Friday 26th of April 2024 04:14:41 AM GMT

LANGUAGE - TAMIL
‘வனிதா வெளியேற்றம்: அணைக்கப்பட்ட வத்திக்குச்சி’ - சுரேஷ் கண்ணன்

‘வனிதா வெளியேற்றம்: அணைக்கப்பட்ட வத்திக்குச்சி’ - சுரேஷ் கண்ணன்


இரண்டாவது முறையாக வனிதா வெளியேற்றப்பட்டிருக்கிறார். மக்களின் தேர்வு படி முதன்முறை அவர் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டாலும் இந்த நிகழ்ச்சியின் அடிப்படையான பலங்களுள் ஒன்று சர்ச்சை என்பதால் அதை உருவாக்க புறவாசல் வழியாக மீண்டும் உள்ளே அனுப்பப்பட்டார் வனிதா. இந்த நோக்கத்திற்காக அனுப்பப்பட்ட கஸ்தூரியால் சரிவர தன் பங்கை செய்ய முடியவில்லை என்பது இன்னொரு காரணம்.

தமிழ் பிக்பாஸ் வரலாற்றிலேயே இதுவரை அப்படி நடக்கவில்லை. ஏன், ஒட்டுமொத்த பிக்பாஸ்ஸிலேயே இது அரிது என்கிறார்கள். Wild card entry-ஆக நுழைந்த வனிதா முதல் நாளிலேயே பரபரப்பை ஏற்படுத்தினார். போட்டியாளர்களை ‘உத்வேகப்படுத்துகிறேன்’ பேர்வழி என்று மிகையாக எதிர்வினையாற்றினார். ஆனால் ஒருநிலையில் அவரது வேகம் குறைந்தது. ஏனெனில் அதற்குள் பலர் அவருடைய பகைவர்களாகி விட்டிருந்தார்கள். நெருங்கிய தோழி ஷெரீனைக்கூட வனிதா விட்டு வைக்கவில்லை. சேரனின் வெளியேற்றமும் அவரைப் பாதித்தது. எனவே ஒரு விதமான கட்டுப்பாட்டுக்குள் வந்தார்.

“இது ஒரு கேம். போட்டிதான் இங்க முக்கியம்” என்று மனிதனின் ஆதாரமான உணர்ச்சிகளை பின்னுக்குத் தள்ளியே வனிதாவே பிறகு அந்த உணர்ச்சிகளுக்கு பலியானது சுவாரசியம். ‘நான் தலைவராக இருப்பதால் நட்பு பாதிக்கப்படுகிறது’ என்கிற காரணத்தைச் சொல்லி தலைவர் போட்டியில் வேண்டுமென்றே தோற்றார். (எப்படியும் அவர் தோற்றிருப்பார் என்பது வேறு விஷயம்).

கமலுடன் மேடையில் பேசும் போது அவர் சொன்ன ஒரு ஸ்டேட்மெண்டை கவனிக்கலாம். “முதல்ல வந்த போது இங்க நான் நானாத்தான் இருந்தேன். ஆனால் இரண்டாம் முறை அப்படியிருக்க முடியவில்லை. வெளியிலிருந்து என் உறவுகளும் வந்த பிறகு நிலைமை மாறுச்சு. இங்கயும் அது போல உறவுகள் ஏற்பட்டது. Family friends மாதிரி ஆகிட்டாங்க. இதை கேமா மட்டும் பார்க்கும் போது தந்திரமா யோசிக்க வேண்டியிருந்தது. ஆனா தொடர்ந்து அப்படியிருக்க முடியலை. கில்ட்டியா ஃபீல் பண்ணேன்” என்றார்.

இதர போட்டிகளைப் போல் இது மேடையில் ஏறி எதிராளியை வீழ்த்தி அல்லது தோற்று உடனே விலகும்படியான போட்டியில்லை இது. அவர்களுடனே தினமும் பழகுவதால் ஏற்படும் நட்பு, பாசம், காதல் போன்றவைகளும் கலந்தது என்பது வனிதாவிற்கு தாமதமாகத்தான் புரிந்தது. இது முன்பே புரிந்திருந்தால் “ஏன் இவ்வளவு நேரம் அழறே?” என்று சாண்டியை அபத்தமாக கட்டுப்படுத்த முயன்றிருக்க மாட்டார்.

வனிதாவிடமுள்ள இரும்புத்தனம் சமயங்களில் கரைந்து வழிந்தது. இப்படியான இரும்புத்தன்மையை சில பெண்கள் ஒரு முகமூடியாகவே பயன்படுத்துகிறார்கள். அதற்கு ஆணாதிக்கச் சமூக பின்னணியும் ஒரு காரணம். தன் தந்தையின் பிறந்த நாளுக்கு கலங்கினார் வனிதா. சேரன் வெளியேற்றப்பட்ட போதும் கலங்கினார். மிக குறிப்பாக அவரின் குழந்தைகள் வந்த போது இன்னொரு வனிதாவைப் பார்க்க முடிந்தது. அதன் மூலம் அவரின் பிம்பமும் கணிசமாக மாறியது. இதில் அவரது அழகான குழந்தைகளின் பங்கும் முக்கியமாக இருக்கிறது.

இந்தக் கட்டுரைத் தொடரில் திரும்பத் திரும்ப இந்த விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது. பிக்பாஸ் வீட்டிற்குள் வனிதா முன்வைத்த பல விஷயங்கள் சரியானவை. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமென்றால், போட்டியாளர்கள் தங்களுக்கு அளிக்கப்பட்ட பணிகளை ஒழுங்காக செய்து முடித்து விட வேண்டும் என்று அவர் வலியுறுத்தியது. தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் கறாராக இருந்தால்தான் எந்தவொரு பணியும் சீராக நடைபெறும்.

ஆனால் எங்கு பிரச்சினையெனில் வனிதாவின் அகங்காரம் நிரம்பிய உடல்மொழியும், அடாவடித்தனமும், தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று எதிராளியை அனுமதிக்காமல் ஆக்ரோஷமாக வாதிடுவதும், கோள்மூட்டி பிரிப்பதும் என்று பல எதிர்மறையான குணாதிசயங்கள் அவருக்கு எதிராக நின்றன. “ஸாரின்றது–ல்லலாம் எனக்கு நம்பிக்கை இல்லை” என்கிற அவரது அதிரடி ஓர் உதாரணம்.

ஆணாதிக்கம் நிறைந்த சமூகத்தில் ஒரு பெண் துணிச்சலாகவும் கம்பீரமாகவும் மேலெழுந்து வருவது அவசியமானதே. அப்படிப்பட்ட முன்னுதாரணங்கள் நிச்சயம் தேவை. ஆனால் அது நேர்மறையான விஷயங்களால் அமைந்திருக்க வேண்டும். அப்போதுதான் அது முன்னுதாரணமாக இருக்கும். அந்த வழி அகங்காரத்தாலும் அடாவடித்தனத்தாலும் முன்னகர்ந்த பாதையாக இருக்கக்கூடாது. எனில் வரலாறு அவற்றையும் இணைத்தே பதிவு செய்யும் என்பதை இதுவரையான பெண் தலைவர்களின் வரலாறுகளை கவனித்தால் புரியும்.

ஒரு நோக்கில் வனிதா பெண்களுக்கான முன்னுதாரணம் என்றாலும் இன்னொரு நோக்கில் அவரிடமிருந்து பின்பற்றப்படக்கூடாத அம்சங்களும் உள்ளன. இது போன்ற எதிர்மறை அம்சங்கள் ஆணுக்கும் பொருந்தும். இதில் பாலின பேதம் இல்லை.

“உங்களிடம் கவனிக்கத்தக்க ஒரு அம்சம் boldness. ஆனால் அது மட்டுமே அடையாளமாக இருக்கக்கூடாது. She is also boldness என்று சொல்லும்படியாக இருக்க வேண்டும்’ என்று கமல் நுட்பமாக சுட்டிக் காட்டியதும் இதுவே.

ஆண்களுக்கு பொருளியல் என்பது ஒரு அதிகாரம் என்றால் அது பெண்களுக்கு சமையல் அறையின் வழியாக அமைந்துள்ளது. பணியிலிருந்து ஓய்வு பெற்றால் தன் மரியாதை பாதிக்கப்படுமோ என்று ஆண்கள் அஞ்சுகிறார்கள். இது போலவே சமையல் பணி பற்றி நொந்து கொண்டாலும் அந்த உரிமையை விட பெண்கள் தயாராக இருப்பதில்லை. புதிதாக வீட்டிற்குள் வரும் மருமகள் சமையல் அறையைக் கைப்பற்றி விடக்கூடாது என்று மாமியார் விழிப்பாக இருப்பார்.

பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களில் நன்கு சமையல் தெரிந்தவர் வனிதா மட்டுமே என்பதால் அவர் இந்த அதிகாரத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார். இதை அடிக்கடி பதிவு செய்யவும் அவர் தவறவில்லை. “இவன்களுக்கு மூணு வேளையும் வடிச்சுக் கொட்டுவேன். என்னையே தொடர்ந்து நாமினேஷன் செய்வான்களா?” என்று ஒருநிலையில் எரிச்சல் அடைந்தார்.

விடைபெறும் மேடையிலும் கூட ‘இன்னிக்கு நைட் என்ன செய்யப் போறீங்க?” என்று கேட்டதில் அக்கறை ஒருபுறம் தெரிந்தாலும் இன்னொரு புறம் “நான் இல்லாம என்னத்த தின்பீங்க?” என்கிற கேலியும் தெரிந்தது.

“மக்கள் வாக்களித்து என்னைத் தேர்ந்தெடுத்தால் நீடிக்கிறேன். இல்லையென்றால் வெளியேறுகிறேன்” என்று மக்களிடமே சவால் விட்டாலும் இந்த வாரம் தான் வெளியேறி விடுவோம் என்பதை வனிதா நன்கு அறிந்திருந்தார். அதற்கு முந்தைய வாரங்களில் அவர் வெளியேறாதவாறான பாதைகளை பிக்பாஸ் அமைத்துக் கொடுத்திருந்தார். அவர் வந்த வேலை முடிந்தது என்பதால் இந்த வாரம் கழற்றி விடுவார்கள் என்பது அவருக்குத் தெரிந்திருந்தது.

வழக்கத்திற்கு மாறாக ஜீன்ஸில் இன்று வனிதா அமர்ந்திருந்தது ஆச்சரியம். “என்னடா.. இது தொடர்ந்து அன்னை..ன்றாங்க. அம்மா –ன்றாங்க… வெளியே போனா மதர் காரெக்டர் கொடுத்துடுவானோனுங்களோ..’ என்று கருதி தன்னை இளமையாக காட்டிக் கொள்ளும் உடையில் அமர்ந்திருந்தாரோ என்று முதலில் நினைக்கத் தோன்றியது. பிறகுதான் தெரிந்தது ‘வெளியே வந்து உங்க கூட டான்ஸ் ஆடணும்னு அதுக்கேத்த மாதிரி வந்திருக்கேன்’ என்று கமலிடன் சொன்னார்.. தான் வெளியேறுவது பற்றி அவருக்கு உறுதியாகத் தெரிந்திருந்தது என்பதற்கான அடையாளம் அது.

**

வனிதாவை விடவும் ஸ்மார்ட்டான உடையில் வந்தார் கமல். குழந்தைத் தொழிலாளர் என்கிற அவலம் மறையாமல் இருப்பதற்கும் நமது கல்வி முறைக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு. பொதுத் தேர்வுகளில் தோல்வியடையும் மாணவர்கள் கல்வியிலிருந்து வெளியேறுவது பல ஆய்வுகளில் வெளியாகியிருக்கின்றன. இதைப் பற்றி பேசினார் கமல்.

IMAGE_ALT

தொலைபேசியில் அழைத்த பார்வையாளரை சட்டென்று ‘எத்தனாவது படிச்சிருக்கீங்க?” என்று கமல் கேட்டது எடுபடாத, அநாவசியமான குறும்பு.

“இறுதிக்கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். அடுத்த மூன்று வாரங்களில் வெளியேறப் போகிறவர்கள் யார் யார்? என்கிற கணிப்பை போட்டியாளர்களிடம் கேட்டார் கமல். ஏறத்தாழ அனைவரின் பட்டியலிலும் வனிதா இருந்தார். “அவங்க இப்ப இருக்கிற மாதிரி முதல்ல இருந்திருந்தா நல்லா இருந்திருக்கும்” என்று சாண்டி சொன்னது குறிப்பிடத்தக்கது.

“வனிதாவும் சேரனும் வெளியே போய்ட்டு திரும்ப வந்தவங்க. இருக்கறதிலேயே ரொம்ப சோர்வா விளையாடற போட்டியாளர் நான்தான்” என்று கவின் சொன்ன பட்டியல் தர்க்கபூர்வமானதாக இருந்தது. ஷெரீனை விட்டுத் தர முடியாமல் ‘லியா’வின் பெயரை சொன்னார் தர்ஷன்.

தலைவர் போட்டியிலிருந்து விலகிய வனிதாவையும் தர்ஷனையும் விசாரித்தார் கமல். ‘லியாவிற்கு இன்னொரு வாய்ப்பு தரப்பட வேண்டுமென்று விரும்பினேன்” என்று தர்ஷன் குறிப்பிட்டது சிறப்பு. ஜென்டில்மேன்தனம்.

**

ஓர் இடைவேளைக்குப் பிறகு வந்த கமல், சில உறவுகள் வராமல் போனதற்காக போட்டியாளர்கள் வருத்தப்பட்டதை கவனத்தில் கொண்டு அந்தக் குறையைப் போக்கும் வேலையில் ஈடுபட்டார்.

“மச்சினிச்சி வரலை சார்” என்று சாண்டி ஜாலியாக குறைபட்டதால் அவர் மேடையேறினார். ‘என்னடா இந்த ஆள் மச்சினிச்சியை தேடுகிறார்” என்று முதலில் சாண்டியை கிண்டலடிக்கத் தோன்றியது. ஆனால் சாண்டியின் மாமியாரும் மச்சினிச்சியும் மேடையேறிய போது அது ஒரு உணர்ச்சிகரமான டிராமாவாக மாறியது.

“பொண்ணுங்களைப் பெத்தவங்களுக்கு இனம் புரியாத ஒரு பயம் இருக்கும். வர்ற மாப்பிள்ளை எப்படியிருப்பாரோ –ன்னு. ஆனா இவர் எங்களுக்கு ஒரு மகனா வந்து சேர்ந்தார். என்னோட அம்மா –அப்பா சேர்ந்த உருவம்தான் மாப்பிள்ளை. எங்க ரெண்டாவது பொண்ணுக்கு அவர்தான் அப்பா” என்றெல்லாம் சாண்டியின் மாமியார் நெகிழ்ந்தது சுவாரசியம். இதற்கு சாண்டியின் மச்சினிச்சியும் மனைவியும் கண்ணீர் விட்டார்கள். “அவரைக் கலாய்ச்சு நீங்க ஒரு பாட்டு போடுங்க” என்று சொன்ன மச்சினிச்சி, “அவர் எப்பவுமே இப்படித்தான் கிண்டல் பண்ணுவாரு. யாராவது ஹர்ட் ஆகியிருந்தா மன்னிச்சுடுங்க” என்று ஜாக்கிரதையாக சொன்னது சிறப்பு.

IMAGE_ALT

சாண்டியின் பெற்றோர் வந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது.

இதன் பிறகு ஷெரீனின் சித்தி வந்து பேசினார். ‘ப்பபி’யைப் பற்றி ஷெரீன் நிச்சயம் விசாரிப்பார் என்று நான் எதிர்பார்த்தது வீண் போகவில்லை. தர்ஷனின் அப்பா, சேரனின் அத்தை பையன், முகினின் அப்பா ஆகியோர் வீடியோவின் வழியாக வந்து வாழ்த்து சொன்னார்கள்.

பிறகு கமலுக்கே ஒரு சர்ப்ரைஸ் கொடுத்தார் பிக்பாஸ். கமல்ஹாசனை வாழ்த்துவதற்காக அவரது சகோதரர் சாருஹாசன் வீடியோவில் வந்து பேசினார்.

கமல் குழந்தையாக இருக்கும் போது அவரை தினமும் ‘மதுரை வீரன்’ திரைப்படத்திற்கு அழைத்துச் செல்வோம் என்று கூறியவர் “கமல் நடிகனாக வேண்டும் என்று முடிவு செய்தவர் எங்கள் அப்பாதான். நாங்க ஆசைப்பட்ட படி கமல் கலெக்ட்டர் ஆகியிருந்தா நெறய பேருக்கு தெரிஞ்சிருக்காது. இப்ப இந்தியா முழுக்க அவரைத் தெரியுது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நாம செய்யற தவறு நமக்கே தெரியுது. ஆனா நாம மத்தவங்களை குறை சொல்லிட்டு இருக்கோம். இதுல கமல் ஒரு பகுதியா இருக்கறது எனக்குப் பெருமை” என்று சொல்லி முடித்தார் சாருஹாசன்.

“எனக்கும் அவருக்கும் 24 வயது வித்தியாசம். எனவே அவர் எனக்கு நண்பனாகவும் அண்ணனாகவும் தகப்பனாகவும் இருந்தார்” என்று ஆரம்பித்த கமல் தன் குடும்பம் எப்படி தன்னை போஷித்து வளர்த்தது என்பதை சிறிது நேரம் விவரித்தார்.

**

இடைவேளைக்குப் பின் திரும்பிய கமல், யார் காப்பாற்றப்படவிருக்கிறார் என்பதை வழக்கமான முறையில் அல்லாமல் வேறு வழியாக தெரிவிக்கப்படும் என்றார். அதாவது போட்டியாளர்களின் உறவுகள் வரும் போது பின்னணியில் ஒலித்த பாடல் இப்போது ஒலித்தால் அவர் காப்பாற்றப்பட்டார் என்று பொருள்.

மிக ஆச்சரியகரமாக, எதிர்பாராத விதமாக ‘கவினின்’ பாடல் ஒலித்தது. இதை கவின் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை என்று தெரிந்தது. கண்கலங்க நெகிழ்ச்சியுடன் காணப்பட்டார். இவரையும் விட அதிக உணர்ச்சிவசப்பட்டவர் லியாதான். கண்ணீரும் பெருமையும் மகிழ்ச்சியும் அவர் முகத்தில் தாண்டவம் ஆடியது. (லியாவின் பெற்றோர், இதைக் குறித்துக் கொள்ளுங்கள்).

“இப்பவும் என் எண்ணத்துல மாற்றமில்லை. நண்பர்களுக்காக விளையாடப் போறேன்” என்று கவின் ஆரம்பித்த போது, இவர் முருங்கை மரத்தை விட்டு இறங்க மாட்டார் போலிருக்கிறதே என்று தோன்றியது. ஆனால் “வெளியில் இருக்கும் நண்பர்களுக்காக விளையாடப் போறேன். அதில் எனக்கு வாக்களித்தவர்களும் இருக்காங்க.” என்று நெகிழ்ச்சியுடன் கும்பிட்டார் கவின்.

அடுத்ததாக தர்ஷனின் பாடல் ஒலித்தது. தர்ஷனின் அம்மாவிற்கும் சகோதரிக்கும் பெருமையால் முகம் பூரித்தது. “எங்க அம்மா டிவில வரணும்னு நெனச்சேன் சார்.. அது நிறைவேறிடுச்சு” என்று தர்ஷன் சொன்னவுடன் ‘அடக்கடவுளே’ என்பது மாதிரி வெட்கப்பட்டார் தர்ஷனின் அம்மா. (சமர்த்துப் பிள்ளை!).

IMAGE_ALT

அடுத்ததாக சாண்டிக்கான பாடல் ஒலித்ததும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சியடைந்தார்கள். ஷெரீனுடன் இணைந்து நடனமாடிய சாண்டி, சட்டென்று ‘மீண்டும் பள்ளிக்கு போகலாம்’ மோடிற்கு மாறியது சிறப்பு.

ஆக மீதமிருப்பவர்கள் ஷெரீனும் வனிதாவும். தான் நடித்த முதல் திரைப்படத்தின் பாடலை ஷெரீனாலேயே நினைவுகூர முடியாதது ஆச்சரியம்.

‘உங்க கூட டான்ஸ் ஆடணும்னு அதுக்கேத்த மாதிரி டிரஸ் போட்டுட்டு வந்திருக்கேன்” என்று வனிதா சொல்ல ‘தீர்க்கதரிசி நீங்க. வெளில வாங்க” என்று கார்டைக் காட்டினார் கமல். இந்த அறிவிப்பு வந்தவுடன் வனிதாவின் இளைய மகள் அழுதார். வீட்டின் உள்ளே வனிதாவின் வெளியேற்றத்திற்கு அதிக வருத்தப்பட்டவர் ‘அண்ணன்’ சேரன்தான்.

பிக்பாஸ் வரலாற்றில் இல்லாத அளவிற்கு wild card எண்ட்ரியா வந்து ஏற்கெனவே ரிகார்ட் பிரேக் பண்ணியிருக்கேன். எனவே இந்த மெடலை உடைக்கப் போறதில்லை. நானே வெச்சுக்கப் போறேன்.. என்னடா சொல்ற பிக்பாஸ்?” என்று வனிதா அதட்டியவுடன் பிக்பாஸ் வழக்கம் போல் மெளனம் சாதித்தார். அது சம்மதத்திற்கான அறிகுறியா, அச்சத்திற்கான அறிகுறியா என்று தெரியவில்லை. எனவே மெடலுடன் கெத்தாக வெளியேறினார் வனிதா.

வெளியில் வந்த வனிதாவைப் பார்த்தவுடன் ‘அரிசி மூட்டையின்’ முகம் பிரகாசமாகியது. ‘இரண்டு விதமான வனிதாவைப் பார்த்தோம்” என்று அவரை வரவேற்றார் கமல். பிறகு வனிதாவிற்கான குறும்படம் திரையிடப்பட்டது.

“பார்வையாளர்கள் கிட்ட இப்ப ஒரு மாற்றம் தெரியுது கவனிச்சீங்களா.. முன்னல்லாம் உங்களை பேச விடாம சத்தம் போடுவாங்க. இப்ப கவனிக்கிறாங்க. அதுக்கு உங்க ‘அன்னை’ பாத்திரமும் ஒரு காரணம். உங்கள் ஆளுமையின் ஒரு பகுதியா ‘துணிச்சல்’ இருக்கணும். அதுவே உங்க அடையாளமா மாறிடக்கூடாது. மக்களின் மாற்றமும் அதைத்தான் உணர்த்துது’ என்று மக்கள் பிரதிநிதியாக அல்லாமல் ‘கமல்ஹாசனாக’ சொன்ன உபதேசம் முக்கியமானது.

வனிதாவின் விருப்பபபடி அவர் கமலுடன் நடனமாடியதோடு இந்த எபிஸோட் நிறைவுற்றது.

பிறகு இன்னமும் நிகழ்ச்சியை சற்று நீட்டித்ததற்கு தர்ஷனின் பிறந்த நாள் ஒரு காரணம். பிக்பாஸின் பிரதான சீடர் சாண்டி என்பது ஏற்கெனவே உறுதியாகி விட்டது. எனவே அடுத்த இடத்திற்கான போட்டி நடந்து கொண்டிருக்கிறது. தான்தான் அடுத்த சிஷ்யர் என்பதற்காக தர்ஷன் மல்லுக்கட்டுகிறார். லியாவும் இந்தப் போட்டியில் ஜாலியாக கலந்து கொள்ள முனைய, லியாவை கலாய்த்ததின் மூலம் தான் தர்ஷனின் பக்கம் இருப்பதை பிக்பாஸ் சூசகமாக தெரிவித்தார்.

‘பிறந்த நாள் சிஷ்யா’ என்று பிக்பாஸ் தர்ஷனை வாழத்திய போது ‘டைட்டில் வெற்றி’ போல கொண்டாடி மகிழ்ந்தார் தர்ஷன். ‘உங்க கேங்க்லயே.. இருக்கேன்.. டீஷர்ட் தர மாட்டேங்கறீங்க” என்று அனத்திய ஷெரீனின் ஏக்கம் இன்று தீர்ந்திருக்கும். ‘குருநாதா’ டீஷர்ட்டை அவர் அணிந்திருந்தார்.

போட்டியாளர்களின் எண்ணிக்கை இன்னமும் குறைந்திருக்கிறது. எனவே நெருங்கிய நண்பர்களையே நாமினேட் செய்ய வேண்டியிருக்கும். எனவே இது குறித்தான சச்சரவுகள் அவர்களுக்குள் ஏற்படலாம். சர்ச்சைகளின் நாயகியான வனிதாவும் இல்லாத நிலையில் வீடு எப்படியிருக்கப் போகிறது. என்பதை பொறுத்திருந்து காணலாம்.

அருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE