Tuesday 19th of March 2024 05:07:42 AM GMT

LANGUAGE - TAMIL
அல்லலுறும் 'இலங்கை அகதி' வாழ்வு
அல்லலுறும் 'இலங்கை அகதி' வாழ்வு

அல்லலுறும் 'இலங்கை அகதி' வாழ்வு


தமிழ்நாட்டில் தவறாகக் கையாளப்படுகின்ற பல சிக்கல்களில், இலங்கைத் தமிழர் அகதிகள் எனப்படும் ஈழத்தமிழர்+மலையகத் தமிழர் விவகாரமும் ஒன்று. ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் எனும் அளவிலான ஒரு தொகைமக்களின் விவகாரம் என்பதாலோ அரசினுடைய கடும்பிடிக்குள் வைக்கப்பட்டிருப்பவர்கள் என்பதாலோ பொதுசமூகத்தில் இவர்களின் துயரவாழ்வு உரிய அளவுக்கு கவனப்படுத்தப்படாத நிலையே நீடித்துவருகிறது.

பலரும் பல இடங்களில் பல முறை இந்த அகதி முகாம் தமிழர்களைப் பற்றி விவரித்துவிட்டதால், மீண்டும் அதைப் பற்றிய விரிவுரையைத் தவிர்க்கலாம். அடிப்படையான புரிந்துகொள்ளல் என்பதற்காக, சில விவரங்கள்: இலங்கையிலிருந்து அடைக்கலம் தேடி வந்த தமிழ் அகதிகளுக்காக தமிழ்நாட்டில் 107 முகாம்கள் உள்ளன. ஏறக்குறைய 25 மாவட்டங்களில் 59,714 பேர் இவற்றில் இருக்கின்றனர். இவர்களைத் தவிர, முகாம்களுக்கு வெளியில் 34, 355 பேர் அகதிகளாக வசிக்கின்றனர். கடந்த 19-ம் தேதியன்று தமிழ்நாட்டின் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்த தகவல் இது! முகாமில் உள்ள அகதிகளில் ஈழத்தமிழர் மட்டும் இல்லை, 80-களுக்கு முன்னரும் பின்னரும் இங்கு வந்த மலையகத் தமிழரும் அடக்கம்; ஆனால், அவர்களின் எண்ணிக்கை குறைவு என்பது கவனத்திற்குரியது.

இப்போதைய விவாதம், நாடற்றவர்களான இவர்களுக்கு குடியுரிமை வழங்குவது பற்றியது. இந்திய - இலங்கை இரட்டைக் குடியுரிமையா என்பது அடுத்தகட்டம். ஒற்றைக் குடியுரிமைக்கே வழி இல்லாதபோது, இரட்டைக்குடியுரிமை என்பதை எப்படிப் பேசுகிறார்களோ?

அடைக்கலம் கேட்டுவந்த இலங்கைத் தமிழர்களின் மீது அக்கறைகொண்ட அமைப்புகள், முப்பது ஆண்டுகளாக இவர்களுக்கான குடியுரிமை குறித்து வலியுறுத்திவருகின்றன. தெற்காசிய விரிவாதிக்க நோக்கில் இந்திரா காலத்து டெல்லி அரசபீடம் தொடங்கிய அரசியல் விளையாட்டை அவரின் மகன் இரசீவ்காந்தியும் தொடர, ஆடுபுலி ஆட்டத்தின் காய்களாக ஆக்கப்பட்டார்கள், இலங்கை அகதிகள்.

எந்தவகை அரசியல் பட்டறிவுமற்ற வானோடியாக இருந்த இரசீவ்காந்தியின் வாரிசுத்தகுதி பிரதமர் பதவியால், இலங்கை, குறிப்பாக ஈழத்தமிழர் வாழ்க்கை மீண்டும் பெரும் சோதனையையும் வேதனையையும் சந்திக்கநேர்ந்தது. அப்போது ஒரு தொகை இலங்கைத் தமிழ் முகாம்வாசிகள் இங்கிருந்து கப்பலில் ஏற்றி இலங்கைக்கு தாயகம்திரும்ப வைக்கப்பட்டனர். டெல்லியின் கைப்பாவையாக மாறிய ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வரதராசப்பெருமாள் முதலமைச்சரானதும் அதன் பிறகு அங்கு நடந்த அவலமும் அறியப்பட்டதே!

அடுத்த கட்டமான தாயகம் திரும்பச்செய்தல், இரசீவ்காந்தியின் கொலையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டது. இன்னமும் விசாரணை முடிவடையாத- வழக்கில் மட்டும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள அந்தக் கொலை விவகாரத்தால், இலங்கைத் தமிழர்கள் மீது பொதுசமூகத்தில் எதிர்மறையான பிம்பம் ஏற்பட்டது, உண்மையோ உண்மை. அதேவேளை அதற்காகவே ஈழத்தமிழர் மீதான கரிசனையை ஒட்டுமொத்த தமிழ்நாடும் விட்டுவிட்டது என்பது நூற்றுக்கு நூறு பொய்யோ பொய்! அதற்கான சான்றுகளை வலுவாகக் காட்டுவதற்கு நம்மிடம் எத்தனையோ சேதிகள் உள்ளன. அவற்றை இப்போது விடுவோம். அந்தக் காலகட்டத்தில் வலிந்து திரும்பச்செய்தலில் முதனமையான பங்குவகித்தவர், மறைந்த ஊழல் வழக்குக் குற்றவாளி செயலலிதா அவர்கள்தான். ஆம், இரசீவ்காந்தியின் சடலத்தைக் காட்டி வென்றதாக காங்கிரசாராலேயே வெளிப்படையாக சாட்டப்பட்ட அவருக்கு, அப்போது, அகதி முகாம்களிலிருந்து ஈழத்தமிழரை திரும்பச்செய்தல் என்பது காலத்தேவையாகவும் தமிழ்நாட்டின் லாவணி அரசியலின் பகுதியாகவும் இருந்தது, கண்கூடு. இரசீவின் பதிலியாக வந்தமர்ந்த பிரதமர் நரசிம்ம ராவுக்கும் காங்கிரசு கட்சியின் முதலாளிகளான இந்திரா குடும்பத்தை திருப்திப்படுத்துவதும் உடனடிக் கடமையாக நின்றது.

(எந்த வரதராசப்பெருமாளை வைத்து இலங்கைத் தீவில் இரசீவின் டெல்லி அரசு ஆட்டம்காட்டியதோ, அதே பெருமாள் உயிரைப் பிடிக்க தப்பிவந்து, மத்தியபிரதேசத்தில் மறைந்துவாழ்ந்தது நினைவுக்குரியது. அவரைப் பாதுகாக்க எடுத்த முயற்சியை, காட்டிய அக்கறையை, அவரை நம்பியும் ஈழத்துக்குத் திரும்பச்சென்ற அகதிமுகாம்வாசிகளின்பால் காட்டியிருந்தால், இன்றைய அவலத்தின் அளவாவது குறைந்திருக்கும்.)

நரசிம்மராவுக்குப் பின்னர் டெல்லி பீடத்துக்கு வந்த பா.ச.க.வின் வாச்பேயி அரசாங்கம், பாம்புக்குத் தலையையும் மீனுக்கு வாலையும் காட்டியபடியாக அகதிகள் விவகாரத்தில் கனத்த அமைதிகாத்தது. மீண்டும் 2004-ல் ஆட்சிபீடமேறிய காங்கிரசு தெளிவான அறிவுறுத்தல் ஒன்றை தமிழ்நாட்டு அரசுக்கு தெரிவித்தது. 2007-ம் ஆண்டு நவ.7 சுற்றறிக்கை எனும் அந்த ஆணை, டெல்லி- சென்னை அரசபீடங்களுக்கிடையில் பிரபலமான ஒன்றாகும். இலங்கை அகதியாக வந்த யாரும் இந்தியக் குடியுரிமைச் சட்டப்படியான தகுதிகள் பெற்றிருந்தாலும், அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படக்கூடாது என்பதே அந்த சுற்றறிக்கை சொல்லும் சேதி!

ஆட்சிபீடங்களைத் தாண்டி டெல்லியின் சவுத்பிளாக் அதிகாரவர்க்கத்தால் கையாளப்படும் இலங்கைத் தமிழர் விவகாரத்தில், இந்த சுற்றறிக்கை பெரும் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. அதாவது, தன்னாட்சி உரிமை தொடர்பான போராட்டத்தால் இந்தியாவுக்குள் அடைக்கலம் கோரிவந்த திபெத்தியர்களுக்கும் இதே அளவுகோல்தானே பின்பற்றப்பட்டிருக்கவேண்டும்? அப்படி நடந்திருக்கிறதா என்றால் ஒரு கையில் வெண்ணெயும் இன்னொரு கையில் சுண்ணாம்புமாகத்தான் டெல்லி அரசபீடங்கள் தொடர்ந்து தங்கள் குணத்தைத் தெளிவாக வெளிப்படுத்திவருகின்றன.

ஐ.நா.வின் அகதிகளுக்கான உடன்பாட்டில் டெல்லி கையெழுத்திட்டிருந்தால் வழங்கப்படவேண்டிய உதவிகளைக் காட்டிலும் கூடுதலாகவே திபெத்திய அகதிகளுக்கு வாரிவழங்கப்படுகிறது. இதேவேளை இதேவகையான துயரத்தோடு இந்தியாவில் அடைக்கலமான ஈழத்தமிழர், மலையகத்தமிழர் அகதிகளுக்கோ நேர்மாறாக, சுதந்திரமான நடமாட்டமும் வாழ்வாதாரமும் சரியான வசிப்பிட, அடிப்படை, சுகாதார வசதிகளும் தொடர்ச்சியாக மோசமாகவே இருக்கின்றன.

ஈழத்தமிழரின் தன்னாட்சி உரிமைப் போராட்டத்தை ஆதரிக்கும் திராவிடர் இயக்க, தமிழ்த்தேசிய அமைப்புகள், பிற கட்சிகள், அரசியல் அமைப்புகளின் பல்வேறு கவனயீர்ப்புப் போராட்டங்கள், முறையீடுகளுக்குப் பின்னரும் டெல்லி அரசபீடம் இதில் சிறிதும் அசைந்துகொடுக்காத ஒன்றாகவே இருந்துவருகிறது. ஆண்ட கட்சி, ஆளும் கட்சி போன்ற அரசியல் கட்சிகளோ லாவணி அரசியலுக்கான ஒரு பேசுபொருளாகக்கூட இதைக் கைக்கொள்ளாத நாடகம்தான் இங்கு அரங்கேறிவருகிறது.

அந்த லாவணி வாய்ச்சவடால்களில் ஒன்றுதான், இரட்டைக் குடியுரிமை பெற்றுத்தரும் வாக்குறுதி. திமுகவும் அதிமுகவும் பெருமிதப்பட்டுக்கொள்வதைத் தவிர்த்து உடனடியாக எதற்கும் பயன்படாத இந்த முழக்கத்தைவிட, ’2007 நவம்பர் ஏழு’ சுற்றறிக்கையைத் திரும்பப்பெறுமாறு டெல்லி அரசுக்கு அழுத்தம்தருவதற்கு ஆகக்கூடியதைச் செய்வது, பயன்.

இதைச் செய்வதற்கு முற்படாமல் இங்கு மேற்கொள்ளப்படும் எந்த அரசியல் செயல்பாடும், ஐ.நா. அகதிகள் உடன்படிக்கையில் கையெழுத்திடுவதற்கான முன்னோக்கிய போராட்டத்துக்கு வழிவகுக்குமா என்பது கேள்விதான்!

தமிழ்நாட்டிலிருந்து இர.இரா.தமிழ்க்கனல்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இந்தியா, தமிழ்நாடு, சென்னை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE