Thursday 18th of April 2024 05:50:26 AM GMT

LANGUAGE - TAMIL
புதிய ஜனாதிபதியும் அரசியல் போக்கும்!
புதிய ஜனாதிபதியும் அரசியல் போக்கும்!

புதிய ஜனாதிபதியும் அரசியல் போக்கும்!


நிறைவேற்றதிகாரம், சட்டவாக்கம், நீதித்துறை ஆகிய மூன்றும் சம வலுவோடு தனித்துவமாகச் செயற்பட்டால்தான் ஜனநாயகம் நிலவ முடியும். அத்தகைய ஜனநாயக நிலைமை ஜனாதிபதி தேர்தலின் பின்னர் காணப்படவில்லை என்றே கூற வேண்டும். அப்படியானால் ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் அத்தகைய நிலைமை நிலவியதா என்ற கேள்வி எழலாம். ஒப்பீட்டளவில் நிலைமைகள் தேர்தலின் பின்னர் ஆரோக்கியமாகத் தென்படவில்லை என்பதே யதார்த்தம்.

தேர்தலின் பின்னர் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச நாடாளுமன்றத்தை ஒரு மாதத்திற்கு ஒத்தி வைத்துள்ளார். நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு நாடாளுமன்றக் கூட்டத்தொடரைத் தடுத்து நிறுத்துவதற்கு அதிகாரம் உண்டு. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர் நாடாளுமன்றத்தை முடக்கியுள்ளார். இதனை சட்டத்தை மீறிய நடவடிக்கையாகக் கூற முடியாது.

நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ஒத்தி வைப்பது சாதாரண ஒரு நடவடிக்கை. சாதாரணமாக அரசாங்கம் ஆட்சி நடத்தும் போது, இத்தகைய நடவடிக்கை ஏற்றுக்கொள்ளத்தக்கதே. அதில் குறை கூறுவதற்கு எதுவும் இல்லை. ஆனால் நாட்டின் ஏழாவது ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் இடம்பெற்றுள்ள இந்த நிலைமை சாதாரண நிலைமையில் இருந்து வேறுபட்டிருக்கின்றது.

ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதும், ஏற்கனவே பதவியில் இருந்த ஐக்கிய தேசிய கட்சி அரசின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தானாகவே பதவி விலகினார். புதிய பிரதமராக மகிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டார். புதிய அமைச்சரவையும் உருவாக்கப்பட்டது. ஆனால் நாடாளுமன்றம் ஒரு தடவைகூட கூடவில்லை. இந்த நிலையிலேயே ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச நாடாளுமன்றத்தை 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3 ஆம் திகதி வரை ஒத்தி வைத்துள்ளார்.

இதனையடுத்து, நாடாளுமன்றம் செயலிழந்துள்ளது. தனியொருவராகிய ஜனாதிபதியின் ஆட்சியே தலைதூக்கி உள்ளது.

பதவியில் உள்ள நாடாளுமன்றம் செயலிழந்தால், புதிய நாடாளுமன்றத்தைப் பொறுப்பேற்கும் தரப்பு தனது பெருமு;பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும். அவ்வாறு நிரூபிக்கின்ற ஒரு கட்சியின் தலைவரே பிரதமராக நியமனம் செய்யப்படுவார்.

நடந்ததென்ன?

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை திடீரென பதவி நீக்கம் செய்த அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்சவை புதிய பிரதமராக நியமித்தார். நாடாளுமன்றத்தில் மகிந்த ராஜபக்சவுக்குப் பெரும்பான்மை பலம் இருக்கவில்லை. ஆகவே பொரும்பான்மையை நிரூபிப்பதற்கு அவர் முற்படவில்லை.

பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருந்த ரணில் விககிரமசிங்க, பிரதமர் பதவியில் இருந்து விலக முடியாது என தெரிவித்து, பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமாகிய அலரி மாள்கையில் தொடர்ந்து தங்கி இருந்தார்.

அவரை அங்கிருந்து வெளியேற்றுவதற்காக அலரி மாளிகைக்கான மின் விநியோகம் நீர் விநியோகம் என்பன துண்டிக்கப்பட்டது. பணியாளர்களை அங்கிருந்து வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது. ஆனாலும் ரணில் விக்கிரமசிங்க இறங்கி வரவில்லை. அலரி மாளிகையில் இருந்து வெளியேறப் போவதில்லை என்று அவர் மிகவும் உறுதியாக இருந்தார்.

பிரதமரைப் பதவி நீக்கம் செய்து, நாடாளுமன்றத்தைக் கலைத்து, தேர்தலுக்கு உத்தரவிட்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கைகள் சட்ட வலுவற்றவை என்று அரசியலமைப்புச் சட்டத்தை மேற்கோள் காட்டி தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் ஜனாதிபதியின் நடவடிக்கை சட்ட வலுவற்றது என தீர்ப்பளித்தது.

இதனையடுத்து வெறும் கடதாசி பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்ச பதவி இழந்தார். ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் இருந்த தனது பெரும்பான்மை பலத்துடன் அரசாங்கத்தை அமைத்துச் செயற்பட்டார்.

ஆனால் ஜனாதிபதி தேர்தலின் பின்னரான நிலைமை அவ்வாறில்லை. தேரதலில் பொதுஜன பெரமுன அமோக வெற்றியீட்டியதையடுத்து, ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சரவையில் இருந்த முக்கிய புள்ளிகள் அமைச்சுப் பதவிகளை இராஜிநாமா செய்யத் தொடங்கினர். தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி அடைந்த தோல்வி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கட்சிக்குள் பெரும் நெருக்கடியை உருவாக்கியது. பிரதமர் பதவியை அவர் தானாகவே துறந்தார். அமைச்சரவையும் தன்போக்கி;ல் கலைந்து போனது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கக் கூடிய நிலைமை இல்லாத போதிலும், மகிந்த ராஜபக்சவை கோத்தாபாய ராஜபக்ச பிரதமராக நியமித்தார். அமைச்சரவையின் தலைவராகிய ஜனாதிபதி, பிரதமர் மற்றும் 15 அமைச்சர்களுடன் கூடிய அமைச்சரவை உருவாக்கப்பட்டது. அத்துடன் அமைச்சரவை அந்தஸ்து பெறாத 34 இராஜாங்க அமைச்சர்களும், 3 பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர்.

நாடாளுமன்ற ஒத்தி வைப்பு

நாட்டின் 16 ஆவது அமைச்சரவையாகிய ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்சவின் அமைச்சரவையில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த எவருமே உள்ளடக்கப்படவில்லை. அதேவேளை, வடக்கில் டக்ளஸ் தேவானந்தா, மலையகத்தில் தொண்டமான் ஆறுமுகம் ஆகிய இரண்டு தமிழ் அமைச்சர்கள் அமைச்சர்கள் இந்த அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர். இவ்வாறு ஓர் அமைச்சரவை அமைக்கப்பட்டிருப்பது நாட்டின் அரசியல் வரலாற்றில் இதுவே முதற் தடவை.

பெரும்பான்மை பலமில்லாத ஓர் அரசாங்கமாக இந்த அரசாங்கம் அமைந்ததன் காரணமாகவோ என்னவோ ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச அதன் நாடாளுமன்ற அமர்வை தனது நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒத்தி வைத்துள்ளார்.

புதிய நாடாளுமன்றம் கூடும்போது, அரசாங்கத்தின் பெரும்பான்மை பலத்தைக் காட்டவேண்டிய அவசியம் எழும் என்பதில் சந்தேகமில்லை. அது அரசாங்கத்திற்கு ஓர் இக்கட்டான நிலைமையை உருவாக்கவும்கூடும். அத்தகைய ஒரு நிலைமையைப் பின்போடுவதற்காகத்தான் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச முடக்கி வைத்தாரோ என்று தெரியவில்லை.

எப்படி இருப்பினும் நாடாளுமன்றம் கூடும்போது புதிய அரசாங்கத்திற்கு சபையில் உள்ள பெரும்பான்மை பலத்தைக் காட்டவேண்டியது அவசியம். அதனைத் தவிர்க்க முடியாது. ஆனாலும் காலப் போக்கில் அரசாங்கத்திற்குத் தேவையான பெரும்பான்மை பலத்தை பிரதமர் மகிந்த ராஜபக்ச நாடாளுமன்ற அமர்வுகள் பின்போடப்பட்டுள்ள ஒரு மாத காலத்திற்குள் திரட்டிக்கொள்வாரோ என்பதும் தெரியவில்லை. அதற்கான ஒரு சந்தர்ப்பமாகத்தான் சபை ஜனவரி மாதம் வரையில் ஒத்தி வைக்கப்பட்டிருக்கின்றது என்றும் அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகின்றது.

அதேவேளை, அதிகாரத்தில் உள்ள அரசாங்கம் அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரையில் பதவியில் இருக்க முடியும். அடுத்த பொதுத்தேர்தல் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே அரசியலமைப்புக் கணிப்பின்படி நடைபெற வேண்டும். ஆனால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி இந்த அரசாங்கத்தை அடுத்த பெப்ரவரி மாதமளவில் கலைப்பதற்கான அதிகாரத்தைக் கொண்டிருக்கின்றார்.

நாடாளுமன்றம் கலைக்கப்படும்...

எனவே, ஜனாதிபதியாகப் பதவியேற்ற இரண்டு வார காலத்தில் நாடாளுமன்றத்தை ஓத்தி வைப்பதற்கான உத்தரவை கோத்தாபாய ராஜபக்ச டிசம்பர் 2 ஆம் திகதி பிறப்பித்திருந்தார். இதற்கமைய ஜனவரி மாதம் 3 ஆம் திகதிக்குப் பின்னர் ஒரு தடவை நாடாளுமன்றத்தைக் கூடச் செய்து அதனை உடனடியாகவே மீண்டும் இரண்டு தடவைகள் ஒத்தி வைத்துவிட்டு, மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கும் அவருக்கு அதிகாரம் உண்டு.

இந்த வகையில்;, பொதுத் தேர்தலில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட பெரும்பான்மை பலத்தைக் கொண்டிருந்த அரசாங்கத்தை, ரணில் விக்கிரமசிங்கவிடம் இருந்து ஜனாதிபதி தேர்தலின் அமோக வெற்றியைப் பயன்படுத்தி கொத்தாபாய ராஜபக்ச அணியினர் பறித்தெடுத்துள்ளனர். பொதுத் தேர்தல் ஒன்றை நெருங்கியுள்ள வேளையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அரசாங்கம் தற்காலிகமானது. ஆனாலும் அதனை அரசியல் இலாபத்தை நோக்கிய நிலையில் அவர்களால் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதில் சந்தேகமில்லை.

பொதுத் தேர்தலை சாதகமான நிலையில் எதிர்கொள்வதற்கு பொதுஜன பெரமுனவை தயார்ப்படுத்திக் கொள்வதற்கு இந்த அரசாங்கம் ஒரு கருவியாக அமைந்துள்ளது. இத்தகைய அரசியல் தந்திரோபாயத்தின் பின்னணியிலேயே நாடாளுமன்றம் முடக்கப்பட்டிருப்பதாக அரசியல் வட்டாரங்களில் கருதப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் தறகாலிக அரசாங்கமே ஆட்சியில் உள்ளது. எனவே இதனை பொதுத் தேர்தல் நடத்தப்படுகின்ற அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதம் வரையில் நீடிக்காமல் கூய விரைவில் அதனைக் கலைத்துவிட்டு பொதுத் தேர்தலை நடத்துவதற்கு ராஜபக்ச அணியினர் முற்படுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

நாடாளுமன்றம் உரிய காலத்திற்கு முன்னரே கலைக்கப்படும் என்பதற்கான அறிகுறியை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச வெளிப்படுத்தி இருந்தார். தனது மூத்த சகோதரராகிய மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து, தற்காலிக அரசாங்கத்திற்கான எண்ணிக்கையில் குறைந்த அமைச்சர்களைக் கொண்ட அமைச்சரவையை உருவாக்கியபோது, கூடிய விரைவில்; பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

பொது மக்களின் ஆலோசனையைப் பெற்று அரசியலமைப்புக்கு அமைவாகப் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் தேர்தல் எப்போது நடத்தப்படும் என்பதை அவர் காலம் குறித்து தகவல் எதனையும் வெளியிடவில்லை.

மாகாண சபைத் தேர்தல்

பொதுத் தேர்தலை எதிர்கொண்டு ஆட்சி மாறுகின்ற நிலையில் தற்காலிக அரசாங்கத்தை அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டால், அதனை உருவாக்குவதை அரசியலமைப்பு அனுமதித்துள்ளது. ஆனால் நாடாளுமன்றத்தை ஒத்தி வைப்பதென்பது பொதுமக்களின் உரிமைகளில் கைவைக்கின்ற கைங்கரியமாகவே இருக்கும்.

நாடாளுமன்றம் கூடும்போது மக்களுடைய அபிலாசைகளை அவர்களுடைய பிரதிநிதிகள் பிரதிபலிப்பதுடன், அதற்கேற்ற வகையிலான சட்டங்களை உருவாக்கவும், தீர்மானங்களை அராங்கம் மேற்கொள்ளவும் வசதியாக இருக்கும்.

ஆனால் நாடாளுமன்றம் முடக்கப்படும்போது முழுமையான ஆட்சி அதிகார தீர்மானங்களை ஜனாதிபதியே தனித்து மேற்கொள்பவராக இருப்பார். அந்த வழிமுறையிலேயே ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச பல்வேறு விடயங்களில் தீர்மானங்களை மேற்கொண்டு அறிவித்துள்ளார். நாட்டின் பொது நன்மையைக் கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானங்களும் உத்தரவுகளும் பிறப்பிக்கப்பட்டாலும்கூட, வரப்போகின்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு, அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவே கருதப்படும்.

நாலரை ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஆட்சி அதிகாரத்தை இழந்து, பொதுமக்களால் நிராகரிக்கப்பட்ட நிலைமைக்குத் தள்ளப்பட்டதன் பின்னர், முறையானதோர் அரசியல் நிகழ்ச்சி நிரலின் கீழ் ராஜபக்சக்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றி உள்ளார்கள்.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றிருந்தாலும்கூட, பொதுத் தேர்தலின் ஊடாக நாடாளுமன்றத்தைப் பெரும்பான்மை பலத்துடன் கைப்பற்ற வேண்டிய தேவை அவர்களுக்கு உண்டு. அதற்கான முயற்சிகளிலும் அவர்கள் நிச்சயமாக ஈடுபடுவார்கள். இதன் அடிப்படையிலேயே நாடாளுமன்றம் முடக்கப்பட்டு ஜனாதிபதி தனது அதிகார எல்லைக்கு உட்பட்ட வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வதைக் காண முடிகின்றது.

நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ளதனால் பல வருடங்களாக நடத்தப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ள மாகாண சபைகளுக்கான தேர்தல்களை நடத்த முடியாத நிலைமையும் ஏற்பட்டுள்ளது.

ஜனநாயகமா.......?

வெறுமனே ஜனாதிபதி தேர்தலையும், நாடாளுமன்றத் தேர்தலையும் நடத்தினால் மட்டும் போதாது. உள்ளுராட்சி மன்ற ஆட்சி உரிமைகளில் முக்கிய அம்சமாக விளங்குகின்ற மாகாணசபைகளுக்கான தேர்தல்களும் நடத்தப்பட வேண்டும். அந்தத் தேர்தல் ஏற்கனவே நீண்டகாலமாக நடத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்ட நிலைமைக்கு ஆளாகி உள்ளது.

மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படுவதற்கு அதற்கான சட்டம் ஒன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும். அதனை நிறைவேற்றாத காரணத்தினாலேயே அந்தத் தேர்தல் உரிய காலத்;தில் நடத்தப்படாமல் பின்தள்ளப்பட்டு வந்துள்ளது. ஜனாதிபதி தேர்தலையடுத்து, மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், பொதுத் தேர்தலை எதிர்கொள்ளும் அரசியல் ஆர்வத்தில் அந்தத் தேர்தல் குறித்து அரச தரப்பில் இப்போது கவனம் செலுத்தப்படாத நிலைமையே காணப்படுகின்றது.

நாடாளுமன்றம் முடக்கப்பட்டுள்ள நிலையில் மாகாணசபைத் தேர்தலை நடத்தவதற்கான தீர்மானத்தை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. அத்துடன் மாகாண சபைத் தேர்தலைப் போன்று பொதுத் தேர்தலை தங்களுடைய வசதிக்கேற்ப பின்போட முடியாது. எனவே இத்தகைய பின்னணியில் அடுத்ததாக மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான சாத்தியங்களைக் காண முடியவில்லை.

பொதுத் தேர்தல் ஆட்சி அதிகாரமுடையது. தேசிய அளவிலானது. அந்த வகையில் அது அரசியல் கட்சிகளின் அத்தியாவசிய தேவை. அந்த அளவுக்கு மாகாண சபைத் தேர்தல்கள் அரசியல் கட்சிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததல்ல. ஆயினும் பொதுமக்களுக்கு அது அடிப்படையில் முக்கியமானது.

பொதுத் தேர்தலின் முடிவுகளுக்கு அமைவாகவே மாகாணசபைத் தேர்தலை நடத்துவதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும். நாடாளுமன்றத்தின் அங்கீகாரம் பெற்று அதனை நடத்த வேண்டிய அரசியல் சிக்கலுக்குள் அது சிக்கியுள்ளதே இதற்கு முக்கிய காரணமாகும்.

ஆயினும் மாகாண சபைத் தேர்தல்கள் பின்போடப்பட்டிருப்பதுவும், பின்போடப்படுவதும் மக்களுடைய ஜனநாயக உரிமைகளை மீறுகின்ற ஒரு செயற்பாடாகும். அது அரசியல் உரிமை மறுப்புமாகும்.

ஆயினும் மாகாண சபைத் தேர்தல்கள் பின்போடப்பட்டிருப்பதுவும், பின்போடப்படுவதும் மக்களுடைய ஜனநாயக உரிமைகளை மீறுகின்ற ஒரு செயற்பாடாகும். அது அரசியல் உரிமை மறுப்புமாகும்.

இத்தகைய பின்புலத்தில் நாடாளுமன்றம் முடக்கப்பட்டிருப்பது தனிமனித ஆதிக்கத்தின் மேலெழுச்சியின் அடையாளமாகும். பல்வேறு அரசியல் காரணங்கள் இருக்கலாம். அரசியல் தேவைகள் இருக்கலாம். ஆயினும் அது நிறைவேற்று அதிகாரத்தின் ஊடான தனிமனித அரசியல் பலப் பிரயோகமாகும். இதனை ஜனநாயகத்திற்கு முரணான ஓர் அம்சம் என்று கருதுவதில் தவறிருக்க முடியாது.

அருவி இணையத்துக்காக பி.மாணிக்கவாசகம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE