Friday 19th of April 2024 03:06:51 AM GMT

LANGUAGE - TAMIL
விடைகாணப்படாத மன்னார் மனிதப் புதைகுழி மர்மம்!
விடைகாணப்படாத மன்னார் மனிதப் புதைகுழி மர்மம்!

விடைகாணப்படாத மன்னார் மனிதப் புதைகுழி மர்மம்!


மன்னார் சத்தொச மனிதப் புதைகுழி வழக்கு விவாதத்தின்போது சட்டத்தரணிகள் வெளிநடப்பு செய்திருக்கின்றனர். அரச சட்டத்தரணிக்கும் காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்களது சார்பில் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சூடான விவாதத்தின்போது ஒரு கட்டத்தில் அரச தரப்பு சட்டத்தரணி எதிர்த்தரப்பினர் மீது தகாத வார்த்தைப் பிரயோகம் செய்திருந்ததையடுத்தே சட்டத்தரணிகள் வெளிநடப்பு செய்தனர்.

பொது இடங்களில் விவாதத்தில் ஈடுபடும்போது அல்லது வார்த்தைப் பிரயோகம் செய்யும் போது கவனமாகவும் கௌரவமாகவும் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்பது சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியதியாகும்.

அதேபோன்று மக்கள் பிரதிநிதிகள் அடங்கிய சபைகளில் உரையாற்றும்போதும், விவாதங்களில் ஈடுபடும்போதும் பொதுவாகவே கௌரவமான முறையில் கருத்துக்களை வெளியிட வேண்டும் என்ற நியதி உள்ளது. இந்த வகையில் நீதிமன்றத்தில் நீதிபதியின் முன்னிலையில் வாதங்களை முன்வைக்கும்போதும் விவாதங்கள் ஏற்படும் போதும் கௌரவமான முறையில் சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற பொதுவான எதிர்பார்ப்பு உள்ளது. அத்தகைய நடைமுறை நீதிமன்றங்களில் கையாளப்படுவதும் மரபு ரீதியான வழமையாக இருந்து வருகின்றது. இந்நிலையில் மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின்போது அரச தரப்பு சட்டத்தரணி எதிர்த்தரப்பு சட்டத்தரணிகள் மீது கௌரவக் குறைவான வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டபோது மன்று அந்த நிலைமையைச் சரியாகக் கையாளவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி எதிர்த்தரப்பு சட்டத்தரணிகள் வெளிநடப்பு செய்தனர். மன்னார் மாவட்ட நீதிமன்ற சட்டத்தரணிகளும் அவர்களுடன் மன்றைவிட்டு வெளியேறி இருந்தனர்.

அரச தரப்பு சட்டத்தரணி மன்னிப்பு கோரியதையடுத்தே வெளிநடப்பு செய்த சட்டத்தரணிகள் மீண்டும் நீதிமன்றத்தில் பிவேசித்து வழக்கு விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

இத்தகைய சம்பவம் மன்னார் நீதிமன்றத்தில் முதற் தடவையாக இடம்பெற்றிருக்கின்றது. ஏனைய நீதிமன்றங்களில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருந்ததா என்பது தெரியவில்லை. ஆயினும் கற்றவர்கள் விடய ஞானம் மிகுந்தவர்கள் என்றே சமூகம் சட்டத்தரணிகளைக் கருதுகின்றது. அவர்களை மதித்து நடந்து கொள்கின்றது. அதற்கும் மேலாக நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் ஒருவரை ஒருவர் விளிக்கும்போது கற்றறிந்த நண்பர் டுநயசநென குசநைனெ என்றே குறிப்பிடுவதையே வழக்கமாகக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த வெளிநடப்பு சம்பவம் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நடைபெற்றது. அன்றைய தினத்தில் சத்தொச மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்டிருந்த மனித எலும்புக்கூட்டு எச்சங்களின் மாதிரிகளைத் தடயவியல் மற்றும் மருத்துவ நிபுணர்கள் பார்வையிடுவதற்காக நீதிமன்றத்தினால் நாள் குறிக்கப்பட்டிருந்தது.

நிபுணர் குழு நடத்திய 156 நாள் அகழ்வாராய்ச்சி

அப்போது இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மனிதப் புதைகுழியில் இருந்து அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்த மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் வைக்கப்பட்டிருந்த களஞ்சிய அறையின் கதவு உடைக்கப்பட்டிருந்ததாகவும், ஜன்னல்களும் திறந்திருந்திருந்ததாகவும், இதன் மூலம் அந்த சாட்சியப் பொருட்களில் தலையீடு செய்யப்பட்டிருந்ததைக் கண்டதாகவும் பொலிசார் நீதிமன்றத்தின் கவனத்திற்குத் தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்தை உடனடியாகப் பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றவியல் சம்பவ இடத்து பொலிஸ் விசாரணைப் பிரிவினருக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை மறு நாள் 11 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

மன்னார் நகர மத்தியில் அமைந்துள்ள சத்தொச நிறுவனத்திற்குச் சொந்தமான கட்டிடத்தைப் இடித்துப் புதிய கட்டிடம் ஒன்றிற்கான நிர்மாண வேலைகளை மேற்கொண்டபோது, அங்கு மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் வெளிவந்திருந்தன. இந்த விடயம் பொலிசாரின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து, நீதிமன்ற உத்தரவுக்கமைய அங்கு அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

தடயவியல், தொல்லியல் துறைசார்ந்த நிபுணர்கள், இந்தப் பிரிவுகளின் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மருத்துவ நிபுணர்கள் உள்ளடங்கிய குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாய்வின்போது பெரும் எண்ணிக்கையிலான மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.

வடக்கில் குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலானவர்கள் காணாமல் போயுள்ள நிலையில் வெளிக்கிளம்பிய மன்னார் சத்தொச மனிதப் புதைகுழியின் எலும்புக்கூடுகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் பதட்டத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தன.

இந்த மனிதப்புதைகுழியில் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டுக்கு உரியவர்கள் யார், அவர்கள் எவ்வாறு கொல்லப்பட்டார்கள், யாரால் கொல்லப்பட்டார்கள் என்பதை, காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய குடும்ப உறவினர்கள் அறிவதற்குத் துடித்ததார்கள்.

காணாமல் ஆக்கப்பட்டுள்ள தமது உறவுகளுக்கே இந்த கதி நேர்ந்திருக்குமோ என்ற சந்தேகம் அவர்களுடைய மனங்களில் பெரும் துயர வடிவில் எழுந்திருந்தது. இந்த விவகாரத்தில் தங்களுடைய கவனத்தையும் கண்காணிப்பையும் செலுத்திய அவர்கள் இந்த நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் தமது சட்டத்தரணிகளின் மூலமாகப் பங்கேற்றிருந்தனர். இந்த சட்டத்தரணிகள் அவர்களின் நலன்களைக் கவனிப்பதற்காக நீதிமன்ற விசாரணைகளில் முன்னிலையாகினர்.

இந்த மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் தொடர்பில் 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பொலிசார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளையடுத்து, நிதிமன்றத்தின் உத்தரவுக்கமைய அந்த வருடம் மே மாதம் 28 ஆம் திகதி நிபுணத்துவ ரீதியிலான அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. இந்த அகழ்வுப் பணிகள் 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் வரையில் நடைபெற்றன. சுமார் 270 நாட்களைக் கொண்ட இந்தக் காலப்பகுதியில் விடுமுறைகள் மற்றும் பல்வேறு காரணங்களினால் இடையிடையே தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட அகழ்வுப் பணிகள் 156 தினங்கள் நடைபெற்றன.

காரசாரமான நிலைமை

காணாமல் போனோர் பற்றிய விசாரணைகளை நடத்துவதற்காக நிலைமாறு கால நீதியை நிலைநாட்டுவதற்கான நான்கு பொறிமுறைகளில் ஒன்றாக அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தரணி சாலிய பீரிஸின் தலைமையிலான காணாமல் போயுள்ளோருக்கான அலுவலகமும் இந்த அகழ்வுப் பணிகளின் மூலோபாயச் செயற்பாடுகளிலான ஒத்துழைப்பை 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் திகதி முதல் நல்கியிருந்தது.

இந்த வகையில் அகழ்வுப் பணிகளுக்கான நிதியுதவி மற்றும் அகழ்ந்தெடுக்கப்பட்ட தடயப் பொருட்களை ஆய்வுக்கு உட்படுத்த அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கும் அந்தப் பொருட்களுடன் இரண்டு சட்டத்தரணிகள் உள்ளிட்டவர்கள் சென்று வருவதற்கான செலவுகள் மற்றும் அது தொடர்பிலான நடவடிக்கைகள் என்பவற்றிலும் அது தனது பங்களிப்பை மேற்கொண்டிருந்தது.

அரச அமைச்சுக்கள் எதுவும் இந்த மனிதப் புதைகுழி விவகாரத்திலான செலவுகள் உள்ளிட்ட விடயங்களில் கவனம் செலுத்தத் தவறி இருந்த நிலையில் காணாமல் போனோருக்கான அலுவலகத் தலைவர் சாலிய பீரிஸின் ஒத்துழைப்பே அகழ்வாராய்ச்சி மற்றும் தடயப் பொருட்கள் பற்றிய பகுப்பாய்வு நடவடிக்கைகள் தடங்கலின்றி இடம்பெறுவதற்குப் பெரிதும் உதவியாக இருந்தது.

காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் பணிகளாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பொறுப்புக்களில் காணாமல் போனவர்கள் எவ்வாறு காணாமல் போனார்கள், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிவது ஒரு முக்கிய விடயமாக உள்ளது. இதன் அடிப்படையிலேயே மன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்தில் காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸின் ஒத்துழைப்பு நடவடிக்கைகள் முக்கியத்துவம் பெற்றிருக்கின்;றன.

ஊடகங்களுக்கா கட்டுப்பாடுகள்

மன்னார் சத்தொச மனிதப் புதைகுழி அகழ்வின்போது, 323 மனித எலும்புக்கூட்டு எச்சங்களும் பீங்கான் மற்றும் பாவைனப் பொருட்கள் உள்ளிட்ட தடயப் பொருட்களும் அகழ்ந்தெடுக்கப்பட்டன. இவற்றில் பெண்களின் எலும்புக்கூடுகளுடன், சிறுவர்களின் 28 எலும்புக்கூட்டு எச்சங்களும் அடங்கியிருந்தன. அத்துடன் கைவிலங்கு போன்ற வகையில் இரும்பினால் கைகள் பிணைக்கப்பட்டிருந்த நிலையிலான எலும்புக்கூட்டு எச்சங்களும் இவற்றில் அடங்கியிருந்தன.

தடயவியல், தொல்லியல் துறையில் இந்த நாட்டின் மிகவும் மதிப்பார்ந்த ஒரேயொரு ஆய்வியல் நிபுணரும் இந்தத் துறையின் உயர் கல்வித் தகைமை பெற்றவருமாகிய பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களின் தலைமையில் இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இருப்பினும் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் தலைமைத்துவத்தில் தன்னிச்சையாகத் தலையிட்டு அந்தப் பொறுப்புக்களில் ஊடுருவிய சட்ட வைத்திய அதிகாரி அகழ்வாய்வு நடவடிக்கைகளின் வெளிப்படைத்தன்மையைத் தடை செய்ய முற்பட்டிருந்தார் என்று காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சார்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

அகழ்வாய்வு நடவடிக்கைகளின் ஆரம்ப காலப்பகுதியில் ஊடகவியலாளர்கள் மற்றும் காணாமல் போனோர் சார்பிலான சட்டத்தரணிகள் அந்தப் பணிகள் நடைபெறுவதைப் பார்வையிடவும் ஊடகவியாளர்கள் அவற்றை அறிக்கையிடவும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. ஆயினும் காலக்கிரமத்தில் இந்த வெளிப்படைத்தன்மையில் கட்டுப்பாடுகள் கொண்டு வரப்பட்டு குறிப்பிட்ட நேரத்தில் மாத்திரமே ஊடகவியலாளர்கள் அகழ்வுப் பணிகளைப் பார்வையிடவும், புகைப்படங்கள் மற்றும் வீடியோ படங்கள் எடுக்கவும் முடியும் என்ற இறுக்கமான கட்டுப்பாடுகள் சட்ட வைத்திய அதிகாரியினால் விதிக்கப்பட்டன.

குறிப்பாக பிபிசி செய்தி நிறுவன ஊடகவியலாளர்கள் இந்த அகழ்வுப் பணிகளைப் பார்வையிட்டு, செய்தி சேகரிப்பதிலும் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு கட்டத்தில் ஊடகவியலாளர்கள் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டுக்கு எதிராக மன்னார் ஊடகவியலாளர்கள் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்து நிவாரணம் தேடி இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காணாமல் போனோரின் உறவினர்கள் இந்த மனிதப் புதைகுழி விவகாரத்தில் நேரடியாக சம்பந்தப்படுவதைத் தடுத்து, முழு அளவில் ஒரு வெளிப்படைத்தன்மையற்ற முறையில் இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கான ஒரு முயற்சியாகவே சட்ட வைத்திய அதிகாரியினால் இவ்வாறான தலையீடும் இடையூறும் ஏற்படுத்தப்பட்டிருந்தன என்று கருதுவதற்கு நிலைமைகள் இடமளித்திருந்தன.

மன்னார் நீதிமன்றத்தில் இந்த மனிதப்புதைகுழி வழக்கு பெப்ரவரி 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் வைக்கப்பட்டிருந்த களஞ்சிய அறை உடைக்கப்பட்டிருந்தது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தடயப் பொருட்களில் தலையீடு செய்யப்பட்டிருக்கவில்லை என்று விசாரணைப் பிரிவு பொலிசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

அப்பொழுது மன்றில் சமூகமளித்திருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் கருத்தை அறிவதற்கு அரச சட்டத்தரணி முற்பட்டபோது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் நலன்களைக் கவனிப்பதற்காக முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகள் தமது ஆட்சேபணையை வெளிப்படுத்தினர்.

அதனைத் தொடர்ந்து இரு தரப்பு சட்டத்தரணிகளுக்கும் இடையில் சூடான விவாதமும் வாக்குவாதங்களும் இடம்பெற்றன. அப்போது ஒரு கட்டத்தில் அரச தரப்பு சட்டத்தரணி எதிர்த்தரப்பு சட்டத்தரணிகளை அவமதிக்கும் வகையிலான மொழிப்பிரயோகம் செய்த போது மறு தரப்பினர் தமது கடும் ஆட்சேபணையை வெளியிட்டதையடுத்து, மன்றில் ஒரு குழப்பமான பதட்ட நிலைமை உருவாகியது.

கட்டுப்பாடுகளுடன் கூடிய இரகசிய நடைமுறை

அதன்போது மன்று அதில் தலையிட்டு நிலைமையைக் கையாள்வதற்குத் தவறியதனால், அரச சட்டத்தரணியின் செயற்பாட்டிற்குத் தமது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையில், எதிர்த்தரப்பு சட்டத்தரணிகள் வழக்கு விசாரணையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். அதேவேளை நீதிமன்றில் குழுமியிருந்த மன்னார் மாவட்ட சட்டத்தரணிகளும் வெளிநடப்பில் கலந்து கொண்டனர்.

நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளை ஏசுகின்ற தன்மையில் தகாத வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டது மட்டுமல்லாமல், அந்த நடவடிக்கையானது நீதிமன்றத்திற்கு உரிய மதிப்பளிக்காத நடவடிக்கை என்ற கருத்தமைவிலேயே இந்த வெளிநடப்பு மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஆயினும் அரச சட்டத்தரணி மன்னிப்பு கோரியதையடுத்து வெளிநடப்பு செய்த சட்டத்தரணிகள் அனைவரும் மன்றிற்குத் திரும்பியதையடுத்து ஒத்தி வைக்கப்பட்ட விசாரணைகள் தொடர்ந்தன. விசாரணைகளின் போது அரச தரப்பு சட்டத்தரணியின் சமர்ப்பணங்களை மொழிமாற்றம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் சரியான முறையில் மொழிபெயர்ப்பு செய்யவில்லை என்பதை எதிர்த்தரப்பு சட்டத்தரணிகள் மன்றில் சுட்டிக்காட்டினார்கள்.

அப்போது நீதிமன்றம் அன்றைய தினம் இரண்டாவது தடவையாக அந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்து, பிற்பகல் 2 மணியளவில் விசாரணைகளை ஆரம்பித்தபோது, மேல் நீதிமன்றத்தின் முதலியார் அங்கு சமூகமளித்து அரச சட்டத்தரணியின் சமர்ப்பணத்தை மொழிமாற்றம் செய்தார்.

அரச சட்டத்தரணி தனது சமர்ப்பணத்தில், காணாமல் போயுள்ளவர்களின் குடும்பங்களின் நலன்களுக்காக அவர்களுடைய சார்பில் சட்டத்தரணிகள் முன்னிலையாவதற்கு இந்த வழக்கில் உரிமை இல்லை என சுட்டிக்காட்டி, அவ்வாறு முன்னிலையாகியிருந்த சட்டத்தரணிகளின் பிரசன்னத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

அரச சட்டத்தரணியின் கூற்றை எதிர்த்தரப்பு சட்டத்தரணி மறுத்துரைத்து சட்ட வைத்திய அதிகாரியின் சார்பில் முன்னிலையாகியிருந்த அரச சட்டத்தரணிக்கே இந்த வழக்கில் முன்னிலையாவதற்கு உரிமை இல்லை என சுட்டிக்காட்டினார்.

மனிதப் புதைகுழியின் அகழ்வாராய்ச்சியில் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையில் சிறப்பான நிபுணத்துவம் பெற்றவர்கள் இடம்பெற்றிருந்த நிலையில்; இந்த வழக்கில் சட்ட வைத்திய அதிகாரி தானாகவே முன்வந்து முன்னிலையாகியிருந்தார் என்றும் எதிர்த்தரப்பு சட்டத்தரணி தெரிவித்தார்.

இவ்வாறு நீதிமன்றத்தில் ஆஜராகிய சட்ட வைத்திய அதிகாரியின் சார்பில் தமது தரப்பில் எவரும் ஆஜராவதற்கு சட்டமா அதிபர் ஆர்வம் கொண்டிருக்கவில்லை. இத்தகைய நிலையில்தான் சட்ட வைத்திய அதிகாரியின் சார்பில் அரச சட்டத்தரணி வழக்கில் ஆஜராகியிருந்ததாகவும், அந்த வகையில் அரச சட்டத்தரணிக்கே இந்த வழக்கில் முன்னிலையாவதற்கு உரிமை இல்லை என எடுத்துரைத்து எதிர்த்தரப்பு சட்டத்தரணி தனது ஆட்சேபணையை வெளியிட்டார்.

தொடர்ந்து வாதிட்ட அவர் ஆர்ஜன்டினா, சிலி, கௌத்தமாலா, பெரு போன்ற நாடுகளில் இதுபோன்ற மனிதப் புதைகுழி அகழ்வாய்வுச் செயற்பாடுகள் வெளித்தலையீடுகளின்றியும் வெளிப்படையாகவும் முன்னெடுக்கப்படுகின்றன. அதனை உறுதிப்படுத்தவற்காக பாதிக்கப்பட்ட தரப்பினருடைய குடும்பத்தினர் அந்தப் பணிகளை அவதானிப்பதற்கும், ஊடகங்கள் சுதந்திரமாக அவற்றைப் பார்வையிட்டு அறிக்கையிடுவதற்கும் அங்கு அனுமதி வழங்கப்படுகின்றன. ஆனால் மன்னார் சத்தொச மனிதப்புதைகுழி அகழ்வாய்வுப் பணிகள் அந்த வகையில் கையாளப்படவில்லை என்பதை அவர் எடுத்துரைத்தார்.

மன்னார் மனிதப்புதைகுழி அகழ்வாய்வின்போது, ஊடகங்கள் சுதந்திரமாகச் செயற்பட முடியாதவாறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததுடன், சட்டத்தரணிகளும்கூட அங்கு பிரசன்னமாகி இருக்க முடியாத வகையில் அவர்களைக் கட்டுப்படுத்தி, இரகசிய முறை கையாளப்பட்டிருந்தது என்பதையும் எதிர்த்தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

தொடரும் மர்ம நிலைமை

அத்துடன் மனிதப்புதைகுழியில் இருந்து எடுக்கப்பட்டிருந்த எலும்புக்கூட்டு எச்சங்கள் மற்றும் தடயப் பொருட்கள் களஞ்சியப்படுத்தியிருந்த அறைக்கதவு உடைக்கப்பட்டிருந்தமையும் ஜன்னல்கள் திறக்கப்பட்டிருந்தமையும் தடயப் பொருட்களில் தலையீடு செய்கின்ற ஒரு விடயமாகும் என்றும் எதிர்த்தரப்பு சட்டத்தரணி குறிப்பிட்டார்.

அத்துடன் அந்தக் களஞ்சிய அறையின் திறப்பு சட்ட வைத்திய அதிகாரியின் பொறுப்பில் வைத்திருப்பதற்கு அனுமதிப்பதென்பது தொடர்ச்சியாக அங்கு வைக்கப்பட்டுள்ள தடயப் பொருட்களின் பாதுகாப்புக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் எதிர்த்தரப்பு சட்டத்தரணி மன்றுக்குச் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து உடைக்கப்பட்டிருந்த மனிதப் புதைகுழியின் தடயப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறையின் நிலைமைகளைப் பார்வையிட்ட நீதிபதியின் மேற்பார்வையில் இரு தரப்பு சட்டத்தரணிகள் மற்றும் நீதிமன்ற உத்தியோகத்தர்கள் பார்த்திருக்க அந்தக் களஞ்சிய அறைக் கதவுகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன.

கொந்தளிப்பானதொரு சூழலில் இடம்பெற்ற அன்றைய வழக்கு விசாரணைகள் முடிவுக்கு வந்ததுடன், காணாமல் ஆக்கப்பட்டோர் உறவினர்களின் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணியின் சமர்ப்பணங்களுக்காக நீதிபதி வழக்கு விசாரணைகளை பெப்ரவரி 25 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தார்.

இந்த நிலையில் சத்தொச மன்pதப்புதைகுழியின் அகழ்வாய்வுத் தடயப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த அறை உடைக்கப்பட்டதைக் கண்டித்து மன்னார் மாவட்டத்தின் காணாமல் போயுள்ளவர்களின் உறவினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். அத்துடன் அந்தத் தடயப் பொருட்களைப் பொறுப்போடு பாதுகாப்பதற்கு உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர்கள் தமது ஆர்ப்பாட்டத்தின்போது முன்வைத்துள்ளனர்.

எம்பிலிப்பிட்டி, மாத்தளை, யாழ்ப்பாணம் மன்னார் போன்ற நாட்டின் தெற்கு மற்றும் வடகிழக்குப் பிரதேசங்களில் மனிதப்புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டு, அவற்றில் இருந்து கணிசமான எண்ணிக்கையிலான மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றன.

இருப்பினும் மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயச் சூழல் மற்றும் மன்னார் நகர மத்தியில் உள்ள சத்தொச கட்டிட வளாகம் என்பவற்றில் கண்டறியப்பட்ட மனிதப் புதைகுழிகள் பெரும் பரபரப்பையும் அச்ச உணர்வையும் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தி இருந்தன. அதிலும் குறிப்பாக மன்னார் சத்n தாச மனிதப் புதைகுழியில் இருந்தே 28 சிறுவர்களினது உட்பட அதிக எண்ணிக்கையாக 323 மனித எலும்புக்கூட:;டு எச்சங்கள் அகழ்ந்தெடுக்கப்பட்டன.

ஆனாலும் இந்த மனித எலும்புக்கூடுகள் தொடர்பில் அமெரிக்காவில் நடத்தப்பட்ட விசேட ஆய்வில் இந்த எலும்புக்கூடுகள் பல நூற்றாண்டுகள் பழைமை வாய்ந்தவை என தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், அந்த ஆய்வு மாத்திரமே இந்த மனிதப் புதைகுழி தொடர்பில் இறுதியான முடிவை மேற்கொள்வதற்கு போதுமானதல்ல என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்களின் சார்பிலான சட்டத்தரணிகள் குழு தெரிவித்துள்ளது.

அத்துடன் அந்த மனிதப் புதைகுழியின் மண், மண் துணிக்கைகள், எலும்புக்கூட்டு எச்சங்களுடன் கண்டு பிடிக்கப்பட்ட ஏனைய தடயப் பொருட்கள் என்பனவும் விசேடமாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, ஒரு பரந்த அளவிலான ஆய்வின் பின்னரே ஒரு முடிவுக்கு வர முடியும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

இந்த நிலையில் 323 மனித எலும்புக்கூட்டு எச்சங்களை வெளிப்படுத்திய பின்னரும் முடிவு காணப்படாதிருக்கின்ற மன்னார் நகரின் சத்தொச மனிதப் புதைகுழியின் மர்மம் விடை காணப்படாத ஒரு புதிராகவே திகழ்கின்றது.

அருவி இணையத்துக்காக பி.மாணிக்கவாசகம்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை, வட மாகாணம், மன்னார்



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE