும் கவினைப் பார்க்க பரிதாபமாகத்தான் இருந்தது.

லியாவின் உறுதியான வார்த்தைகளைக் கேட்ட அவரின் பெற்றோர்கள் மகிழ்ச்சியுடனும் கண்ணீருடனும் கைத்தட்டினார்கள்.

‘அன்னை’யாகவும் ‘அன்னதாதா’ வாகவும் ‘வத்திக்குச்சி’ வனிதா மாறி விட்டதைப் பாராட்டிய கமல், இப்படி நேர்மறையான விஷயங்களை மக்கள் பாராட்டத் தயங்க மாட்டார்கள்” என்றார். இதற்கு அன்னை தெரசா மாதிரி புன்னகை புரிந்தார் வனிதா. (இப்படியே இருங்க அம்மணி!).

லியாவின் குடும்பத்திற்கும் சேரனுக்கும் உருவாகியிருந்த உறவு குறித்த விஷயத்திற்கு மறுபடியும் வந்தார் கமல். “அந்தக் குடும்பத்தின் குழந்தைகளும் ‘சேரப்பா’ என்று என்னைக் கட்டியணைத்துக் கொண்டது மிக நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதை நான் வெகுமதியாக கருதுகிறேன். நான் ஜெயிச்சது அங்கதான். லியாவோட அப்பாவும் எனக்கு முத்தம் கொடுத்தார்” என்று நெகிழ்ச்சியுடன் பேசினார் சேரன்.

“லியா.. கால் மேல கால் போட்டிருக்கீங்களா?” என்று அடுத்த விஷயத்திற்கு நகர்ந்தார் கமல். லியாவும் அப்போது தற்செயலாக அப்படி இருந்தது சிறப்பு. இந்த விஷயத்தை கமல் இதற்கு முன் எத்தனையோ முறை பேசி விட்டார். ‘மரியாதை மனசுல இருந்தா போதும். லியா மரியாதை தெரிந்த பெண்’ என்றெல்லாம் பேசியதில் அவர்களின் பெற்றோருக்கு உச்சி குளிர்ந்திருக்க வேண்டும்.

ஒரு இடைவேளைக்குப் பின் திரும்பிய கமல், மறுபடியும் நடுத்தரவர்க்க குணாதிசயத்திற்கு வந்து ‘ஏதாவது அசம்பாவிதம் நடக்க வேண்டும் என்று வேடிக்கை பார்க்கத்தான் பக்கத்து வீட்டுக்காரர்கள் காத்திருப்பார்கள். அருகில் இருந்து ஆறுதல் சொல்பவர்கள்தான் உண்மையான நண்பர்கள்” என்று லியாவின் பெற்றோரிடம் பேசியதும் லியாவின் தாயார் கண்ணீர் விட்டார்.

வீட்டிற்குள் நுழைந்த லியாவின் அப்பா முதலில் கோபப்பட்டு பிறகு தணிந்தார். இதே விஷயத்தை லியாவின் அம்மா மிக நுட்பமாக செய்தததை கமல் விவரித்த போது மகிழ்ச்சியிலும் வெட்கத்திலும் லியாவின் அம்மாவிற்கு சிரிப்பு மலர்ந்தது அருமையான காட்சி. (reverse engg என்பது இதுதான். தாய்மார்களுக்கு இது நன்கு தெரியும்).

கால் மேல் கால் போடும் விஷயம், மரியாதைக் குறை என்று கருதப்பட்ட காலமெல்லாம் மாறி விட்ட நவீன சூழலை விளக்கிய கமல், ‘இங்க அடிக்கடி நீங்க வர வேண்டியிருக்கும். லியாவின் புகழ் அத்தகையதாக இருக்கிறது’ என்று சூசகமாக சில விஷயங்களைச் சொன்னார். (இப்படி உசுப்பேத்தியே….) “அவளுக்கு என்ன விருப்பமோ” என்று லியாவின் தந்தை சொன்னதை வரவேற்றார் கமல். ‘நல்ல பொண்ணு.. கெட்டிக்கார பொண்ணு’ என்று லியாவிற்கு சான்றிதழ்களை அள்ளித் தந்தார் கமல்.

அடுத்ததாக கவினுக்கு அறை தந்த நண்பனை ஜாலியாக விசாரித்தார். “ரொம்ப நாள் கோபமோ?” என்று. “அவனை கேமின் உள்ளே தள்ளுவதற்காகத்தான் அப்படி செய்தேன்” என்று விளக்கம் தந்தார் ப்ரதீப்.

“தன் குழந்தை மறந்துடும்’ன்னு சாண்டி பயப்பட்டாரு. ஆனால் இந்த நிகழ்ச்சியின் மூலம் பல குழந்தைகள் சாண்டியை மறக்க மாட்டார்கள்” என்று சாண்டியின் மனைவியிடம் கமல் சொன்னது அருமையான விஷயம்.

அடுத்ததாக மாட்டிக் கொண்டவர் சேரனின் மகள். “லியா எங்களோட 16வது கஸின்” என்ற போது ‘ஆனா உங்க அப்பாவிற்கு வேற மாதிரி அட்வைஸ் கொடுத்தீங்களே..” என்று மடக்கிய போது கைத்தட்டல் வந்தது. “அந்த பொஸஸிவ்னெஸ் இருக்கு. இருந்தாலும் அவங்களை சிஸ்டர் மாதிரிதான் நெனக்கறேன்” என்று சமாளித்தார் தாமினி.

இதே போல் ‘வனிதா உன் தோழி கிடையாது” என்று சொன்ன ஷெரீனின் தோழியையும் போட்டுக் கொடுத்தார். “ஆனா வனிதாவோட பிம்பம் ஒரே நாள்ல மாறிடுச்சு. கவனிச்சீங்களா?” என்று கமல் சொன்னதை அவரும் ஆமோதித்தார்.

**

ஓர் இடைவேளைக்குப் பிறகு எவிக்ஷன் கார்டை விசிறிக் கொண்டே வந்தார் கமல். ஆனால் அதைப் பற்றி பேசாமல் “மாயன் வந்திருந்தாங்க.. மொக்கச்சாமி வந்திருந்தாக.. உங்க உறவினர்கள் எல்லாம் வந்திருந்தாங்க.. ஆனா யாராவது வராம இருந்த சோகம் இருக்கா?” என்று போட்டியாளர்களை விசாரித்தார்.

“மனைவியும் மூத்தமகளும் வராமல் இருந்ததற்காக கோபமாக இருப்பதாக சொன்னார்” சேரன். தன் நாய்க்குட்டியை மிஸ் செய்வதாக ஷெரீன் சொன்னது சிறப்பு. இது சிரிக்கத்தக்கதல்ல. நாய் வளர்ப்பவர்களால்தான் இதை உணர முடியும். “இதை எப்படி கன்வே பண்றது?” என்பது தொடர்பாக கமல் அடித்த கமெண்ட்டுகள் அருமை. (இந்தியன் படக்காட்சிகள் நினைவிற்கு வந்தது. “ஆமாம். கையில அடிபட்டிருக்கே.. எப்படி போன் பண்ணும்?”).

அடுத்தது வனிதா. மிக நீண்ட பெருமூச்சை விட்ட அவர், தன் மூத்த மகன் ஸ்ரீஹரி வருவானோ என்கிற மெல்லிய எதிர்பார்ப்பு இருந்து ஏமாற்றம் அடைந்ததை கண்ணீருடன் சொன்னது நெகிழ்ச்சி. தன் தந்தையை நினைத்து கண்ணீர் விட்டார் முகின்.

‘எங்க ஃபேமிலி வர மாட்டாங்கன்னு தெரியும்” என்று கவின் சொன்ன போது பரிதாபமாக இருந்தது. ‘மச்சினிச்சி வருவான்னு எதிர்பார்த்தேன்” என்று ஜோக் அடித்தார் சாண்டி. (அடப்பாவி!.. அப்ப நீ அழுதது லாலாவுக்காக இல்லையா?!). இதற்கு மச்சினிச்சி தந்த ரியாக்ஷன் சூப்பர். (எதுக்கும் சாண்டி மனைவி ஜாக்கிரதையாக இருப்பது நல்லது).

“நினைத்ததெல்லாம் நடந்து விட்டால் இது பிக்பாஸ் நிகழ்ச்சியில்லை’ என்று கமல் பாடியது நல்ல டைமிங்.

“எவிக்ஷன் பட்டியலில் இருந்த ஒருவரை காப்பாற்றலாமா?” என்று ஆரம்பித்து அதை நாளைக்கு ஒத்தி வைத்து விட்டுச் சென்றார் கமல்.

‘நீலாம்பரியாக’ இருந்து ‘அன்னை தெரசா’வாக மாறியவர்தான் இந்த வாரம் வெளியேற்றப்பட்டார் என்று சொல்கிறார்கள். அவர் வந்த வேலை முடிந்தது போல. பார்ப்போம்.

அருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE