Friday 26th of April 2024 11:44:08 AM GMT

LANGUAGE - TAMIL
‘கவின் என்கிற இம்சை பிடித்த தேவதாஸ்’ - சுரேஷ் கண்ணன்

‘கவின் என்கிற இம்சை பிடித்த தேவதாஸ்’ - சுரேஷ் கண்ணன்


‘அன்னதாதா’ வனிதா இல்லாத வீட்டில் கிச்சன் ஏரியா தடுமாறிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. வழக்கம் போல் தவ்வாவை சுழற்றிப் போட்டு ஸ்டைலாக தோசை சுட சாண்டி முயல அதில் ஒரு வண்டு வந்து ஒட்டிக் கொண்டது. “உன் கொனஷ்டையால்தான் இப்படியாச்சு” என்று கவின் ஜாலியாக குற்றம் சாட்ட, “நான் உங்களுக்காக நான்-வெஜ் தோசை செஞ்சிட்டிருக்கேன். அது ஒரு தப்பா?” என்று சமாளித்தார் சாண்டி.

நாமினேஷன் சடங்கு துவங்கியது.

விரக்தியான சிரிப்புடன் ஆரம்பித்தார் சேரன். “யார் மேலயும் எனக்கு வெறுப்போ காழ்ப்போ இல்லை.” என்ற பாதுகாப்பான disclaimer-உடன் தன் பேச்சைத் துவங்கியவர், ‘ஷெரீன் மற்றும் லியாவை எப்போதுமே நாமினேட் செய்யப் போவதில்லை’ என்கிற உறுதிமொழியை எடுத்துக் கொண்டார். போலவே தர்ஷனும் முகினும் தகுதியான போட்டியாளர்களாம். ஆக மீதமிருப்பது சாண்டி மற்றும் கவின். அவர்களைத்தான் நாமினேட் செய்தார்.

சாண்டி டீமின் சிண்டிகேட்டை சேரன் உடைக்க முயல்கிறார் என்பதைப் புரிந்து கொள்கிறது. வனிதாவும் இதைப் பற்றி முன்பே பேசியிருக்கலாம். ஒருவகையில் இது சரியானதே. பாய்ஸ் டீம் கூட்டு சேர்ந்து கொண்டு இதுநாள் வரை தங்களைக் காட்டிக் கொடுக்காமல் மற்றவர்களை நாமினேட் செய்து தாக்குப் பிடித்திருக்கிறார்கள். இது அவர்களின் உத்தியாக இருக்கலாம். அதைத்தான் சேரன் தகர்க்க முயல்கிறார் என்று யூகிக்கத் தோன்றுகிறது.

IMAGE_ALT

கவினும் சாண்டியும் பேசி வைத்துக் கொண்டது போல் சேரன் மற்றும் ஷெரீனை நாமினேட் செய்தனர். ‘அவர்கள் கடுமையான போட்டியாளர்கள்’ என்கிற காரணத்தை சாண்டி சொன்னது உட்டாலக்கடி. தர்ஷன்தான் கடுமையான போட்டியாளர் என்பது அந்த வீடே அறிந்த விஷயம்.

லியா எந்நாளும் கவினை நாமினேட் செய்ய மாட்டார் போலிருக்கிறது.

ஆக இந்தச் சடங்கின் இறுதியில் எவிக்ஷன் பட்டியலுக்குள் வந்தவர்கள் சேரன், ஷெரீன், லியா மற்றும் கவின்.

தன் உத்தியை முகினுடன் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டிருந்தார் சேரன். ‘இனிமே இப்படித்தான்” என்று தர்ஷனிடம் பேசிக் கொண்டிருந்தார் சாண்டி.

**

உறவினர்கள் உள்ளே வந்த போது போட்டியாளர்களிடம் தனிமையில் சொன்ன ஆலோசனைகள் தொடர்பான வீடியோக்களை பொதுவில் ஒளிபரப்பி போட்டுக் கொடுத்தார் பிக்பாஸ். ‘யாரையும் நம்பாதே’ என்கிற தாரக மந்திரம் அதில் அதிகமாக ஒலித்தது. இப்படி காட்டிக் கொடுப்பதின் மூலம் போட்டியாளர்களுக்குள் போட்டி மனப்பான்மையும் மெல்லிய பகைமையும் உசுப்பப்படும் என்பது நோக்கமாக இருக்கலாம்.

“யாரையும் நம்பாதே’ என்று லியாவின் அம்மா கதறிக் கொண்டிருந்ததைப் பார்த்த முகினின் முகம் மாறியது. இந்த வீடியோ ஒளிபரப்பிற்குப் பிறகு பிக்பாஸின் அறிவிப்பு வந்தது.

“இந்தப் போட்டியின் இறுதிக் கட்டத்தை அடைந்து விட்டோம். நீங்களும் இதுவரை கிரில் சிக்கன் சாப்பிட்டு ப்ரூட்டி குடிச்சிட்டு நல்லா ஓபி அடிச்சிட்டு இருந்தீங்க. இனிமே இது நடக்காது. பிக்பாஸ் வீடு ரத்தபூமியா மாறப் போகுது. இனி போட்டிகள் கடுமையா இருக்கும். ‘மாமன்.. மச்சான். அண்ணா.. தங்கை’ன்ற சீனையெல்லாம் இனி விட்டுடுங்க.. தனித்தனியா விளையாடுங்க. ஒழுங்கா விளையாடித் தொலைங்க” என்று குரலில் கடுமையைக் காட்டினார் பிக்பாஸ்.

இந்த வார டாஸ்க்குகளில் வெற்றி பெற்று முதல் இடத்தைப் பிடிப்பவருக்கு இறுதிப் போட்டிக்கான டிக்கெட் தரப்படும் என்பதுதான் இந்த அறிவிப்பில் இருந்த முக்கியமான விஷயம்.

இந்த அறிவிப்பிற்குப் பிறகும் கவின் செய்த விஷயம் அபத்தமானது மட்டுமல்ல அநியாயமானதும் கூட. இந்த சீஸனிலேயே அவர் மீது அதிக கோபம் வந்தது இந்தக் காட்சியின் போதுதான். ஏறத்தாழ போட்டி இறுதிக் கட்டத்தை நெருங்கி விட்ட பிறகும் தன் ‘தேவதாஸ்’ மோடில் அவர் நீடிப்பது எரிச்சல் அடைய வைக்கும் விஷயம். அவருடைய உணர்வுகள் ஒருவேளை உண்மையானதாக இருக்கலாம். ஆனால் அவற்றை வெளிப்படுத்தும் நேரம் இதுவல்ல.

IMAGE_ALT

‘மேயற மாட்டை நக்கற மாடு கெடுத்த கதையாக’ இவரின் சோர்வு லியாவையும் சேர்த்து பின்னுக்கு இழுக்கும் என்பதை இவர் உணர வேண்டும்.

கமல் எபிஸோடின் போது ‘இங்க நடக்கற விஷயங்கள் உண்மையா, பொய்யா’ன்னு தெரியல’ என்பது போல் லியா சொல்லிக் கொண்டிருந்தார். அப்போதே கவினின் முகம் மாறிற்று. அப்போதிலிருந்தே அந்த விஷயம் அவரை உறுத்திக் கொண்டேயிருந்தது போல.

பிக்பாஸின் ‘டிக்கெட் டூ பினாலே’ அறிவிப்பு முடிந்த பிறகும் இஞ்சி தின்ற குரங்கு போல் மெளனமாக அமர்ந்திருந்தார் கவின். “என்ன ஆச்சு?” என்று லியா விசாரிக்கும் போது “உண்மையா, பொய்யான்னு சொன்னியே.. அது எது பத்தி?” என்று கேட்டார். ‘அது சேரன் பற்றிய விஷயம். நான் ஆரம்பத்துல இருந்து சொன்னதுதான். உன்னைப் பத்தியது அல்ல” என்று லியா விளக்கம் தந்த பிறகும் அவர் அடங்கவில்லை. சோகமாக உட்கார்ந்திருந்தால்தான் லியா அதிக நேரம் பேசுவார் என்பது கணக்கோ, என்னவோ.

லியாவின் பெற்றோர் தந்த உபதேசங்களை வீடியோவில் பார்த்ததும் கவினைக் காயப்படுத்தியிருக்கிறது போல. ‘அதெல்லாம் நியாயம்தான்’ என்று முதலில் ஒப்புக் கொண்டவரும் இவர்தான். லியா சொன்னது எதற்காக வேண்டுமானாலும் இருக்கட்டும், அதையெல்லாம் குழப்பிக் கொண்டிருப்பதற்கான நேரம் இதுவல்ல.

இந்தப் போட்டியிலிருந்து கவின் வெளியேற வேண்டிய நேரம் இதுதான் என்று தோன்றுகிறது. அவரின் சோர்வு நண்பர்களையும் பாதிக்கலாம்.

“அந்த லூஸூப் பையன் பேசறதையெல்லாம் ஏம்மா கேட்டுட்டு இருக்கே. நீ எழுந்து போயிடு” என்று லியாவிடம் சொல்லத் தோன்றியது. ஆனால் லியா அப்படிப்பட்டவர் அல்ல. கவினின் மனது வலிக்காமல் தான் சொல்ல விரும்பியதை நிதானமாக சொல்லிக் கொண்டிருந்தார். “உன் பிரெண்டு சொன்னதுதான் கரெக்ட். அதைக் கேளு” என்பது போல். ஆனால் எல்லாவற்றையும் விதாண்டாவாதமாக மறுத்துக் கொண்டிருந்தார் கவின்.

**

டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கின் முதல் போட்டி துவங்கியது. போட்டியாளர்களின் இருபுற கணுக்கால்களில் இரண்டு பலூன்களைக் கட்டிக் கொள்ள வேண்டும். தன் காலில் உள்ள பலூன்களைப் பாதுகாத்துக் கொள்ளும் அதே சமயத்தில் இதர போட்டியாளர்களின் பலூன்களை மிதித்து உடைக்க வேண்டும். எவர் அதிக பலூன்களை உடைக்கிறாரோ, அவர் அதிக புள்ளிகளைப் பெறுவார்.

கவின் ஆரம்பத்திலேயே ஆர்வமாக விளையாடவில்லை. அவரின் ஒரு பலூனை சாண்டி உடைத்தார். இன்னொரு பலூனை தானே மிதித்து உடைத்து போட்டியிலிருந்து விரைவில் வெளியேறினார் கவின்.

உடல் தகுதி தேவைப்படும் டாஸ்க்குகளில் சேரன் சிரமப்படுவார் என்பது எதிர்பார்த்ததே. அவருக்கு மூச்சு வாங்கியது. கிடைத்த இடைவேளையில் அவர் பலூன்களை உயரே தூக்கிக் கட்ட முயல.. “சார். கணுக்கால்லதான் கட்டணும். விட்டா இடுப்புல கட்டிப்பீங்க போலிருக்கே?” என்று தர்ஷனும் சாண்டியும் கிண்டல் செய்தனர். விரைவில் அவரும் போட்டியில் இருந்து வெளியேறினார். சாண்டி பல்ட்டியெல்லாம் அடித்து ஆச்சரியப்படுத்தினார்.

IMAGE_ALT

இறுதியில் போட்டி தர்ஷனுக்கும் சாண்டிக்கும் என ஆகியது. தர்ஷன் வலிமையான போட்டியாளராக அறியப்பட்டாலும் இதில் அதிகம் சிரமப்பட்டார். முதலில் காலில் அடிபட்டு முதல் உதவி செய்து கொண்டார். சாண்டி அடிப்படையில் நடனம் தெரிந்தவர் என்பதால் அவருடைய துரிதமான கால் அசைவுகள் அவருக்கு உபயோகமாக இருக்கிறதோ என்று எண்ணத் தோன்றியது.

ஒரு நிலையில் சாண்டியின் இரு பலூன்களும் பாதுகாப்பாக இருக்க, தர்ஷன் தானே மிதித்து ஒன்றை உடைத்து விட்டார். இன்னொரு பலூனை சாண்டி உடைத்ததாக சொல்ல, “இல்லை. அது காற்றில் தானாக உடைந்து விட்டது” என்றார் தர்ஷன். ரெவ்யூக்கு அப்ளை செய்தார்கள். அது தர்ஷனுக்கு சாதகமாக வந்தது. எனவே இன்னொரு பலூன் தரப்பட்டது.

ஒரு நிலையில் சாண்டி காலை உயரே உதைக்க அது தர்ஷனின் மூக்கைப் பதம் பார்த்தது. இதற்காக பலமுறை மன்னிப்பு கேட்டார் சாண்டி. உயரமான தர்ஷனுக்கு உயரம் குறைவான சாண்டி கடுமையான போட்டியைத் தந்தது ஆச்சரியம். சாண்டிதான் ஜெயிப்பார் என்று தோன்றிக் கொண்டிருந்த நிலையை ஒரு கட்டத்தில் தர்ஷன் மாற்றினார். சாண்டியின் இரண்டு பலூன்களையும் சாமர்த்தியமாக உடைத்தார். எனவே இந்தப் போட்டியில் தர்ஷன் முன்னணியில் இருந்தார்.

அடுத்து கயிறு இழுக்கும் ஆதிகாலத்து போட்டி. இதில் தர்ஷன் இருந்த அணி வெற்றி பெறும் என்பது எளிதில் யூகிக்கக்கூடியதே. என்றாலும் சாண்டி கடுமையான போட்டியை இதிலும் தந்தார்.

இன்றைய நாள் முழுவதும் ஷெரீனிடம் வம்பு இழுத்துக் கொண்டேயிருந்தார் கவின். அவர் செய்த குறும்புகள் சில ரசிக்கத்தக்கவையாக இருநதன. ஆனால் சமயங்களில் ஷெரீன் உண்மையாகவே சங்கடமும் கோபமும் அடைவது தெரிந்தது. அவரது மென்மையான குணாதிசயம் காரணமாக அவரால் கோபத்தை சட்டென்று வெளிப்படுத்தி விட முடியாது. “இந்த வீட்ல வேற யாரையும் வெறுப்பேத்த முடியாது மச்சா. நீதான் கெடச்சே’ என்ற கவின் அதற்கான காரணமாக சாண்டி அணணன், தர்ஷன் மச்சான், முகின் தம்பி என்று வரிசைப்படுத்தியது சுவாரசியம். (இதில் தர்ஷனின் குறிப்பை பிரத்யேகமாக கவனிக்கவும்).

IMAGE_ALT

லியாவிடம் பொஸஸிவ்னைஸை கிளற வேண்டும் என்பது கவினின் நோக்கமாக இருக்கலாம். எனவேதான் அவர் ஷெரீனை அதற்கு ஊறுகாயாக பயன்படுத்திக் கொள்கிறார் என்று தோன்றுகிறது. கவினின் அலப்பறையையெல்லாம் தூங்குவது போல் கேட்டுக்கொண்டிருந்த லியா, பிறகு கவினிடம் ‘எனக்கு வலிக்கவேயில்லையே.. நீ இப்படி இருக்கறது சந்தோஷம்’ என்பது போல் சொன்னது சுவாரசியமான நடிப்பு.

**

டிக்கெட் டூ பினாலே’வின் அடுத்த போட்டி. ‘ஒன்று, இரண்டு என்று என்னை வரிசைப்படுத்தி பாடு’ என்று ஒளவைப் பாட்டியை முருகன் வேண்டியதைப் போல ஒவ்வொரு போட்டியாளரும் தகுதி நிலையின் அடிப்படையில் இதர போட்டியாளர்களை வரிசைப்படுத்த வேண்டும்.

இதில் பெரும்பாலோனோர்கள் தர்ஷனை முதலிடத்தில் வைத்தது எதிர்பார்த்ததே. போலவே கவினுக்கு கடைசி இடம் கிடைத்ததும் சரியானதே. சாண்டி கூட கவினை கடைசி இடத்தில்தான் வைத்தார்.

ஆனால் கவினுக்கு சேரன் நான்காம் இடம் தந்தது ஆச்சரியம். முதலிடத்தை தனக்கே வைத்துக் கொண்டார் சேரன். இளைஞர்களுடன் போட்டியிட்டு இத்தனை நாள் அவர் தாக்குப் பிடித்ததே பாராட்டத்தக்க விஷயம். இறுதிக்கட்டத்தில் அவர் இப்படி ஸ்போர்ட்மேன்ஷிப்போடும் தன்னம்பிக்கையோடும் விளையாடுவது நல்லது. இளைஞர்கள்தான் இந்தப் போட்டியில் ஜெயிக்க முடியும் என்கிற நடைமுறையை சேரன் உடைத்தால் அதுவொரு நல்ல முன்னுதாரணமாக இருக்க முடியும்.

IMAGE_ALT

ரிவர்ஸ் ஆர்டரில் வந்த லியா, தன்னை கடைசியில் வைத்துக் கொண்டார். கவினுக்கு அவர் இரண்டாம் இடம் தந்தது ஓவர். ‘அண்ணன் ஜெயிக்கணும்’ என்கிற பாசம் காரணமாக சாண்டிக்கு முதல் இடம் தந்தார் கவின்.

இந்த வாரத்தில் கவின் வெளியேறுவது நல்லது என்று தோன்றுகிறது. அதற்கான நியாயத்தை அவரே செய்து கொள்கிறார். கவினின் வெளியேற்றம் லியாவை சற்று பாதிக்கும் என்று தோன்றினாலும் போட்டிக்கு அது நல்லதாக இருக்கும்.

அருவி இணையத்துக்காக சுரேஷ் கண்ணன்


Category: சினிமா, பகுப்பு
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE