Thursday 25th of April 2024 01:04:06 AM GMT

LANGUAGE - TAMIL
தேசத்துரோகத்தை இனக்குரோதத்தால் நியாயப்படுத்தும் சிங்களக் காவியங்கள்
தேசத்துரோகத்தை இனக்குரோதத்தால் நியாயப்படுத்தும் சிங்களக் காவியங்கள்!

தேசத்துரோகத்தை இனக்குரோதத்தால் நியாயப்படுத்தும் சிங்களக் காவியங்கள்!


“எஹலப்பொலவின் சேனை ஆங்கிலேயருடன் சேர்ந்து போர்ப்பிரகடனம் செய்தது. நாட்டைச் சீரழிக்கும் தமிழனைக் கைதுசெய்து நாட்டைக் காப்பாற்ற அவர்கள் திடசங்கற்பம் பூண்டனர். அந்த துஸ்ட மன்னன் தீயைக் கண்ட மெழுகாக உருகி பயந்து நடுநடுங்கி மனைவி மற்றும் உறவினர்களுடன் தும்பறையை நோக்கி ஓடினான். துட்டகைமுனு தமிழர்களை அழித்தது போன்ற பெருமையுடன் எஹலப்பொல நகருக்குள் எழுந்தருளினர். தேசத்தை சீரழித்த தமிழன் தும்பறையில் மறைந்திருப்பதை அறிந்த எஹலப்பொல குதிரை மீது ஏறி வீராவேசமாக புறப்பட்டான். அவனுடன் பல்வேறு பிரதேசங்களிலும் உள்ள ஆயுதம் ஏந்திய மக்கள் கூட்டம் அவரை பின்தொடர்ந்தது. அப்படி சென்ற வழியில் காணப்பட்ட தமிழர்கள் அனைவரும் எஹலப்பொலவினால் மலே இனத்தவர்களுக்கு அடிமைகளாக விற்கப்பட்டனர். வீரம் மறைந்தவனும் தர்மசீலனுமான எஹலப்பொல யுவராஜன் தனது சேனையுடன் சென்று மறைந்திருந்த அரசனை கைது செய்தான். அவனின் மனைவியரைச் சித்திரவதை செய்தும் காதுகளிலும் கைகளிலும் அணிந்திருந்த நகைகளை பறித்தும் அவர்களின் இடுப்பில் இருந்த ஆடைகளை உரிந்தும் அவர்களை அவமானப்படுத்தி தெல்தோனியாவுக்கு இழுத்துச்சென்றான். அவனுடைய கட்டளைப்படி சில வீரர்கள் ஹங்வல்லவுக்குச் சென்று அரசனின் தாயையும், உறவினர்களையும் இழுத்து வந்தனர். மேலும் மன்னனின் மாமன்மாரான கம்பலைத் தமிழனையும் கண்ணையா என்ற நச்சுத்தமிழனையும் அவர்களின் மனைவியரையும் தலையில் குட்டி இழுத்துவந்து ஆங்கிலத்தளபதி டெய்லியிடம் ஒப்படைத்தனர். இச்செய்கையானது இராவனணை வெற்றி கொண்ட இராமனின் வீரச்செயலுக்கு ஒப்பானது.”

çஎஹலப்பொல தலைமையிலான படையினரால் கைது செய்யப்பட்டு வெள்ளையரிடம் ஒப்படைக்கப்பட்ட சம்பவத்தை ஒரு மாபெரும் வீரசாதனையாக சித்தரிக்கும் சிங்கள காவியம் ஒன்றின் ஒரு பகுதியாகும். குண்டி அரச வீழ்ச்சியடைந்த பின்பு தேசத்தை அந்நிய ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்க இறுதி வரை போராடிய மன்னனையும் தமிழர்களையும் எதிரிகளாகவும் தீயவர்களாகவும் துரோகிகளாகவும் சித்தரித்த அதேவேளையில் எஹலப்பொல மொல்லிகொட போன்று வெள்ளையருடன் இணைந்து செயற்பட்ட துரோகிகளை வீராதிவீரர்களாகவும் போற்றியது மட்டுமின்றி அவர்களை இராமரைப் போன்ற அவதார புருசர்களாக ஏற்றிப்பாராட்டி பல பாடல்களும் காவியங்களும் படைக்கப்பட்டு கண்டிப்பிரதேசம் எங்கும் உலவ விடப்பட்டனர்.

எஹலப்பொலவை துட்ட கைமுனு போன்றும் இராமனைப் போன்றும் எதிரிகளை வெற்றிகொண்ட வீர நாயகர்களாக சித்தரித்தும் கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனையும் அவனது குடும்பத்தினரையும் கைது செய்து கேவலமாக நடத்தியமையையும் போற்றி 97,101 பாடல்கள் பாடப்பட்டதாக அறியமுடிகிறது.

தற்போது எண்கோண மண்டபம் என அழைக்கப்படும் தலதா மாளிகையின் பத்திரிப்பு மண்டபம் கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனால் அமைக்கப்பட்டது. அது பௌத்தத்தை அவமதிக்கும் செயலெனவும் கொட்டம்பேயில் வீதி அமைத்தமை, நகரில் பூந்தோட்டங்கள் ஏற்படுத்தியமை, நகரைச் சுற்றி மைதானம் உருவாக்கியமை, வேடுவ இனத்தைச் சேர்ந்தவர்களை படைகளில் இணைத்துக் கொண்டமை முதலியன அரசனின் முறைமீறிய காரியங்களாக சித்தரிக்கப்பட்டன.

அதேவேளையில் மன்னன் மக்களின் காணிகளை அபகரித்தான் எனவும் கொவிகம சாதியை சாராத மக்களுக்கு விவசாயம் செய்ய காணிகளை வழங்கினான் எனவும் பல அமைச்சர்கள் பிரதானிகளுக்கு மரண தண்டனை வழங்கினான் எனவும் மக்களைக் கழுவில் ஏற்றி கொன்றான் என்றும் மன்னனை ஒரு கொடுங்கோலனாக அக்காவியங்கள் சித்தரித்தன. கண்டி இராச்சியத்தை வெள்ளையரிடம் காட்டிக்கொடுத்ததை நியாயப்படுத்தும் வகையில் பல பொய்களும் புனைகதைகளும் கொண்ட இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன.

தமிழரசனின் நல்லாட்சிக்கு எதிராக சிங்கள ரதல வம்சத்தின் சதி

ஆனால் கண்டி இராசதானியின் வரலாற்றை ஆராய்ந்த பல வரலாற்று ஆராய்வாளர்கள் கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் நேர்மையும் தராள சிந்தையும் கொண்டு நீதி நெறி தவறாத ஆட்சியை நடத்தியும் மக்களின் நல்லாதரவை பெற்றிருந்தான் எனக்குறிப்பிட்டுள்ளனர். அவன் தலதா மாளிகையை புனரமைப்பு செய்தான் எனவும் அதன் பராமரிப்புக்கென ஏராளமான விவசாய நிலங்களை வழங்கினான் எனவும் மகாசங்கத்தின் வளர்ச்சிக்கு பெரும் உதவிகளை செய்தான் எனவும் பிக்குகளுக்கு தானம் வழங்கினான் எனவும் அவ் ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிங்கள் பௌத்த மக்களின் ஞானத்தந்தை என போற்றப்படும் அநகாரிக தர்மபால கூட கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் பௌத்த மதத்திற்கும் சிங்கள கலாச்சாரத்துக்கும் ஆற்றிய பணிகள் பற்றி புகழ்ந்துரைத்துள்ளார். அவன் நாயக்க வம்சத்தை சேர்ந்தவனாக இருந்தபோதிலும் ஒரு பௌத்த சிங்கள மன்னனாகவே ஆட்சிசெய்தான் என போற்றியுள்ளார்.

ஆனால் எஹலப்பொல, மொல்லிகொட பிலிமத்தலாவ போன்ற சிங்கள பிரதானிகள் வெள்ளையர் விக்கிரமராஜசிங்கனைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டு தங்களிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பார்கள் என எதிர்பார்த்தனர். மன்னனை மிகப்பெரிய கொடுங்கோலனாக சித்தரிக்க புனையப்பட்ட இன்னுமொரு கதையுமுண்டு. அதாவது எஹலப்பொலவின் துரோகம் கண்டுபிடிக்கப்பட்ட பின்பு வெள்ளையரிடம் தப்பி ஓடிவிட்டான் அப்போது மன்னன் எஹலப்பொலவின் மனைவியையும் இரு புதல்வர்களையும் கைது செய்தான் எனவும் புதல்வர்களின் தலைகளை வெட்;டி உரலில் போட்டு தாயைக் கொண்டே உலக்கையால் இடிப்பித்தான் எனவும் பின்பு எஹலப்பொலவின் மனைவியை சங்கிலியால் கட்டி மறுமுனையைக் கல்லில் பிணைத்து கண்டி வாவியில் மூழ்கடித்தான் எனவும் அவள் முக்குளித்து இறப்பதை எண்கோண மண்டபத்தில் நின்று கண்டு களித்தான் எனவும் பாடல்கள் பாடப்பட்டன. இது சிங்கள மக்கள் மத்தியில் நாடகமாகவும் நடிக்கப்பட்டு வந்தது. கண்டி அரசன் கூத்து என்ற பெயரில் இசை நாடகமாக நடிக்கப்பட்டு பின் நிறுத்தப்பட்டது. ஆனால் ஒரு கொலையை தலதா மாளிகையின் மண்டபத்தில் நின்று பார்ப்பதற்கு மகா நாயக்கர்கள் அனுமதித்திருக்க மாட்டார்கள் என்பதால் இது வெறும் கட்டுக்கதையென் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு நாட்டார் பாடல்கள் கதா என அழைக்கப்படும் கதைப்பாடல்கள் காவியங்கள் கவிதைகள் என்பன மூலம் தமிழர்களுக்கு விரோதமான பொய்ப்பிரசாரங்களை தேசத்துரோகிகளை நியாயப்படுத்திய பல இலக்கியப் படைப்புகள் உருவாக்கி சிங்கள்மக்கள் மத்தியில் பரப்பப்பட்டன. இவற்றில் பிரதானமானவை கிரல சந்தேசய, எஹலப்பொல வர்ணனய ஆகிய இரு முக்கிய காவியங்களாகும்.

அரசர்களுக்கு ஆசிவேண்டி தெய்வேந்திர முனையிலுள்ள வி~;ணு தேவாலயத்திற்கு தூதுவிடுவதாக பாடப்படும் காவியங்களையே சந்தேசய இலக்கியங்கள் என சொல்வதுண்டு. அவ்வகையில் எஹலப்பொலவை மன்னனாக உருவகித்து அவனுக்கு ஆசிவேண்டி எம்பெக்கே என்ற இடத்தில் குடிகொண்டுள்ள ஸ்ரீஸ்கந்த குமர கடவுளுக்கு தூதுவிட்டு பாடப்பட்ட காவியம் தான் கிரல சந்தேசய. இந்நூல் விக்கிரம ஸ்ரீ ராஜசிங்கனை கேவலப்படுத்துவதையும் தமிழர்கள் மீது குரோதத்தை வளர்ப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளது. மன்னன் ராஜசிங்கன் கைதாவதற்கு முன்பே அந்த நூல் எழுதப்பட்டதால் அது எஹலப்பொலவை மன்னனாகச் சித்தரிக்கிறது. ஆனால் கண்டியை வெள்ளையர்கள் கைப்பற்றிய பின் வெள்ளையருக்கு கப்பம் கட்டி அரசாளும் ஒரு மன்னனாக முடியும் என்ற நம்பிக்கை சிதைந்து போனது.

ஆங்கிலப்படைகள் கண்டிக்குள் இறங்கியபோது, எஹலப்பொலவும் அவனது சேனையும் ஆங்கிலேயருடன் இணைந்திருந்தன. இன்னொருபுறம் விக்கிரம ராஜசிங்கனின் தளபதியான மொல்லிகொட தலைமையிலான சிங்களப்படைகள் தங்கள் தளபதியின் கட்டளைக்கு அமைய ஆங்கிலப்படைகளை எதிர்த்துப் போராடாது பின்வாங்கினர். ஒரு தோட்டாகூட செலவின்றி ஆங்கிலப்படைகள் இறங்கிய நிலையில் மன்னன் தப்பியோடி தும்பறையில் தலைமறைவானான்.

ஆனால் கிரல சந்தேசயவில் ஆங்கிலேயரைப்பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடப்படவில்லை. ஆனால் எஹலப்பொலவின் வீரமும் துணிச்சலும் காரணமாகவே கண்டி அரசன் கைது செய்யப்பட்டான் என குறிப்பிடுகிறது. இந்நூல் விக்கிரம ராஜசிங்கனை பெயர் குறிப்பிடாது மன்னன் என்றும் தமிழன் என்றும் சுட்டுவதன் மூலம் தன் இனக்குரோத முனைப்பை வெளிப்படுத்துகிறது.

இறைமையுள்ள மன்னனாக எஹலப்பொல இருக்கும்போது வெளிநாட்டவன் ஒருவன் கண்டியை ஆட்சிசெய்யமுடியாது எனவும் ஆட்சிசெய்யக்கூடாது எனவும் இந்நூல் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறது. எவ்வாறு இலங்கையின் வடபகுதியான உத்தரதேசத்திலிருந்து படையெடுத்த எல்லாளனை சோழ இளவரசன் என மகாவம்சம் வெளிநாட்டவனாக சித்தரிக்கிறதோ அவ்வாறே நான்கு தலைமுறைகளாக கண்டியை தாயகமாகக் கொண்டு வாழ்ந்து வந்த நாயக்க வம்சத்தை அந்நிய நாட்டவர்களாக கிரல சந்தேசய சித்தரிக்கிறது. அதாவது சிங்கள மக்களுக்குள்ள தாயகப்பற்றை குறுக்கு வழியில் திசைதிருப்பி மேற்கொள்ளப்படும் அதிகாரத்தை கைப்பற்றும் கேவலமான முயற்சியே இது.

சிதைக்கப்பட்ட எஹலப்பொலவின் மன்னனாகும் கனவு

ஆனால் 1815ம் ஆண்டு கண்டி ஒப்பந்தத்துடன் எஹலப்பொலவின் மன்னர் கனவு சிதைக்கப்பட்டபோதும் அவன் சலைத்துவிடவில்லை. அதை தனது இளவரசனுக்கான கனவாக எஹலப்பொல மாற்றிக்கொண்டான்.

எஹலப்பொல, கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கனின் அமைச்சர்களில் ஒருவனாக இருந்த காலத்திலேயே கண்டி இராச்சியத்தை ஒரு சிங்களவனே ஆளவேண்டுமென்பதை கொள்கையாகக் கொண்டிருந்தான். அதை நிறைவேற்றும் வகையில் பல முன்னேற்பாட்டு நடவடிக்கைகளையும் கருத்துப்பரப்பலையும் தளராது மேற்கொண்டு வந்தான். அவற்றை வலுப்படுத்த கண்டியின் இளவரசனாக அவனை சித்தரித்து எழுதப்பட்ட நூல்தான் எஹலப்பொல வர்ணனய இது வரிக்கு வரி கீர்த்தி ஸ்ரீ விக்கிரமராஜசிங்கன் தமிழனெனவும் தரமற்றவன் எனவும் வசைபாடுகிறது.

இது கண்டியரசன் தோற்கடிக்கப்பட்டு வெள்ளையர் கண்டியின் மன்னன் பிரித்தானிய மன்னரான 3ம் ஜோர்ச் அவர்களே எனப் பிரகடனம் செய்த பின்பு வெளிவந்தமையால் கிரல சந்தேசயவின் மன்னன் கனவை கைவிட்டு எஹலப்பொலவை யுவராஜனாக சித்தரிக்கிறது. இதன் காரணமாகவே 1815ல் தளபதி வெய்லியை சந்தித்த எஹலப்பொல தன்னை யுவராஜனாக நியமிக்காவிட்டால் தாம் எந்தப்பதவியையும் வகிக்கப்போவதில்லை எனவும் தெரிவித்தான். ஆனால் பிரித்தானிய மன்னரின் கௌரவத்துக்குரிய பிரஜை என்ற மட்டத்துடன் எஹலப்பொல திருப்தியடைவதை விட வேறு வழி இருக்கவில்லை.

தனது இனத்தையே காட்டிக்கொடுத்த எஹலப்பொலவின் துரோகம்

1816ல் மடுகல்ல இஹாகம ஆகிய சிங்களப்பிரதானிகள் ரத்தினபால, உன்னான்சே தேரர் உள்ளிட்ட சிலர் ஆங்கில ஆட்சிக்கு எதிராக மேற்கொண்ட ஒரு சதிப்புரட்சியை எஹலப்பொல காட்டிக்கொடுத்து தன் இனத்தவர்களுக்கே துரோகம் செய்தான். ஆனாலும் ஆங்கிலேயரும் அவனை கப்பம் கட்டி ஆட்சிசெய்யும் ஒரு மன்னனாகவோ அல்லது ஒரு யுவராஜனாகவோ ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் மடுகல்ல இஹாகம போன்றோர் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டு இரு வருடங்களின் பின் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு ஆதரவு வழங்கிய கூலிப்படைத் தளபதியான மலே முகாந்தரும் நாடுகடத்தப்பட்டான். ஆங்கிலேயருக்கு திறை செலுத்தி கண்டியை ஆளும் ரதல வம்சத்தினரின் கனவை ஊவா வெல்லசவின் பிரதானியாக ஹஜ்ஜிரி மரக்கார் என்ற முஸ்லீமை நியமித்ததன் மூலம் ஆங்கிலேயர் முற்றாகவே முடிவுக்கு கொண்டுவந்தனர்.

இப்படியான நிலையில் 1818ல் உருவான ஊவா வெல்லச கிளர்ச்சி இராணுவச் சட்டத்தின் மூலம் ஒடுக்கப்பட்டதுத மன்னாகும் கனவுடன் துரோகத்தின் மேல் துரோகமாக மேற்கொண்ட எஹலப்பொல கைது செய்யப்பட்டு மொறிசியஸ் தீவில் சிறையிலடைக்கப்பட்டு அங்கேயே மரணமடைந்தான். கெப்பட்டிப்பொல மடுகல்ல உட்பட 19 பேர் கண்டி வாவிக்கு அருகாமையில் சிரச்சேதம் செய்து கொல்லப்பட்டனர். மஹாவம்சத்தில் தொடங்கி இனக்குரோதம் வளர்க்கும் சிங்கள இலக்கியங்கள் எவ்வாறு மஹாவம்சம் எல்லாளனுக்கு எதிரான துட்டகாமினியின் போரை அடிப்படையாக வைத்து தமிழர்களுக்கு எதிரான இனவிரோத போக்கை சிங்கள மக்கள் மத்தியில் விதைத்ததோ அதே போன்று எஹலப்பொல வர்ணனய, கிரல சந்தேசய உட்பட்ட இலக்கியங்கள் ஆட்சி அதிகார ஆசையால் நாட்டைக் காட்டிக்கொடுத்த துரோகத்தை மறைத்து தமிழ் மக்களுக்கு எதிரான இனக்குரோதத்தை முதன்மைப்படுத்தி மக்கள் மத்தியில் பரப்பின. எப்படியிருப்பினும் ஐந்தாம் நூற்றாண்டின் மஹாவம்சம் தொடக்கி வைத்த தமிழருக்கெதிரான வெறுப்பையும் இனக்குரோதத்தையும் இந்த இரு நூல்களும் 18ம் நூற்றாண்டின் பிற்பகுதிலும் 19ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் புதுப்பித்து மெருகூட்டி இனமோதலுக்கான வலுவான அடித்தளத்தை உருவாக்கியுள்ளன என்பதை மறுத்துவிட முடியாது.

நா.யோகேந்திரநாதன்


Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE