Tuesday 19th of March 2024 01:19:13 AM GMT

LANGUAGE - TAMIL
சிறுபான்மை விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி!
சிறுபான்மை விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி!

சிறுபான்மை விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி!


நாட்டில் அபிவிருத்தியை முன்னெடுப்பதே அரசாங்கத்தின் முக்கிய நோக்கம். அபிவிருத்தி என்பதே இப்போதைய தேவை. பௌத்த மதம் முதன்மை நிலையில் பேணப்படும். தேசிய பாதுகாப்புக்கு அதிமுக்கியத்துவம் அளிக்கப்படும் இதனை ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை விளக்க உரையில் தெளிவாகக் கூறியுள்ளார்.

பெரும்பான்மை இன மக்களாகிய சிங்கள மக்களுடைய வாக்குகளின் மூலம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அவர் அந்த மக்களுக்கே விசுவாசமாக அரசியல் செய்யப் போவதாகக் கோடி காட்டியுள்ளார். பெரும்பான்மை இன மக்களின் அபிலாசைகளுக்கமைய ஆட்சி செய்வதன் மூலமே நாட்டின் இறைமையைப் பாதுகாக்க முடியும் என்பதே அரசாங்கத்தின் நிலைப்பாடு. இதையும் அவர் தனது உரையில் ஐயந்திரிபற வெளிப்படுத்தி உள்ளார்.

தேர்தலின் போது தன்னுடன் இணையுமாறு விடுத்த வேண்டுகோளை சிறுபான்மை தமிழ் மக்கள் ஏற்க மறுத்து, தனக்கு எதிராக வாக்களித்தமை குறித்து, தேர்தலில் வெற்றி பெற்றபின்னர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் அவர்,கவலை வெளியிட்டிருந்தார். எனினும் நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் அனைத்து மக்களினதும் ஜனாதிபதியாகப் பணியாற்றுவேன் என்று உறுதியளித்திருந்தார். ஆனால் தனது கொள்கை விளக்க உரையில் சிறுபான்மை இன மக்களைப் பற்றி எதுவும் கூறவில்லை.

அவர்களுடைய அரசியல் அபிலாசைகள் குறித்து அவர் எதுவுமே குறிப்பிடவில்லை. சிறுபான்மை இன மக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்திருப்பது பற்றி அவர் தனது உரையில் கவனம் செலுத்தியிருக்கவில்லை. அந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற அந்த மக்களின் ஆவலையும் எதிர்பார்ப்பையும் அறிந்திருப்பதாகவே அவர் தனது உரையில் காட்டிக்கொள்ளவில்லை.

நாட்டு மக்கள் இன ரீதியாக பெரும்பான்மை இனத்தவர்கள், சிறுபான்மை இனத்தவர்கள் என்ற வகையில் பிளவுபட்டுக் கிடப்பதை ஜனாதிபதி தேர்தல் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி உள்ளது. மறு விதமாகக் கூறவதானால், இந்தத் தேர்தலின் ஊடாக நாட்டு மக்கள் இன ரீதியாக அரசியலில் ஆழமாகப் பிளவு படுத்தப்பட்டிருக்கின்றார்கள் என்றே குறிப்பிட முடியும். பொதுஜன பெரமுனவின் வேட்பாளராகக் களம் இறங்கியிருந்த கோத்தாபாய ராஜபக்ச பெரும்பான்மை இன மக்களாகிய சிங்கள மக்களுடைய ஆதரவை முழுமையாகத் திரட்டி, அதன் ஊடாக தேர்தலில் வெற்றி பெறுவதற்குரிய பிரசார வியூகத்தை வகுத்துச் செயற்பட்டிருந்தார்.

புறக்கணிக்கப்பட்ட சிறுபான்மை இன மக்களின் அரசியல் அபிலாசைகள்

இது, கோத்தாபாயவின் தேர்தல் பிரசார வியூகம் என்பதைவிட, பொதுஜன பெரமுன என்ற புதிய கட்சியை உருவாக்கி அதன் ஊடாக குடும்பத்தினர் சகிதம், தனது ஆதரவாளர்களையும் அணி திரட்டிக் கொண்டு அரசியலில் ஆரவாரத்துடன் மீள் பிரவேசம் செய்த மகிந்த ராஜபக்ச அணியினரின் அரசியல் தந்திரோபாயம் என்றே கூற வேண்டும்.

தர்தல் பிரசாரத்தின்போது சிறுபான்மை இன மக்களின் வாக்குகளைக் கவர்வதற்காக அவர்களுடைய பிரச்சினைகளில் பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவர்கள் கவனம் செலுத்தவில்லை. சிறுபான்மை இனமக்களை அவர்கள் புறக்கணித்துச் செயற்பட்டிருந்தார்கள் என்றே கூறவேண்டும். இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு, தமிழ் மக்களின் அவசரமான அன்றாடப் பிரச்சினைகள், முஸ்லிம் மக்களின் மத சுதந்திரம் சார்ந்த பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை பொதுஜன பெரமுனவினர் வேண்டுமென்றே புறக்கணித்திருந்தனர். தேர்தலையொட்டி, தமிழ் மக்களின் அபிலாசைகள், அரசியல் ரீதியான எதிர்பார்ப்புக்கள் குறித்து தமிழ்த்தரப்பில் முன்வைக்கப்பட்டிருந்த விடயங்களை வேட்பாளராகக் களத்தில் இருந்தபோது செவிமடுக்கவே கோத்தாபாய விரும்பவில்லை. அந்த விடயங்கள் குறித்து பேச்சுக்கள் நடத்துவதற்கு தமிழ்த் தலைவர்கள் தயாராக இருந்த போதிலும், அத்தகைய பேச்சுவார்த்தைகள் அவசியமில்லை. அவற்றில் தனக்கு நாட்டமில்லை என்று வெளிப்படையாகவே அவர் கூறியிருந்தார்.

சஜித் பிரேமதாசாவும்கூட வெளிப்படையாக அரசியல் தீர்வு உட்பட சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளுக்கு உடனடியாக செவிசாய்க்கவில்லை. ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் அழுத்தத்திற்குப் பின்னர் கடைசி நேரத்திலேயே அந்தப் பிரச்சினைகள் குறித்து தேர்தல்விஞ்ஞாபனத்தில் கவனம் செலுத்தி கருத்து வெளியிட்டிருந்தார். சிறுபான்மை இன மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கு, இந்த விடயத்தில் வேட்பாளராகிய சஜித் பிரேமதாசா ஆதரவுப் போக்கிலான கருத்தை தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட வேண்டும் என தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் சுமந்திரன் வேண்டுகோள் விடுத்திருந்ததையடுத்தே இது நடைபெற்றிருந்தது.

ஆகவே, தேர்தலுக்கான பரப்புரைகள் தீவிரம் பெற்றிருந்த காலப்பகுதியில் சிறுபான்மை இன மக்கள் மீது இயல்பானதும், உளப்பூர்வமானதுமான அக்கறையில் ஐக்கிய தேசிய கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் அந்த மக்களின் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை.

சிறிய கட்சிகள் பெரிய கட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது

இத்தகையதொரு பின்புலத்தில்தான் சிறுபான்மை இன மக்கள் சஜித் பிரேமதாசாவை ஆதரித்து ஒரு முகமாக வாக்களித்திருந்தார்கள். யுத்த காலம் தொடக்கம் சிறுபான்மை இனமக்கள் தொடர்பில் மகிந்த அணியினர் கொண்டிருந்த அரசியல் ரீதியான அணுகுமுறைகளும் நிலைப்பாடும் அந்த மக்களுடைய ஆதரவைப் பெறுகின்ற வகையில் அமைந்திருக்கவில்லை.

யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும்கூட சிறுபான்மை இன மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வ காண்பதில் ராஜபக்ச அணியினர் அக்கறை கொண்டிருக்கவில்லை. அவர்கள் அரசாங்கத்தின் இராணுவ மயப் போக்கில் நெருக்கடிகளுக்கே உள்ளாகி இருந்தார்கள். அதன் காரணமாகவே 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் பல்வெறு நெருக்குவாரங்வகளுக்கு மத்தியிலும் அப்போதைய பொது வேட்பாளராகக் களமிறங்கி இருந்து மைத்திரிபால சிறிசேனவை அவர்கள் ஆதரித்து வாக்களித்து ராஜபக்சவைத் தோற்கடித்திருந்தார்கள்.

அந்தத் தோல்வியைத் தொடர்ந்து, ஐந்து வருடங்களின் பின்னர் ராஜபக்ச அணியினர் அதிகாரத்துக்கு வந்தால் தாங்கள் மீண்டும் அடக்குமுறைகளுக்கு உள்ளாக நேரிடும் என்ற அரசியல் ரீதியான அச்சமே சிறுபான்மை இன மக்கள் மத்தியில் நிலவியது. இதன் காரணமாகவே பொதுஜன பெரமுனவுக்கு வாக்களிப்பதற்கு அவர்கள் விருப்பம் கொண்டிருக்கவில்லை.

அதேவேளை, அந்தக் கட்சியின் வேட்பாளர் தேர்தல் வெற்றி பெறுவதைத் தடுப்பதற்கான வழிமுறையில் அவர்கள் தமது வாக்குகளைப் பிரயோகித்திருந்தார்கள். இந்த நிலைமையிலேயே அவர்கள் சஜித் பிரேமதாசாவுக்கு வாக்களித்திருந்தார்கள். அவ்வாறு வாக்களித்தது சஜித் பிரேமதாசா வெற்றிபெற்று ஜனாதிபதியாகியதும் தங்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பார் சுமுகமான வாழ்க்கை வாழ அவர் மூலமாக வழிகிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் அவருக்கு வாக்களிக்கவில்லை.

இத்தகைய நிலையிலேயே தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகப் பதவியேற்றபோது ஆற்றிய உரையில் சிறுபான்மை இன மக்கள் தனக்கு ஆதரவளிக்கவில்லையே என்ற ஆதங்கத்தை ஜனாதிபதி வெளிப்படுத்தி இருந்தார். இருப்பினும் அவர் நாட்டு மக்கள் அனைவரினதும் ஜனாதிபதியாக நாட்டின் அதிபராகக் கடமையாற்றப் போவதாக உறுதியளித்திருந்தார்.

ஆனால் அந்த உறுதிமொழிக்கும் தனது தலைமையிலான அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாடு குறித்து நாடாளுமன்றத்தில் ஆற்றிய கொள்கை விளக்க உரைக்கும் இடையில் முரண்பாடான நிலைமையே காணப்படுகின்றது.

சிறுபான்மை இன மக்களின் அரசியல் ரீதியான மனக்குறைகளையும் தேவைகளையும் நிறைவேற்றுவதாகவோ அல்லது அவர்களுடைய பிரச்சினைகளுக்குத் தீரவு காணப்படும் என்றோ தனது உரையில்அவர் குறிப்பிடவில்லை. மாறாக சிறுபான்மை அரசியல் கட்சிகள் உள்ளிட்ட சிறிய கட்சிகள் பெரிய கட்சிகளின் மீது செல்வாக்கு செலுத்துகின்ற போக்கில் செயற்பட வேண்டாம் என்ற தொனியில் கருத்துரைத்துள்ளார்.

சிறுபான்மை மக்களின் எதிர்பார்ப்புக்கள் என்ன ஆவது?

பெரிய கட்சிகளின் பின்னால் அணிதிரண்டு அந்தக் கட்சிகளின் போக்கில் பெரும்பான்மை மக்களின் விருப்பங்களை ஏற்று அதற்கேற்ற வகையில் செயற்பட வேண்டும். தேசத்தை அதன் ஊடாகக் கட்டியெழுப்ப முன்வர வேண்டும் என்றே ஜனாதிபதி கோத்தாபாய அழைப்பு விடுத்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் அடைந்த வெற்றிக்கு நாட்டின் சனத்தொகையில் பெரும்பான்மையானவர்களாகத் திகழும் சிங்கள மக்களின் வாக்களிப்பையும் அவர்களின் திரட்சியையும் தனது உரையில் முக்கியப்படுத்தி உள்ளார். அந்தத் திரட்சியான வாக்களிப்பின் மூலம் அவர்கள் தங்களது நலன்களைப் பேணி பாதுகாக்க வேண்டும் என்ற ஆணையை வழங்கி இருப்பதாக முக்கியப்படுத்தி கருத்துரைத்து உள்ளார்.

அந்த பெரும்பான்மை மக்களின் எதிர்பாரப்புக்களை நாங்கள் என்றும் மதிக்க வேண்டும். அப்போதுதான் நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க முடியும் என்று அவர் தனக்கு வாக்களித்த பெரும்பான்மை இனமக்களின் முக்கியத்துவத்தையும், அவர்களுக்காகப் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தையும் அவர் அழுத்தி உரைத்துள்ளார்.

நாடு அந்நியரிடமிருந்து சுதந்திரம் அடைந்த நாள் முதலாகவே பெரும்பான்மை இன மக்களாகிய சிங்கள மக்களின் நலன்களையே நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்று நிர்வாகம் நடத்தி வந்த அரசாங்கங்கள் முதன்மைப்படுத்திச் செயற்பட்டு வந்துள்ளன. பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு, அனைத்த விடயங்களிலும், அனைத்து இடங்களிலும் அதற்கு முதலிடம் அளிக்கப்பட்டு வருகின்றது.

சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளையும் தமது தாய்மொழியாகக் கொண்டு பல இங்களையும் சார்ந்த மக்கள் இந்த நாட்டில் வாழ்கின்றார்கள். இந்த நிலையில் பெரும்பான்மையானர்களாகிய சிங்கள மக்களின் நலன் கருதி சிங்கள மொழியே அரசகரும மொழியாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சிங்களத்துடன் தமிழும் அரச மொழியாக அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் நடைமுறையில் செயலளவில் சிங்களம் மட்டுமே முதன்மை பெற்ற மொழியாகவும் அரச கரும மொழியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

விகிதாசார முறைமை அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் அடிப்படையிலேயே கல்வி, தொழில்வாய்ப்பு, வர்த்தகச் செயற்பாடுகள், விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில் துறைகள் மற்றும் குடியேற்றம் என பல்வேறு துறைகளிலும் சிங்கள மக்களே முதன்மைப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். சிறுபான்மை இன மக்களுக்கு விகிதாசார முறையில் இடமளிக்கப்பட்டிருந்தாலும், நடைமுறையில் அது சீராகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை.

இத்தகைய ஒரு நிலைமையில் பெரும்பான்மை இனத்தவராகிய சிங்கள மக்களின் எதிர்பார்ப்புக்கள் அபிலாசைகளுக்கே மதிப்பளித்துச் செயற்பட வேண்டும் என்று அரசாங்கம் செயற்படுமானால், பல்வேறு பிரச்சினைகளுக்கும், மோசமான சவால்களுக்கும், இன ரீதியான அடக்குமுறைகளுக்கும் ஆளாகி உள்ள சிறுபான்மை இன மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன ஆவது? அந்த மக்களின் நலன்களை அரசாங்கம் புறந்தள்ளித்தான் செயற்படப் போகின்றதா? - இது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

தேர்தல் வெற்றிக்கான நகர்வுகள்

ஆட்சிப் பொறுப்பை ஏற்றதைத் தொடர்ந்து, பொதுஜன பெரமுனவை ரீதியாக பலப்படுத்தி, வரப்போகின்ற பொதுத் தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுவிட வேண்டும் என்ற அரசியல் இலக்கை நோக்கிய நடடவடிக்கைகளே அரசாங்கத்தரப்பினால் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

ஜனாதிபதி தேர்தலில் சிங்கள மக்களின் திரட்சியின் அடிப்படையில் அடைந்த வெற்றியைப் போன்றே பொதுத் தேர்தலிலும் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக அரசியல் ரீதியாகக் காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதை நிதர்சனமாகக் காண முடிகின்றது.

உயிர்த்த ஞாயிறு தொடர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களினால் நலிவடைந்து போன தேசிய பாதுகாப்பைப் பலப்படுத்தும் நோக்கத்தில் இராணுவ ஆதிக்கத்தை மேலோங்கச் செய்வதற்காக பல்வேறு மட்டங்களிலான தலைமைத் தளங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

கவர்ச்சிகரமான முறையில் வரிக் குறைப்புக்கள், நிர்வாக சீர்திருத்தம் உள்ளிட்ட பல விடயங்கள் மின்னல் வேகத்தில் தேர்தலை மையப்படுத்தி முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. இதையும்விட கள விஜயங்களை மேற்கொண்டு பொதுமக்களின் நலன்களை மேம்படுத்துகின்ற நடவடிக்கைகளில் ஜனாதிபதி கோத்தாபாய ராஜபக்ச தீவிர கவனம் செலுத்தியிருப்பதையும் காண முடிகின்றது. அராசங்கத்தின் ஆட்சி அதிகார செயற்பாடுகளில் சிறுபான்மை இன மக்களை குறிப்பாக முஸ்லிம் மக்களை ஓரங்கட்டும் வகையில் அமைச்சரவையில் அவர்களில் ஒருவருக்குக் கூட இடமொதுக்கப்படவில்லை.

அரசியல் தீர்வு, இராணுவத்தின் பிடியில் உள்ள காணிகளை மீள ஒப்படைப்பது, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு பொறுப்பு கூறுதல், அரசியல் கைதிகளின் விடுதலை உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படமாட்டாது என்ற இறுக்கமான நிpலைப்பாட்டை அரசாங்கம் தெளிவாக வெளிப்படுத்தி உள்ளது.

மொத்தத்தில் ஜனாதிபதி தேர்தலின் மூலம் எற்பட்டுள்ள ஆட்சி மாற்றத்தில் சிறுபான்மை இன மக்களை ஓரங்கட்டி, ஒதுக்கித் தள்ளி அரச நிர்வாகத்தைக் கொண்டு நடத்துவதற்கான நடவடிக்கைகள் வெளிப்படையாகவே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

சிறுபான்மை இனமக்களின் அரசியல் தலைவர்கள் கடும்போக்கில் ஆட்சி நடத்தத் தொடங்கியுள்ள ஜனாதிபதி கோத்தாபாயவை நெருங்கக் கூட முடியாத கையறு நிலைமைக்குள் சிறை வைக்கப்பட்டிருக்கின்றார்கள்.

அரசாங்கத்தின் இந்தத் தீவிரப் போக்கு பொதுத் தேர்தலையடுத்து மேலும் திவிரமடைவதற்கான சாத்தியக்கூறுகளே காணப்படுகின்றன.

ஆயினும் நிலைமையின் தீவிரத் தன்மையை உணர்ந்து சிறுபான்மை இன மக்களின் அரசியல் தலைவர்கள் கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் ஒன்று கூடி நிலைமைகளைச் சீர்தூக்கிப் பார்;த்து அடுத்த கட்ட நடவடிக்கையைத் துரிதமாக முன்னெடுப்பதற்கு இன்னுமே முன்வரவில்லை.

மாறாக சிறுபான்மை இன அரசியல் கட்சிகள், வரப்போகின்ற தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலில் இட ஒதுக்கீடு தொடர்பான விடயங்களுக்கே முன்னுரிமை அளித்து அதில் திவிர கவனம் செலுத்தியிருக்கின்றன. தேர்தலிலும் பிரதிநிதித்துவத்தைப் பெறுவதில் சிக்கலான நிலைமைகளை உருவாக்குவதற்கான வியூகங்களை புதிய அரசு ஏற்கனவே வகுத்து காய் நகர்த்தல்களை மேற்கொண்டிருக்கின்றது.

இந்த நிலைமைகளுக்கு எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து திரட்சியான நிலையில் சிந்திக்க வேண்டிய தேவை சிறுபான்மை சமூகங்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது. ஆனால் அவற்றின் அரசியல் தலைவர்கள் நிலைமைகளின் தீவிரத் தன்மையை உணராதவர்களாக அல்லது உணர்ந்தும் அதனை ஒரு பொருட்டாகக் கருதாத நிலையிலேயே செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

வருங்காலத்தில் சிறுபான்மை இன மக்களை இந்த நாட்டின் அரசியலில் உரிமை இழந்தவர்களாகவும், உரித்துக்கள் அற்றவர்களாகவும் மாற்றிவிடுவதற்குத் துணைபோவதற்கே இந்த செயற்பாடானது வழி வகுக்கும் என்பதில் ஐயமில்லை.

அருவி இணையத்துக்காக பி.மாணிக்கவாசகம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, மகிந்த ராசபக்ச, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE