Saturday 4th of May 2024 05:53:20 AM GMT

LANGUAGE - TAMIL
.
2 ஆம் எலிசபெத் மகாராணியின் உடல் இன்று நல்லடக்கம்!

2 ஆம் எலிசபெத் மகாராணியின் உடல் இன்று நல்லடக்கம்!


பிரித்தானிய மகாராணி 2 ஆம் எலிபெத்தின் இறுதி கிரியை இன்று நடைபெற்று அவரது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

பிரித்தானிய மகாராணி 2 ஆம் எலிபெத்தின் இறுதி கிரியை இலங்கை நேரப்படி, இன்று நள்ளிரவு 11.59க்கு நடைபெறவுள்ளது. இறுதி நிகழ்வுகளின் பாதுகாப்பு கடமைகளுக்காக முப்படைகளின் 10 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவின் மகாராணி இரண்டாவது எலிசபத் கடந்த 8 ஆம் திகதி தமது 96 வயதில் காலமனார்.

70 ஆண்டுகாலமாக பிரித்தானியாவின் மகாராணியாகவிருந்த இரண்டாம் எலிசபத், மருத்துவ கண்காணிப்பில் இருந்த நிலையில் காலமானார்.

அவருக்கு ஸ்கொட்லாந்தில் உள்ள பெல்மொரல் மாளிகையில் சிகிச்சையளிக்கப்பட்டிருந்தது.

26 வயதில் பிரித்தானியாவின் மகாராணியாக மகுடம் சூடிய இரண்டாம் எலிசபெத், 70 ஆண்டுகள் ஆட்சி செய்தார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் பல சமூக மாற்றங்கள் ஏற்பட்டபோது, 1952ஆம் ஆண்டு அவர் பிரித்தானிய மகாராணியாக மகுடம் சூடினார்.

அவரது மறைவுக்கு பல நாடுகளின் அரச தலைவர்களும் அனுதாபங்களை வெளியிட்டு வருகின்றனர்.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் மறைவை அடுத்து அவரது மூத்த புதல்வரும் வேல்ஸின் முன்னாள் இளவரசருமான சார்ள்ஸ் புதிய மன்னராக நியமிக்கப்பட்டதுடன், பொதுநலவாய நாடுகளுக்குத் தலைவராகவும் செயற்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மன்னர் சார்ள்ஸ் நன்றி

தமது தாய், மகாராணி இரண்டாம் எலிசபத்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த, உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களுக்கு மன்னர் சார்ள்ஸ் நன்றி தெரிவித்துள்ளார்.

மகாராணிக்கு பல்வேறு தரப்பினரால் வெளியிடப்பட்டு வரும் இரங்கல் செய்திகளுக்கு தாம் நன்றி தெரிவிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக இளவரசர் வில்லியம், மகாராணியின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் 12 மணி நேரம் வரிசையில் இருந்தவர்களுடன் தமது நன்றியினை வெளிப்படுத்தியிருந்தார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அஞ்சலி

மறைந்த பிரித்தானிய மகாராணி 2 ஆம் எலிசபெத்தின் பூதவுடலுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு அஞ்சலி செலுத்தினார்.

லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.

மறைந்த பிரித்தானிய மகாராணி 2ஆம் எலிசபெத்தின் பூதவுடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்துவதற்காக ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் நேற்றுமுன்தினம் அதிகாலை நாட்டிலிருந்து லண்டன் நோக்கி சென்றிருந்தனர்.

பல நாடுகளின் தலைவர்கள், மகாராணிக்கு இறுதி அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோர் நேற்றைய தினம் தமது இறுதி அஞ்சலிகளை செலுத்தியிருந்தனர். அத்துடன் தற்போது, மகாராணிக்கு இறுதி அஞ்சலிகளை செலுத்தும், பொதுமக்கள் வரிசை தற்சமயம் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ரஷ்யா கடும் கண்டனம்

மகாராணி 2 ஆம் எலிசெபத்தின் இறுதி நிகழ்விற்கு ரஷ்ய ராஜதந்திரிகர்கள் எவருக்கும், பிரித்தானியா அழைப்பு விடுக்காமைக்கு ரஷ்யா தனது கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

ரஷ்யா போன்று சிரியா, வெனிசுவெலா, ஆப்கானிஸ்தான், பெலாரஸ் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளின் ராஜதந்திரிகர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கவில்லை.

இதேவேளை, மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபத்தின், எட்டு பேரப்பிள்ளைகளும் வெஸ்ட்மின்ஸ்டர் மண்டபத்தில் அவரது பேழைக்கருகாமையில் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி ஆகியோர் அரச இராணுவ ஆடையிலும், ஏனையவர்கள் கறுப்பு ஆடைகளை அணிந்திருந்தனர்.

பின்வாங்கிய சவூதி இளவரசர்!

சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான மொஹமட் பின் சல்மான், மறைந்த மகாராணி 2 ஆம் எலிசபெத்தின் இறுதி நிகழ்வில் பங்கேற்கமாட்டார் என பிரித்தானிய வெளியுறவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இறுதி நிகழ்வுக்கு, சவுதி அரேபிய இளவரசருக்கு பிரித்தானியா அழைப்பு விடுத்திருந்த நிலையில், அதனை மனித உரிமை அமைப்புகள் விமர்சித்திருந்தன.

இதனையடுத்து சவூதி அரேபியாவின் முடிவுகள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சவூதி அரேபியாவை சேர்ந்த 59 வயதுடைய பத்திரிகையாளர் ஜமால் கசோகி துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் 2018 ஆம் ஆண்டு மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டிருந்தார்.

அவர், சவூதி அரேபிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் குறித்தும், அந்த நாட்டின் மன்னராட்சி குறித்தும் கடுமையாக விமர்சித்து கட்டுரை எழுதியிருந்தார்.

இதனையடுத்து சவூதி அரேபிய இளவரசரின் உத்தரவுக்கு அமைய, கொலை செய்யப்பட்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. எனினும், அதனை சவூதி அரேபிய இளவரசர் மறுத்து வருகின்றார்.

இவ்வாறான சூழலில், சவூதி அரேபிய இளவரசர் பிரித்தானியாவுக்கு இந்தவார இறுதியில் செல்வார் என தெரிவிக்கப்பட்ட போதிலும், அவருக்கு பதிலாக மற்றுமொரு உயர் அதிகாரியொருவர் கலந்துக்கொள்வார் என பிரித்தானிய வெளியுறவுத்துறை அமைச்சை மேற்கோள்காட்டி ரொயிட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


Category: உலகம், புதிது
Tags: இங்கிலாந்து



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE