Wednesday 24th of April 2024 06:46:16 PM GMT

LANGUAGE - TAMIL
-
இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோருக்கு தடை விதிக்க வேண்டும்  - மனித உரிமை கண்காணிப்பகம்!

இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோருக்கு தடை விதிக்க வேண்டும் - மனித உரிமை கண்காணிப்பகம்!


இலங்கையில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களுக்கு தடை விதிப்பது உள்ளி்ட்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை தொடர்பான பரிந்துரைகளை ஐ.நா. உறுப்பு நாடுகள் கவனத்தில் எடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

மனித உரிமைகள் விடயத்தில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்ற நிலையில்,ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை முரணாக காணப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான நீதி, பொறுப்புக்கூறல் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் பலவீனமானவர்கள் ஐக்கிய நாடுகளையும் சர்வதேசத்தையும் நம்பியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கை, மத மற்றும் இன சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு மற்றும் பாதுகாப்புப் படைகள் சிவில் சமூக குழுக்களை குறிவைப்பதை ஆவணப்படுத்துகிறது. அதே நேரத்தில் கடந்தகால துஷ்பிரயோகங்களுக்கான பொறுப்புக்கூறல் இல்லாத போக்கையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்நிலையில் ஐநா உறுப்பு நாடுகள் உயர்ஸ்தானிகர் மிச்செல் பச்லெட்டின் பரிந்துரைகளை நிறைவேற்ற வேண்டும். இலங்கையில் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்களுக்கு தடை விதித்தல், இலங்கையில் இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்களுக்கு நீதி வழங்குதல், துன்புறுத்தலுக்கு ஆளாகும் ஆபத்தில் உள்ள இலங்கையர்களுக்கு புகலிடம் வழங்குதல் உள்ளிட்டவற்றை உறுப்பு நாடுகள் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

1983 முதல் 2009 வரையிலான இலங்கையின் அழிவுகரமான உள்நாட்டுப் போரில் அரசாங்கம், தமிழீழ விடுதலைப் புலிகள் இரு தரப்பினரும் பல குற்றங்களில் ஈடுபட்டனர்.'

போரின் இறுதி மாதங்களில் அரசாங்கப் படைகளாலும் புலிகளாலும் மேற்கொள்ளப்பட்ட பாரிய அளவிலான போர்க்குற்றங்களை ஐ.நா ஆவணப்படுத்தியுள்ளது.

எனினும் துஷ்பிரயோகங்களுக்கு பொறுப்புக் கூறுவதற்கு பதிலாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான தற்போதைய அரசாங்கம், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு விரோதமான கொள்கைகளை பின்பற்றுகிறது. அதே நேரத்தில் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்களை அச்சுறுத்துவதற்கும் ஒடுக்குவதற்கும் பாதுகாப்புப் படைகளைப் பயன்படுத்துகிறது. சித்திரவதை, தன்னிச்சையான தடுப்புக்காவல், சட்டத்திற்குப் புறம்பான கொலைகள் உள்ளிட்ட துஷ்பிரயோகங்கள் தொடர்கின்றன.

உயர் ஸ்தானிகர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போன்று தற்போதைய அரசாங்கம் பாரதூரமான சர்வதேச குற்றங்களுக்கான தண்டனை விலக்கு கொள்ளையைப் பேணுகிறது. பொறுப்புக்கூறலை தொடர்வதில் தனது விருப்பமின்மையைத் தொடர்ந்து நிரூபித்து வருகிறது. பதிலாக யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சில இராணுவ அதிகாரிகளை உயர் பதவிகளில் நியமித்துள்ளது.

தற்போதைய இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச, பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன மற்றும் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோர் அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள படைகளுக்கு கட்டளைப் பொறுப்பை வகித்தவர்கள்.

2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் 11 பேரை வலுக்கட்டாயமாக காணாமல் போனது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அட்மிரல் வசந்த கரன்னாகொட வழக்கை ஐ.நா அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

ஆகஸ்ட் 2021 இல் சட்டமா அதிபர் வசந்த கரன்னாகொடவை குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவித்ததும் அதே ஆண்டு டிசம்பரில், ஜனாதிபதி ராஜபக்ச அவரை மாகாண ஆளுநராக நியமித்தார் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்ட அமுலாக்கம் உட்பட சிவில் அரசாங்கத்தின் செயற்பாடுகளில் அதிகரித்து வரும் இராணுவமயமாக்கல் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் பேரவை ஆணையாளர் உயர்ஸ்தானிகர் கரிசனை வெளியிட்டார்.

தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணத்தில் அதிக எண்ணிக்கையிலான இராணுவச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு பாரபட்சமாக நடத்துதல் அல்லது துன்புறுத்துதல் குறிப்பாக குறிப்பாக பெண்களுக்கு எதிரான செயற்பாடுகள் பற்றிய புகார்கள் உள்ளன.

கிழக்கு மாகாணத்தில், 2021 ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் சிறுபான்மை சமூகங்களை சேர்ந்தவர்கள் சம்பந்தப்பட்ட 45 காணி தகராறுகளை ஐ.நா பதிவு செய்துள்ளது. பௌத்த தலங்களை நிர்மாணிப்பதற்கான அரசாங்கத்தின் திட்டம் குடிப்பரம்பலை மாற்றியமைக்கப் பயன்படுகிறது என்று சிறுபான்மை சமூகங்கள் அஞ்சுவதாக பச்லெட் கண்டறிந்தார்.

தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் தவிர, கிறிஸ்தவர்களும் துஷ்பிரயோகங்களையும் பாகுபாடுகளையும் எதிர்கொள்கின்றனர். 2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்கள் நீதி மறுக்கப்படும் போக்கு நீடிக்கிறது. இந்தத் தாக்குதலில் 260 -க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் குறித்து முன்கூட்டியே கிடைத்த தகவல்கள் புறக்கணிப்பட்டதாக வெளியாகும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐ.நா. மனித உரமைகள் ஆணையாளர் கரிசனை செலுத்தியுள்ளார்.

மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் நீதி கோரி போராடும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் உட்பட சிவில் சமூக குழுக்களை அதிகாரிகள் தொடர்ந்து குறிவைத்துள்ளனர். தமிழ் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் போரில் இறந்தவர்களை நினைவு கூறுவதை தடுக்க அதிகாரிகள் திரும்பத் திரும்ப முயன்றனர் என்பதையும் பச்லெட் விவரித்தார்.

போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் ம் சமூக ஊடகப் பதிவுகளைப் பகிர்ந்ததற்காக. கைதுகள் இடம்பெற்றுள்ளன.

நீண்டகால தன்னிச்சையான தடுப்பு காவல் மற்றும் சித்திரவதைக்கான கருவியாக பயங்கரவாத தடைச் சட்டம் பல தசாப்தங்களாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மற்றும் சட்டத்தரணிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் உட்பட சிவில் சமூகப் பிரமுகர்களை குறிவைக்க ராஜபக்ச நிர்வாகம் பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தியதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சமீபத்திய அறிக்கை ஆவணப்படுத்தியுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியம் உட்பட சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில் பெப்ரவரி 10 அன்று இலங்கை அரசாங்கம் பயங்கரவாத தடைச் சட்டத்தில் திருத்தங்களைச் சமர்ப்பித்தது. முன்மொழியப்பட்ட திருத்தங்கள் சர்வதேச மனித உரிமைக் கடப்பாடுகளுக்கு முழுமையாக இணங்கவில்லை. அத்துடன், பயங்கரவாத தடைச் சட்டத்தின் மிகவும் சிக்கலான விதிகள் சிலவற்றில் திருத்தங்கள் செய்யப்படவில்லை எனக் கண்டறியப்பட்டுள்ளதாக உயர் ஸ்தானிகர் பச்லெட் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை அரசாங்கம் சிறுபான்மையினர் மற்றும் சிவில் சமூக குழுக்களை தீவிரமாக குறிவைக்கிறது. அதே நேரத்தில் உரிமைகளை மீறுபவர்களை பாதுகாக்கிறது. இது சட்டத்தின் ஆட்சியை குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் சமூக சுதந்திரமான செயற்பாடுகளைப் பாதுகாப்பதுடன், நீதி மற்றும் பொறுப்புக் கூறலை உறுதி செய்யும் வகையில் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் இலங்கையின் சர்வதேச பங்காளிகள் இலங்கை அரசுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.


Category: செய்திகள், புதிது
Tags: இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE