Friday 26th of April 2024 11:00:04 PM GMT

LANGUAGE - TAMIL
எங்கள் கூத்துமரபு - 01 - நா.யோகேந்திரநாதன்

எங்கள் கூத்துமரபு - 01 - நா.யோகேந்திரநாதன்


தமிழ்மொழி, இயல், இசை, நாடகம் என மூன்று வடிவங்களில் கலை இலக்கியத்துறையில் சிறப்புடன் பெருமை பெற்று நிற்கிறது. அவற்றில் இயல் உரைநடை, செய்யுள் வடிவம் கொண்டவையாகவும், இசைத்தமிழ் இராகம், தாளம், சுருதி என்பவற்றைக் கொண்ட இனிய வடிவமாகவும், நாடகத்தமிழ் இயல், இசை என்பனவற்றைக் காட்சிப்படுத்தல் என்று மேலதிக அம்சத்தைக் கொண்டவையாகவும் விளங்கிவருகின்றன. நாடகத் தமிழில் இரு கூறுகள் உண்டு. ஒன்று இசை, நாடகம் மற்றையது கூத்துவகைகள்.

இசை, நாடகம் இசையும் உரைநடையும் இணைந்த ஒரு வடிவமாக இருந்த போதிலும் இதில் பிரதான இடத்தை இசையே வகிக்கிறது. பிற்காலத்தில் சினிமாவின் ஆதிகம் மேலோங்கிய பின்பு உரைநடையை முதன்மைப்படுத்தி நாடகங்கள் மேடையேற்றப்பட்டு வருகின்றன. தற்சமயம் இது இன்னொரு பரிமாணத்தை அடைந்து உடல்மொழிக்கு முதலிடமும், உரைகள், இசை என்பவை அதன் துணையம்சங்களாகவும் செயற்படும் வகையிலான நவீன நாடகங்கள் மேடையேற்றப்படுகின்றன. இசைநாடகங்கள் இந்தியாவில் சங்ஹரதாஸ் சுவாமிகளால் எழுதி மேடையேற்றப்பட்டு பின்பு சகல இடங்களுக்கும் பரவியதாக சொல்லப்படுகிறது. இவையே இலங்கையிலும் மேடையேற்றப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இவற்றில் ஓரளவுக்காவது முறைப்படி சங்கீதம் பயின்றவர்களே நடிக்கமுடியும். ஏனெனில் இவை கர்நாடக சங்கீத இராகங்களை அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டவை. இவை படச்சட்ட மேடையிலேயே அரங்கேற்றப்படுகின்றன. கிரேக்க நாடகங்களை அடியொட்டியே படச்சட்ட மேடை பாவனைக்கு வந்தது எனக் கூறப்படுகிறது. ஆனால் சிலப்பதிகாரத்தில் நாடகமேடை எப்படி அமையவேண்டும் எனவும் நடிகர்கள் மேடைக்குள் வருவது, வெளியேறுவது பற்றிய முறைகள் பற்றியும் சில பாடல்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே சங்ககாலத்திலும் படச்சட்ட மேடை பாவனையில் இருந்ததை அறியமுடிகிறது.

எனவே இசை நாடகம் ஒரு காலத்தில் மேட்டுக்குடி மக்களின் கலையாகவே விளங்கியது. ஆனால் காலப்போக்கில் இந்நிலை மாற்றமடைந்து இசைநாடகம் மக்கள் மயப்படுத்தப்பட்டுவிட்டது. ஆனால் இசையில் ஓரளவுக்காவது தேர்ச்சி பெற்றவர்களே அவற்றில் நடிக்கமுடியும். ஒரு கட்டத்தில் இது ஒரு தொழிற்கலையாக உயர்ச்சி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இசை, நாடகம் இவ்வாறு உயர்குடி மக்களின் கலையாக விளங்கியபோது, நாட்டுக்கூத்து மக்கள் கலையாக விளங்கிவருகிறது.

நாட்டுக்கூத்துக்களின் நடிகர்கள் பெரும்பாலும் சாதாரண உழைக்கும் மக்களாகவே விளங்கிவருவார்கள். அதன் காரணமாக ஒரு போகம் முடிந்து அடுத்த போகம் தொடங்குவதற்கு முன்பாக உள்ள கால இடைவெளியிலேயேநாட்டுக்கூத்துக்கள் இடம்பெறும். அதாவது நடுவில் நான்கு பக்கமும் திறந்த மேடை அமைக்கப்பெற்றிருக்கும். பார்வையாளர்கள் சுற்றியிருந்தே பார்ப்பார்கள். பார்வையாளர்கள் மத்தியில் நடிகர்கள் அரங்குக்கு வருவதற்கும் மேடையிலிருந்து செல்வதற்கும் பாதைகள் விடப்பட்டிருக்கும். நடிகர்கள் பார்வையாளர்கள் ஊடாக அரங்கு நோக்கி வரும்போதே பாடிக்கொண்டே வருவார்கள். அரங்கில் அண்ணாவியார், ஹார்மோனியம் வாசிப்பவர், உடுக்கு அல்லது மத்தளம் வாசிப்பவர் ஆகியோர் நின்று கொண்டே தங்கள் பங்களிப்பை வழங்குவார்கள். பிற்பாட்டு பாடுபவர்கள் மேடையில் இரு புறமும் நிற்பார்கள்.

அண்ணாவியாரே தாளம் போடுபவராகவும், பிரதான பிற்பாட்டாளராகவும் இருப்பார். ஹார்மோனியம் வாசிப்பவர் தாளவாத்தியக்காரர், அண்ணாவியார் நடிகர்களின் நகர்வுடன் அவர்கள் பின்னால் தாங்களும் நகர்ந்து தங்கள் பங்களிப்பை வழங்குவர்.

தற்சமயம் இந்த வட்டக்களரி பல இடங்களிலும் வழக்கொழிந்து போய்விட்ட நிலையில், கூத்துக்கள் படச் சட்டமேடைக்கு மேடையேறிவிட்டன. இந்நிலையில் நடிகர்கள் மட்டுமே நடிப்பு இடம்பெறும் பகுதியில் நடமாடுவார்கள். அண்ணாவியார், வாத்தியக்காரர்கள், பிற்பாட்டுக்காரர் ஆகியோர் மேடையின் ஒரு பக்கமாக இருந்து தங்கள் பங்களிப்பை வழங்குவர். இந்த நாட்டுக்கூத்துக்களில் உள்ள சிறப்பம்சம் கூத்து பழக ஆரம்பித்த நாள் தொடக்கம், ஒவ்வொரு பழகும் நாளிலும் ஊரில் உள்ளவர்கள் கூடிவிடுவார்கள். காலம் காலமாக கூத்துக்களையும் பார்த்து அனுபவப்பட்ட பெரியவர்கள் ஆலோசனைகளையும் வழங்குவார்கள்.

முதலில் ஒரு நல்ல நாளில், “கொப்பி கொடுப்பது” இடம்பெறும். ஒவ்வொரு பாத்திரங்களினதும் பாடல்கள், வசனங்கள், எழுதப்பட்ட கொப்பிகள் நடிகர்களுக்கு அண்ணாவியாரால் வழங்கப்படும். கொப்பி பெறும் நடிகர்கள் அண்ணாவியாருக்கு “தட்சணை” கொடுப்பார்கள். பின் அண்ணாவியாரின் காலைத்தொட்டு வணங்கிவிட்டு அவரிடம் கொப்பியைப் பெற்றுக்கொள்வார்கள். கொப்பிகள் கொடுப்பது முடிந்தபின்பு எல்லோரும் வரிசையாக நிற்க அண்ணாவியார் கடவுள் வணக்கப்பாடலைப் பாடுவார். நடிகர்கள் பிற்பாட்டுப்பாடுவார்கள். அன்றைய நிகழ்ச்சி அத்துடன் நிறைவுபெறும். அடுத்த நாள் தொடக்கம் கூத்து பழக ஆரம்பிப்பார்கள்.

குருவணக்கத்தின் ஒரு பகுதியாக அன்றிரவு சூடு வெட்டி விரித்து இடம்பெறும். குருவுக்காக எனச் சொல்லப்பட்டபோதும் நடிகர்கள், உறவினர்கள் என எல்லோரும் பங்குகொள்வார்கள். வீட்டின் பின்புறத்தில் முட்டியில் கள்ளும் இருக்கும். விரும்புபவர்கள் அதையும் குடிக்கலாம்.

ஆனால் கூத்து அரங்கேறும் நாளில் மாமிச உணவுகள் உண்பதோ மது அருந்துவதோ கிடையாது. முக்கிய பாத்திரம் ஏற்பவர்கள் அன்று விரதம் அனுஷ்டிப்பதும் உண்டு. எப்படியிருப்பினும் கூத்து அரங்கேற்றம் என்பது அண்ணாவியாராலும், நடிகர்களாலும் ஒரு புனிதமான சடங்காகவே, பயபக்தியுடன் மேற்கொள்ளப்படும். கூத்து நிகழ்வு இரவு முழுவதும் நடைபெறுமாதலால் பார்வையாளர்கள் பாய்கள் கொண்டு வந்துவிரித்து விட்டே அமர்வார்கள். கூத்துப் பார்க்க முழுக் குடும்பமுமே வந்துவிடுவதால் நேரம் ஆக சிறுவர், சிறுமியர் அப்பாய்களில் படுத்துவிடுவார்கள். பார்வையாளர்கள் கடலை, கச்சான் என்பவற்றை வறுத்துக் கொண்டுவந்து கூத்து இடம்பெறும்போது கொறித்துக்கொள்வார்கள்.

முன்பெல்லாம் தீப்பந்த ஒளியிலேயே கூத்துக்கள் இடம்பெற்றதாக அறியமுடிகிறது. அடுத்த கால கட்டத்தில் “காஷ் லைற்” என அழைக்கப்படும் ஆளுயர விளக்குகளாலும், பின்பு பெற்றோல்மாக்ஸ் வெளிச்சத்திலும் இடம்பெற்றன. காலப் போக்கில் மின்சாரப் பாவனை வழக்கத்துக்கு வந்த பின்பு நாட்டுக்கூத்துக்களும் “போக்கஸ் லைற்” என நவீன மின்சார ஒளியில் இடம்பெற்றுவருகின்றன.

அந்தநாட்களில் ஒலிபெருக்கிகள் இல்லாமையால் நடிகர்கள் உரத்த குரலிலேயே பாடி நடிக்கவேண்டியிருந்தது. அந்தப் பாடல்களின் மெட்டுக்களும் உரத்துப் பாடும் வகையிலேயே அமைந்துள்ளதை அவதானிக்க முடியும். குறிப்பாக வரவுப் பாடல்கள் அதி உச்ச ஸ்தாயியிலேயே அமைந்திருக்கும். இவை பார்வையாளர்களை நிமிர்ந்து அமரவைக்கும் வகையில் எழுச்சி மிக்கவையாக அமைந்திருக்கும். காலப் போக்கில் நவீன ஒலி பெருக்கிகளும், ஒலிவாங்கிகளும் பாவனைக்கு வந்து நடிகர்களின் பணியைச் சுலபமாக்கிவிட்டன.

நவீன இலக்கியவாதிகள் ஒரு படைப்பு என்பது அதன் எழுத்துப் பிரதியுடன் முடிவடைவதில்லையென்றும், அது வாசகர்கள் மத்தியில் தொடர்கிறது எனவும் கூறுவார்கள்.

ஆனால் நாட்டுக்கூத்துக்கள் என்பவை சிறப்பம்சம் மிக்கவை. அதாவது கூத்து அரங்கேற்றப்பட்ட பின்பும் பல மாதங்களுக்கு அவற்றின் பாடல்கள் மக்களிடம் வலம்வந்தன. சிறுவர்கள் வீதிகளில் பாடிக்கொண்டு திரிவதுடன், விளையாடும் போது சில கூத்துக்காட்சிகளை தாங்களும் நடித்துச் சந்தோசமடைவார்கள். வயல், தோட்டங்களில் வேலை செய்பவர்களும் தங்கள் வேலை நேரங்களில் இப்பாடல்களைப் பாடுவார்கள். குறிப்பாக விவசாயிகள் துலாமிதிக்கும்போது ஒருவர் காத்தவராயன் கூத்துப் பாடல்களைப் பாடுவதும், மற்றையவர்கள் பிற்பாட்டுப் பாடுவதுமாக சம்பவங்கள் இடம்பெற்றுவந்ததுண்டு. ஏனைய கிராமியக் கலைகளைப் போலவே கூத்துக்கலையும் முழுமையாக மக்கள் மயப்பட்ட கலையாக விளங்கிவந்தது. இக்கூத்துக்களில் காத்தவராயன் கூத்து முழு வடபகுதிக்கும் ஒருபொதுவான கூத்தாக ஏற்றுக்கொள்ளப்பட்டு ஆடப்பட்டுவருகிறது.

அதேவேளையில் சில பகுதிகளுக்கெனத் தனித்துவமான கூத்துக்களும் உள்ளன. காத்தவராயன் கூத்து ஒரு துள்ளு நடையைக் கொண்டதாக அமைந்துள்ளது. ஏனைய கூத்துக்கள், அவைக்கென ஆட்டவடிவங்களைக் கொண்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் கிறிஸ்தவ மக்களால் ஆடப்படும் கூத்துக்களை வடபாங்கு என அழைப்பார்கள். அதே பாணியில் வானவீமன் கூத்து, அந்திராசி கூத்து என்பனவும் ஆடப்படுவதுண்டு. மேலும் வட்டுக்கோட்டையில் “சிந்துபுரமோடி” என்ற வகையில் கூத்துக்கள் ஆடப்படுகின்றன. மன்னாரில் வடக்கிலிருந்து அங்கு கொண்டு செல்லப்பட்ட கூத்து வகைகளை வடபாங்கு எனவும், மன்னாருக்குரிய கூத்து வடிவத்தை தென்பாங்கு எனவும் அழைப்பர். முல்லை மாவட்டத்தில் கோவலன் கூத்து, “முல்லை மோடி” என்ற தனித்துமான வகையில் அமைந்திருக்கும். வசந்தன் கூத்தும் யாழ்ப்பாணத்தின் நீர்வேலி உட்பட்ட சிலபகுதிகளிலும் ஆடப்பட்டுவருகின்றன. மட்டக்களப்பில் வடமோடி, தென்மொடி என இருபெரும் பிரிவுகளும் உள்ளன.

சங்கரதாஸ் சுவாமிகளின் இசை நாடக உருவாக்கத்தின் பின்பு இசைநாடகங்களும் தமிழ் மக்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றாக இடம்பிடித்துவிட்டது.

தற்சமயம் கூத்துக்கள் மேடையேற்றப்படுவதும் அவற்றைப் பயில்வதும் குறைவடைந்துவிட்டன. அவை தமிழ்மக்களின் பாரம்பரிய கலைவடிவம் என்பதால் அவற்றை தனித்துவம் குன்றாது பேணிப்பாதுகாக்கவேண்டியது அவசியமாகும்.

பாரம்பரியக் கலைகள் தொடரும்

அருவி இணையத்துக்காக நா.யோகேந்திரநாதன்


Category: செய்திகள், சிறப்பு கட்டுரை
Tags:



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE