Friday 19th of April 2024 08:52:16 PM GMT

LANGUAGE - TAMIL
TISL
படுகொலைக் குற்றவாளிக்கு பொதுமன்னிப்பா? சகல ஆவணங்களையும் பகிரங்கப்படுத்துங்கள்

படுகொலைக் குற்றவாளிக்கு பொதுமன்னிப்பா? சகல ஆவணங்களையும் பகிரங்கப்படுத்துங்கள்


மிருசுவிலில் 8 அப்பாவித் தமிழ் மக்கள் கொடூரமாகப் படுகொலை செய்த குற்றவாளியான இராணுவ அதிகாரிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொது மன்னிப்பு வழங்கியுள்ள நிலையில், இந்த வழக்குடன் தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் பகிரங்கப்படுத்துமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம், ஜனாதிபதி செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆவணங்களைப் பகிரங்கப்படுத்தத் தவறும் பட்சத்தில், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறையினரிடையே அதிகார வலுவேறாக்கம் தொடர்பாக ஈடுசெய்ய முடியாதளவு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது தொடர்பில் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இந்த வழக்கின் குற்றவாளி மற்றும் தண்டனைகள் உயர்நீதிமன்றத்தின் நீதிபதிகள் ஐவர் உள்ளடங்கிய குழுவினரான புவனேக அளுவிஹார, நிஹால் பெரேரா, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்த்தன மற்றும் மூர்டு பர்ணாந்து ஆகியோரால் கடந்த 2019 ஏப்ரல் மாதம் இது உறுதிப்படுத்தப்பட்டது.

அரசமைப்பின் 34ஆவது பிரிவு எந்தவொரு குற்றவாளிக்கும் மன்னிப்பு வழங்க ஜனாதிபதிக்கு அதிகாரமளிக்கும் அதேவேளையில், அதே பிரிவில் ‘எந்தவொரு நீதிமன்றத்தின் தண்டனையால் எந்தவொரு குற்றவாளியும் மரணத்திற்கு ஆளாக நேரிட்டால், வழக்கை விசாரணை செய்த நீதிபதியால் ஜனாதிபதிக்கு ஒரு அறிக்கை வழங்கப்படுவதோடு, அந்த அறிக்கை சட்டமா அதிபரின் ஆலோசனைகளுடன் அதற்குப் பொறுப்பான அமைச்சருக்கு அனுப்பப்படுவதோடு அமைச்சர் தனது பரிந்துரைகளுடன் அறிக்கையை ஜனாதிபதிக்கு அனுப்புவார்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது - என்றுள்ளது.

2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தின் தகவலுக்கான உரிமைச் சட்டத்தின் வர்த்தமானி அறிவித்தல் இல.2004/66 இல் அறிவிக்கப்பட்டுள்ள ஒழுங்குவிதிமுறைகள் 20/1/IV இற்கமைய சகல பொது அதிகார சபைகளும் ‘குறிப்பாக பொதுமக்களைப் பாதிக்கின்ற முடிவுகள் மற்றும் அவற்றின் முறையான செயல்களுக்கு அடிப்படையாகப் பயன்படுத்தப்பட்ட தரவுகள் மற்றும் ஆவணங்கள் உள்ளிட்டவற்றை தாமாக முன்கூட்டியே வெளிப்படுத்த வேண்டும்' என்பதைச் சுட்டிக்காட்டுகின்றன - என்றுள்ளது.

இது தொடர்பில் ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் அசோக்க ஒபேசேகர குறிப்பிடுகையில்,

"பொதுமன்னிப்புக்கான உரிய செயன்முறைகள் தொடர்பான ஆவணங்களை வெளியிடாமல் பொதுமன்னிப்பு வழங்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி பொதுமன்னிப்பு வழங்கிய இரண்டு சந்தர்ப்பங்களை இலங்கையின் சமீபகால வரலாறுகளில் நாம் கண்டுள்ளோம். இவ்வாறு நிறைவேற்று அதிகாரத்தை நீதித்துறை செயற்பாடுகளில் பயன்படுத்துவதானது நீதித்துறையின் சுதந்திர செயற்பாட்டுக்குப் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, நீதித்துறை தொடர்பாக பொதுமக்களிடம் இருக்கும் நம்பிக்கையையும் அது இழக்கச் செய்துவிடும்.

சமீபகாலத்தில் இடம்பெற்ற இரண்டு பொதுமன்னிப்புகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு வழங்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பான ஆவணங்களை உடனடியாகப் பகிரங்கப்படுத்துவது அவசியமாகும்.

அவ்வாறு தகவல்களைப் பகிரங்கப்படுத்துவதனூடாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசின் தொழிநுட்ப நிர்வாகத்தின் உறுதிப்பாட்டை அது முன்னிலைப்படுத்தும்.

அரசமைப்பு மற்றும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் விதிமுறைகளுக்கமைய இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதியின் அறிக்கையையும், சட்டமா அதிபரின் ஆலோசனைகள் மற்றும் நீதி அமைச்சரின் பரிந்துரைகளையும் பகிரங்கப்படுத்துமாறு ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீலங்கா நிறுவனமானது ஜனாதிபதி செயலாளர் பி.பி. ஜயசுந்தரவைக் கோருகின்றது" - என்றார்.


Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE